புதன், 16 நவம்பர், 2016

எனப்படுவது எனது பார்வையில் :-எனப்படுவது எனது பார்வையில் :-


எனப்படுவது என்றொரு தலைப்பை இதற்கு முன் கேட்டதில்லை. எனவே இதை டிஸ்கவரியில் வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக குங்குமத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே எனப்படுவது.

அது என்ன எனப்படுவது..? கண்ணாடி எனப்படுவது, தற்கொலை எனப்படுவது, சபதம் எனப்படுவது, தண்டனை எனப்படுவது, சிறை எனப்படுவது, கடிதம் எனப்படுவது, கடத்தல் எனப்படுவது, வளர்ப்புப் பிராணி எனப்படுவது, தூது எனப்படுவது என்று சற்றேறக்குறைய 38 தலைப்புக்களில் உள்ள கட்டுரைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் உணர்வுகள் செயல்கள் என எல்லையற்று விரிந்த என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம் என இதைப் பதிப்பாசிரியர் கூறி இருக்கிறார்.

நாம் அறிந்த விஷயங்களின் அறியாத பகுதியையும் தெரியத் தருகிறது எனப்படுவது. அதன் பூர்வீக, சரித்திர பூகோள இதிகாச வரலாற்று இலக்கியம், கலை, அறிவியல், அரசியல் முக்கியத்துவத்தையும் அதன் பௌதீக குணங்களையும் இரசாயன மாற்றங்களையும் சென்ற நூற்றாண்டுகளிலும் சமகாலகட்டத்திலும் அவற்றுக்கான இடம்பற்றியும் பல்வேறு பார்வைகளில் பகிர்கின்றன கட்டுரைகள். ஆசிரியர் லதானந்த் தான் சந்தித்த வாசித்த தன்னை ஏதேனும் ஒரு வடிவத்தில் பாதித்த அனைத்து விஷயங்களையும் எளிமையான வடிவில் எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிச் செதுக்கித் தந்திருக்கிறார். 

தனது தாய் ராஜலெட்சுமி திருஞான சம்பந்தம் அவர்களுக்கும், பெரியம்மா வள்ளியம்மாள் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் இந்நூலை சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர்.

இக்கட்டுரைகளின் சிறப்பு என்னவென்றால் இவற்றோடு தொடர்புடைய பழமொழிகள், சொலவடைகளையும் சேர்த்துக் கொடுத்திருப்பதுதான். இலக்கியத்திலிருந்து மட்டுமல்ல இந்தி ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்தும் உதாரணங்கள் கொடுத்து சிறப்பாக எழுதி இருக்கிறார். 

தேன், மோதிரம், இலவசம், மின்னல், சகுனம், நாணயம், சிரிப்பு, துறவு, சக்கரம், கோபம், விருந்து, தோல், பிரிவு போன்ற சாதாரண விஷயங்களின் நுண்மையான பகுதிகளை மட்டுமல்லாமல் தற்கொலை, தண்டனை, சிறை, கடத்தல், மரணம், ரத்தம் , தொப்புள்  போன்ற சர்ச்சைக்கும் அதிர்ச்சிக்கும் உரியவற்றையும் மையமாக வைத்து எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடியைப் பற்றி எழுதும்போது நகரத்தார் இல்லங்களில் கண்ணாடியே வழிபாட்டு அறைகளில் பிரதான இடம் வகிப்பதும், பாதுகை என்னும் போது சமீபத்திய சாமியார் தீட்சைகளும், சிறை பற்றிப் படிக்கும்போது சிறை படம் ஞாபகம் வருவதும், மோதிரம் பற்றிப் படிக்கும்போது லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் திரைப்படமும் , கடத்தல் பற்றிப் படிக்கும்போது ட்ரான்ஸ்போர்ட்டர் படமும் மின்னலைப் பற்றிப் படிக்கும்போது வடிவேலு ஒரு படத்தில் வாம்மா மின்னல் என்றழைப்பதும் நாணயம் பற்றிப் படிக்கும்போது ஓட்டைக் காலணாவும் புதுக்கோட்டையின் சல்லி என்னும் காசும் ஞாபகம் வந்தது தவிர்க்க இயலாதது.

அவ்வப்போது கட்டுரைகளில் கூறப்படும் சிறுகதைகளும் , சுட்டப்படும் ஆங்கில தமிழ்ப் பழமொழிகளும், முடிவில் இடம்பெறும் பஞ்ச் டயலாக்குகளும் சுவாரசியம் கூட்டுகின்றன. சிலவற்றில் உளவியல் காரணங்களும் சிலவற்றில் அறிவியல் காரணங்களும் சிலவற்றில் மரபியல் காரணங்களும் கூட விளக்கப்படுகின்றன.

NU SPY SUNGLASSES, வடக்கிருத்தல், சதிமாதா, வேக்கத்லான், ஹைஹீல்ஸ் ஷூ அணிந்த ஆடவர், SUGAR DADDY SYNDROME, கரீபி ஹட்டாவ், ஹராக்கி, உயிர்ப்பரிசு, GOODSE FLESH, தேன் குடித்த நரி, யானைக்கண்ணி மோதிரம், நீல் கை, SURVIVAL OF THE FITTEST, பஃபே முறையில் இலவச உணவு, ஸ்பார்க்கி, BONE, FEUHER, LACRIMA, லீமி ஐ, அலக்ரியா, யுலுக், SMEUGAN, ஓணான் ராஜா, ஷேடோகிராஃப், அக்வஸ்டிக் ஷேடோ, ஷேடோ செக்ஸ், ஹைப்ஸ்மியா, அனோஸ்மியா, டைசோஸ்மியா, ஃபாண்டோஸ்மியா, ராய்ஜின், ஓமென்டம், மரண வரி, கோச் கன், மின்டிங், டெவில்ஸ் ஐலண்ட், இருண்ட சுற்றுலா, ரென்ஃபீல்ட்’ஸ் சிண்ட்ரோம், பிங்பாங் பாலிசி, ராக்ஸ்பலாடி, சூடோபுல்பர், சன்யாசி மான் கூட்டம், ஃபாலா உரை, டிஜிடல் பெட், ஆண்டிகைதிரா, உடைக்கும் சக்கரம், சதுரச் சக்கரம், ஃப்யூரி, பட்டினி விருந்து, DACTYLOSOPY,  அல்பினிஸம், ஆம்புடேஷன் ஆகியன பற்றியும் விரிவாக அறியத் தருகிறார் ஆசிரியர்.

தேவையான இடங்களில் பயாலஜிகல் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆழ்வார் பாசுரம், பைபிள் போன்றவற்றிலிருந்தும் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் விக்கிபீடியா போல ஒரு விஷயத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள முழுமையான கையேடு என்று சொன்னால் மிகையாகாது. மிகச் சிறப்பான இந்நூலை வாசிக்கும்போது இன்னும் கூட பத்ரிக்கையில் வெளிவந்து இந்நூலில் இடம்பெற விட்டுப் போன பகுதிகளையும் சேர்த்துத் தொகுத்து அளித்திருக்கலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு பொருளைப் பற்றியும் முழுமையான வரலாற்றை அறிய கட்டாயம் இந்நூலை வாசித்துப் பாருங்கள். சூரியனின் சிறப்பான தொகுப்பு.

நூல் :- எனப்படுவது
ஆசிரியர் :- லதானந்த்
பதிப்பகம் :- சூரியன்
விலை:- 125.4 கருத்துகள் :

கொல்லான் சொன்னது…

Super Madam....

லதானந்த் சொன்னது…

நன்றிங்க

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கொல்லான்

நன்றி லதானந்த் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...