எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 21 அக்டோபர், 2017

கறிக்குழம்பு.


கறிக்குழம்பு.

வெசம் வைக்கத்தான் காசு வாங்கிட்டுப் போனியா “ முகமெல்லாம் ஜிவுஜிவுக்க வாசலிலேயே நிற்கவைத்து கேள்விச் சவுக்கால் விளாசிக் கொண்டிருந்தாள் புவனா.

“யக்கா என்ன அக்கா இப்பிடி கேக்குறீங்க. என்னய போய் இப்பிடிக் கேட்டீங்களே அக்கா.. “ திக்கித் திக்கி அழுது கொண்டிருந்தாள் கங்கம்மா.

“ஆத்தாளைப் பாத்துக்குறேன், ஆத்தாளைப் பாத்துக்குறேன்னு காசு வாங்கிக்கிட்டு கடோசீலஅண்ணன் தம்பி வீட்ல கொண்டு போய்த் தள்ளுனது பத்தாதா. சொத்த வாங்கக் கையெழுத்துக் கேட்டீங்க சரி. அது ஏண்டி ஒத்தப் பொட்டப்புள்ளயா ஒன்னப் பெத்தவளுக்கே வெசம் வைச்சுக் கொன்னு போட்டே பாவி “ கண்கள் கலங்க ஓங்கிக் குரலெடுத்து ஆங்காரமாய்க் கத்திக்கொண்டிருந்தாள் புவனா. கோபத்தில் அவள் உடல் அதிர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

”யக்கா என்ன நம்புங்கக்கா. நான் வெசம் எல்லாம் வைக்கல. அது ஆசைப்பட்ட கறிக்கொழம்பைத்தான் கொண்டு போனேன். சோத்துல போட்டு ஊட்டும்போது கூட கண்ணீர் விட்டுக்கிட்டே சாப்பிட்டுச்சுக்கா.. யக்கா. நானே எங்காத்தாளுக்கு வெசம் வைப்பனா..”

“இத எல்லாம் நம்பச் சொல்றியா. அப்பிடியே வெளிய போயிரு. எனக்கு ஆளும் வேணாம் தேளும் வேணாம். ஒம் மூஞ்சீல முழிக்கக்கூடப் பிடிக்கல. நீயெல்லாம் ஒரு மனுசியா. நீ சமைச்சத இனி எனக்குத் திங்கப் பிடிக்குமா. எங்க எனக்கும் வெசம் வைச்சிருவியோன்னுதான் பயமா இருக்கும் .. போ வெளியே “ என்று கத்தினாள் புவனா.

அவளது மூர்க்கத்தின் முன் நடுங்கி மயக்கம் வந்தவளாய்த் தடுமாறி எழுந்து சுவரைப் பிடித்து கதவைப் பிடித்து அழுது வடிந்த கண்களை முந்தானையால் துடைத்தபடி வெளியேறினாள் கங்கம்மா.


சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்திருந்தது அந்த வீடு. கீழே இரண்டு வீடுகள் மேலே இரண்டு வீடுகள். தூரத்தே நரசூஸ் கம்பெனியின் காஃபித்தூள் வாசனை காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. ஃபில்டரைத் தட்டியபடியிருந்த புவனாவிடம்
”அக்கா ஒரு முன்னூறு ரூபாய் குடுங்கக்கா. அடுத்த மாசம் சம்பளத்தில் கழிச்சுக்குங்கக்கா.”  எனக் கேட்டாள் கங்கம்மா.

”எப்பப்பாரு கடன் வாங்கிட்டே இருக்கே. சம்பளத்த விட கடன் அதிகமாயிடும்போலிருக்கே. ஒரு மாசமாச்சும் முழுசா சம்பளம் வாங்கி இருக்கியா.” என்றாள் புவனா.

