எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜூலை, 2022

வெண்கலம் ( விகடன்)

 வெண்கலம்

கொழந்த வேலா பொளந்த வாயான்னு பகல்முழுக்கத் தூங்குவான் என் பேரப்பய. ராத்திரி எந்திரிச்சான்னாத்தான் வெங்கலத்தொண்டை. அழுதழுது ஆல்வீட்டுல இருக்குற எலி பெருச்சாளியெல்லாம் வெரட்டிப்பிடுவான்.” என்று பிள்ளையைப் பார்க்கவந்த பக்கத்துவீட்டு சாரதாச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் உண்ணாமலை ஆச்சி.

“பய ராத்திரில பொறந்தானா, பகல்ல பொறந்தானா “ என்று கேட்டார்கள் சாரதாச்சி.

“ராத்திரிலதான் ஆச்சி “ என்றாள் உண்ணாமலை.

“அடி ராத்திரில பொறந்தபய ராத்திரிலதாண்டி முழிப்பான். ஆமா பாண்டியக்கா குளியாட்ட வர்றாளாமே” என்று கேட்ட சாரதாச்சியிடம் “ஆமா ஆயா. அக்கா ஒவ்வொரு நாளும் குளியாட்டினவோடனே பயலுக்குக் கோமயம், பேர்சொல்லாதது, ஆடுதோடா இலை, துளசி, மாசிக்காய், சங்கு, அப்பிடின்னு ஏதாவது கொண்டாந்து ஒரசி வடிகட்டிக் கொடுக்கும்.” என்றாள் நாகு.

“அடி சங்கு குடிச்சிருக்காண்டி ஒன் பேரன். அதுதான் வெங்கலத் தொண்டையாயிருச்சு. நல்லா இருக்கட்டும்போ “ என்று கிளம்பினாக எண்பது வயது சாரதாச்சி.

“ஆச்சி நாளன்னைக்கு மிட்டாய்த்தட்டு வைக்கிறோம். ரொட்டி மிட்டாய் எடுத்துக்க வாங்க “ என்றாள் உண்ணாமலை.

“ஆத்தா இன்னைக்கே அங்கன பத்துப் படி எறங்கி இங்கன பத்துப் படி ஏறமுடியல. திரும்ப ஏற எறங்கச் செரமம். குத்தமில்லைப் போ.”

“செரி ஆச்சி நான் பாண்டிக்கிட்டயே ரொட்டி மிட்டாய நாளான்னைக்குக் கொடுத்து விடுறேன்.”

“ஆமா அவ இப்ப நெல் அவிக்க வராளா இல்லையா. மகர்நோன்புப் பொட்டல்ல விராட்டி தட்டிக்கினு இருப்பா.”

“வருவாளே ஆச்சி. முத்தி போன பெறகு எண்ணெய் தேய்ச்சுவிட எல்லாம் ஆள் இல்ல. அதான் இவ இப்பப் புள்ளைகளுக்கு எல்லாம் குளியாட்ட வர்றா. ”

“சரித்தா நல்லா இருங்க. நல்லா இருடா பேராண்டி” என்று சொல்லிப் பிள்ளை கையில் இருபத்தி ஓரு ரூபாயைக் கொடுத்துக் கொஞ்சி விட்டுச் சென்றார்கள் சாரதாச்சி.

பாண்டியக்கா அவிந்து கொண்டிருந்த நெல் அண்டாவில் இருந்து அகப்பை அகப்பையாய் நெல்லை அள்ளிக் கொட்டியது. பின் அதை வளவுப் பத்தியில் கொண்டுபோய்க் கொட்டிக் கையால் வரிவரியாக வாரி விட்டது. ரெண்டு நாள் இப்படிக் காயும். பிள்ளைகள் எல்லாம் விளையாட முடியாது.

