வியாழன், 24 நவம்பர், 2016

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.

எஸ்ராவின் முன்னுரையில் கதைக்கரு, சொல்லும் முறை, மொழி,வடிவம், தனித்துவம் இத்தோடு பன்முகத்தன்மை பொறுத்துத் தேர்ந்தெடுத்ததாகக் கூறி இருக்கிறார். பிரைமா லெவி கூறிய ஒன்பது காரணங்கள் சிறப்பு.

அதோடு இதையும் சேர்த்துக்கலாம். ஏதேனும் மெசேஜ் சொல்லணும்னு நினைக்கிற, தனது வட்டார வழக்கில், பேச்சு மொழியில் கதை சொல்ல நினைக்கிற சாமான்யர்களும் சமீபமா வலைத்தளம்,முகநூலில் எழுத ஆரம்பித்து இருக்கிறவர்களும் கூட நல்ல கதைசொல்லிகளாக மாறிவருகிறார்கள்.

தொகுப்பில் நிறையக் கதைகள் துயரம் படிந்தவை. சிறுகுழந்தைகளின் பார்வையில் சொல்லப்பட்ட கதைகள் அநேகம்.  போன நூற்றாண்டுக்கான வாழ்வியல் விசாரம் பொதிந்த கதைகள்.

நல்ல தொகுப்பு ராமகிருஷ்ணன் சார்.


இனி ஒவ்வொரு கதையும் ஓரிரு வரிகளில்

1. புதுமைப் பித்தனின் காஞ்சனை. காஞ்சனை மனுஷியா அமானுஷ்யமா என யோசிக்க வைத்த கதை.

2. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் -ஹ்யுமரஸ். “ உங்களிடம் எல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உடன் இருந்து வாழ முடியாது “ என்று கடவுள் கந்தசாமிப் பிள்ளையிடம் சொல்லுமிடம் ஹைலைட். ! 

3. புதுமைப் பித்தனின்  செல்லம்மாள்- படிக்கப் படிக்கத் துன்ப முடிச்சு. பட்டணத்தில் போதிய வருமானமில்லாமல் பாசத்துக்குரிய ஆனால் ரோகம் பிடித்த மனைவியுடனான ஒரு ஜீவனின் வாழ்க்கை எப்படி எல்லாம் இம்சிக்கக்கூடும் என்பதை விவரிக்கும் கதை.

4. மௌனியின் அழியாச்சுடர் .- ”நாம் சாயைகள்தாமா ? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். ” சாகாவரம் பெற்ற வார்த்தைகள். இருகூறாகத் தன் மன உணர்வுகளை எட்டி நின்று ( OBSERVE) யோசித்தல் நிகழும் கதை.

5. மௌனியின் பிரபஞ்ச கானம். -கவித்துவமான வர்ணனைகள் கொண்ட விசாரக் கதை.

6. கு. ப.இராஜகோபாலனின் விடியுமா - பயமும் பதட்டமுமாக ஓரிரவைப் பயணத்தில் கழித்து எதிர்பார்த்த பயம் நிதர்சனமானதும் ஏற்படும் விடுபட்ட மன உணர்வுக்கான கதை.

7. கு. ப. இராஜகோபாலனின் கனகாம்பரம் - மிகச் சிறந்த கதை. தம்பதிகளுக்குள் நிகழும் கருத்துவேறுபாடு பொசசிவ்னெஸ் காரணமாக எதன் பொருட்டும் வரக்கூடும் எனச் சொல்லிய நுண்மையான கதை. 


8. பி. எஸ். ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள் - குழந்தையின் மனநிலையிலும் பார்வையிலும் வானமும் நட்சத்திரங்களும் கொள்ளை கொள்கின்றன, முடிவில் அதன் துக்கமும் கூட

9.ந. பிச்சமூர்த்தியின் ஞானப்பால்-  எதுவும் நிரந்தரமல்ல என்பதை உணர்த்திய கதை.

10. தி. ஜானகிராமனின் பஞ்சத்து ஆண்டி - பஞ்சம் பிழைக்கச் சென்ற சாமானியன் குரங்காட்டி ஆன கதை. வைத்தியலிங்கம் இருக்கும்வரை உதவாமல் இறந்தபின் ஊர் உபதேசிக்கும், உபாசிக்கும் கதை.

11. தி ஜானகிராமனின் பாயாசம். தன்னைச் சீர் செய்த மனைவியை இழந்து மனக்கிலேசத்தில் தவிக்கும் ஒரு சீரற்ற போக்கு கொண்ட ஆண்மகனின் மனத்தவிப்புத்தான் கதை. அதில் நார்மடி அணிந்து வரும் மகள் கண்ணில் மண்டும் முள் இவரைப் புதராகக் குத்துவது திஜாவுக்கே வாய்த்த வார்த்தை அற்புதம்.

12. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் - கல்லூரிப் பருவத்திலேயே படித்தது. வர்க்கபேதத்தை வைத்து சிறு குழந்தைகளின் மனவோட்டங்களைச் சொல்லும் கதை.

13. கு அழகிரிசாமியின் அன்பளிப்பு - நம்மேல் பிரியம் கொண்டவர்களைப் புரிந்து கொள்ளாமல் நாம் எவ்வளவு விஷயங்களை அலட்சியப் படுத்துகிறோம் என்பதை அறைந்த கதை. சாரங்கன் மனதை நெகிழ வைத்தான்.

14. கு. அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு- மனதைக் கலங்கச்செய்த கதை. வறுமை என்றால் கோர வறுமை வாய்ப்பட்ட இரு குழந்தைகளும் தாயும் பட்ட துயரங்களும் அதன்பின் இருகுழந்தைகளும் காணும் ஒரே கனவின் கதை.

