எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 செப்டம்பர், 2019

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான். தினமலர் சிறுவர்மலர். 33.

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான்
எந்தச் செயலைச் செய்வதற்கும், “உன்னால் முடியும் தம்பி” என்று ஒருவர் சொன்னால் அதை நம்ப வேண்டும் அப்படித் தன் மறந்து போன திறமையை ஒருவர் ஞாபகப்படுத்தியவுடன் தன்னால் முடியும் என்று விண்ணிலே பறந்த ஒருவரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே.
கேசரி அஞ்சனை ஆகியோருக்கு வாயுபுத்திரரின் அருளால் பிறந்தவர் ஹனுமன். இவர் சிறு வயதில் மிகுந்த சுட்டிக் குழந்தையாய் இருந்தார். ஒருமுறை தாய் ஏதோ வேலையாக இருக்கும்போது இவருக்குப் பசி எடுத்துவிட வானில் தோன்றிய சூரியனைப் சிவப்புப்பழம் என நினைத்துத் தாவிப் பிடிக்கப் போனார். அதைக் கண்டு பதறிப்போன  இந்திரன் சின்னக் குழந்தையான அனுமனைத் தாடையில் அடிக்க அவர் மயக்கமுற்று விழுந்தார்.
இதனால் வாயு பகவான் கோபப்பட்டுத் தன் இயக்கத்தை நிறுத்த அனைத்து உயிர்களும் காற்றில்லாமல் தவித்தன. உடனே சூரியன் முதலான தேவர்கள் அனுமனை மயக்கம் தெளிவித்துப் பல்வேறு வரங்கள் வழங்கினார்கள். அணிமா மஹிமா லகிமா ஆகிய சித்திகளும், காற்றில் பறக்கும் சக்தியும் பெற்றார் அனுமன்.

