எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

காப்பு. (சிறுகதை)

காப்பு.
றுதியாய் முன்கை தன்னை உமைஇள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மால்மருகன் காக்க”
”தேவானை அடி தேவானை.. ” இரண்டாங்கட்டிலிருந்து ஆத்தா கூப்பிடுவது தெரியாமல் வளவுப் பூசைவீட்டில் குளித்துமுழுகித் தலையைச் சுற்றிய துணியோடு காக்கச்சொல்லி முருகனை அழைத்துக் கொண்டிருந்தாள் தெய்வானை. இவ்வரிகளைப் பாடும்போது புறஉலகம் மறந்து சண்முகத்தின் வலிமையான இருகைகள் அவள் விரல்களைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று நின்றதே கண்ணுக்குள் இனிமையாய் முட்டி நின்றது.
”அட இருஞ்சே. புள்ள சம்முகக் கவசம் சொல்லிக்கிட்டு இருக்கு. முடிச்சிப்புட்டு வரும். அப்பிடி என்ன அவசரம் ஒனக்கு.” என அப்பச்சி ஆத்தாளைக் கடிந்து கொண்டார்கள்.
”கார்த்தியலுக்குக் குன்னக்குடிக்கு வடிக்கப் போகோணும். நேரமாச்சு. ஆளும் பேரும் வந்திருவாக. அங்கன சமையக்காரவுகளும் காத்திருப்பாக. வெள்ளனக் கெளம்புனாத்தான தாவல. ”

