ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள். - ஐபிசி தமிழ், அகரம், தமிழ் டைம்ஸ், வெற்றிமணி
நான்கு ஐரோப்பிய தமிழ் சஞ்சிகைகள் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. வெற்றிமணியின் ஆசிரியர் திருமிகு தவா அவர்கள் வெற்றிமணி, அகரம் ஆகியவற்றையும் பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள் வெற்றிமணி, தமிழ் டைம்ஸ், அகரம் ஆகிய சஞ்சிகைகளையும் அளித்தார்கள்.
தொடர்ந்து 25 வருடங்களாக வெற்றிகரமாக வெளியிடப்பட்டு வரும் நூல் வெற்றிமணி. தமிழ் டைம்ஸ் தனது 50 ஆவது இதழை வெளியிட்டுள்ளது. அகரம் தனது ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐ பி சி தமிழ் என்ற பத்ரிக்கை 25 ஆவது இதழ் வெளியாகி உள்ளது.
இவை அனைத்துமே மாதாந்திரிகள். மேலும் இலவச இதழ்கள். தொடர்ந்து ஈழத்தமிழ் ப்ரச்சனைகளையும் ஈழத்தமிழர் வாழ்வியல், ஈழத்து நிலைமை, ஈழத்து, ஐரோப்பிய அரசியல் விவரங்கள், நிலவரங்கள் மட்டுமல்லாது இந்திய அரசியலையும் மனிதநேயப் பதிவுகளையும் தொடர்ந்து கொடுத்து வருகின்றன.
ஐபிசி தமிழ் பத்ரிக்கையில் அரசியல் கார்ட்டூன்கள் நல்ல சாடல். இந்தப் பத்ரிக்கையை இணையத்திலும் வாசிக்கலாம். கிட்டத்தட்ட 40 பக்கங்கள் உள்ள பத்ரிக்கை இது. ஐபிசி தமிழ் என்றொரு தொலைக்காட்சியும் இயங்கி வருகிறது.
தமிழ் ஆலயங்கள் அவற்றின் பணி, அதில் தேர்ச்சிபெற்றோர், பாராட்டுப் பெற்றோர், மேலும் இங்கே பரதம், பாட்டு , இசை போன்ற பல்கலைகளையும் கற்று அரங்கேற்றம் நிகழ்த்தியோர் பற்றிய பதிவுகள் அருமை.
வி சபேசனின் சித்திரைப் புத்தாண்டு பற்றிய கட்டுரையும் தமிழ் ஆண்டுகளுக்கு வேற்றுமொழிப் பெயர்கள் வைத்து குறித்தான சாடலும் சிந்தனையைத் தூண்டியது.
சினிமா விமர்சனங்களும் உண்டு. ஊர் நினைவைக் கிளர்ந்தெழச் செய்யும் கவிப்பூங்கா மிக அருமை. பாட்டி வடைசுட்ட கதை என்ற நால்வகைக் கதை வித்யாசம். மறந்துவிடக்கூடாத குழந்தைக் கவிஞர் பா சத்தியசீலன் பற்றிய கட்டுரை மிக மிக அருமை. விளையாட்டுப் போட்டிகள், தமிழ்ச்சங்க ஆண்டுவிழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள், கலை ஆன்மீக நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இனப் பிரச்சனை, இனப்படுகொலைகள், நடுவண் அரசு, தமிழின அழிப்பின் நினைவலைகள் (ப்ரிகேடியர்கள் பற்றியது ) , தாயக ஒளிப்படங்கள், நூல் வெளியீடு ( நடுகல் - தீபச்செல்வன் ), இளம் சமூகம் எதிர்கொள்ளும் விவாகரத்து ஆகியன பற்றி அலசுகிறது இந்தப் பத்ரிக்கை. மொத்தத்தில் ஒரு மாத தகவல்களை அலசி ஆராய்ந்து மக்களுக்கு வழங்குகிறது இப்பத்ரிக்கை.
