எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 செப்டம்பர், 2019

சுப் சிப் ஆனந்தம்.

சுப் சிப் ஆனந்தம்.

அந்த வேகன் ஆர் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. வளைவுகளில் அபாரமாகத் திருப்பிய கவிதாவுக்கு இருபத்திமூன்று வயது.

“ஃபாஸ்டா கத்துக்கிட்டே. குட் ட்யூட் ! “ வியந்த ப்ரசன்னாவுக்கு வயது முப்பது. இருவரும் லீடிங் ஜர்னலில் ஃப்ரீலான்சிங் ஜர்னலிஸ்ட்ஸ். ஆன்மீகம் அரசியல் என்று எல்லா அக்கப்போரையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து ரவுண்டு கட்டி கட்டம் போட்டு நியூஸ் அனுப்புவார்கள்.

”ஆட்டோ கியர் . ஜஸ்ட் லைக் டூவீலர்ஸ். என்ன லெஃப்ட் அண்ட் ரைட் சைஸ் கொஞ்சம் பெரிசு. ரோட் கான்ஷியஸ் கொஞ்சம் இருந்தா போதும். ஓட்டிறலாம்.”

“ட்ரை பண்றியா “ கேட்டுக்கொண்டே அந்தப் பத்ரிக்கை அலுவலகத்துக்குள் நுழைந்து சர்ரென்று வளைத்துக் காரை நிறுத்தினாள் கவி என்ற கவிதா.

”புது அசைன்மெண்ட்.. கொஞ்சம் கேபினுக்கு வா.": .. மேலதிகாரி விட்டலிடமிருந்து ஒரு மெசேஜ் ஒளிர்ந்தது.

”எனக்கும் சேர்த்து ஒரு சாண்ட்விச் காஃபி ஆர்டர் பண்ணு . ஃபைவ் மினிட்ஸ்ல வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்”. என்றவள் மூடத்துவங்கிய லிஃப்டில் தாவினாள்.

”அது என்ன காலா ரெக்கையா. இப்பிடிப் பறக்குது “ நினைத்துக்கொண்டே ப்ரசன்னா கேண்டீனுக்குத் திரும்பினான்.


வளைவில் சுந்தர் ”ஹேய் ப்ரசன்னா வாட் எ ப்ளெசண்ட் சர்ப்ரைஸ். இங்க வொர்க் பண்றியா” என்றான்.

"ஆமாடா. ஜர்னலிஸ்டா இருக்கேன். ஃபர்ஸ்ட் ஃப்ளோர். எத்தனை வருஷம் ஆச்சு நாம் மீட் பண்ணி. நீ இப்போ என்ன பண்றே. " என்றான் ப்ரசன்னா

”நான் ஃபோர்த் ஃப்ளோர்ல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வொர்க் பண்றேன். ”

'அங்கே வேலை செய்யிறவன் எல்லாம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குறாய்ங்க. என்னமோ பண்றாய்ங்க . மர்மமா இருக்கு. சம்பளம் வெளிநாட்டுலேருந்து வருதா இல்ல சம்பளம் கொடுக்க. நோட்டை இங்கேயே அடிக்கிறாய்ங்களா' என்று மத்த கம்பெனிக்கார நண்பர்கள் அங்கலாய்ப்பது ப்ரசன்னாவுக்குத் தெரியும்.

'சரிடா இன்னொரு நாள் பார்ப்போம், இந்தா என்னோட கார்ட்"  என்றபடி சுந்தர் செல்ல ப்ரசன்னா கேண்டீனுக்குப் போய் ஆர்டர் கொடுத்துவிட்டுக் கவிதாவுக்காகக் காத்திருந்தான். சுடச் சுட இரண்டு சாண்ட்விச்சும் காஃபியும் வந்தது. 

”கவியை என்ன இன்னும் காணோம். ” பதினைந்து நிமிடம் ஆகிவிட்டது.

ஃபோனை எடுத்து கால் செய்யப்போனான்.

"ஹேய் வந்துட்டேன்" என்றபடி எதிரே வந்து அமர்ந்த கவிதாவை முழுமையாகப் பார்த்தான் ப்ரசன்னா.

அவனுடைய அன்புத் தோழி. நம்பிக்கைக்குரியவள். ஒரு வகையில் அவனுடைய வழிகாட்டி. எல்லாப் ப்ரச்சனைக்கும் அவளிடம் தீர்வு இருக்கும்.

ஆளுமையுடன் நடந்து வரும் அவளைப் பிரமிப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் ப்ரசன்னா. ”என்னாச்சு.. ஏன் லேட் ?” என்றான்.

”ஹேய் காஃபி ஆறிடப் போகுது.. முதல்ல குடி. அப்புறம் சொல்றேன்.” என்றாள்.

