கேட்காதவள்.
”கார்த்திகை.. எங்கே சொல்லு “ மாடிப்படியோரம் கீழ்க்கண்ணால் பார்த்தபடி அமுதாக்கா கேட்டாள்.
“தார்த்திதை” என்றாள் ஆனந்தி.
செல்லமாகத் தட்டித் திரும்பவும் ”கார்த்திகை” ன்னு சொல்லுடி வாலு ” என்றாள்.
”தார்த்திதை” என்றாள் அவள் முகத்தைப் பார்த்தபடியே ஆனந்தி.
”நாக்கை எதுக்குப் பல்லோட ஒட்டுறே… கா.. கா சொல்லு. கார்த்திகை ” என்றாள். ”தா தா தார்த்திதை” என்று அவள் சொல்லவும் மாடிப்படியிலிருந்து இறங்கி இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கார்த்திகேயன் செல்லவும் சரியாக இருந்தது. வெட்கத்தோடு இவளை இழுத்து அணைத்து உம்மா கொடுத்தாள் அமுதாக்கா. சரியா சொல்லிட்டோம் போல என நினைத்து இவளும் பதிலுக்கு அக்காவுக்கு உம்மா கொடுத்தாள். கன்னமெங்கும் அக்காவின் பவுடர் மணத்தது.
”யேய்.. உக்கி போடுடி.. பெரியம்மா கூப்பிட்டுட்டு இருக்காங்க. கேக்காதமாதிரி சொப்பு வைச்சு விளையாடிட்டு இருக்கே. வா இங்கே இந்தப் புள்ளையாருக்கு எதுக்கால உக்கி போடு “
காதைப் பிடித்து முருகு அத்தான் இழுத்துச் சென்று தோப்புக்கரணம் போட வைக்க என்ன செய்தோம் எனக் குழம்பியவாறு தொடை வலிக்க வலிக்க அவன் போதும் என்று சொல்லும் வரை உக்கி போட்டு அமர்ந்தாள் ஆனந்தி. வலியில் கண் கசிந்தது. ரௌடிப்பய. முறைச்சா அடிச்சாலும் அடிச்சிருவான்.
“எப்பக் கூப்பிட்டாங்க.” அது கூடத் தெரியாமயா விளையாடிட்டு இருந்தோம். குனிந்து அமர்ந்து சொப்பு சாமான்களை அடுக்கினாள்.
“அத்த கூப்பிட்டீங்களா” ஓடிப்போய்க் கேட்டாள்.
“ஆமா. எப்பக் கூப்பிட்டேன். எப்ப வர்றே .. வர வர மெய்மறந்துகிட்டே போறே “ என்று டோஸ் வைத்த அத்தை மாங்கொட்டைகளைக் கொடுத்து ”இந்தா போய் சாப்பிடு” என்றாள். பெரிது பெரிதாக துண்டு துண்டாக இருந்ததே. புளித்த கொட்டைகளை சாப்பிட்டுவிட்டுக் கைகழுவினாள்.
“டீ ஆனந்தி.. நில்லு நில்லு” என வேக வேகமாக ஓடி வந்து காலண்டரைப் பறித்துக் கொண்டாள் புஷ்பா. வகுப்புத் தோழி.