”புள்ளகுட்டியா இருக்கேக்கா. மூணு பொட்டப்புள்ளங்க. அவரு வேற பெயிண்ட் அடிக்கிறப்ப கீழ விழுந்து கால்ல அடிபட்டுக் கெடக்காரு. ஆத்தாள  வேற  வச்சிருந்தேன். அண்ணன் தம்பி ஆறு பேரிருந்தும் யாரும் பார்க்கல. நான்தானே பார்த்துக்கணும். கை கால் விழுந்து போச்சு. ஒண்ணு மாத்தி ஒண்ணா ஒரு வருஷமா ஓயாத நோவுக்கா அதுக்கும். இப்பத்தான் ஒருவாரம் முன்னாடி கன்னங்குறிச்சிலேருந்து அண்ணிங்க வந்து அம்மாவைக் கொண்டுபோய் வைச்சிக்கிறேன்னு கூப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. அதிசயம்கா. ”

”ஆமா கங்கம்மா உங்கம்மா கனகம்மா வந்ததிலேருந்து நான் தான் முன்னூறு ரூபாய் சம்பளத்துல ஏத்திக் குடுக்குறேன்ல. மருந்து வாங்கிக் குடுன்னு. “ என்றபடி பொங்கிய பாலை இறக்கி டம்ளரில் ஜீனி போட்டு டிக்காக்‌ஷன் விட்டுப் பதமாய் ஆற்றினாள் புவனா.

”யக்கா தர்றீங்க இல்லன்னு சொல்லல. எனக்கு இருக்குற செலவுல எல்லாம் ஆனைப் பசிக்கு சோளப்பொறிக்கா. அதுக்குன்னு தனியா வைக்கவா முடியுது. ரேசன் அரிசிய வடிச்சாலும் காய்கறி எல்லாம் ஆனை வெல குதிரை வெல விக்குதேக்கா. புளிக்கொழம்பு வைச்சு சோறாக்கலாம்னாலும் ஆறு பேருக்கு சாப்பாடு செய்ய ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வேண்டி இருக்கே.”

“என்னவோ போ ஏழு வீட்ல வேலை செஞ்சும் கடனும் கப்பியுமா திரியிறே. புள்ளங்களயாவது நல்லா படிக்க வையி “ என்றபடி காஃபியைக் கொடுத்தாள் கங்கம்மாவிடம். தானும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு கூடைச்சேரில் அமர்ந்து கொண்டாள்.

”இந்தக் காபிக்கே அண்ணாரு உன்னக் கட்டிக்கிட்டு இருப்பாருக்கா. சூப்பரா காப்பி போடுறே”. என்று காஃபியை வாசம் பிடித்தபடி “ அன்னன்னைய பாடு அன்னன்னைக்கு. அது அது தலைல என்ன எழுதி இருக்கோ அது நடக்கும்கா. சின்னவதான் கொஞ்சம் படிக்கிறா. பார்ப்போம்கா. அவளாவது படிச்சு பெரிய வேலைக்குப் போவாளான்னு ”.சொன்னபடி வீட்டுக்குக் கிளம்பிச் சென்றாள் கங்கம்மா.

”கேட்டை சாத்திட்டுப் போடி” என்றபடி கூடைச்சேரில் சாய்ந்து கொண்டாள். ஊரில் இருக்கும் அப்பா அம்மா மாமனார் மாமியார் ஞாபகமெல்லாம் வந்தது.  கடவுளே முதுமைதான் மிகப்பெரும் பிணி. எலும்புகளிலும் மூட்டுகளிலும் ஏற்படும் வலிதான் அவர்களின் அன்றாட பிரச்சனை. கடவுளிடம் ’கடைசி வரை கை கால் பெலத்தைக் கொடு,. யாருக்கும் பாடு இல்லாமப் போய்ச் சேரோணும்’ என்பதுதான் அவர்கள் வேண்டுதல். விதம் விதமான தைல பாட்டிலோடுதான் எல்லா வீடுகளுக்கும் அவர்கள் வருகிறார்கள். எந்த நோவுமே திட்டமிடப்படாதுதான் வருகிறது. ஒட்டகம்போல் உள்நுழைந்து கூடாரத்தையே காலி செய்துவிடுகிறது.

பராமரிப்பு அற்ற பொருட்கள் பரணில் வீசப்படுவதைப் போலப் பெரியவர்களும் பழைய பொருளாகிவிடுகிறார்கள். அவர்கள் அறிவு, தேவை எல்லாம் முடிந்து மிகச் சாதாரணமாய் ஒரு குழந்தையைப் போல் மாறிவிடுகிறார்கள். அன்றாடம் நான்கைந்து மணி நேரம் வலியில்லாத தூக்கம் கிடைத்தால் போதும். அது பொன்னாளாகிவிடுகிறது.

