எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை. தினமலர் சிறுவர்மலர். 34,

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை.
வீட்டிற்குப் பெரியவர்கள் வரும்போது அவர்களைப் பார்த்துச் சிரித்தாலே வாங்க என்று வரவேற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் இன்றைய சில இளையவர்கள். சிலரோ தங்கள் அறைக்குள் சென்று விடுகிறார்கள். சிலரோ கைபேசியில் விளையாடிக் கொண்டு யாரையும் சட்டை செய்வதில்லை. இப்படி கவனக் குறைவாக வீட்டிற்கு வந்த ஒரு முனிவரை வரவேற்காததால் சகுந்தலை என்ற பெண்ணுக்கு சாபம் கிடைத்தது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவாமித்திர முனிவருக்கும் மேனகை என்ற அப்சரஸுக்கும் பிறந்தவள்தான் இந்த சகுந்தலை. தந்தையோ முனிவர் அதனால் அவர் சகுந்தலை பிறந்ததும் தன் தவம் எல்லாம் அழித்துவிட்டதாகக் கருதித் தவம் செய்யச் சென்றுவிட்டார். தாயோ தேவலோகத்தின் அப்சரஸ். நாட்டிய தாரகை. அதனால் அவளும் குழந்தையை ஒரு வனத்தில் விட்டுச் செல்கிறாள்.
அக்குழந்தையின் குரல் கேட்டுப் பறவைகள் சூழ்ந்து கானம் பாடுகின்றன. குழந்தைக்குரலும் பறவைக்குரலும் கேட்ட கண்வ மகரிஷி இவளை எடுத்து வளர்க்கிறார். பறவைகளால் பாதுகாக்கப்பட்ட குழந்தை என்ற அர்த்தத்தில் ”சகுந்தலை” என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