“எல்லாம் போகலாம். பலகார வேலைய முடிச்சிட்டு நீங்க மொத நடை கார்ல கெளம்பீருங்க. அடுத்த நடைக்கு நா வாரேன்”
“ஏன் எல்லாரும் ஒண்ணாப் போனா ஆகாதாமா.. அங்க போனா அம்புட்டுப் பேரும் விசாரிப்பாக தேவானை அப்பச்சி எங்கன்னு. “
“ஏன் வள்ளிமயில் அப்பச்சி எங்கன்னு கேக்க மாட்டாகளாக்கும். இந்தச் சின்னப்பய சுந்தரம் அப்பச்சி எங்கன்னும் கேக்கமாட்டாகளாக்கும்.”
“என்னதான் இருந்தாலும் நா இந்த வீட்டுக்கு ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டு வந்தப்ப ஆத்தான்னு ஓடிவந்து கட்டிக்கின ஓவிய மகளாச்சே தேவானை. அதுக்கப்புறந்தானே வள்ளிமயிலும் சுந்தரமும். “
”அட இல்லஞ்சே. இன்னிக்கு ஆசாரி வாரமின்னிருக்காரு. ஆத்தாப் பொண்ணுக்குக் கைக்கு ரெட்டைவரிசைக் காப்புப் பண்ணச் சொல்லி இருக்கம்ல. எடுத்துக்கினு வருவாரு. கார்த்திகை வந்திருச்சே. இன்னுங் கண்டசரமும், வைரத்தாலியும் வரோணுமே. “ என்றார்கள் வயிரவன் செட்டியார்.
“அது சரி அப்ப நீங்க அடுத்த நட வாங்க. நாங்க முன்னே போறோம். “
”என்னாத்தா, கூப்பிட்டீகளா” என்று தலையைத் துவட்டியபடி வந்தாள் தேவானை. அடி சட்டுப்புட்டுன்னா பலகாரத்தை உண்ணுட்டு வா. தங்கச்சி தம்பியக் கூட்டிக்கினு குன்னக்குடிக்குக் கிளம்புவோம்” என்றார்கள் சோலை ஆச்சி. 
குன்னக்குடியின் கீழப்பாடசாலையில் கார்த்திகை சோமவாரம் என்பதால் ஆண்டிக்கு வடிக்க வனாயினா குடும்பத்தாரும் பங்காளிகளும் கூடி இருந்தார்கள். வனாயினா வீட்டில் கல்யாணம் பேசி இருந்த சம்பந்தப்புரத்துக்கும் ஆளனுப்பி அழைத்திருந்தார்கள். அவர்களும் பழம் தேங்காய் வாங்கிக் கொண்டு குன்னக்குடி சண்முகநாதனைத் தரிசிக்க வந்திருந்தார்கள்.
“மகளுக்குக் காப்புப் பண்ணி வருது இன்னிக்கு அதுனால அவுக அப்பச்சி சத்த நேரஞ்செண்டு வருவாக “ என்று அனைவரிடமும் பெருமைபொங்கச் சொல்லிக் கொண்டிருந்தாக சோலை ஆச்சி.
மலையேறிச் சாமி கும்பிட்டுக் கீழேவந்து அன்னதானம் முடியும்வரை தேவானை குனிந்த தலை நிமிரவில்லை, மாமியா வீட்டு ஆளுக வந்திருக்காகன்னு. அம்புட்டுப் பவிசான புள்ளதான் எப்பிடித் தைரியக்காரியா மாறிப்போனா பின்னாள்ல.
டி மெச்சியப்பத்தா பேத்தி தேவானை ஆம்பிள்ளையான் மலயாவுக்குப் போனான்ல. அங்கேருந்து சீக்கிரமே வந்துட்டானே. ” என்று கேட்டாள் இன்னொரு பங்குக்காரியான விசயா தன் நாத்தனார் அலமியிடம்.
“ஆமா அண்ணமுண்டி. அவ அப்பச்சி சொந்தம் விட்டுறப்புடாதுன்னு மாமியாவீட்டு ஐயாக்க வீட்டுல மாப்புள்ள எடுத்தாக அவன் திராபைப்பயலாம். வீடு தங்கமாட்டானாம். ஆச அறுவது நா மோகம் முப்பதுநான்னு இவளுக்கு அஞ்சாறு புள்ளையும் ஆயிப்போச்சு.”
“பேங்குல க்ளார்க்கு வேலை இருக்குன்னு வயிரவண்ணன் சேர்த்துவிட்டாகளாம். அவனுக்கு அப்பச்சி எங்கோவுட்டு வட்டிக்கடையைப் பாக்கவே ஆளில்ல. அவன வேலைக்குப் போறவன்னு நினைச்சிட்டியளா. யார்கிட்டயும் கைகட்டிச் சேவகம்பண்ற வம்சம் நாங்க இல்லன்னு ஆங்காரமா ஆடித் தீர்த்துப்புட்டாராம். ”