டிவியில் மெகா கிச்சன் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு சாமியார் மடமும் அதன் சித்ரா பௌர்ணமி நிகழ்வுகளும் பக்தர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ப்ரசாதங்களும் அவற்றின் தயாரிப்புகளும் விமர்சையாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

அங்கங்கே கும்பல் கும்பலாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள் பக்தர்கள். எங்கிருந்தோ வாத்யம் ஒலிக்கக் குரு வேகமாக ஆடியபடி வரவும் இன்னும் ஆக்ரோஷமாக ஆடத் துவங்கினார்கள். சுற்றிலும் மொட்டையடித்து மெலிந்து தவழ்ந்து வரும் பாதுகாப்புக் காவலர்கள்.

”அம்மா இங்கே வருஷா வருஷம் போய் வருவாங்க” என்றான் ப்ரசன்னா. ”திரும்ப சொல்லு.. இங்கேயா.. அம்மாவா..?” என்றாள்.

”ஆமாம்.” 

“எப்ப போய் எப்ப வருவாங்க?”

”சித்ரா பௌர்ணமிக்கு ரெண்டு நாள் முன்னாடி போய் அதுக்கு அடுத்தநாள் வருவாங்க. அதுக்குன்னு பஸ் டிக்கெட், சீட்டிங்க் அரேஞ்ச்மெண்ட் எல்லாத்துலயும் சிஷ்யாஸ் & பக்தாஸுக்கு முன்னுரிமை உண்டு” என்றான்.

”நான் அங்கே போகணுமே.. எனக்கு ஒரு டிக்கெட் கிடைக்குமா?” என்று கேட்டாள் கவி.

குழப்பமாகப் பார்த்தான்.,” உனக்கு எதுக்கு.?”

”விட்டல் கவரேஜ் பண்ண சொல்லி இருக்கார்.”

”சரி. அம்மாகிட்ட கேட்டு ட்ரை பண்றேன்”, என்றான் ப்ரசன்னா.

”என்ன விஷயமாம்? அது மட்டும்தானா ?” என ப்ரசன்னா கேட்க
பர்ஸிலிருந்து ஒரு பிட் பேப்பர் எடுத்து பேனாவால் ’சுப் சிப், சுப் சிப் என எழுதினாள்.

”என்னாச்சு கவி .. கப் சிப்பா?” என்று கூறி அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான்.

”அப்பிடின்னா ஒண்ணுமில்ல.. சும்மா எழுதிப் பார்த்தேன்” என அவள் கூறவும் அவனின் குழப்பம் அதிகரித்தது.

’யாரும் நோட் பண்றாங்களோ.?’ எச்சரிக்கையாக முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் டேபிள்களை ஆராய்ந்தான்.

டேபிள் துடைத்துக் கொண்டிருந்த ஒரு வயதான அம்மா அங்கிருந்து நகர்ந்தாள். நான்கு டேபிள் தள்ளி இருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

”சரி வா. வெளியே போய் பேசலாம்.”

அவர்கள் வெளியே போனதும் தொலைக்காட்சியில் அதே சாமியார் நடந்துவர

“கடவுள் இவரே கடவுள் இவரே
பிறவியைக் கடக்க உதவுபவரே
கடவுள் இவரே கடவுள் இவரே
ஞானமும் மோட்சமும் அளிப்பவரே”

உன்மத்தம் பிடித்ததுபோல் கூட்டம் ஆடத்துவங்க ஒரு சோஃபாவில் சென்று அமர்ந்த அந்த குரு துண்டைப் போட்டு சிரிப்பை அடக்கியபடி வாயை மறைத்து அமர்ந்திருந்தார்.

வேகமாக வெளியே வந்து காரை எடுத்தாள் கவிதா.

”நம்ம ஆஃபீஸ்ல வொர்க் பண்ணிட்டிருந்தாள்ல மோகனா அவ அங்கேதான் வாலெண்டியரா சர்வ் பண்ணிட்டு இருக்காளாம். தலையை மொட்டை அடிச்சிட்டு வெள்ளை உடை உடுத்தி துப்பட்டா போட்டு அங்கே ஹோமம் யாகம் எல்லாம் பண்றாளாம். கிருஷ்ணர் பாதத்துக்கு அபிஷேகம் செய்றாளாம்.”

”கடவுள் நம்பிக்கை இல்லாத அவளா..?” ஜீன்ஸில் நடந்து வரும் அவள் எழில் உருவம் ப்ரசன்னாவின் மனக்கண்ணில் வந்து போனது.

