என்னையே நானறியேன்
ஜெர்மன் வாழ் தமிழர்கள்
அநேகரில் நிச்சயம் ஒருவரின் கதை இப்படித்தான் இருந்திருக்கும். தாய்நாட்டில்
இருந்து அயல்நாட்டில் திருமண வாழ்க்கை காரணமாக அடைக்கலமாகும் ஒரு பெண்ணின்
வாழ்க்கையை அதன் ஏற்ற இறக்கத்தை இந்நூலில் நூலாசிரியர் கௌசி விவரித்துள்ளார்.
சித்தாந்தங்கள், கோட்பாடுகள், அறம், விழுமியம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட கதாநாயகி வரதேவி தன் கணவன் கரன் மூலமும் ஜெர்மனி வாழ்வின் மூலமும் பெற்ற அனுபவங்களே இக்கதை.
நூலாசிரியர் பட்டப்படிப்பில் தமிழை எடுத்துப் படித்துப் புலமை பெற்றுள்ளதால் நூலெங்கும் தமிழ்ச்சாறு கனிந்து கலந்திருக்கிறது. ஆங்காங்கே புதுக்கவிதைகள், இராமச்சந்திரக் கவிராயர் பாடல், முருகன் பாமாலைகள் என்று அசத்துகிறார்.
காஃபி அருந்தும்போது புகை பை சொல்வதும் சிகரெட்டை வெள்ளை உடுப்புப் பெண்களின் நடனம் என்றும் விமானத்தில் பறப்பதைத் தாலாட்டு என்றும் மிக ரசனையோடு வர்ணித்துள்ளார். இவை எல்லாம் சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே.
இரும்பைக் கொண்டு உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்த ஜெர்மனியில் வாழ்வின் துயரால் நொந்து இரும்பு மனதைக் கொண்டு வாழ நேர்ந்த ஒரு பெண்ணாக மென்மனம் கொண்ட வரதேவி அறிமுகமாகிறாள். ஓவியம் இசை ஆகியவற்றில் வல்லவனான கரன் கவிதைக்காரியான மனையாளுடன் அகம் மகிழ்ந்திருக்கிறான்.
ஆனால் அதிகம் பணம் ஈட்டும் வல்லாசையில் வீழ்ந்து நெறி தவறுகிறான். அதன் மூலம் அவன் தண்டனை அடைய வரதேவி மனச்சிதைவுக்காளாகிறாள். இதன் பிறகும் அவன் குடிக்கு அடிமையாக இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்துக் கொள்ளாமலே ஒரே வீட்டிலே வாழ்கின்றனர்.
அவள் படிப்பித்து வந்த தமிழ்க் கல்வி நிலையம் அவள் கைவிட்டுப் போகிறது. பார்த்து வந்த வேலையையும் உதறவேண்டியதாகிறது. அரசாங்கம் அளிக்கும் பணத்தில் தன்னையும் தன் மகவையும் போஷிக்க வேண்டிவளாகிறாள்.
இக்கதையில் முக்கியமாக ஜெர்மனி வாழ் மக்களுக்கும் , அயலகத்தில் இருந்து புலம்பெயர் மக்களுக்கும் ஜெர்மனி அரசாங்கம் அளிக்கும் அநேக சலுகைகள், அரசைச் சார்ந்து வாழ்ந்தால் தனிமனிதர் ஒவ்வொருவருக்கும் தேவையான வீட்டுவாடகை, மாதச் செலவு, டிவி, ரேடியோ முதற்கொண்டு மருத்துவம், கல்வி வரை இலவசமாகச் செய்துகொள்ள வழி கோலும் அதன் பண்பு ஆகியன சித்தரிக்கப்படுகின்றன. மருத்துவ உதவி மட்டுமல்ல செவிலியையும் வீட்டுக்கு அனுப்பிப் பார்த்துக் கொள்ளும் ஜெர்மனி அரசின் நல் அம்சங்கள் விவரிக்கப்படுகின்றன.