ஒருமுறை ரிஷிகளின் ஆசிரமத்தில் புகுந்து சேட்டை செய்ய அவர்கள் விட்ட சாபத்தில் அனுமனுக்குத் தன்னுடைய திறமைகள் மறந்துபோய்விட்டது. ஆனால் அவரது திறமைகளை யாராவது ஞாபகப்படுத்தினால் அவர் மீண்டும் பறக்கவும் தன் உருவை சிறிதாகவோ பெரிதாகவோ எடுக்கவும் காற்றைப் போல் இலகுவாக்கவும் முடியும்.
ராமரும் சீதையும் இலக்குவனும் காட்டில் வாழ்ந்தபோது இராவணன் பிச்சைக்கார வேடத்தில் வந்து சீதையைக் கவர்ந்து சென்றான். இதை ஜடாயு என்ற பறவை பார்த்துவிட்டுத் தடுத்து இராவணால் அடிபட்டு அதை ராமருக்குச் சொல்லிவிட்டு உயிர்நீத்தது. அதனால் இருவரும் சீதையைத் தேடி தெற்குமுகமாக வந்தனர்.
ரிஷியமுகபர்வதம் என்ற இடத்தில் அனுமனைச் சந்தித்தபோது அவர்களுக்கு சுக்ரீவனுடன் உதவ தயாரானார் அனுமன். அப்போது இலங்காதிபதியான இராவணன் இருப்பது கடல் தாண்டி என்பதால் அங்கே சென்று சீதை இருப்பதை யாராவது கண்டுபிடித்து வந்து சொல்லவேண்டும். யார் செல்வது என்று அனைவரும் சிந்திக்கும்போது அனுமன் செல்லவேண்டும் என முடிவாகிறது.
அவருக்கோ அக்கடலைத் தாண்டிச் செல்லவேண்டுமே எப்படிச் செல்வது என்று திகைப்பு.  ஜாம்பவான் என்ற கரடியும் சுக்ரீவனின் ஆட்சியில் பங்குபெற்றிருந்தார். அவருக்கு அனுமனின் திறமைகள் பற்றித் தெரியும்.
அவர் அனுமனிடம் “ அனுமனே உன்னால் பறக்கமுடியும். சிறுவயதில் நீ பறந்திருக்கிறாய். எனவே புறப்படு “ என்கிறார். அனுமனுக்கோ தயக்கம். அவர்கள் அப்போது மகேந்திரமலையின் மீது நின்றிருந்தார்கள். எதிரே மாபெரும் கடல். மேலேயோ மிக விரிந்த ஆகாயம். சாரணர்கள் செல்லும் வானவீதியில் தன் இவ்வளவு பெரிய உருவை வைத்துக் கொண்டு பறக்க முடியுமா.
”என்னால் பறக்கமுடியுமா “ எனக் கேட்டார் ஜாம்பவானிடம்.
“நிச்சயம் உன்னால் பறக்கமுடியும். இக்கடலைக் கடக்க முடியும். உன் வலிமையின் முன் இவை எல்லாம் தூசு. எந்த இடர் வந்தாலும் கலங்காதே. தடங்காதே. பறந்துகொண்டே இரு. நிச்சயம் உன்னால் இலங்கையை அடைய முடியும் “
ஒரு க்ஷணம்தான் திகைத்தார் அனுமன். அடுத்த நிமிடம் கால்களாலும் கைகளாலும் அம்மலையை இறுக்கப் பற்றினார். சீரும் சிறப்பும் பெற்ற மகேந்திரமலையில் குடியிருந்த வித்யாதரர்கள், கின்னர், கந்தர்வர், தேவர், தானவர்கள், பன்னகர், நாக யக்ஷர்கள் ராட்சசர்கள் ஆகிய அனைவரும் பூகம்பம் வந்ததோ எனத் திகைத்தார்கள்.
”சூரியன் மகேந்திரன் வாயு பிரம்மாவுக்கு வணக்கம் “ என்று கூறிவிட்டு கிழக்கு நோக்கி வாயுபகவானை வணங்கிவிட்டு கைகளையும் கழுத்தையும் சுருக்கிக் கொண்டு மனோவீர்யத்தை வளர்த்து செல்லவேண்டிய பாதையைப் பார்த்து ஆகாயத்தையும் கணித்து மூச்சையும் ப்ராணனையும் நிலைப்படுத்திக் கொண்டார்
 தெற்குத்திசை நோக்கி கால்களால் மலையை அழுத்தி உந்திக் வாலைச் சுழற்றி அடித்துக் கைகளை முன்னோக்கி நீட்டி ஒரே எவ்வாகக் காற்றில் எவ்வினார் அனுமன். அட இதென்ன அவ்வளவு பெரிய உடல் காற்றில் மேகம் போல மிதக்கிறதே. ஆனால் உந்தி எழுந்ததில் மகேந்திரமலையே குலுங்கியது. அதன் மரங்களும் செடிகளும் பூக்களும் வேரோடு ஆடின. தெறித்து விழுந்தன. திமிங்கிலங்களும் மீன்களும் சிதறிப் பறந்தன கடலில் இருந்து. அவ்வளவு வேகம். வாயுவேகம் மனோவேகம்.
ராமர் விட்ட பாணம் போல் விர்ரென்று ஆகாயத்தில் பறந்து கொண்டே “ சீதை அங்கே இருந்தால் இராவணனோடு இலங்கையைப் பேர்த்து எடுத்துக்கொண்டு வருவேன்”. எனக் கைகளை விரித்துப் பறந்தார்.
கடல் என்றாலும் தடைகள் வாராது இருக்குமா. ? முதலில் மைநாகம் என்ற மலை அவருக்கு இளைப்பாறல் தர சமுத்திரராஜன் ஆணையிடக் கடலில் இருந்து எழுந்தது. அதை மறுத்து ஒதுக்கிவிட்டுப் பறந்தார். சிறிது காதத்தில் நாகமாதா சுரஸை என்பவள் அனுமனை விழுங்க மிகப் பிரம்மாண்டமாக மலையளவு வாயைத் திறந்து காத்திருந்தாள் அப்போதும் அவர் கட்டைவிரல் அளவு சிறு உருவம் எடுத்து சுரஸையின் வாயினுள் சென்று வெளிவந்து பறந்தார்.
மூன்றாவதாக அவரது நிழலைக் கொண்டு அவரைக் கடலுக்குள் இழுத்தாள் ஒருத்தி அவள்தான் பயங்கரத் தோற்றம் கொண்ட சிம்ஹிகா. ” ஆ உணவு. ஆ உணவு என்று அவள் வாயை மிக அகலமாத் திறக்க அவள் வாயினுள் வ்ஜ்ராயுதம் போல் பாய்ந்து அவளைக் கிழித்துவிட்டுத் திரும்ப இலங்கை நோக்கித் தன் இலக்கை நோக்கிப் பறந்தார் அனுமன்.
இப்படி எல்லா இடையூறையும் களைந்து நிறைய மரங்கள் சூழ்ந்திருந்த இலங்கைத் தீவை அடைந்தார். அங்கே தன் உருவை சுருக்கியபடி லம்பம் என்ற மலையை அடைந்தார் அனுமன். எல்லா இடமும் தேடியலைந்து அதன்பின் அசோகவனம் சென்று ஒருவழியாக சீதையை தரிசித்தார்.
அப்பாடா எவ்வளவு பெரிய பயணம். கடலைக் கடத்தல் எவ்வளவு பெரிய காரியம் அதே போல் உருவைச் சுருக்குதலும் விஸ்வரூபம் எடுத்தலும் கூட. இதை எல்லாம் தன்னால் முடியும் என்று ஜாம்பவான் சொன்னதை நம்பி அனுமன் செய்தார். அதேபோல் நம்மால் ஒரு நல்ல விஷயத்தைச் செய்யமுடியும் என யாராவது ஊக்கம் கொடுத்தால் அதைப் பின்பற்றி நம்பிக்கையோடு உழைத்தால் நம்மாலும் உயரமுடியும் இலக்கை எட்டமுடியும் என்பதை அனுமனின் கதை உணர்த்துகிறதுதானே குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 6. 9. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...