அகரம் மாத இதழும் ஒவ்வொரு தமிழ்த் திங்களிலும் வெளியாகி வருகிறது.
இதன் தலைமை ஆசிரியர் திரு. இரவீந்திரன் அவர்கள். ஆசிரியர் குழுவினர் ஐரோப்பா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். தலையங்கமெல்லாம் ஈழத்து அரசியல் பற்றியது. பிக்பாஸ் பைத்தியங்கள் போன்ற சாடலோடு, சாணியின் பயன் பற்றியும், காத்தோட்டிக்காயின் நலன் பற்றியும், போருக்குப் பின்னான வாழ்வியல் பாடங்களையும், இராஜீவின் கொலை குறித்தும் அலசுகிறது. இதிலும் ஹைக்கூ, க்ளெரிஹ்யூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் டைம்ஸின் பிரதம ஆசிரியர் திரு. தவா அவர்கள். இது டோர்ட்மெண்டில் இருந்து வெளிவருகிறது. 45 இல் இருந்து 50 ஆவது இதழ் வரை வாசிக்கக் கிடைத்தது. தலையங்கப் பக்கத்தில் ஒரு திருக்குறளும் அதன் பொருளோடு வெளியாவது இந்த இதழின் சிறப்பு. கிறிஸ்துவ நற்சிந்தனையும் தொடர்ந்து வெளியாகி உள்ளது !
சுதேசி என்பவரின் உலகநாகரீகத்தில் மனிதரின் பங்கு என்ற வரலாற்றுத் தொடர் ஒவ்வொரு இதழிலும் சிறப்பாக உள்ளது. காதலர் விமானம் என்ற தொடரை திரு கந்தையா முருகதாசன் அவர்கள் எழுதி வருகிறார்கள். மாங்கல்யம் என்றொரு தொடரும் இடம்பெற்றிருக்கிறது. கவிச்சாரல் என்ற பகுதியில் மணியம் என்பவரின் கவிதைகளில் ஊர்நேயமும் ஈழத்தின் இனிமையான வாழ்வியலும் வெளிப்படுகிறது. மிக ரசித்துப் படித்தேன்.
இலக்கப்புதிர், அறிவுப்புதிர், மூன்று கேள்விகள் ஆகியனவும் சினிமா செய்திகளும் இந்திய, இலங்கை, ஐரோப்பிய அரசியல் நிலவரங்களும், இன அழிப்புப் பற்றியும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனிச் செய்திகளும் ஆன்மீக உலாவும் மூலிகை மருத்துவமும் விளையாட்டுச் செய்திகளும் இதன் சிறப்பு. சவாரி சண்முகத்தார் என்றொரு நையாண்டிப் பகுதியும் இடம் பெறுகிறது. செக்ஸ் ரோபோட்கள் பற்றிய செய்தி மிகப் புதிது.
திரு கந்தையா முருகதாசன் அவர்களின் மறைக்கப்படும் பெண் ஆளுமையாளர்கள் போன்ற கட்டுரைகள் அதி சிறப்பு. இவர் இராவணன் என்ற புனைபெயரிலும் பல்வேறு கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
வெற்றிமணியின் ஸ்தாபகர் அமரர் திரு. மு. க. சுப்ரமணியம் அவர்கள். அவரது மகன் திரு மு க சு சிவகுமாரன் தொடர்ந்து இந்நூலை வெளியிட்டு வருகிறார் . இதன் ஆசிரியரும் அவரே.
இந்நூலில் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் அரசியல் அறிவியல் மருத்துவச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. உளநலம் காக்கும் கட்டுரைகள் . சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரைகள் இதில் சிறப்பு.