ஜெர்மன் அரசாங்கம், குடிமக்கள்பால் அவர்கள் அனுசரித்துள்ள கருணை நடைமுறைகள், கொடுத்துள்ள சலுகைகள், தூதரகம், மருத்துவக் காப்பீடு, அலுவலகங்கள், சமூகசேவை திணைக்களம், சமூக பாதுகாப்பு அலுவலகம், பாடசாலை சேவை, கலைவிழா , தொழில் நடைமுறைகள், குழந்தைகளின் மருத்துவ நடைமுறைகள், பிள்ளை வளர்க்க அரசு தரும் நிதி உதவி, பிள்ளைகளைப் பராமரிக்கும் நிறுவனம், ஆதரவற்றோர் வாழ அரசு அளிக்கும் பொது உதவித் தொகை, சலுகைகள், பஸ், ட்ரெயின் ஆகியவற்றில் உள்ள வசதிகள் , பனிக்கால தேசத்தின் பாடுகள் ஆகியவற்றைக் கதையின் போக்கோடு எளிமையாக வாசிக்கும் வண்ணம் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கொடுத்திருக்கிறார். அது மிகவும் பாராட்டுக்குரியது.
கர்ப்பம் தரிப்பதிலிருந்து குடியின் தீமைகள் வரை அறிவியல் அறிவோடும் பகிர்ந்திருக்கிறார். முடிவில் கரன் தன் துர்ப்பழக்கத்தாலும் இனிப்பு நோயாலும் காலை இழந்து மரணத்தையும் தழுவுகிறான். அத்தனை வாழ்க்கைத் தடைகளையும் மனத்தடைகளையும் தாண்டி அவனுடன் திரும்ப வாழ எண்ணிய வரதேவி திரும்பவும் விரக்திக்கு ஆளாகிறாள். நடுவில் அவளை குடும்பத்தோழி கீதாவும், வானொலி மூலம் அறிமுகமான தோழி நிலாவும் புதுப்பிக்கிறார்கள்.
அயலகத் தமிழர்கள் பற்றி அவர்கள் வாழ்வு பற்றி நாம் அவ்வளவு கவலையுறுவதில்லை. எந்தந்த விதமான நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தலையீடுகள், பருவமாறுபாடுகள், கலாச்சாரச் சீர்கேடுகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது நமக்குப் புலப்படுவதில்லை. அவர்கள் வாழும் வசதியான வாழ்க்கை மட்டுமே நமக்கு விஸ்வரூபமாய்த் தெரிகிறது. தாய்நாட்டில் வாழும் ஏக்கம் சூழ தம்மைத் தாங்கிய நாட்டின்பால் ஏற்பட்ட பாசத்துடனும் அவர்கள் அல்லாடுகிறார்கள்.
அவ்வாழ்வின் பின்னணியில் ஒவ்வொரு இதயமும் படும் துயரை இரத்த சரித்திரமாக எழுதி இருக்கிறார் கௌசி. கௌசியின் ஒவ்வொரு வாசகமும் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.
மேலும் குறிப்பிட வேண்டியது என்னவெனில் இக்கதை இலண்டன் தமிழ் வானொலியில் நான்கு வாரங்கள் இலக்கியத் தொடராக இடம்பெற்ற சிறப்புக்குரியது. மேலும் இக்கதையைக் கேட்டு இதன் அழுத்தமான சாராம்சத்தினால் கவரப்பட்டுத் தவமலர் கல்விராஜன் என்பவர் இந்நூலைப் பதிப்பித்து உள்ளார். மேலும் ஒரு சஞ்சிகையை நடத்திக் கொண்டிருந்த தன் கணவர் கல்விராஜன் நினைவாக இந்நூலைப் பதிப்பித்துப் பதிப்புரையை அர்ப்பணித்துள்ளார் என்பது வெகு சிறப்பு.
நூல் :- என்னையே
நானறியேன்
ஆசிரியர் :- திருமதி
( கௌசி ) சந்திரகௌரி சிவபாலன்
பதிப்பகம் :- எவகிறீன் அச்சகம்


மிக்க நன்றி. முழுவதுமாக வாசித்து நல்ல ஒரு விமர்சனம் தந்திருக்கின்றீர்கள். அனைத்திர்க்கும் மிக்க மிக்க நன்றி
பதிலளிநீக்குநன்றி கௌசி
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!