”ஆமா. அங்கே ஆறுமாசம் முன்னாடி ஒரு இண்டர்வியூவிக்காகப் போனவள் இதுதான் சத்யலோகம் இங்கேதான் என் இறப்பும் பிறப்பும்னு சொல்லிட்டு வரமாட்டேன்னுட்டாளாம். கடவுளோட தாஸாஸ் ஆயிட்டேன்மா இது உங்க மகளுக்கு புதுப்பிறவின்னுட்டாளாம்.”

”அவ அம்மா அழுது தீர்த்துட்டாங்களாம் எம்டிகிட்ட”.

”புதுசு புதுசா காலேஜ் இளைஞர்கள் இளைஞிகள் கூட்டம் பெருகிட்டே போகுது. இந்த வயசிலேயே வேதாந்தம் ஞானம்னு பேசிட்டு பலர் துறவியா அங்கே ஆயிட்டாங்க. உணவுல ஏதும் போதையைக் கலக்குறாங்களான்னு சந்தேகம் வேற ஏற்பட்டிருக்காம்.  அந்தாளு முன்னாடி கஞ்சா வித்தான்னு பேச்சு வேற.”

”சே.. சே,, அவரா இருக்காது அது வேற க்ரூப்  என்றான் ப்ரசன்னா.

”லுக் ப்ரசன்னா.. ஒரு பக்தனா இல்லாம பத்ரிக்கையாளனா இதை அணுகு ப்ளீஸ்.” என்றாள்.

”சரி. என்ன செய்யணும் சொல்லு ” என்றான்.

”சித்ரா பௌர்ணமிக்கு ரெண்டு பேருக்கும் அங்கே போக டிக்கெட் வாங்கு அதன் பின் பார்ப்போம்.”

வேனில் பெரும் கூட்டம். அவரவர் வாகனங்களில் போனால் அந்த மலைப் ப்ரதேசத்தை அடையமுடியாது என்று அவர்கள் ஏற்பாடு செய்யும் பஸ் வேனில்தான் வரவேண்டும் என்று கட்டளை.

பூலோக கைலாஸம் பூலோக வைகுண்டம் அளவுக்கு மக்கள் அதை மதித்தனர். கூட்டமென்றால் எள் விழ முடியாத அளவு கூட்டம். ஆண்கள் பெண்களுக்குத் தனித்தனி உறைவிடம். தனித்தனி எண்கள். உட்காருமிடங்களிலும் தனித்தனியாக சேர்கள் எண்கள் இடப்பட்டு இருந்தன. சென்றவுடனே கைகளில் பர்மனெண்டாக ஒரு இன்ஜெக்‌ஷன் போல குத்தி டோக்கனைப் பதிந்தார்கள்.

ஒரு நாளைக்கு இருவேளை சூடாக உணவு வந்தது. இரு வேளை தேன் கலந்த ஒரு சூடான பானம்.

விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருப்பது போல் இருந்தாலும் லேசாகத் தூக்கக் கலக்கமும் இருப்பது போல் இருந்தது கவிதாவுக்கு.

சித்ரா பௌர்ணமியில் அலைகளின் உன்மத்தம் அதிகமாவதுபோல பக்தர்களின் உன்மத்தமும் நடனமும் வாத்யம் ஒலிக்கும்போதெல்லாம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அமைதியாக அமர்ந்து உள்முகதியானத்துக்குப் போகும்போதும் ஒரு சிலர் உன்மத்தம் பிடித்து அலறினார்கள். அவர்களால் அந்த ஆனந்தத்தைத் தாங்க முடியவில்லை.

கவிதாவும் ப்ரசன்னாவும் ப்ரசன்னாவின் அம்மாவும் கூட ஆடத் துவங்கி இருந்தார்கள். உலகமே ஆனந்தமாக ஆடுவது போலிருந்தது கவிதாவுக்கு. மூவரும் கை பிடித்து சுற்றி ஆடத் துவங்க அங்கே திடீரென முளைத்து மோகனாவும் சுந்தரும் கூட ஆடத் துவங்கினார்கள். எப்படி வந்தார்கள் என்று கேட்கக் கூடத் தோன்றவில்லை கவிதாவுக்கும் ப்ரசன்னாவுக்கும்.

”சுப் சிப் ஆனந்தம்.. சுப் சிப் ஆனந்தம்.” என்று கூறியபடி வந்த நீளமான அங்கி அணிந்த குரு அங்கே இருந்த திண்டுகளில் சாய்ந்து அமர்ந்து உரை நிகழ்த்தத் துவங்கினார் . அனைவரும் அப்படியே அமர்ந்து அதைக் கேட்கத் தொடங்கினார்கள்.

”மௌனமே ஆனந்தம். இதுதான் இந்த சுப் சிப் ஆனந்தம் அப்பிடிங்கறதோட அர்த்தம். மௌனமாவே இருந்து உலகை ஆளுங்கள்.”

”கடவுளே  ! கடவுளே..!” என்று கூட்டம் ஆனந்தக் கூப்பாடு போட்டது. 

