எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஸ்ட்ரோக் :-

ஸ்ட்ரோக் :-

ஸ்க்ரீன் சேவரில் வைத்திருந்த அஞ்சனாவின் கண்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜோ. பேசும் கருவிழிகள். பேச்சற்று நிறுத்தும் விழிகள். எத்தனை மொழிகள் இருந்தென்ன மொழியற்று அமரவைக்கும் இவள் பார்வை ஒன்றே போதாதா. எதற்காக மொழிகளுக்கு ஏங்குகிறோம், அது தரும் போதைக்கும் என  நினைத்தபடி மனமில்லாமல் ஸ்க்ரீனை மேலே தள்ளியபோது மெசெஜ் ஒன்று வந்திருந்தது அவளிடமிருந்துதான்

.
மூன்று குழந்தைப் புகைப்படங்கள். அன்று க்ரீமி இன்னில் எடுத்தது. குழந்தைப் பொண்ணு. இல்லை பயபுள்ள. பதினைந்து வயதில்தான் பெரியவளானாளாம். பத்துவயது வரை ஆண் என்றே எண்ணிக் கொண்டாளாம். சிரிப்பு வந்தது அவருக்கு. அழகான தோள்பட்டைகள். அதில் நிம்மதியாகச் சாய்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தது. எப்போது என்றுதான் தெரியவில்லை.


தினம் நூறு வருகிறது ஆனால் ஒன்றிலும் அவர் எதிர்பார்த்தது வரவில்லை. ஒரு மூன்று வார்த்தைகள். சொல்வாள் சொல்வாள் என நினைத்துத் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. நிச்சயம் சொல்லிவிடக்கூடும் என நினைத்த சந்தர்ப்பங்கள் அநேகம். ஆனாலும் தவிர்த்தே வருகிறாள்.


அஞ்சனா ஆர்க்கிடெக்ஸிங் முடித்துவிட்டு கட்டிடங்களின் உள்பாகங்களை உருவமைத்துக் கொண்டிருந்தவள். வேலையை விட்டு விட்டு ஃப்ரீலான்சிங்காக பத்ரிக்கைகளின் மேல் உள்ள ஈர்ப்பால்  டிசைன் இன்ஜினியரிங் முடித்த தகுதியை வைத்து விதம் விதமான படங்களால் பத்ரிக்கை உலகைக் கலக்கிக் கொண்டிருந்தாள்.


ஒரு விருப்பற்ற தன்மையில்தான் அவர்கள் அறிமுகம் ஆகியிருந்தது. ஜோ ஒரு ஆடிட்டர். கம்பெனிகள் மற்றும் சில பத்ரிக்கை அலுவலகங்களுக்கும் அவர் ஆடிட்டிங்க் வேலைகள் செய்துகொடுத்துக் கொண்டிருந்தார்.


வேலைப்பளுவை எளிதாக்க ஒரு புகைப்படம் எடுப்பவர் கம் லே அவுட் ஆர்ட்டிஸ்டை அனுப்பக் கோரி அவரது பத்ரிக்கைத் தோழி தனா தனது அலுவலகத்தில்  கேட்டிருந்தபோது தனது படங்களுடன் வந்து சேர்ந்தாள் அஞ்சனா.


ஒரு ஜீன்ஸ் பேண்டும் டாப்ஸும் போட்டு பாய் கட்டிங் செய்திருந்தாள். கொஞ்சம் பையனைப் போன்ற நடையுடை பாவனை. நேர்கொண்ட பார்வையுடன் கம்பீரமான பெண் உடல். எந்த மேக்கப்பும் இல்லாத முகத்தில் கண்கள் மட்டும் காந்தம் போல இழுத்தது. மேலோட்டப் பார்வைக்கு சில மரங்கள் சில மலைகள் தென்பட்ட படங்களைப் பார்த்து இவர் ஃபைலை ஒதுக்கிவிட்டு அஞ்சனாவை அசட்டையாகப் பார்த்துவிட்டுக் கிளம்பியிருந்தார்.


ஓரிரு நாட்கள் கழித்து தனாவுக்கு ஃபோன் செய்தபோது அந்தப் பெண் அப்பாயிண்ட் ஆகியிருப்பதாக சொன்னாள்.

