அன்னப்பறவை
குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா, செல்லகணபதி வரிசையில் நான் விரும்பி வாசித்த குழந்தைக் கவிதைகள் பாலசுப்ரமண்யன் அவர்களது கவிதைகள். இவரது ஆறாவது அல்லது ஏழாவது தொகுப்பாக இந்நூல் இருக்கவேண்டும். நடைவண்டி , வெள்ளைத் திமிர் போன்ற ஐந்து நூல்கள் முன்பே படித்திருக்கிறேன். அவற்றில் ஒன்று ஹைக்கூ தொகுப்பு என்றும் ஞாபகம்.
பாண்டிச்சேரியில் வசித்துவரும் பொறியாளரான இவர் கவிதைகள் குழந்தைகளுக்கு அறிவியல் அறிவு, தமிழ்ப்பற்று, தேசப்பற்று, தலைவர்களின் மேல் அபிமானம் , இயற்கை, விலங்குகள், பறவைகள் பற்றிய நேசம் ஆகியவற்றை உருவாக்கக் கூடியவை.
இந்நூலில் அட்டைப்படம் வெகு அழகு. இதை வரைந்தவர் ஓவியர் இரா அன்பழகன். அன்று நாம் விளையாடிய அன்னப்பறவை ( ஆடுகுதிரை டைப் விளையாட்டுச் சாதனத்தில் ) யில் இரு குழந்தைகள் ஆடி மகிழ்வது அழகு. சாகித்ய அகாதெமி விருதாளர் ம. இலெ. தங்கப்பா அவர்கள் அணிந்துரை நல்கியுள்ளார்கள்.
கோனேரி பா. இராமசாமி வாழ்த்துரை அளித்துள்ளார்.
மழலைகள் யாழினியும் அமிழ்தினியும் கனியும் அன்பால் பாவலரையும் குழந்தையாக்கிக் கவிபடைக்க வைத்துள்ளார்கள். அன்னப்பறவை என்று பெயர் வைத்தது பற்றியும் சுவாரசியமாகக் குறிப்பிட்டுள்ளார் கவிஞர். மனைவி, மகன்கள், மகள், மழலைத் தோழி ஆகியோருக்கு நன்றி சொல்லியிருப்பது சிறப்பு.
நடுவில் எனக்கும் ஒரு நன்றியைப் பரிசளித்திருக்கிறார். நன்றி நண்பரே.
மொத்தம் 69 கவிதைகள்.
செடிவளர்த்தல். தோட்டம், உழவன், பொங்கல், ஐயனார், கன்றுக்குட்டி, மாட்டு வண்டி, யாழினி, அமிழ்தினி, அன்னப்பறவை, நடைப்பயிற்சி, மாடித்தோட்டம், இயற்கை உணவுகள் பற்றிய கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
பயறு கிழங்கு அவித்தவை
பழங்கள் பலவும் உண்ணலாம்
வயிறு நிரம்ப உண்ணலாம்
வாரா நோய்கள் திண்ணமாம்.
பெரியார் பற்றிய விழிப்புண்ர்வுக் கவிதை ஒன்று.
பெண்ணுரிமைக் கருத்துக்களை
பேச்சில் எழுத்தில் பரப்பினார்
மண்விடுதலை அடையுமுன்னே
மாற்றம் வேண்டி முழங்கினார்.
உயிர்வதை கூடாது என ஓணான், கழுதை பற்றிய பாடல் சிந்திக்கத்தக்கது. ஊக்கம், வெற்றி நிச்சயம், பகுத்தறிவு, நம்பிக்கை பற்றிய பாடலும் , நல்ல தமிழில் பேச அழைக்கும் பாடலும் அப்படியே.
தூங்கிய விதையால் மரமில்லை
சோம்பல் மனத்தில் மகிழ்வில்லை .
சூரிய ஒளியில் மின்சாரம், ஆர்க்கிமிடீஸ் போன்ற கவிதைகள் அறிவியல் புகட்டுபவை. குளிரூட்டி, நிலத்தடி நீர், ஏரிக்கரை, மரம் நடுதல் , அணுவாற்றல் போன்றவை வாழ்வாதாரத்தைச் சீராக வைத்திருக்க அறிவுறுத்துபவை.
நிலத்துக் கீழே பாறைகளால்
நீரைப் பிடிக்கும் ஏரியைப் போல்
பலவகை வடிவில் நீர்ப்படுகை
பரந்து விரிந்து கிடக்கிறது.
உறவுகள் பலப்பட அத்தை, மாமா பற்றிய கவிதைகள் அற்புதம்.
அத்தை போல அன்புள்ளார்
அகிலம் மீதில் யாருளார்.?
கடிதம், கடிகாரம் , தெருக்குழாய், போன்ற மறைந்துவரும் பொருட்களும் பாடுபொருட்கள் ஆகி இருக்கின்றன.
எல்லா மக்களும் உணரணும்
எதிர்காலத்தை நினைக்கணும்
கல்லா மக்களும் குடிநீரில்
கற்கவேண்டும் சிக்கனம் !
புதுச்சேரி மற்றும் பல்வேறு இலக்கியக் கழகங்கள் வழங்கிய விருதுகள் பல பெற்றுள்ளார் இக்கவிஞர். குழந்தைகளுக்காக
எழுதும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இப்போது குறைவே. விரைவில் இவரது இப்பணிக்காக சாகித்ய அகாதெமி விருது பெறவும் வாழ்த்துவோம்.
பாலருக்கான பாவலரின் பாடல்கள் அற்புதம் . வாங்கிப் பரிசளிக்கலாம்.
நூல் :- அன்னப்பறவை
ஆசிரியர்:- மு. பாலசுப்ரமணியன்.
பதிப்பகம்:- யாழினி பதிப்பகம்.
விலை :- ரூ 80/-


என் அற்புத தோழரின் புத்தக விமர்சனம்..அருமை ..நன்றி
பதிலளிநீக்குஅன்பு நன்றிகள் தேனம்மை
பதிலளிநீக்குநல்ல நூல் பகிர்வுக்கு நன்றி. நூலாசிரியருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குநிறைய வாசிக்கிறீர்கள் என்னுடைய மின்னூல்களை வாசித்து விட்டீர்களா
பதிலளிநீக்குநூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
பதிலளிநீக்குஅருமை
நன்றி சகோதரி
நன்றி செல்வா
பதிலளிநீக்குநன்றி பாலா
நன்றி ஜம்பு சார்
நன்றி பாலா சார். இரு நூல்கள் வாசித்து இடுகை போட்டிருக்கின்றேனே சார் !
நன்றி ஜெயக்குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!