“ஆமா . இது வாய்வு ஆகாது. அது வாதம் வரும் ஆகாதுன்னு எதையுமே தின்னாட்டா எப்பிடி”என்று அம்மாவிடம் கோபித்துக் கொள்வாள் புவனா. மகளின் கட்டாயத்துக்காக ஓரிரு சமயம் தன் கொள்கைகளைத் தளர்த்திக் கொள்வாள் புவனாவின் அம்மா.

யோசனையில் ஆழ்ந்திருந்தபோது ஃபோன் வந்தது. அப்பாதான். “அம்மாவுக்கு மூச்சுத்திணறலா இருக்கும்மா. உடனே புறப்பட்டுவா இங்கே முரளி க்ளினிக்ல சேர்த்திருக்கு. நெபுலைசர் போட்டுருக்காங்க “. காதில் விழுவதெல்லாம் கனவா புரியவில்லை. லேசாக அசந்திருந்தாள். கூடைச்சேரில் இருந்து எழுந்தபோது இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியைப் போலத் துடித்தது அவள் உடல். அம்மா.. அம்மா.. அம்மம்மா.. நீதானே என் பிரபஞ்சம். பிண்டமான என்னை உருவாக்கிய பேரண்டம். தடுமாறியபடி கூடைச் சேரைப் பிடித்துச் சுற்றியபடி எழுந்து கணவருக்குச் சொல்லிவிட்டு டாக்ஸிக்கு ஃபோன் செய்தாள்.

ம்மா என் பேரழகே பெரும்சொத்தே. என்ன இப்படித் தொய்ந்து கிடக்கிறாய். என் தன்னம்பிக்கையே நீதானம்மா. நிலவைப் போன்ற முகத்தில் மூக்குத்தி நட்சத்திரமாய்ச் சுடர்விட்டது. செவ்வட்டமாய் ஒரு பொட்டு நடு நெற்றியில் ஒளிர்ந்தது. தீர்க்கமான நாசியும் சுருண்டலைந்த வெண்கூந்தலுமாய் அம்மா ஒரு படுத்துக் கிடந்த உயிரோவியமாகக் காட்சி தந்தார். ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது. கர் புர் என்று சுவாசம் மேலேறி இறங்கிக் கொண்டிருந்தது.

“சும்மாவே இருக்க மாட்டேங்கிறா . வீடு சுத்தம் பண்றேன். அது பண்றே இது பண்றேன்னு எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கிட்டு இப்பப் பாடுபடுறது யாரு. டஸ்ட் அலர்ஜி. இதுல குளிரக்குளிர எண்ணெய்க் குளியல் போடாதேன்னா சீக்கிரம் கைகாலோட போய்ச்சேர்ந்தாச் சரிங்கிறா. என்ன பண்றது சொல்லு “ அப்பா கண்கலங்கினார்.

முதுமை அவ்வளவு கொடுமையானதா. 80 வயதில் ஆயாசம் வந்துவிடுமா. வாழ்ந்தது போதும் என்று. பேச்சற்று முதுபெரும் வயதினர் வாழும் வாழ்வு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுமா. செய்ய ஏதுமில்லை என்ற சலிப்பா. விரக்தியா. அம்மாவுக்கா ?.

பிள்ளைகள் ஹாஸ்டலில் படிக்கிறார்கள். தாத்தாபாட்டியுடன் பேச எல்லாம் நேரம் ஏது. படிப்பு படிப்பு படிப்பு அதன் பின் உத்யோகம். சம்பாத்யம், அதன் பின் திருமணம், பின் உழைப்பு , ஓட்டம், யாரும் யாருடனும் பேசுவது இல்லை. பணம் இருக்கிறது. தேவைகள் நிறைவேறி விடுகின்றன. ஆனால் அது மட்டும் போதுமா. மனிதரோடு மனிதர்  கொள்ளும் தொடர்பு அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.

“இவ்வளவு தூரம் வராட்டா என்னைக் கூடக் கூப்பிட்டிருக்க மாட்டீங்க இல்லியாப்பா “

“ உன்ன வேற ஏம்மா தொந்தரவு செய்யணும். அதான் அப்போ அப்போ ஃபோன் பேசிறீல்ல. இங்கேயும் வேலைசெய்யவும் பாத்துக்கவும் ஆள் இருக்காங்கள்ல. “ என்றார் அப்பா.