”சுமாரான படங்கள் எடுத்திருக்கா தனா. இத வைச்சு நீ எப்பிடி வேலை வாங்கப் போறே “

”இல்ல ஜோ . நீ கிளம்பி வா. சரியா பார்க்கலை. அந்தப் படங்களை இன்னொரு தரம் பாரு “

'என்ன பெரிசா இருக்கப் போவுது'.

'மிராகுலஸ் ஜோ. பார்த்தா சொல்வே. இது எல்லாமே ஃபண்டாஸ்டிக்.'

இன்னும் இரு நாள் கழித்து அசட்டையாகக் கிளம்பிப் போனார்.

"சைத்தானே"
.
பாராட்டுகிறாரா திட்டுகிறாரா எனப் புரியாமல் தனா பார்த்தாள். புகைப்படங்களையும் அவள் வரைந்த லே அவுட்டுகளையும் பார்த்து ஜோ பாராட்டுவதுபோல்தான் தோன்றியது. மலைகள் மார்பகங்களாகவும். மரக்கிளைகள் கைகளாகவும் அருவி கூந்தலாகவும் இரு பரிமாணத்தில் தெரிந்தது ஒரு படம். இன்னொரு படத்தில் இரு மரங்கள் அதன் கிளைகளூடே ஆணும் பெண்ணும் கை கோர்த்துக் காதலாகியிருந்தார்கள். இரண்டு அன்னங்கள் காதலர்களின் கரங்கோர்த்த அணைப்பையும் முத்தத்தையும் வரிவரியாக்கி இருந்தன. பார்க்கப் பார்க்கப் பிரமிப்பு ஊடுருவி இருந்தது அவர் முகத்தில். என்ன ஸ்ட்ரோக்ஸ்.

யதேச்சையாக எடிட்டர் தனா ரூமுக்குள் நுழைந்த அஞ்சனாவைப் பார்த்த ஜோ அந்த அலட்சிய முகத்தையும் அதன் மைய ஈர்ப்பான இரு கண்களையும் பார்த்தார். கண்களைக் கண்கள் கவ்வி விழுங்கக் கூடுமோ. கருந்துளை இதுதானோ. காணாமல் போகவோ. காதலில் விழுந்தார் விழுந்தவர் எழவேயில்லை. அவளுக்குப் பிடித்திருக்கிறதா அவரை. இதே குடைந்து கொண்டிருக்கிறது இன்றுவரை அவர் மனதில்.


பொதுவாக அடுத்தவர் அந்தரங்கத்தை அறிவதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவர் அவளைக் காதலிக்கத் துவங்கி இருந்தார். தெரிந்துகொள்ளும் தேவை இருந்தது. அவருக்குத் திருமணம் ஆகி மனைவியை இழந்திருந்தார். அவளுக்கும் திருமணம் ஆகி மணவிலக்குப் பெற்றிருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கணவன் பராமரிப்பில் இருப்பதாகவும் தனா சொல்லி இருந்தாள்.


”இப்போது நீ இருக்கிறாய். உன் வாழ்வில் நீ மட்டும் இருக்கிறாய். நானும் இருக்கிறேன் . என் வாழ்விலும் நான் மட்டுமே இருக்கிறேன். நாம் இருவரும் இணைந்து இருந்தால் என்ன. நமக்காக வாழ நம்மைச் சிந்திக்க நம் இருவருக்கும் துணை தேவை. ”க்ரீமி இன்னில் குளிர்ந்த விரல்களால் லேசாக அவள் கைகளைப் பற்றுவது போல அவர் ஒரு வேகத்தில் சொல்லி முடித்தார்.

’இதெல்லாம் நினைக்கவே நேரமில்லை. இனியும் ஒருமுறை  இதெல்லாம் தேவையா என்று யோசிக்க வேண்டும் ஜோ. ’ஒரு மாதிரிக் கசப்பாகப் புன்னகைத்தாள் அஞ்சனா. குழந்தைகள் ஆரவாரமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஓரிரு குழந்தைகளை செல்ஃபோனால் படம் பிடித்துக் கொண்டிருந்தாள். இவள் புகைப்படம் எடுப்பதைப் பார்த்துப் பக்கத்தில் ஓடிவந்து சாய்ந்த குழந்தை டேபிளைத் தட்டியது. உருண்ட ஐஸ்க்ரீம் கப் சாய்ந்தது. பிடித்த இருவர் கைகளிலும் ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம் மின்சாரமாய்ப் பாய்ந்தது.