”நல்லாப் போச்சுப் போ. எப்பவும் இந்தச் சோலை ஆச்சிக்குப் பெருமை பீத்தக்கலம். நேத்துப் பேசும்போதும் மகவீட்டை விட்டுக் கொடுக்காம தங்கமக சிங்கமக அப்பிடின்னு பீத்திகினு இருக்கு அந்தாச்சி.”
”எங்க செட்டியாரு அதான் உங்க மாப்புள்ள பேங்குல இருக்காகள்ல. போன வாரம் தேவானையைக் கூட்டிக்கினு சண்முகம் அவுக அப்பச்சிக்குத் தெரியாம நகையை அடகுவைக்க வந்தாகளாம்.”
“அப்பிடியா சேதி. ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஈறும்பேனும்னு. “ முகத்தைக் கோணி மோவாயைத் தோளில் இடித்தாள் விசயா.
”ஆனா பேங்குல வைரம் அடகு புடிக்கமாட்டோம் தங்கந்தான் புடிப்போம்னவுடனே இந்தத் தேவானை கையில போட்டிருந்த தங்கக்காப்ப அப்பிடியே கழட்டி ஆம்புள்ளயான்கிட்டக் குடுத்தாளாம். ”
“அடிப்பாதரவே…”
”பாவம் அண்ணமிண்டி, சோலையாச்சிக்கு வரட்டுப்பெருமைதான் மிச்சம். வெசாரிக்காமப் பொண்ணைக் கொடுத்துப்புட்டாக. அந்த சண்முகத்துக்கும் சேர்க்கை சரியில்லையாம். இங்கிட்டுத் தெய்வானை, அங்கிட்டு வள்ளியாம்”
“வள்ளியா ?”
“அட எகனமொகனயாச் சொன்னேன், அவ பேரு மோகனாவாம்”
”அடப் பாயிவரப்பான். பட்டுகெடப்பான், குடியக் கெடுத்தானே. ஆத்தா இல்லாத புள்ளைடி அது. சின்னாத்தாதான் ஆத்தா மாதிரிப் பாத்துப்பார்த்துப் பண்ணிக்கிட்டு இருக்கா. என்னடி சொல்லுறே. ” கையைத் தட்டிக் கன்னத்தில் வைத்து விசனப்பட்டாள் விசயா.
“ஆமாம் அண்ணமுண்டி. எல்லாம் ருசுவான சேதிதான். மாப்புள்ளதான் நேர்ல பாத்துப்புட்டுச் சொன்னாக. வளவுக்குள்ள ஏதோ சத்தங் கேக்குது. ஆரோ வாராக அப்புறமாப் பேசுவோம் “ என மடித்த துணிகளை எடுத்தபடி ஆல்வீட்டுக்குச் சென்றாள் அலமி.
சொல்லாத்தா. டிவிஎஸ் மார்ட். பேர் நல்லா இருக்கா.” குறிச்சியில் சாய்ந்திருந்த அப்பச்சி கேட்டார்கள். பல்லி கௌலி தட்டியது.
“நீங்க வைக்கிற பேருக்கென்ன கொறைச்சல் அப்பச்சி. எல்லாம் நல்லாத்தான் இருக்கு.” தரையில் ஆட்காட்டி விரலால் பல்லியின் சத்தத்துக்கு இசைவாய்த் தட்டியபடி சொன்னாள் தேவானை.
”டிவிஎஸ்னா என்னய்யா? “ என்று கேட்டாள் தேவானையின் கடைக்குட்டி மகள் அபி.
“தெய்வானை வள்ளிமயில் சுந்தரம் தானே ஐயா “ டிவிஎஸ்ஸின் விரிவைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் சொன்னான் தேவனையின் மூத்தமகன் செல்லப்பன்.
“ஆமாம்டா கண்ணுகளா. ஒங்கம்மா பேரு, சித்தி பேரு, மாமா பேரு மூணு பேரோட பேரும் சேர்த்துத்தான் இந்தக் கடையை ஆரம்பிச்சிருக்கேன். ஒங்கம்மாவுக்கு முக்காப் பங்கு, ஒங்க சித்திக்குக் காப்பங்கு, ஒங்கம்மாவும் சித்தியுந்தான் மாத்தி மாத்திக் கடையைப் பார்த்துக்கோணும்.”
“அப்ப சுந்தரம் மாமாவுக்கு “ என்று கேட்டான் நடுவிலவன் சோமு.
“மாமா பேங்குல வேலை பார்க்கிறான்ல அதுனால வியாபாரம் எல்லாம் பண்ணப்புடாது அப்பச்சி. அம்மாவுக்கும் சித்திக்கும் சுந்தரம் மாமா கார்டியன் மாதிரி “
“அதுதான் நீங்க இருக்கீகளே ஐயா “