15. கி. ராஜநாராயணனின் கோமதி -பெண்மனம் கொண்ட ஆண், அதாவது திருநங்கையின் கதை.பல வருடங்களுக்கு முன்பேமுதன் முதலில் நான் படித்த திருநங்கை பற்றிய கதை இதுதான்.   திருநங்கைகள் பற்றிய புரிதலும் இழிவரலும் தோன்றவைத்த கதை.16. கி ராஜநாராயணனின் கன்னிமை – கல்யாணத்துக்கு பின் கன்னிமையோடு காணாமல் போய்விடும் பெண்ணின் அப்பாவியும் அழகுமான மனநிலை ஆணின் வழி சொல்லப்பட்டிருப்பது அற்புதம். 

17. கி.ராஜநாராயணனின் கதவு  - தீப்பெட்டி சிகரெட் அட்டைகளைச் சேகரித்த காலமும் கதவில் கால்வைத்துச் சுற்றி ஆடிய ஆட்டமும் ஞாபகம் வந்தது. பால்யப் பிரக்ஞை J ஆனாலும் காரைக்குடி பழைய சாமான் கடைகளில் கிடக்கும் அநேக கதவுகளைப் பார்த்த துயரம் அப்பிக் கொண்டது. 

18. சுந்தர ராமசாமியின் பிரசாதம். - மனதை நெகிழவைத்த கதை. தட்டுப்பாடும் அதனால் லஞ்சம் வாங்க நினைப்பதும் யதார்த்தமா சொல்லப்பட்டிருந்தாலும் இதில் இருக்கும் மனிதநேயமிக்க அர்ச்சகர் பாத்திரம் அருமை.

19. சுந்தர ராமசாமியின் ரத்னாபாயின் ஆங்கிலம் – மிகையுணர்வில் தன்னைப் பற்றிப் பிரமாதமாக எண்ணிக் கொள்ளும் ஒரு பெண்ணின் அக உணர்வுகளை வடித்த விதம் சர்காஸ்டிக் J

20. சுந்தர ராமசாமியின் விகாசம் – மிஷின்கள் வந்தாலும் மனிதர்களின் மதிப்பை உணர்த்திய கதை.

21. லா.ச.ராமாமிர்தத்தின் பச்சைக் கனவு.- பொதுவாக லாசராவின் எழுத்துக்கள் துரத்திக் கொண்டேயிருக்கும் வலிமை பெற்றவை. கண்ணை மூடி நினைத்துப் பார்க்கும்போது கருமை கூட கரும்பச்சையாக உருமாறும் அற்புதம் நிகழும் இக்கதையைப் படித்தபின். மனவலியை உண்டாக்கிய கதை.

22. லா. ச. ராமாமிர்தத்தின் பாற்கடல். இதைப் படித்ததும் வடிந்த கண்ணீருக்கு அளவில்லை. பாற்கடலில் இருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ், ஆலகால விஷம், அமிர்தம் வந்தது போல மன உணர்வுகளைக் கடைந்து கண்ணீரைக் கொட்டவைத்த கதை.
23. நகுலனின் ஒரு ராத்தல் இறைச்சி – காக்காய் பிடிப்பவர்களைப் பற்றி கடுமையான நடையில் நாயின் குணம் என்று குறியீடாக்கிச் சொல்வதாகக் கதை. 

24. அசோகமித்திரனின் புலிக்கலைஞன். – சினிமா வாய்ப்புக்காக திறமைகளோடு இருக்கும் ஒருவன் அலைபாய்வதும் கிடைக்கப்போகும் நேரத்தில் திரைக்கதையே மாறிப் போவதுமான அவலநிலை. அதற்குள்  புலிக்கலைஞன் தினசரி வாழ்க்கை யுத்தத்தில் காணாமல் போய்விடுகிறான்.ஹ்ம்ம்

25. அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் :- நெருக்கடியான வாழ்வில் வேலை தேடி அங்குமிங்கும் எண்ணங்கள் அலைய மனவோட்டம் செய்யும் ஒருவனின் நிலையை விளக்கும் கதை. காலம் என்பது என்ன என்பதை யோசிக்க வைத்த கதை. கடந்த வாய்ப்பாகவோ வரப் போகும் வாய்ப்பாகவோ என்றிலும் மாறாததாகக் காலம் ஒரு குறியீடாக வருகிறது. 

-- மிச்ச 75 சிறுகதைகளும் தொடரும் J 


நூல் :- 100 சிறந்த சிறுகதைகள்.
தொகுப்பு :- எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம். :- டிஸ்கவரி புத்தக நிலையம்
பக்கம் :- 1092.
விலை :- ரூ 650

டிஸ்கி:- இதையும் பாருங்க

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.

5 கருத்துகள் :

R.Someswaran சொன்னது…

புத்தகத்தை வாங்கி 100 கதைகளையும் ஒரு முறை மட்டுமே படித்திருக்கிறேன் , சில கதைகளை தவிற மற்ற கதைகளுடன் ஒன்ற முடியவில்லை. அவரின் தரத்திலிருந்து கதைகள் கொடுக்கப்பட்ததால் புரியவில்லையா அல்லது நான் வாசிப்பின் பக்கம் வந்திருக்கும் புது வாசகன் என்பதாலா என்று தெரியவில்லை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே
வாய்ப்பு கிட்டும்பொழுது அவசியம் வாங்கிப் படிப்பேன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு தொகுப்பு. சில கதைகள் மட்டுமே படித்திருக்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான். எனக்கும் ஒரு சில கதைகள் ஒன்றமுடியாமல் இருந்தன. ஆனால் அவை மிகச் சிறப்பானவை என்று பெயர் பெற்றவை ! கருத்துக்கு நன்றி சோமேஸ்வரன் சகோ.

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...