நெல் அறையில் மூடைகளைப் பிரித்துக் கொட்டிப் பித்தளை அண்டாவில் ஏற்றித் தண்ணீர் ஊற்றி அவித்துக் காயவைத்து அதை மிஷினுக்குக் கொண்டுபோய் அரிசியாக்கிப் புடைத்துக் குருணை, இடிந்தது, முழுசு எனப் பிரித்துக் கட்டி வைக்கும் வரை ஓயாது. நெல் அவிக்க வரட்டி கொண்டு வந்துவிடும். நெல் அவிச்சுப் பொடைச்சது போக விராட்டிக்காகத் தனிக்காசு கேட்டு வாங்கிக்கும். ”விராட்டி எல்லாம் சும்மா கொடுக்கப்புடாது ஆச்சி”

“அது சரிதான் பாண்டி.. எம்புட்டுன்னு கேட்டு வாங்கிக்க “ என்பாள் உண்ணாமலை.

“அது எங்க போகுது. எல்லாம் நம்மவுட்டுக் காசுதானே. கேட்டு வாங்கிக்கின்றுவேன் “ என்று சொல்லிவிட்டு போகும் பாண்டியக்கா.

கர்நோன்பு வந்தது. மகர்நோம்புப் பொட்டலில் திருநெல்லையம்மன் அம்பு போட மகனுடன் போய் கிலுக்கி குத்திவிட்டு வந்தாள் நாகு. வெள்ளிக் கிலுக்கியைப் பார்த்து “இதென்னாத்தா” என்று விசாரித்தது பாண்டியக்கா.

“அக்கா இது கிலுக்கி. இதுல சாமி அம்பு போட்டதும் வாழைமரத்துல தம்பிப் பயல் குத்துவான். அதுதான் கிலுக்கி போடுறது “

“அந்தக் காலத்துல எங்க பாட்டியாயா எங்கப்பச்சிக்குத் தங்கக்கிலுக்கி, தங்கத்தாளம், தங்கக்கொப்பி வச்சாகளாம்டி பாண்டி. “ எனப் பெருமை பேசிக் கொண்டாள் உண்ணாமலை.

’செட்டியவீட்டுல தங்கத்துல கூட சாமான் வைக்கிறாளே’ என நினைத்துக் கொண்டது பாண்டியக்கா.

நாகுவின் மகனுக்கு ரெண்டு வயசாகிவிட்டது. ஓடுனமணியமும் உருட்டுனமணியமுமாக இருப்பான். அவனைச் சமாளிப்பதே பெரும்பாடு நாகுவுக்கு. அவள் கணவருக்கும் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அவளும் ஆறுமாத மகனோடு சென்று விட்டு இப்போதுதான் திரும்பி இருந்தாள்.

“அடி நாகு. உனக்குச் சாமான் போட்டுருக்குற வீட்டைத் தெறந்தே மூணு வருஷம் இருக்கும். ஒன் கல்யாணத்துக்கு வைச்ச சாமான்கள். ஒருக்காப் போய்ப் பார்த்துத் தெறந்து எல்லாத்தையும் எடுத்து வைச்சுக் கூட்டித் தலைகாணி மெத்தையெல்லாம் காயப்போட்டு எடுத்து வைச்சிட்டு வரணும்தா. ஞாயித்துக்கு நீ ஊர் போகோணும். வர்ற பொதன்கிழமை நீ இந்த பாண்டியக்காவோட போயிட்டு வா. அப்பிடியே போய் பாட்டியாயா பாட்டையாகிட்ட இந்தப் பயலையும் காமிச்சிட்டு வா” என்றாள் உண்ணாமலை.

அரையும் குறையுமாக “சரித்தா “ என்று தலையாட்டினாள் நாகு. அவள் தோழிகளை எல்லாம் பார்க்க வேண்டி இருந்தது. இருந்தாலும் ஆத்தா சொல்லை மீற முடியாதே.