“எம்புட்டுக் காலத்துக்கு எம்மக்களுக்கு நான் இருப்பேன் அப்பச்சி. அதுதான் உங்க அம்மானையும் இதுல சேர்த்திருக்கேன். எந்தப்பிரச்சனை வந்தாலும் அவன் முன்ன நின்னு கவனிச்சுக்குவான். வியாபாரம் கொள்முதல் வரவுசெலவை வழி நடத்துவான். “
”அப்பிடிச் சொல்லாதீக அப்பச்சி எங்களுக்கு நீங்கதான் தெய்வம். நீங்களும் ஆத்தாவும் இல்லாட்டி நாங்க இருந்த எடம் புல்லு மொளைச்சிப் போயிருக்கும். ”
”ஆத்தாத்தோய் அப்பிடிச் சொல்லாதாத்தா. எல்லாரும் எம் மக்க. எல்லாரும் நல்லாயிருக்கணும் “
”அப்பச்சி எங்கிட்ட இந்தக் காப்பு மட்டுந்தான் மிச்சம். இதுமட்டும் எப்பிடியோ தங்கிப்போச்சு. நான் என் பங்குப்பணம்னு ஒண்ணுமே போடலையே. இந்தாங்க.”
“இருக்கட்டுமாத்தா வை அத. ஒனக்கு மொதமொதல்ல நான் ஆசப்பட்டுப் பண்ணுனது. நீ இந்தக் காப்பைப் போட்டிருக்கும்போது எனக்கு எங்காத்தா ஞாபகந்தான் வரும். அவுகளுக்குத்தான் உன்னமாதிரி மெல்லிசான கையி, நீளமான விரலு எல்லாம். ”
”நீங்க பண்ணுனதுல எதுதான் சோடை போயிருக்கு அப்பச்சி. அம்புட்டும் நல்லாத்தான்.” 
”சோடைதான் போயிருச்சாத்தா.. நான் உனக்குப் பண்ணிவைச்ச கல்யாணம். ”
”அது என் தலையெழுத்து அப்பச்சி.”
”அதெல்லாமில்லாத்தா நான் வெசாரிக்காமப் பண்ணுனதுதான். இத்தனை வருஷமா இந்த மெல்லிசுக் கைதான, பிள்ளைகளோட்டக் கையூனிக் கரணம் பாய்ஞ்சிருக்கு.”
”எல்லாத்துக்கும் நீங்கதானே பக்கபலம் அப்பச்சி. நான் பேங்குல காப்பைக் குடுத்துட்டு வந்தவுடனே என் வெறுங்கையைப் பார்த்துட்டு ஒடனே நாலு காப்புப் பண்ணிப்போட்டீகளே. எப்பவும் நான் உங்களுக்குத் தொந்தரவுதான் அப்பச்சி.”
”அப்பிடியெல்லாம் சொல்லாதாத்தா. மொதல்ல ஒனக்குக் காப்பை செல்வம் ஆசாரி கொண்டு வந்தபோது அத லென்ஸ் வைச்சுப் பார்த்தேன். அதுல சில கல்லு தோஷமா இருந்துச்சு. நாம கொடுத்த கல்லை மாத்தி வேறகல்லை வைச்சிருக்கான்னு கண்டுபிடிச்சுட்டேன். அவன அன்னிக்கு உண்டு இல்லைன்னு பண்ணிட்டேன். அதுதான் குன்னக்குடிக்குக்கூட முருகனுக்கு அபிஷேகம் அலங்காரம் பார்க்காம நேரா பாடசாலைக்கு வந்துட்டேன். முருகன் என்னச் சோதிச்சுப்புட்டானாத்தா. உன் கைக்காப்பை எல்லாம் எடுத்து மாப்புள்ள அடகு வைக்கலாமா. ”
”அமயஞ்சமயம்னா அதெல்லாம் அடகு வைக்கிறதுதானே அப்பச்சி. சீதனப்பணமெல்லாம் கூட பொம்புளைப்புள்ளைகளுக்குப் பின்னாள்ல தேவைப்படும்னு போட்டு வைக்கிறதுதானே. ”
”சீதனப்பணத்தைப் பாங்குல டெபாசிட்டா போடலாம்னேன். இல்லாட்டி இடம் வாங்கிப் போடலாம்னேன். கேக்காம வட்டிக்கடையில போட்டு அசல எடுத்துச் செலவழிச்சுப்புட்டாக. தாயைக் கொல்லப்புடாதுத்தா”
”எல்லாம் நேரம் அப்பச்சி.”
”எல்லாத்தையும்தான் வாரிவழிச்சு வித்துப்புட்டாகளே. ஒரு குந்துமணித் தங்கமில்லாம. ”
”என்னப்பச்சி பண்ணச் சொல்றீக. அவுக அப்பச்சி கொஞ்சம் கடிசு.”
”நீ ஆம்புள்ளையான விட்டுக்குடுக்காமத்தானாத்தா பேசுவ. அட உருவிக்கினு போனாகளே திரும்பச் செய்துதான் தந்தாகளா.”