“அப்ப்பாஆ ஆளே எல்லாமாயிடுமா. என்ன ஏன் தொந்தரவு செய்றதா நினைக்கீறீங்க. நான் பார்த்துக்குவேன்பா. கிளம்புங்க “

ஒரு வாரம் அவர்களுடன் தங்கித் தனது வீட்டுக்கு டாக்ஸியில் அழைத்து வந்தாள். ஒரு வாரம் தங்கிச் சரியானவுடன் தங்கள் ஊருக்குச் செல்ல மகள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு அவர்களும் வந்திருந்தார்கள்.

அப்பா வெளியே சென்றிருந்தார். அம்மா சாமி பாடல்களைப் பாடியபடி உறங்கி இருந்தார். வீடு மோனத்தில் ஆழ்ந்திருந்தது. அப்பா, அம்மா வந்ததும் வீட்டுக்குள் உரையாடல்களும் சந்தோஷச் சிரிப்புகளும் சக்கரவட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

க்கா நான் மோசம் போயிட்டேன்கா. அண்ணிங்க ஃபோன் பண்ணி அம்மா உன் கையால கறிக்கொழம்பு சாப்பிட ஆசைப்படுதுன்னு சொன்னப்ப அப்பிடியே நம்பிட்டேன்கா. அப்பாலதான் தெரிஞ்சிது நான் எங்கம்மாவுக்கே கறிக்கொழம்புல வெசம் வைச்சு ஊட்டக் கொண்டாரப் போறேன்னு அது காது படவே பேசி இருக்காங்கன்னு. பாவிங்க. முன்னாடியே இருந்த கொஞ்ச நஞ்ச சொத்துப் பத்திரம் எல்லாத்திலயும் அம்மாட்ட கைநாட்டு வாங்கி இருக்காங்க. அது கை கட்டவிரல் எல்லாம் நீலமா இருந்துச்சு.

”நான் வெசம் வெக்கலைன்னு அம்மாவுக்குத் தெரியும்கா . சோத்துல கறியைப் பிசைஞ்சு ஊட்டும்போதெல்லாம் கண்ணீரோட கையைப் பிடிச்சிக்கிட்டு இருந்துச்சு. ஆனா நெனைச்சிருச்சு மகளுக்கும் தொல்லையாயிட்டோம் போல அதான் கறிக்கொழம்பு கொண்டாந்திருக்கான்னு அழுதிருக்கு. அந்த நெனைப்புல ராத்திரியே போய் சேர்ந்திருச்சுக்கா. ”

”அன்னிக்கு உங்ககிட்ட வாங்கிட்டுப் போன காசுலதான் கறிவாங்கி சமைச்சிட்டுப் போனேன்கா. நானே எங்கம்மாவுக்கு வெசம் ஆயிட்டேன்கா. எங்கம்மாவைக் கொன்னுட்டேன்கா. ”
--ஒரு மாதம் கழித்துத் திரும்ப வந்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள் கங்கம்மா.

“உஷ்.. அம்மா உள்ளே படுத்திருக்கிறாள். அவள் காதில் இதெல்லாம் விழுந்து விடப் போகிறது.”

விதிர் விதிர்த்தது புவனாவுக்கு. ”என்னது தன்னிடம் வாங்கிச் சென்ற காசில்தான் கறிக்குழம்பு செய்து கொண்டு சென்றாளா.
வாழப் பணம் கொடுப்பதாக நினைத்திருந்தாளே. தன் பணம் கொன்று விட்டதா. தானும் பாவியா. பாவத்தின் சம்பளம் மரணம்.. என்னுடைய பாவத்தின் சம்பளம் என்ன. ” தொய்ந்து அமர்ந்தாள் புவனா.

உள்ளே படுத்திருந்த அம்மா எழுந்து ஹாலுக்கு நடந்து வந்தார். தாய்மையின் திருவுருவமாய் மஞ்சள் பூசிய முகமும் குங்குமப் பொட்டும் பாசம் பூசிய முகமும் கருணை நிரம்பிய கண்களுமாக நிறைந்து நின்றார் புவனாவின் தாய். தாளமுடியவில்லை புவனாவால். ”அம்மா” என்று கதறிக்கொண்டே அவரைக் கட்டிக் கொண்டாள் புவனா. 

