எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 செப்டம்பர், 2019

யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :-


யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :-

ஜெர்மன் கல்விச் சேவையின் பதினைந்தாம் & இருபத்தியைந்தாம் ஆண்டு மலர்கள் வாசிக்கப் பெற்றேன். படிக்கப் படிக்கப் பேரானந்தம் பெருகியது. கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக ஜெர்மனியில் தமிழ்க்கல்விச் சேவை சாதித்து வருகிறார்கள் யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினர். 

1989 ஆம் ஆண்டு தை மாதம் 18 ஆம் தேதி டோட்முண்ட் ஹரிதாஸ் நிறுவனத்தின் உதவியுடன் அவர்கள் மண்டபத்தில் இக்கல்விச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பன்னிரெண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜெர்மனியிலும் நெதர்லாந்திலும் சுவிட்சர்லாந்திலுமாக தற்போது 61 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. சமுதாயக் கூடங்களில் இந்தப் பள்ளிகள் செயல்படுகின்றன.

மெல்லத் தமிழினிச் சாகும் என்றான் பாரதி ஆனால் அந்நியதேசங்களிலும் தமிழை மெல்ல மெல்ல உயிர்ப்பூட்டி வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவைக்கென தனி கீதம் இருக்கிறது. தன்னார்வல ஆசிரியர்கள், தலைவர், உபதலைவர்களின் பணி சிறப்புக்குரியது. குறிப்பாக அருந்தவராசா, சிறிஜீவகன், அம்பலவன் புவனேந்திரன், சந்திரகௌரி சிவபாலன் ஆகியோரின் பணிக்கு சிறப்பு வாழ்த்துக்கள். இப்பள்ளிகள் நடத்தும் செலவை அந்தந்த மாநிலங்களில் உள்ள தமிழர்களே கூட்டாக ஏற்றுச் செலவு செய்கிறார்கள்.

செயற்குழுவினர், சான்றோர், ஆன்றோர், நிறுவனங்கள் & கல்வி நிறுவனங்கள், ஜெர்மன் தமிழ்ப் பாடசாலைகள், அரசியல் தலைவர்கள், அறிவுப் பெருமக்கள் ஆகியோர் ஆசி மலர்கள் தூவி இருக்கிறார்கள். 

கட்டுரைகளில் சிறிஜீவகன் அவர்கள் திருக்குறளை மேற்கோள் கொண்டு கல்விச் செல்வம், கேள்விச் செல்வம் என விவரித்துள்ளது வெகு சிறப்பு. மொழிக்கலப்பு மற்றும் உச்சரிப்புப் பற்றித் தமிழ்மணி ஈழமுருகதாசன் அவர்களின் கட்டுரை காத்திரமானது. 

கௌசியின் தமிழ் மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் தலைமுறையினரும் என்ற தனது விரிவான கட்டுரையில் தேவநேயப் பாவாணர்,  பெஸ்கி பாதிரியார் என்ற வீரமாமுனிவர் ஆகியோரின் தமிழ்ப்பற்றை அழியாச் சிற்பமாய்ச் செதுக்கி இருக்கிறார். தமிழிசை வரலாறு பற்றியும் கட்டுரை யாத்திருக்கிறார் ஒருவர்.

தமிழ்மொழி பாடசாலைகளை உருவாக்கி தமிழ்க் கல்வி போதித்தல், பாடதிட்டங்களை வரையறுத்துப் புத்தகங்கள் தயாரித்தல், பொதுப்பரிட்சை நடத்தி சான்றிதழ்  & பரிசில் வழங்குதல், ஆசிரியர்களுக்கும் மாணாக்கருக்கும் கருத்தரங்குகள் & பயிலரங்கங்கள் நடத்துதல், கருத்துக்களம், பயிற்சி வகுப்புகள், பாடபுத்தகங்களுடன் சஞ்சிகைகள், நூல்கள் வெளியிடுதல், தமிழ்த்திறன் ( கட்டுரை, நாடகம் )  போட்டிகள், கலைத்திறன் போட்டிகள் நடத்துதல் என பல்வேறு ஆக்கப்பூர்வப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

மாணவர் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நிகழ்த்தி கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள். அதிகூடிய புள்ளி பெற்றுத் தேர்ந்தோருக்கு ஈழத்து அறிஞர்கள் பெயரில் ஞாபக கிண்ணம் வழங்கி இருக்கிறார்கள். ( ஆறுமுக நாவலர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், சுவாமி விபுலாநந்த அடிகள், சுவாமி ஞானப் பிரகாசர், அறிஞர் தாமோதரம்பிள்ளை, அறிஞர் சித்திலெப்பை, தனிநாயகம் அடிகள், மலையக அறிஞர் சி வி வேலுப்பிள்ளை, சு. வித்யானந்தன், பண்டிதமணி கணபதிப்பிள்ளை. )

தம் தாய்நாடு திரும்பிச் சென்றாலும் தமிழ் கற்றிருப்பதால் மாணாக்கரின் கல்வியில் இடையூறு ஏற்படாது என்பதாக ஆசிரியர் குழாம் தெரிவிக்கிறது. மேலும் ஜெர்மன் அரசாங்கமே ஜெர்மன், ஆங்கிலம் போக இன்னொரு மொழி கற்க ஊக்கமும் மதிப்பெண்களும் சலுகையும் அளிக்கிறது. எனவே தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுக்கிறார்கள் மாணாக்கர்கள்.

ஆண்டுமலர்களில் மாணாக்கர்களிடமிருந்தும் படைப்புகள் வாங்கிப் போட்டிருப்பது கவனத்துக்குரியது. சிவதர்சினி சிவராசா, அஜிதா, இலா, இராகுலன் ஆகிய ஜெர்மன் மாணவ மன்ற உறுப்பினர்கள் படைப்புகள் ஈந்திருக்கிறார்கள்.

ஜெர்மன்வாழ் தமிழ்க் குழந்தைகளுக்குத் தாய்மொழிக் கல்வி அளிப்பது மட்டுமல்ல, தாயகப் பாடசாலைகளுக்கு அபிவிருத்தி நிதி வழங்குதல், மேலும் தமிழ் வளர்ச்சிக்கான புத்தகங்கள் அளித்தல், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாட்டினருக்கு மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிதியை உலக மன்னிப்பு சபை மூலம் அனுப்புதல் என்று வியக்க வைக்கிறது.

ஜெர்மன் தமிழ்க் கல்விச் சேவை. இந்த இரண்டு ஆண்டு மலர்களும் ஜெர்மன் தமிழ்க் கல்விச் சேவைக்குச் சிறந்த ஆவணமாக உள்ளன. இந்தக் கல்விச் சேவை நூற்றாண்டுகள் செயல்பட்டுச் சிறந்தோங்க வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

 1. யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை
  ஆற்றும் பணிகள் பாராட்டத்தக்கது

  பதிலளிநீக்கு
 2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...