”இருந்தாச் செஞ்சிருக்கமாட்டாகளா அப்பச்சி.”
”காப்பைக்கூடப் பார்த்துப்பார்த்துப் பண்ணுனேனேத்தா, ஒங்கல்யாணத்தைத்தான் பார்க்காமப் பண்ணிட்டேனாத்தா.. என்ன மன்னிச்சிருத்தா.. ஒங்காத்தா இருந்தா இப்பிடி விட்டிருப்பாளா. கிளியைப்புடிச்சுப் பூனைகையில குடுத்துப்புட்டேன். சோலையும் ஒங்க விருப்பம்னு தடுக்காம விட்டுப்புட்டா. ”
”அப்பச்சி என்ன வார்த்தை சொன்னீக. நீங்களும் சோலையாத்தாளும் எனக்கு நல்லதுதான் பண்ணி இருக்கீக. என் ஆம்புள்ளையான் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான். பணங்காசு வேணாக் கொறையலாம் அப்பச்சி பாசத்துல அவுக கொறை வைச்சதே இல்லை. பொம்பளைக உங்களுக்கு என்னடி கடைன்னு மத்த ஆம்புள்ளைகமாதிரிக் கூடக் கேக்கலை. இன்னிக்கும் நீங்கதான் எனக்குக் காப்பா இருக்கீகன்னு அவுக கொஞ்சம் நாணிப்போய்த்தான் ஒதுங்கி இருக்காக. அவுகளும் நல்லவுகதான் அப்பச்சி.”
”என்னமோ போத்தா நீயும் ஏதேதோ சமாதானஞ்சொல்றே.”
”பலபழக்கம் இருந்தாலும் அவுக என்மேல உயிரைத்தான் வைச்சிருக்காக அப்பச்சி. மாறுறது மனுச இயல்புன்னா மன்னிக்கிறதும் மனுச இயல்புதானே. எங்களுக்கு அவுக வேணும் அப்பச்சி. எம்மக்களுக்குக் கட்டாயம் வேணும். எனக்கு நீங்க அப்பச்சியா, குலசாமியா என்னைக் காத்துக்கிட்டு இருக்குறமாதிரி அவுக புள்ளைகளையும் அவுக காக்கோணும்ல. காலம் வந்தா மாறிருவாக அப்பச்சி. “
”மாப்புள்ளதான் இந்த வயசிலயும் அங்கயும் இங்கயும் போகவர இருக்காகளே”
“நாமளே சதம்னு வந்தவள எப்பிடி வெரட்டிவிடுறது அப்பச்சி. நாமதானே அவளுக்கும் காப்பா இருக்கோணும்”
“நாமதாந்தா எல்லாருக்கும் காப்பா இருக்கோணும்.” திகைத்துப் போய் மகள் கைகளைப் பிடித்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள் வயிரவன் செட்டியார்.
கலங்கிய கண்களை மேல்துண்டால் துடைத்தபடி வெளியே பார்க்க வராந்தாவில் மகளுக்காய் ஆரம்பிக்கப் போகும் கடைக்கான சாமான்கள் வரிசைகட்டி நின்றிருந்தன. அவற்றின் மையமாய் கம்பீரமாய் டிவிஎஸ் மார்ட் என்ற டிஜிட்டல் பெயர்ப்பலகை எல்லாச் சாமான்களுக்கும் முன்னால் காப்பாய் நின்றிருந்தது.

டிஸ்கி:- இதை இங்கேயும் படிக்கலாம். விகடன்.காம். 


நன்றி விகடன். 

3 கருத்துகள்:

  1. தேவானை போன்ற பெண்கள் வெகு அபூர்வம். கதை உங்கள் வட்டார வழக்கில் அருமை. ஆனால் இரண்டு முறை வாசித்தேன் புரிந்து கொள்ள. கதாபாத்திரங்களும் யார் யாரிடம் என்ன பேசுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள!!!!

    நேர்மறை மனது கருத்துள்ள கதை. எல்லாப் பெண்களுக்கும் இப்படி மனது வாய்க்குமா?!! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. விகடன்.காம் ல் வந்ததற்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அஹா ! நன்றியும் அன்பும் கீத்ஸ். மிக்க மகிழ்ச்சி. :) <3

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...