“அடி நீ பாட்டுக்குப் பேசிக்கினே இருந்துறாதே. அக்காவோட போய் எடுத்து வை. சின்னச் சாமான்களை எடுத்து முந்தானையில சொருகிக்கின்றுவா. நம்ம கூடவே இருந்து பாத்துக்கோணும். “ என்று சொல்லி அனுப்பினாள் உண்ணாமலை.

பாண்டியக்காவும் நாகுவும் மகனைத் தூக்கிக் கொண்டு அவளின் மாமியார் வீட்டுக்குப் போனார்கள். அங்கே அவள் கணவரின் அப்பத்தா ஐயா இருந்தார்கள். அவர்களுக்குக் கொண்டு போன பிஸ்கட் பழம் எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்தாள் நாகு. பேரப் பயலோ அவர்களோடு ஒட்டிக் கொண்டான்.

“பேரப்பயலுக்கு இப்பத்தான் பாட்டியாயாளைத் தேடி வந்துச்சா “ என்று கேட்டபடி கொஞ்சிக் கொண்டார்கள் பாட்டையாவும் பாட்டியாயாவும்.

“அவுக நத்தமில்ல. அதான் ஒட்டிக்குது “ என்று சிலாகித்தது பாண்டியக்கா.

”ஏண்டி பாண்டி இங்க நெல் அவிக்கக் கூட மங்கையாச்சி வீட்டுக்கு வருவியே .போன மாசம் அந்தாச்சி போயிருச்சே தெரியுமா.”

“தெரியும் ஆச்சி. எனக்கு சாவு வீட்டுச் சாப்பாடு ஒத்துக்காது. பாண்டிமுனி வரும். அதுனால சாப்பிட மாட்டேன். அதுனால போனவாரம் வந்து அவுக புள்ளைககிட்ட வெசாரிச்சிட்டுப் போனேன்.”

“என்னவோ போ இருக்கத்தொட்டியும் கைகாலோட்ட கண்ணோட்ட நல்லாப் போய்ச் சேரோணும் ஷண்முகநாதா” என்று குன்றக்குடி இருக்கும் திசைபார்த்துக் கும்பிட்டார்கள் பாட்டியாயா.

”வாங்கக்கா போய் சாமான்களை எடுத்து வைப்போம்.” என்று கூட்டிக் கொண்டு போனாள் நாகு. இரட்டை வளவு கொண்ட வீடு அது. மேவீட்டில் ஏறி சாமான் அறையைத் திறந்தால் பழுக்காய் வாசம் வீசியது.

கல்யாணத்தின்போது ஈயம் பூசி பாலிஷ் பண்ண வெண்கலச் சாமான்கள் நிறமிழந்து அழகிழந்து களையிழந்து மங்கலாய் இருந்தன. “என்னக்கா இது கல்யாணத்தும்போது நல்லா இருந்துச்சு. அதுக்குள்ள டல்லாகிப்போச்சே” என வினவினாள் நாகு.

“காத்துக் குடிச்சிரும்ல ஆத்தா. பாலிசு எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். திரும்ப இப்பப் பாலிசு போட்டா நல்லா வந்திரும்.” என்ற பாண்டியக்கா காசாணி அண்டா, தண்ணீர் கிடாரம் , இருபத்தியோரு குழி இட்டிலித்தட்டு, ஏழு அடுக்குச் சட்டிகள், அவித்து ஊற்றும் சட்டிகள், தூக்குச் சட்டிகள், சருவங்கள், மைசூர் சட்டிகள் குடங்கள், வாளிகள், தாம்பாளங்கள், கரண்டிகள், கருதுகள், இவை போக அலுமினிய, சில்வர், ப்ளாஸ்டிக், தகரம், மரம், மங்குச்சாமான்கள், மெத்தை ரெட்டு, மெத்தை அலமாரி, பெஞ்ச், தட்டி, உலக்கை, உரல் குந்தாணி என சாமான்கள் எடுக்க எடுக்க வந்துகொண்டேயிருந்தன.