மெதுவா யோசிச்சுச் சொல்லு அவசரமில்லை. எந்த சுனாமியும் வரப் போறதில்லை.

அது எப்பிடித் தெரியும்

தெரியும். அழுத்தமாகப் புன்னகைத்தார்.  திஸ் இஸ் த எண்ட் சொல்லிக் கொண்டது மனது. வாழ்வது ஒரு முறை. அதில் காதலும் ஒரு முறை. கழுவிய பின்னும் ஐஸ்க்ரீம் பிசுக்கோடு கை மணத்துக் கொண்டிருந்தது. காதோரம் அவள் அடித்திருந்த பாய்சன் செண்டின் மணத்தைப் போல.

தினம் பல நூறு மெசேஜ்கள் அவளிடமிருந்து . முதிர்ந்த காதலர்களைப் போல எதையும் பேசிக்கொள்வதில்லை அவர்கள். தினம் காலையை ஆரம்பிக்கும்போதும் படுக்கைக்குச் செல்லும்போதும் அவளின் சில மெசேஜ்கள் அவரைப் புதுப்பிக்கப் போதுமாயிருந்தன. காத்திருந்தார் அவர்.

அஞ்சனா ட்ரெயினில் ஏறினாள். இந்த ப்ராஜெக்ட் சக்சஸிவா முடிந்துவிட்டது. நிறைவாயிருந்தது அவளுக்கு. ஆனாலும் அடிக்கடி ஏற்படும் தலைவலி ஆளைப் பிளந்துகொண்டிருந்தது. சிசுக்கொலைகள், குழந்தைத்திருமணங்கள் நிறைந்த தமிழக கிராமமொன்றில் ஒரு பேட்டிக்காகப் புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதன்பின் தங்கியிருந்த வீட்டில் சொல்லிக் கொண்டு ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டாள்.

தினம் தினம் ஜோவுக்கு அனுப்பும் மெசேஜ்களையும் அனுப்ப மறந்திருந்தாள் அவள். மதியம் ஹோட்டல் சாப்பாட்டில் உப்பை அளவுக்கு மீறிக் கொட்டி இருந்தார்கள். சோற்றிலும் உப்பு. தின்னப் பிடிக்காமல் தயிரைக் குடித்துவிட்டு எழுந்தாள் அவள். ஏதாவது ப்ரெட் கிடைத்தால் தேவலை. சிந்தித்தபடி ஸ்டேஷனின் கடைகளைப் பார்வையிட்டாள். மிகப் பழைய பாக்கிங்காக ரொட்டிகளும் சில குளிர் பானங்களும் இருந்தன. ஓரிரு பத்ரிக்கைகளும் வாங்கிக்கொண்டு ப்ளாட்ஃபார்மின் கடையோர பெஞ்சில் அமர்ந்தாள்.

பதின்பருவப் பெண்கள் செல்ஃபோனைக் கீறியபடிக் கடந்து சென்றார்கள். இன்றைய சுதந்திரம் அன்றைக்கு இல்லை. தன்னுடைய பதின்பருவங்களை எண்ணிப் பார்த்தாள் அஞ்சனா. பதினைந்து வயது வரை புஷ்பிக்கவில்லை என்று பறந்த பாட்டி புஷ்பித்ததும் கோயில் கோயிலாக வேண்டுதலை நிறைவேற்றியது ஞாபகம் வந்தது. ஆணைப்போல அல்ல தான் ஆண்போல நினைத்தாலும் நீ பெண் அதனால் நாணிக்குனிய வேண்டும் என்று சடங்கு நிகழ்ச்சிகளில் சொந்த பந்தங்கள் அவளுக்குக் கற்பித்தன.