”அம்மா.. அம்மா.. நான் பாவியாயிட்டேன்மா. இவ அம்மா போகக் காரணமா இருந்துட்டேன்மா. எனக்குக் கதிமோட்சம் உண்டா.”

அம்மா குலுங்கி அழும் புவனாவின் முதுகை ஆதரவாய்த் தட்டிக் கொடுத்தார். ”விருப்பத்தோட எடுத்துக்குற எதுவும் விஷம் ஆகாது. இவ அம்மா விரும்பியதைத்தான் கொடுத்திருக்கா. விஷத்தைக் கொடுக்கல. அவரவர் பிறப்பும் இறப்பும் ஆண்டவன் தீர்மானிக்கிறது. இவ தப்பு செய்யாத பட்சத்துல அது இவ பாவம் இல்ல. உன் பாவமும் இல்ல. அவரவர் நேரம். கர்மா. “

அம்மா அவளைக் கட்டிக் கொண்டாள். கங்கம்மாவைப் பார்த்துத் தலையசைக்க அவளும் அம்மாவிடம் வந்து கையைப் பிடித்துக் கொள்ள அம்மா இன்னொரு கையால் அவளையும் அணைத்துக் கொண்டாள். தாய்மையின் கரங்களுக்குள் இரு சேய்கள் அடைக்கலமாகி இருந்தன.

ருத்துவம் பார்த்து நோய் நொடியில்லாம எல்லாரையும் காப்பாத்திடுறாங்க. எல்லாரோட சராசரி வாழ்நாளும் அதிகரிச்சிடுது. ஆனால் எழுபது எண்பதுக்கு மேல என்ன செய்றதுன்னு தெரியாம கட்டாயத்துக்காக வாழ்ற மாதிரி ஆயிடுது.” என்றார் தனது பால்ய நண்பரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அப்பா.

“சரண்யா இல்லத்துல ஏகப்பட்ட முதியோர் இருக்காங்க. யாரும் தான் பாரம்னு நினைக்கிறதில்லை. தன்னால முடிஞ்சதைச் செய்றாங்க. திரி திரிச்சு விலைக்குத் தராங்க. இது மாதிரி முதியோர் இல்லத்துக்கு உதவலாம். உணவு வழங்கலாம். மெடிக்கல் உதவி செய்யலாம். அங்கே கதை , பேப்பர் போன்றவை படிச்சுக் காமிக்கலாம். முதுமை கொடுமை இல்லை.முதுமையில் வறுமைதான் கொடுமை.அதிலும் பெற்றோரை வைச்சுக்க இயலாத அளவு அவங்க குழந்தைகளுக்கு வறுமை இருப்பதுதான் கொடுமை. அப்படி வைச்சுக்க இயலாதவங்களுடைய பெற்றோர் ஓரிருவருக்கு நாம நம்மால முடிஞ்ச பராமரிப்பு உதவி செய்யலாம்  “  என்று அம்மா நான்கு நாட்கள் முன்பு சரண்யா முதியோர் இல்லத்துக்குத் தனது சிநேகிதியுடன் சென்றுவிட்டு வந்தபின் கூறியது புவனாவுக்கு நம்பிக்கை அளித்தது.

தன்னுடைய முதுமையைக் கம்பீரமாக  எதிர்கொண்டதோடு மற்றவர்களும் எப்படி எதிர்கொள்வது என்பதைக் கற்றுக் கொடுத்த அம்மாவைப் பார்த்து மனம் தெளிந்திருந்தாள் புவனா. பக்கத்தில் இருந்த அம்மன் கோயிலிலிருந்து "காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி" என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது.

5 கருத்துகள்:

  1. அருமை
    முதுமை போற்றுவோம்
    முதியவரைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. இப்போது வயோதிகத்தை அனுபவிக்கும் நான் முதுமை என்பது செய்யாத குற்றத்துக்குத் தண்டனை என்று எழுதி இருந்தேன் அதற்கு நேர்மறையாக முதுமை ஒரு பரிசு என்றும் எழுதி இருந்தேன் அது இக்கதையைப் படிக்கும் போது நினைவுக்கு வந்தது வாழ்த்துகள் நல்ல கதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நல்லாருக்கு கதை சகோ/தேனு அருமை!!! முதுமையைக் கையாளத் தெரிஞ்சாலே போதும்!!

    பதிலளிநீக்கு
  5. நன்றி பாலா சார்.

    நன்றி துளசி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...