எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

விளையாட்டு வினையாகும். தினமலர். சிறுவர்மலர் - 31.


விளையாட்டு வினையாகும். :-

ன்னனானால் என்ன மகரிஷி ஆனால் என்ன ? எதில்தான் விளையாடுவது என்ற வரைமுறை இருக்கிறது. அப்படி இல்லாமல் ஒரு ராஜா  தவமியற்றிக் கொண்டிருக்கும் முனிவரின் கழுத்தில் விளையாட்டாக ஒரு செத்த பாம்பை மாலையாகப் போட்டுவிட்டான். அந்த முனிவரின் மகன் உக்கிரத்துடன் விழித்து கமண்டல நீரை அவன்மேல் தெளித்து ஒரு வாரத்துக்குள் அவன் நாகத்தால் இறப்பான் என பிடி சாபம் கொடுத்துவிட்டார். அதனால் என்னென்ன குளறுபடிகள் ஏற்பட்டன. அவை எப்படி நீங்கின என்று பார்ப்போம் குழந்தைகளே.

குருஷேத்திரப்போர் முடிந்த சமயம். ஹஸ்தினாபுர அரண்மனையில் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இறப்பிற்குப் பிறகு அவரது பேரன் பரீட்சித்து மன்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது தாய் உத்தரை. உலகிற்கே மன்னர், தான் ஒரு சக்கரவர்த்தி என்ற மமதை அவரிடம் இருந்தது.


அவரது நாட்டில் அடர்வனத்தில் சமீகர் என்றொரு முனிவர் மௌனத்தவம் செய்து வந்தார். கடுமையான தவம். மூச்சு மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. பேச்சு உணவு பானம் எதுவுமில்லை. காற்றையே ஆகாரமாகக் கொண்டு அவர் தவமிருந்தார்.

அந்தக் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பரிட்சித்து ராஜா தான் ஒரு மன்னன் என்பதால் அவரை வணங்கினார். என்னன்னவோ செய்து பேசவைக்க முயன்றார். அவர் பதில் சொல்லாததால் விளையாட்டாய் வனத்தில் இறந்து கிடந்த பாம்பு ஒன்றை எடுத்து அம்முனிவரின் கழுத்தில் மாலையாகப் போட்டார். அதைக்கண்டதும் முனிவரின் மகனான சிரிங்கி என்பவருக்கு ரௌத்திரம் வந்தது. தன் தந்தையின் கழுத்தில் பாம்பை இட்ட அவன் இன்னும் ஒரு வாரத்தில் பாம்பால் இறப்பான் என்ற சாபத்தைக் கொடுத்துவிட்டார்.

உடனே மனம் வருந்தி நாடு திரும்பிய பரீட்சித்து ராஜா தன் மகன் ஜனமேஜயனை அஸ்தினாபுர அரியணையில் அமர்த்தி அரசனாக்கினார். அப்போது அவனுக்குப் பதிமூன்றே வயதுதான். தன் ஆட்சி பாரத்தை மகனிடம் ஒப்புவித்த நிம்மதியில் சுகதேவரிடம் பாகவதக் கதையை உபன்யாசமாகச் சொல்லச் சொல்லிக் கேட்டு அறிகிறார். ஆனால் அந்த ஏழாவது நாளில் சாபம் துரத்த தட்சகன் என்ற பாம்பின் கடி பட்டு இறக்கிறார்.

பாலகனான ஜனமேஜயனுக்கு வந்ததே கோபம். அவனால் தன் தந்தை இறந்த துக்கத்தைத் தாள இயலவில்லை. தன் தந்தையைக் கொன்ற நாகத்தை மட்டுமல்ல. அவர்கள் குலத்தையே வேரறுக்க வேண்டும் என்ற கோபம் பீரிடுகிறது அவனுக்கு. அவனுடன் கூடப் பிறந்த தம்பியர் சுருதசேனா, உக்கிரசேனா, பீமசேனா என்ற மூவர்.  அவர்களுடன் சேர்ந்து தட்சகனின் இருப்பிடமான தட்சசீலத்தைக் கைப்பற்றுகிறான். அங்கே நாக வேள்வி ஒன்றை நிகழ்த்துகிறான்.

யாகத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. உத்தங்கர் என்ற முனிவர் ஜனமேஜயனுக்காக அந்த சர்ப்ப சத்ரா என்னும் வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார். உக்கிரமான வேள்வித் தீ. அது தட்சசீலத்தை வளைக்கிறது. அங்கேயிருந்து எல்லா நாகங்களும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டவைபோல வந்து யாகத்தீயில் விழுந்து மடிகின்றன.

தங்கள் தந்தையைக் கொன்ற நாகங்களை வெறியோடு அழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஜனமேஜயனும் அவனது சகோதரர்களும். மந்திர உச்சாடனங்கள் பெருகுகின்றன. எங்கெங்கும் நெருப்பின் வெளிச்சம். பாம்புகள் சுருண்டு விழுகின்றன.

கொஞ்சம் பாம்புகளே நாக இனத்தில் மிச்சம் இருக்கின்றன. அவற்றின் இனமே அழிந்து கொண்டு வருகிறது. இப்போது தட்சகனின் முறை அவனை அந்த யாகத்தீ இழுக்கிறது. அவனோ பரிதாபமாய் தன்னைக் காக்கும்படி இந்திரனை இறைஞ்சுகிறான். இந்திரன் செய்வது அறியாமல் ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் முனிவருக்கும் பிறந்த ஆஸ்திகர் என்ற முனிவரிடம் இந்த யாகத்தைத் தடுக்க வேண்டுகிறான்.

அவர் ஜனமேஜயனிடம் வந்து பாம்புகளை அழிப்பதை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறார். இயற்கையின் சுழற்சியில் ஒவ்வொரு இனமும் வகிக்கும் பங்கை அவர் தெளிவுபடுத்துகிறார். அப்போது அங்கே வேத வியாசரும் வந்து ஒருவர் செய்த செயலுக்காக ஒரு இனத்தையே தண்டிப்பது நியாயமல்ல என்று அறம் உரைக்கிறார். பாரம்பரிய மிக்க பரதவம்சத்தில் பாண்டவரின் வாரிசாக ஆளும் ஜனமேஜயனுக்கு இக்காரியம் உகந்ததல்ல. பின் வரும் காலங்களில் மக்கள் அவனது செயலைப் பழிப்பார்கள் என்பதால் நிறுத்தச் சொல்கிறார்.

மகாமுனிவர்கள் சொற்களை சிரமேற்கொண்டு மகாராஜா ஜனமேஜயன் அந்த யாகத்தை நிறுத்துகிறான்.  விளையாட்டாய் பரீட்சித்து மன்னன் செய்த ஒரு செயல் அவனையும் காவு வாங்கி ஒரு இனத்தையே அழிக்கக் காரணமாய் அமைந்துவிட்டது. எனவே இனி விளையாட்டு வினையாகும் என்பது உணர்ந்து அனைத்திலும் பொறுப்புணர்வோடு செயல்பட ஆரம்பியுங்கள் குழந்தைகளே. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 10. 8. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2. :- அரும்புகள் கடிதத்தில் இதிகாச புராண கதைகளை தன் பள்ளி மாணவர்களை வாசிக்கச் செய்து நற்பண்புகளை வளர்க்கும் நாகை மாவட்டம், ஒரத்தூர், சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பால சண்முகம் அவர்களுக்கு நன்றி. 

2 கருத்துகள்:

  1. பாகவதமே இப்படித்தான் சொல்லத் துவங்குவார்கள்

    பதிலளிநீக்கு
  2. அட அப்பிடியா ! நன்றி பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...