டாக்குடாக்குன்னு பயலைப் போல நடக்காதே. காலைச் சவட்டிக்கிட்டு நிக்காதே. பராக்குப் பார்க்காதே. மெதுவா நட. குனிஞ்சு நட. சிரிக்காதே. வீட்டுக்குள்ளே இரு. பாதுகாப்பா இரு. வேலையைப் பாரு. இதுதான் இவ்ளோதான். எவ்வளவு எளிதானது வாழ்க்கை. எனச் சொல்லியது வீடு. அவளுக்கு மூச்சு முட்டியது. இது எளிதில்லை. இந்த எளிமை எனக்கு வேண்டாம். மீற முடியாது. புதைந்து போனாள்.

காதல்.. இனக்கவர்ச்சி. அதன் ரேகைகள் அவ்வப்போது வந்து மின்னல் மாதிரி வெட்டிப் போனது. இந்த வீட்டுப் புள்ள காதலிக்கலாமா. அது குலத் துரோகம். கண்ணைக் கட்டிக் கொள்ளலாம் படிப்பென்னும் சேணத்தில். இறுக்க இறுக்கக் கட்டினாள். தன்னை மீறி வெளிப்பட்ட பெண்மையை உள்ளாடையால் இறுக்கி முடிந்துகொண்டது போல.

இருளில் அமர்ந்து தனது தைரியத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். மண்டை நெடுக நரம்பு போல வலித்தது. தைராய்டு, ப்ரஷர் எல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அடிக்கடி செக்கப்புகள், ஹை டிப்பெண்டபிலிடி செல். கார்டியோ க்ராஃபின் கிறுக்கல்கள் ஸ்ட்ரோக்குகளாய்., அவளது ஓவியங்கள் போலக் கையைக் கீறிய ஊசிகளும் யூவி ட்யூபுகளும்.

படுக்கை ஒரு சிலுவை போல அவளைத் தாங்கி இருக்கிறது. புண்ணாய்ப் போன உடம்பில் அவ்வப்போது மெலிய இறகாய் பக்கத்துச் சுவற்றின் ஓவியத்தில் இருந்து இறங்கித் தடவிக் கொண்டிருந்தது காதல். ஜோவின் பார்வையைப் போல. எத்தனை முறை ஓடி வந்துவிட்டார். எவ்வளவு செலவு. எதற்கும் கணக்கில்லை. திரும்ப வாங்கிக் கொண்டதுமில்லை.


ரத்தக் கொதிப்பு எதற்கென்னு விசாரித்துச் சிரித்தார் டாக்டர். எந்தப் பிரச்சனைகளும் இல்லாத வாழ்வில் பழையவற்றின் மன அழுத்தங்கள் அவள்மேல் பாரமாய்ச் சாய்ந்திருந்தன. ”கிட்னி, கண்ணு, மூளையப் பாதிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்ள வைங்க” என்று எல்லா டெஸ்டும் எடுத்து மாத்திரைகள் தந்தார். தினம் இருவேளை கட்டாயம். என்னன்னே தெரியல உங்க ரத்த அழுத்தம் இறங்கவே இல்லை. பரம்பரை காரணமா இருக்கலாம். ஃப்ளக்சுவெஷன்ஸ் இருந்துட்டே இருக்கு. சரியான மருத்துவம் இல்லாட்டி ஸ்ட்ரோக்ஸ் வர வாய்ப்புகள் இருக்கு. யோகா தியானம் வாக்கிங்க் அவசியம்.

மாத்திரைகள் எடுத்து இரண்டு நாளாயிற்று. மண்டை புண்போல வலித்தது. வருடிக் கொண்டாள். எந்த வலியும் கண்ணில் இறங்குவது போல இருந்தது.

தலையைச் சாய்த்து அமர்ந்தாள். திருமணம் இருமணம் கூடாத வெறும் மணம். குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் பிரித்துப் போன வெறும் மனம். செல்ஃபோனில் ஒற்றைக் கொக்கை வரைந்தாள் அதன் வாயில் ஒரு உறுமீன் இருந்தது. தான் அந்த உறுமீனாய்த்தோன்ற அழித்தாள்.