தலையங்கம் சிறப்பு. நூல் வெளியீட்டு விழா, ஆண்டுவிழா, விருது விழா இன்னபிற விழாக்கள் பற்றிய பதிவும் செய்திருக்கிறார்கள். சினிமா செய்திகளும் இடம் பெற்றுள்ளன. சேவியர் என்பவரின் நடுப்பக்கம் என்பதில் நச் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஐ லவ் யூ விற்கும் , சாப்பிட்டாயா விற்கும் உள்ள தொடர்பைக் கூறும் ராம் பரமானந்தனின் கட்டுரை நான் மிகவும் ரசித்த ஒன்று. நம்முடைய உள்ளமும் நாம் வாழும் யதார்த்தமும் நாம் கூறும் வார்த்தைகளும் கம்யூனிகேஷன் எனப்படும் ஒன்றோன்றுடனான தொடர்பை நிறுவத் தவறுவது பற்றியான கட்டுரை அது. ஐரோப்பிய வாழ்வியலில் தமிழர்களான நாம் மிங்கில் ஆகாததை சரியான முறையில் நிறுவி இருக்கிறார். குழந்தைகளுடனான உறவில் கூட நாம் நம்முடைய அதிகாரத்தையும் அன்னியத்தன்மையையும்தான் வெளிப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அதேபோல் அல்லாவுதீனும் அற்புதப் பெண்ணும் என்ற கட்டுரையும் வெகு சிறப்பு. மிகக் காத்திரமான கட்டுரைகள் அடங்கிய இதழ் இது.
திருமந்திரமும் வாழ்வியலும் என்ற தொடர் அற்புதம். திரு. கந்தையா முருகதாசனின் நான் என்பது அகம்பாவமல்ல தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்ற கட்டுரையும் அழுத்தமான ஒன்று.ஸ்தாபகர் திரு சுப்ரமணியன் அவர்களின் நூற்றாண்டு பற்றிய கட்டுரை அவரது தொண்டுகளை சேகரித்து வழங்கியது அரிய தொகுப்பு.
25 ஆண்டுகள் ஒரு நூலை வெற்றிகரமாக நடத்தி வருவது என்பது வெகு சிறப்பு. திரு மு. க. சு. சிவகுமாரன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
முக்கியமான விஷயம் நம் அருமைத் தோழி வலைப்பதிவர் கௌரி சிவபாலன் அவர்கள் கௌசி என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் இங்கே உள்ள ஜெர்மனி எழுத்தாளர் சங்கத்தில் செயலாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அட நல்ல தலையிடி என்ற தலைப்பிலும் அன்றும் இன்றும் எழுத்தாளர்கள் என்ற தலைப்பிலும் இரு கட்டுரைகள் படித்தேன். மிக சுவாரசியம். சந்தோஷமும் பெருமையுமாய் இருக்கிறது கௌசி வாழ்த்துக்கள். :)
இந்நூல்களில் ஒரு சிறப்பு நூலின் வெளி/உட்புறங்களில் திருவள்ளுவர் ஆண்டே குறிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு தமிழ்த் திங்களின் முதல் நாளிலும் வெளியாகிறது. தமிழ்க்கடை, நகைக்கடை, உணவு, உடைக்கடை, ஹால், வாகன விளம்பரங்கள் கலர்புல்லாகக் கண்ணைக் கட்டுகின்றன.
ஊரக வாழ்வின் பழமையை விட முடியாமலும் யூரோப்பிய வாழ்வின் புதுமையைத் துறக்கமுடியாமலும் இருக்கும் இருவித மனநிலைகள் ஆங்காங்கே வெளிப்படுகின்றன. சமையல் குறிப்புகளும் ஜாதகபலன்களும் இடம்பெறவில்லை :)
பல்வேறு சமூக பொருளாதார அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் வாழ்வியல் சவால்களை எதிர்கொண்டபோதும் தொடர்ந்து இந்த இதழ்களை வெளியிட்டுத் தமிழ்ச் சேவை ஆற்றி வரும் அனைத்துப் பத்ரிக்கை ஆசிரியர்களுக்கும் மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களும் வந்தனங்களும். இன்னும் பல்லாண்டுகள் தொடரட்டும் உங்கள் சேவை.


அட இத்தனை தமிழ் பத்திரிகைகளா? பாராட்டப் பட வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குஆமாம் இன்னும் கூட உண்டு வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!