செவ்வாய், 15 நவம்பர், 2016

இன்னுமொரு நான் - எனது பார்வையில்..இன்னுமொரு நான் எனது பார்வையில்..


வார்த்தைகளின் நர்த்தனக்காரி ராஜாமகளின் இன்னுமொரு நான் படித்தேன். படித் தேன் ருசித் தேன். முகநூலில் நிலைத்தகவல்களிலேயே ஓரிரு வார்த்தைகளில் கலக்கி வருபவர் நான் ராஜாமகள் என்னும் தேன்மொழி என்னும் தேனு ( இன்னுமொரு தேனக்கா J ). பெண்குரலாய் ஒலிக்கும் இக்கவிதைத் தொகுப்பைத் தன் தாய் கோதைநாயகி அம்மாவுக்கு  சமர்ப்பணம் செய்திருப்பது மிகப்பொருத்தமே.

மிக இயல்பான சொல்லாடல் மிக்க எழுத்து !. சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் மயக்கும் கவிதைகள். எதுகை மோனையிலும் சந்தத்திலும் இனிமையோ இனிமை. மொழியால் தொடமுடியாத உயரங்களை மொழியைக் கொண்டே தொடவைக்கும் ஆணவமே கவிதை என முன்னுரையில் வவேசு அவர்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

அரங்கனின் ஆண்டாளாய் நான் தரிசித்திருந்த கோதையின் இன்னுமொரு நான் என்னையே நான் பார்க்கும் கண்ணாடியாயிருந்தது. ம் என்ற தலைப்பில் கூட ஒரு கவிதை !. என்னை அசைத்த கவிதைகள்  மீட்டப்படாத வீணை, இறுக்கம், நன்றி, க’வலை’, நலமே, கபர்தார், மியாவ், போதும், அனர்த்தம் ஆகியவை.

என்னை அசத்திய கவிதை வரிகள் சில.

//கேடென்றால்
காடன்னெ வீடென்ன?//

//அரவாணி இருமேனி
அறவே வேண்டாமினி///

//க்ரோமோசோம் கணக்கில் அக்கிரமம்
சோமேஸ்வரன் கணக்குமா வக்கிரம்///

///யோசி இல்லாங்காட்டி…. யாசி ! ///

ஆரம்பமே அசத்தலான கவிதை ஒண்ணு

///அரங்கா..ஸ்ஸ்நேக்கா..

சூடாமணியின் சுரம் தீர
எழுதவேணும் பற்பல குளிர் பாசுரம்
நீ அருளவேண்டும் பிரசுரம்

வெவ்வ்வேவெண்ணை வாயா
அச்சுதா..
அஞ்சாது அச்சுத் தா. /// புரை ஏற ரசித்துச் சிரித்தேன்.

// மீனின் துறவறமே கருவாட்டு நிலை.//

//ஆவியில் வெந்தாலும்
கொழுக்கட்டையின் நிலை பூரணமே///

///மானிட இடர்படு இடபாரூடா
லாஸ் என்று ஏதுமில்லை
தவமிருந்தே வா கைலாஸ்///

//மரம் முறிந்தால் விறகு
மனம் முறிந்தால்..? ///

//சகுந்தலை காத்திருந்தாள் சாகுந் தலை..///

//கக்கும் பிள்ளையே தக்கும்
என அரவணைக்கிறாள் வாசகத்தாய் ///

///யாரைக் கொல்லப் பேயுரு
என் மெல்லிய பெண்மன உணர்வைக் கொல்லவே///

///பா.. பாயாசம்
வெண்பா புலவு
பனுவல் பச்சடி
தொகையறாத் துவையல்
வஞ்சிப்பா வெஞ்சனம்
அளபெடை வடை
ஹைக்கூ கூட்டு
யாப்பே உப்பு
சுவைக்கச் சம்மதமா///

ரொம்பவும் சிந்திக்க வைத்த கவிதைகள் ரணம், நதிகள், விடை, பூ’ரணம்’, தேவ தேவதை, அடைக்கலம், புரை, சுயம், புதிய சீதை, சுமதி, தவம், அறியாமை, மெடலு, திரட்சி, நாடகம், தரம், ’மனச’ரோவர், கூலி, கருணை, பிரிவு.

மிக அழகான அற்புதமான கவிதைகள் கோதை, ஸ்நேகம், நாமா’விழி’ கணவா, ச்ச்செல்லம், அச்சாரம், இச்சகம், விரும்பிய வண்ணம், தீஞ்சுவை, குறுமை.

மீனும் கிளியும் நாயும் பூனையும் கூட உலவும் கவிதைகள். கணவனுக்குச் சொல்லும் சேதிகள் அர்த்தமுள்ளவை. அரங்கனையும், கோதையையும், விபீஷணனையும் சீதையையும் அரிச்சந்திரனையும் சுமதியையும்( காரைக்காலம்மை) மட்டுமல்ல சூர்ப்பனகையையும் பாடும் பெரும் மனம் கொண்டவர் ராஜா மகள். சிலவற்றில் ஆயாசம், சிலவற்றில் ஆதங்கம், சிலவற்றில் அறிவுரை, சிலவற்றில் எச்சரிக்கை என அசரடிக்கிறார்.

இல்லத்தரசிகளுக்கான எல்லையிலும் சிக்ஸரும் பவுண்ட்ரியுமாக விழுகின்றன கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அனுபவமாக ஒரிரு நகைச்சுவை வார்த்தைகளில் பளீர் பளீர் என விழும் விதம் அழகு,. நீர்க்குமிழியாகக் கரையும் உடையும் விஷயங்களையும் கல்வெட்டான கவிதைகளாக ஆக்கும் திறம் தேன்மொழிக்கு அதிகமாகவே வாய்த்திருக்கிறது. இறைமையைப் பற்றுவது போலக் கவிதைகளைப் படித்துப் போற்றி ரசிப்பது என்பது பேரின்பம். அதைத் தவறவிடாதீர்கள். இத்தொகுதி அதை வழங்கும் என உறுதி அளிக்கிறேன்.

நூல்:- இன்னுமொரு நான்
ஆசிரியர் :- ராஜாமகள்
பதிப்பகம்:- பட்டாம்பூச்சிப் பதிப்பகம்
விலை:- ரூ. 80/-
 

4 கருத்துகள் :

Shahjahan Rahman சொன்னது…

ரசித்து ருசித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
நானும் இந்த நூலைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் - ஓராண்டாகி விட்டது. இதையே காபி-பேஸ்ட் செய்து விடலாம் என்று இப்போது யோசனை. :)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்
நன்றி சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஷாஜி.. நடத்துங்க. அப்புறம் தேனுகிட்ட திட்டு வாங்குங்க :)

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...