காகிதச் சங்கிலிகள்
அநேகமாக தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த எழுத்தாளர் சுஜாதா. ரங்கராஜனாகிய அவர் தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதி வந்தார். சட்டென விஷயங்களைக் கடத்தும் எழுத்து அவருடையது. இவருடைய கணேஷ் வசந்த் இல்லாத தொகுப்பு இது. இத்தொகுப்பில் நான்கு கதைகள் இடம்பெறுகின்றன.
அக்யூட் ரீனல் ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச்
சுற்றிப் பின்னப்பட்ட கதை. முடிவில் அவன் இறந்துவிடுகிறான். இக்கதை என் தூரத்து உறவில் ஒரு அண்ணனுக்கு ஏற்பட்டதைப் போல இருந்ததால் பலமுறை படித்துக் கலங்கி இருக்கிறேன். ஹ்ம்ம். உறவுகளே காகிதச்சங்கிலியால் பின்னப்பட்டவை
என்னும்போது அங்கே எதற்கும் மதிப்பில்லாமல் போகிறது.
தீவுகள் கரையேறுகின்றன.
இக்கதை ஒரு மனநிலை பாதித்த பெண் குழந்தை அசந்தர்ப்பமாக கர்ப்பமாகி தன்னைத்தானே மாய்த்துகொண்டதாக முடியும் கதை. பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் கந்தைத் துணி உடுத்தி உடல் பிரக்ஞையற்ற , மனநிலை பாதிக்கப்பட்டோரிடம் கூட காமம் கொள்ளும் மிருக ஜென்மங்களை எண்ணி கோபம் கொள்ள வைத்த கதை.
எப்படியும் வாழலாம் அவள் அப்படித்தான் என்ற படத்தை நினைவுபடுத்திய கதை. இதில் வரும் ஹீரோயின் எல்லாவற்றையும் எள்ளல் செய்பவளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். மாரல் வேல்யூஸ் என்று நம்பப்படும் அனைத்தையும் சிதறடிக்கிறாள். முடிவில் பேட்டி எடுத்தவர் மனநிலைதாம் நமக்கும்.
நான்காவது கதைதான் வயிற்றெரிச்சலைத் தூண்டிய கதை. விலை என்ற இக்கதையில் தானுண்டு தன் கோயில் கைங்கர்யம் உண்டு என்று வாழ்ந்துவரும் ரங்கய்யங்கார் போன்ற நீதி நெறிக்குக் கட்டுப்பட்ட ஜீவன்களின் புலம்பெயர்தல் என்பது தீர்க்கமுடியாத சோகத்தை உண்டுபண்ணியது.
பிரபஞ்சனின் வானம் வசப்படும் கதையில் வரும் அனந்தரங்கம்பிள்ளை போல தம் குலத்தை தாமே கெல்லும் கோடாரியாக இதில் பாச்சா என்னும் வக்கீல் படைக்கப்பட்டிருக்கிறார்.
கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்று ரங்கய்யர் போல மனம் ஏற்றுக் கொண்டாலும் புத்தி ஏற்றுக்கொள்ளவில்லை. தொட்டவுடன் உதிரும் சுவர் போல அனைத்து நம்பிக்கைகளிலும் ஏதோ ஒரு நிலையின்மையும் நிம்மதி இன்மையும் புகுந்து ஆட்டுவித்தது. சுஜாதாவின் மேல் கோபம் வர வைத்த கதைகளில் இதுவும் ஒன்று. இன்னும் சிலவும் இருக்கின்றன. ( பிரிவோம் சந்திப்போம் மாதிரி )
சுஜாதாவை அறிந்தோர் படித்திருப்பர். இல்லாதோர் கட்டாயம் படிக்கவேண்டிய தொகுப்பு இது.
நூல் :- காகிதச் சங்கிலிகள்
பதிப்பகம்:- குமரிப்பதிப்பகம்
( மணிமேகலையில் கிடைக்கும் )
ஆசிரியர் :- சுஜாதா
விலை :- 6. 50 காசு. ( 1981 & 1983 என இரண்டு பதிப்பு கண்டது. இன்னும் பல பதிப்புகள் வந்திருக்கலாம். )

பத்திரிக்கைகளில் வந்திருந்ததா படித்த நினைவில்லை
பதிலளிநீக்குநிச்சயம் வந்திருக்கும் பாலா சார் !
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!