பக்கத்தில் குழந்தைகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஜோவுக்கு இன்றாவது சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். எத்தனை நாள் எத்தனை ஆண்டுகள் தவம் செய்கிறார். ஓரிரு வார்த்தைகளில் அவர் முகத்தில் ஏற்படும் சந்தோஷம். மெல்ல மெல்லப் பூவைப் போல மலர்ந்து கொண்டிருந்தது அவள் இதயம். இதயம் தேடும் இதயம். எந்த நிர்ப்பந்தங்களும் இல்லை. சொல்லி விடலாம்தான். இன்றே சொல்லிவிட்டால் என்ன, ந்யூரான்களின் தாறுமாறான ஆட்டம்.

அவளும் ஜோவும் நடந்து செல்லும் பாதைகள் ரோஜாக்கள் சூழ இருந்தன. ஒரே நறுமணம். எண்டார்ஃபின்கள் நடனமாடின. வழிந்து இறங்கின. ”கைகள் கோர்த்துக் கொள்வோம் ஜோ” அஞ்சனா சிறுபிள்ளையாய்க் கூற மறுதலிப்பில்லாமல் கோர்த்துக் கொண்டார். பறந்தார்களா மிதந்தார்களா தெரியவில்லை. கூ என்ற சத்தத்தோடு ரயில் வந்தது. ஏசி கம்பார்ட்மெண்டில் ஏறினாள். தடுமாறியது.

இன்னும் ப்ரட்டைச் சாப்பிடவில்லை. சாப்பிடத் தோன்றவில்லை அவளுக்கு. தலை பிளந்துகொண்டிருந்தது. கண் மசமசப்பாய். டிடி ஆரிடம் டிக்கெட்டைக் காண்பித்துவிட்டுக் கைகளைக் கோர்த்துத் தலைப்பக்கம் வைத்துச் சாய்ந்தாள்.  குழந்தைப் புகைப்படங்களைப் பார்த்தாள். அவளின் குழந்தை ஞாபகம் தின்றது. ஜோவுக்கு மூன்று படங்களை அனுப்பினாள்.

திரும்ப கண்ணுக்குள் ரோஜாத்தோட்டம். அவற்றைப் பிழிந்தது போல கண்ணுக்குள் வலி. அவள் விரும்பி அடித்துக் கொள்ளும் பாய்சன் செண்டின் வாசம். கண்ணுக்குள் மின்னல் கொடிபோல வலியோடு ஒன்று பாய்ந்தது. பேரமைதி சூழ்ந்தது அவளை. மீளாத உறக்கத்தில் ஆழ்ந்தாள் .

அவளிடமிருந்து மெசேஜ்கள் வந்து 20 மணி நேரம் ஆகிவிட்டதே. குங்குமச்சிமிழ், குலாப் ஜாமூன் மல்லிகைப்பூ. போதுமா. தானும் ஒரு சராசரி மனிதனைப் போல நடந்துகொள்வது குறித்து வெட்கமாயிருந்தது அவருக்கு. திரும்பப் பைக்குள் போட்டு வைத்தார். கொடுப்போமா வேண்டாமா. சிரிக்கப் போகிறாள். அவள் வரும் ரயில் இன்னும் சில நிமிடங்களில் ப்ளாட்ஃபார்முக்கு வந்துவிடும். பரபரப்பில் அவரின் இதயம் தாறுமாறாகத் துடித்தது. இப்போதேனும் சொல்லுவாளா.

திரும்ப ஒரு முறை எடுத்துப் பார்த்தார் அவர். அட அட அட ஒளிர்ந்தது அவர் கண்கள். மூன்று குழந்தைப் படங்கள். அதே க்ரீமி இன் குழந்தை. ஒன்றில் நேராக நின்று பக்கவாட்டில் கை வைத்திருந்தது. இன்னொன்றில் தரையில் தப்பென்று அமர்ந்து கால்களை நீட்டி இருந்தது. மூன்றாவதில் குட்டிக் கரணம் அடிக்கும் போஸில். அதைத் தலைகீழாக்கி அனுப்பி இருந்தாள். அது சொல்லிய சேதி இதுதான். இதுவேதான்.. ILU. 


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...