சகுந்தலை அன்பும் பண்பும் பாசமும் நிரம்பியபெண். மாலினி என்ற ஆற்றங்கரையில் பறவைகள் மற்றும் மான் சூழ கண்வ மகரிஷியின் ஆசிரமத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறாள் சகுந்தலை.
ஒருமுறை மன்னன் துஷ்யந்தன் அந்தக் கானகத்துக்கு வேட்டையாட வந்தான். நீண்ட தருக்கள் நெருங்கிய கொடிகள் சூரியன் புகமுடியாமல் பச்சை பசேலென விரிந்திருந்த காடு அவனைக் குளிர்வித்தது. அதே சமயம் அவன் விட்ட அம்பு ஒன்று அங்கே ஓடிய அழகு மான் ஒன்றின் காலில் பாய்ந்தது. மான் கீழே விழாமல் காயத்தோடு துள்ளி ஓடுகிறத். மன்னனும் துரத்திச் செல்கிறான். அது சகுந்தலையின் மான் எனத் தெரிந்ததும் அதற்கு மருந்திடுகிறான் துஷ்யந்தன்.
அவரது செய்கையால் கவரப்பட்ட சகுந்தலை அவர் பேச்சைக் கேட்டுக் காந்தர்வ மணம் செய்து கொள்கிறாள் . தன்னுடைய ஞாபகமாக ஒரு அரச இலச்சினை கொண்ட மோதிரத்தைக் கொடுத்துச் செல்கிறார் துஷ்யந்தன். சென்று பலநாட்களாகியும் துஷ்யந்தனிடம் இருந்து தகவலே வரவில்லை.
இங்கே சகுந்தலையோ மன்னன் தன்னிடம் தந்த மோதிரத்தைப் பார்த்தபடியே துயரம் அடைகிறாள். இன்று வருவார் நாளை வருவார் எனக் காத்திருக்கிறாள். அப்போது அந்த ஆசிரமத்துக்கு விஜயம் செய்த துர்வாசர் சகுந்தலை தன்னைக் கவனிக்காமலும் வரவேற்காமலும் இருப்பதைப் பார்த்துக் கோபமடைகிறார்.
”யாரை நினைத்து நீ கனவு காண்கிறாயோ அவர் உனக்குக் கிட்ட மாட்டார் “ என்று சாபமிட்டு விடுகிறார் பொல்லாத முனிவர். உடனே சகுந்தலை தன் தவறுணர்ந்து மன்னிக்க வேண்டுகிறாள். துஷ்யந்தன் பற்றிக் கூறுகிறாள். உடனே மனம் மாறிய துர்வாசர் மனமிரங்கி “ இந்தக் கணையாழியைக் காட்டினால் துஷ்யந்தன் உன்னை அடையாளம் கண்டு கொள்வான் “ என சாபத்தை மாற்றி அமைக்கிறார்.
இப்போது சகுந்தலை நாளுக்கு நாள் இளைத்துத் துரும்பாகிக் கொண்டே வந்தாள். மன்னன் ஏன் தன்னை மறந்தான் என்பது அவளுக்குப் புலப்படவில்லை. அதற்குள் அவளுக்கு பரதன் என்ற அழகான மகன் பிறக்கிறான். அவனுடனும் கண்வ மகரிஷியுடனும் அவள் துஷ்யந்தனைத் தேடிப் புறப்படுகிறாள்
துஷ்யந்தன் கொடுத்த மோதிரத்தையும் ஞாபகமாக அணிந்து கொள்கிறாள். துஷ்யந்தன் இருக்கும் நாட்டை அடைய கானகம் , ஆறு ஆகியவற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆற்றில் படகில் செல்லும் போது இயற்கைக் காட்சிகளில் மூழ்கி கணவனைக் காணப்போகிறோம் என்ற மனது நிறைந்த சந்தோஷத்தால் சகுந்தலை படகிலிருந்து நீரைக் கைகளால் அளைந்தபடியே வருகிறாள். ஐயகோ இதென்ன சகுந்தலையின் விரல்களில் இருந்த மோதிரம் நழுவித் தண்ணீரில் விழுந்துவிட்டதே. அதை அவள் கவனிக்கவே இல்லை.
துஷ்யந்தனின் அரண்மனை மிகப் பெரிதாகத்தான் இருந்தது. ஆனால் அவன் மனம்தான் சிறிதாகிவிட்டது. சகுந்தலை தன் மகன் பரதன், தன்னை வளர்த்த தந்தை கண்வ மகரிஷி ஆகியோருடன் சபைக்கு வருகிறாள். தன் கணவனின் அரண்மனையின் அழகு அவளைப் பேசாப் பதுமையாக்கி இருந்தது. பிரமிப்பின் உச்சத்தில் இருந்த அவளைப் பார்த்து” யாரம்மா நீ ? உனக்கு என்ன வேண்டும் ? “ என வினவுகிறான் துஷ்யந்தன்.
“நான் ..நான் சகுந்தலை, இவன் உங்கள் மைந்தன் பரதன் “ என்கிறாள். உடனே எழுந்து நின்ற துஷ்யந்தன் “ என்னது எனது மைந்தனா. நான் உன்னை முன்னே பின்னே பார்த்ததேயில்லையே “ உடனே சகுந்தலை தன் விரலைப் பார்க்கிறாள், அந்த முத்திரை மோதிரத்தைக் காட்டலாம் என்று. ஐயோ காணவில்லையே.. அவளால் பேச முடியவில்லை. “ கண்வமகரிஷி, ஆசிரமம், மான்.. “ என்று ஏதேதோ சொல்லியும் துஷ்யந்தனுக்கு அவளது கணையாழி இல்லாததால் அடையாளம் தெரியவில்லை
மனம் நொந்த சகுந்தலை தன் மகனுடன் கானகம் திரும்பி வசித்து வருகிறாள். மகன் பரதனோ காட்டு விலங்குகளுடன் பழகி போரிட்டுப் பலம் வாய்ந்த இளைஞனாக ஆகிறான். ஒருமுறை சகுந்தலை சென்ற ஆற்றில் மீன் பிடித்த மீனவன் ஒருவன் தனக்குக் கிடைத்த மீன் ஒன்றை வெட்ட அரசமோதிரம் தட்டுப்படுகிறது. அதை எடுத்துச் சென்று அரசன் துஷ்யந்தனிடம் கொடுக்க அவனுக்கு சகுந்தலையின் நினைவு வருகிறது.
அதே கானகத்துக்குத் தேடிவந்து தன் மகன் பரதனுடனும் மனைவி சகுந்தலையுடனும் ஒன்று சேர்கிறான் மன்னன். வீட்டிற்கு விருந்தினராக வந்த முனிவரை வரவேற்காததால் சகுந்தலை பட்ட துயரைப் பார்த்தீர்களா குழந்தைகளே. இப்படி எல்லாம் இருக்காமல் யார் நம் வீட்டிற்கு வந்தாலும் வரவேற்கும் நல்பழக்கத்தைக் கைக்கொள்ளுவோமாக. 

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 13. 9. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...