லீவ்ஸ் ஆஃப் ஐவிக்கு அதிகம் ஆர்ட்டிகிள் கொடுத்ததுக்காக கிடைச்ச பரிசு.
இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும்
கல்லூரிப் பருவத்திலும் கல்யாணப் பருவத்திலும் கொடுக்கப்பட்ட நூல்களை இப்போதுதான் முழுமையாக வாசிக்கிறேன். அவற்றில் ஒன்று இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும். 1981 களில் வந்த கவிதைகள். இன்றைய காலகட்டத்தில் இவற்றில் சில சாதாரணத் தன்மையோடு இருந்தாலும் பெரும்பாலானவை அன்றே துணிச்சலாக எழுத்தப்பட்டவை என்பது என்னைக் கவர்ந்தது.
லீவ்ஸ் ஆஃப் ஐவிக்கு அதிகம் ஆர்ட்டிகிள் கொடுத்ததுக்காக கிடைச்ச பரிசு.
இரா வேலுச்சாமியின் இத்தொகுப்பு பற்றி பல்வேறு பிரபலங்கள் கருத்துகள் கூறி இருக்கிறார்கள். மேத்தா, சேவற்கொடியோன்,
வலம்புரி ஜான், ஜெயதேவன், துவாரகா, கிருஷ்ணன் பாலா, திருநாவுக்கரசு, வண்ணமுத்து, சிவசங்கரன், டாக்டர் இரா. மோகன் ஆகியோர். இதில் இரா மோகனின் முன்னுரை அழுத்தமாக இருந்தது.
மனதில் ஒருவித சங்கடங்களை இக்கவிதைகள் உருவாக்குவதாக அவர் சொல்லி இருந்தார். எனக்கும் கூட ஓரிரு கவிதைகளில் அவ்வாறே உணர்வேற்பட்டது.
அதில் ஒன்று. ஜாதியத் தீ பற்றி எரியும் கிராமம் பற்றியது.
எவராலோ
எரிக்கப்பட்டதற்காகக்
கடுகி வந்தது
காவல் வண்டி
என்னைக்
கைது செய்து போக
எப்போதும்போல்
என்
குடிசைக்கு மட்டும்
தாமதமாய் வந்தன
தீயணைப்பு வண்டிகள்.
வித்யாச சிந்தனை ஒன்று
“ சறுக்கல்களிலும்
எனக்குச் சம்மதமே.
அவை
வெறும்
சறுக்கு முனைகள்
மட்டுமல்ல--
வாழ்க்கையின்
திருப்பு முனைகளும் கூட “
மிகவும் யோசிக்க வைத்த நவீன கவிதை ஒன்று. வர்க்கபேதத்தை மட்டுமல்ல இன்னும் பல மூடத்தனங்களைச் சாடும் கவிதை.
“மான் கறியைச்
சுட்டு உண்பதா
வறுத்து உண்பதா?
இப்போது
அண்ணலுக்கே சந்தேகம்
சுட்டு உண்டாலும்
வறுத்துத் தின்றாலும்
வயிற்றுக்கு
எதற்கு
வர்க்கபேதம் ?”
இராமநாதபுரம் பற்றி, தேர்தல் பற்றி, கட்சிகள் பற்றி, தேசிய மொழி பற்றி, சினிமாவுக்குப் பாடல் எழுதச் செல்லும் கவிஞர்கள் பற்றி, சர்க்காரைப் பற்றி, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி, எள்ளல் கவிதைகள், & ஈழத்தமிழர் பற்றி, ஈழம் பற்றி பற்றி எரியும் கவிதைகள் இவருடையவை.
இறுதியில்
எரிந்து முடிந்தபின்
எஞ்சி நிற்கப் போவது
இலங்கை அல்ல --
ஈழம் மட்டுமே.
அந்தநாள் என்றொரு கவிதை மனதை ரணகளப்படுத்திய கவிதை . காவல்காரர்களே வேலி மேய்ந்த கதையை ரத்தத்தில் வரைந்தது.
விதவை மேகங்கள் திட்டுத் திட்டாகக் கிடக்க
விஷம் குடித்த மாதிரியான வானமும்
நீலம் பூத்துக் கிடந்த
அந்த நாளும் கனத்துக் கிடந்தது.
ரொம்பப் பிடித்த கவிதை இரண்டு.
நெருப்பென்றாலும்
நான்
நெருப்பே
குளிர் என்றாலும்
நான் குளிரே
ஆனாலும்
நான்
நெருப்புமில்லை
குளிருமில்லை “
“நான்
விட்டுச் செல்வது
உங்களை மட்டுமல்ல
ஒளி பொருந்திய
எனது
கவிதைகளையும்தான்.
நூல் :- மறுபடியும் பூக்கும்.
ஆசிரியர் :- இரா. வேலுச்சாமி
பதிப்பகம் :- நர்மதா பதிப்பகம், ( நவம் 1984)
விலை :- 7.50 /- காசு.



வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
2009 இல் நான் வலைப்பதிவிட்ட சிறிய காலத்திலிருந்து உங்களை தொடர்ந்து வருகிறேன். எதெச்சையாகத் தான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது, மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
பதிலளிநீக்கு37 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு புத்தகத்தை தூசுத்தட்டி படித்ததும், அதற்கு நீங்கள் ஒரு பதிவெழுதியதும் மட்டுமே ஆச்சரியம் அல்ல,
இரா வேலுச்சாமி அவர்கள் இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது என்பதும்,
அவர் குறித்த இப்பதிவை தற்செயலாக கடந்த அவர் மகளாகிய எனக்கும் இது பெரும் ஆச்சரியம் தான்,
தங்களுக்கு என் அன்பும் நன்றிகளும். உங்களுடன் பேச விருப்பம் :)
எனக்குப் பிடித்த கவிஞர்.
பதிலளிநீக்கு