கையமர்த்தினார் அங்கி அணிந்த குரு. தனது கெடிகாரத்தை அவ்வப்போது பார்த்து டைட் செய்து கொண்டார் குரு.

”நாளையோட இந்த சித்ரா பௌர்ணமிக் கொண்டாட்டம் எல்லாம் முடியுது. நீங்க வீட்டுக்குப் போயும் இந்தப் பயிற்சிகளை எல்லாம் செய்யலாம். புதிது புதிதாய் பயிற்சி வகுப்புகளும் ஆரம்பிக்கிறோம். உங்கள் இல்லத்தையும் உள்ளத்தையும் புதுப்பிக்கப் புதிய ஹோமங்கள் நடத்தலாம். எல்லாத்தையும் இங்கே பதிவு செய்துக்குங்க. முடிவற்ற ஆன்மீக வாழ்க்கைப் பாதையில் அடி எடுத்து வைச்சிருக்கீங்க இனி என்றும் உங்களை நோய் பிணி துன்பம் அணுகாது. குடும்பம் ஒற்றுமையா இருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எப்பவும் இந்தக் கடவுளின் அணைப்பிலே என் நினைப்பில நீங்க இருக்கீங்க. உங்க நினைப்புல நான் இருக்கேனா..?”

”கடவுளே.. என் கடவுளே..” என்று ஒரு பெண்மணி ஓங்கிக் கத்த. மொத்தக் கூட்டமும்

“கடவுள் இவரே கடவுள் இவரே
பிறவியைக் கடக்க உதவுபவரே
கடவுள் இவரே கடவுள் இவரே
ஞானமும் மோட்சமும் அளிப்பவரே”
என்று ஆடத் துவங்கியது.

”ஞான தீட்சா கோர்ஸுக்கு ரெண்டு அட்வான்ஸ் புக்கிங். 20,000”  என்று ப்ரசன்னாவும் கவிதாவும் கூட்டத்தில் முண்டியடித்து புக் செய்து கொண்டிருந்தார்கள். ஆனந்தா இல்லஹோமம் செய்ய 30,000 ரூபாய் கட்டிப் பதிந்து கொண்டிருந்தார் ப்ரசன்னாவின் அம்மா.

”என்னோட விசிட்டிங் கார்ட் ஒரு ஸ்பை பக். அத ப்ரசன்னா கிட்ட கொடுத்ததால அவங்க திட்டத்தை அறிய முடிஞ்சது.” என்று குருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சுந்தர்.

”என்ன இருந்தாலும் ரெண்டு பேரையும் மோகனா மாதிரி இங்கே அடிமைப்படுத்தி இருக்கணும்” என்றார் குரு தனது புஜத்தைத் தடவியபடி..

அவரது புஜத்தில் ஒரு மாஸ்டர் சிப் தைக்கப்பட்டிருந்தது. அதன் ஆணையின்படி செயல்படும் ரிமோட் அவரது கெடிகாரத்தில் இருந்தது.

”மோகனா இங்கே சேர்ந்ததே அவங்களுக்கு சந்தேகம். அதுனால அது வேண்டாம்னு நினைச்சேன் குருவே. ப்ரசன்னாவும் கவிதாவும் பத்ரிக்கையாளர்களாகப் பணி செய்ய முடியும் ஆனா நம்ம எதிர்த்து எதையும் அவங்க செய்யமாட்டாங்க, அவங்க சிப்ல அப்பிடி ப்ரோகிராம் செய்திருக்கேன் குருவே..”

சரி என்பது போல குரு சுந்தரின் தலையைத் தொட்டு ஆசி வழங்கினார்.

திரும்பாமலே பின் நகர்ந்து ஆசி பெற்றபடி குருவின் அந்தரங்க ரூமிலிருந்து வெளிவந்து கூட்டத்தோடு கலந்தார் சுந்தர்.

கவிதா, ப்ரசன்னா, ப்ரசன்னாவின் அம்மா மூவரும் மலையில் உதிப்பது போல் அமைக்கப்பட்ட செயற்கை சித்ரா பௌர்ணமி சிலையைச் சுற்றி வந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

நெருடிய தங்களுடைய சிப்பை கவிதாவும் ப்ரசன்னாவும் அவ்வப்போது தொட்டுப்பார்த்து எதையோ கண்டறிய முயன்று பின் மறந்துவிட அவர்கள் அனைவருக்கும் மோகனா தன்னுடைய புஜத்தைத் தொட்டுப் பார்த்தபடி தீர்த்தம் வழங்கத் துவங்கி இருந்தாள்.  

டிஸ்கி :- இந்தக் கதை செப்டம்பர் 15, 2019, வாசகசாலை இணையத்தில் வெளியானது.  

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...