சில்லுண்டிச் சாமான்கள் வேறு விளையாட்டுச் சொப்புச் சாமான்கள், சிற்பவேலை செய்த கண்ணாடிச் சாமான்கள் என. அத்தனையையும் பொறுமையாய் பதினான்கு படிகள் ஏறி இறங்கி வளவு வாசலில் கொண்டு வந்து காயவைத்தது பாண்டியக்கா. நெல் அவிக்கும் அண்டாவைத் தூக்கித் தூக்கி அதன் தோள் எல்லாம் முண்டாபோல உயர்ந்திருந்தது.

அநாயாசமாக எல்லாவற்றையும் சுமந்து சென்று வைத்து வரும் அக்காவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் நாகு. இடையிடையே பயலையும் பிடித்துக் கொண்டு அவளால் சாமான்களை எல்லாம் இறக்கவோ அடுக்கவோ முடியவில்லை.

“நீயோ வெளிநாட்டுல இருக்க. ஒனக்கு ஒங்காத்தா இம்புட்டுச் சாமான் வைச்சிருக்கு.இப்பவெல்லாம் கல்யாணத்துக்கே வாடகைக்கு எடுத்துப் பொழங்குறாக. நீ எப்பத்தா இதையெல்லாம் பொழங்கப் போறே “ என்று சொல்லிச் சிரித்தது பாண்டியக்கா. 

பயல் பெரிய இடத்தைப் பார்த்ததும் அங்குமிங்கும் இறங்கி ஏறித் தூண் தூணாக ஓடி நாகங்களின் மேல் கால்வைத்து ஏறிக்கொண்டிருந்தான். முடிந்த சாமான்களையும் தரதரவென இழுத்துச் சத்தம் வரவைத்துக் கொண்டிருந்தான்.

“அடி நாகு பயலைப் பாரு. பட்டியக்கல்லுல விழுந்து பல்லை ஒடைச்சுக்கப் போறான். “ என்று பாட்டியாயா அழைக்கவும் கீழே வந்தாள் நாகு. மதிய வெய்யிலில் வளவெரம்பச் சாமான்கள் கிடந்தன. இதமான சூட்டில் மெத்தைகளும் தலையணைகளும் வெய்யிலில் செம்மாந்திருந்தன. சோறு ஊட்டியபின் பயல் அதில் ஓடிப்போய்ப் படுத்துக் கொண்டான்.

பித்தளையில் இருந்த சொப்புச் சாமானில் ஒரு அம்பும் இருந்தது. அதை வைத்துக் கொண்டு பயல் எல்லாத்தூண்களையும் குத்திக் கொண்டிருந்தான். பாட்டியையும் போய் லேசாகக் குத்தினான். “அட அரசாளுவ.. என்னைய என்னத்துக்குடா குத்துறே “ என்று பொக்கைவாய் தெரியச் சிரிச்சாக பாட்டியாயா.

“டேய் இங்கன கொண்டா” என அதை அவனிடம் இருந்து வாங்கி அடுக்கி வைத்தது பாண்டியக்கா. ”மானம் மூட்டமா இருக்கு. எல்லாத்தையும் அள்ளி வைங்காத்தா” எனப் பாட்டியாயா சொல்லவும். நாகுவும் அக்காவும் சாமான்களை மேலேற்றினார்கள். நாகு படியில் கொண்டு வைத்ததோடு சரி. அக்காதான் அனைத்தையும் படி ஏறிக் கொண்டுபோய் சாமான் போடும் அறையில் அடைந்தது.

”நேரமாச்சு. ரெண்டு பேரும் சோறுண்ணுட்டுப் பாருங்க.” என்று பாட்டியாயா அழைக்கவும் நாகுவும் அக்காவும் வந்து உணவருந்தினார்கள். பாட்டிக்கும் பாட்டையாவுக்கும் சமைத்துப் போட ஆள் ஒன்று வைத்திருந்தார்கள். பயல் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“என்னைக்காத்தா பொறப்புடுறே “ எனப் பாட்டி கேட்கவும், “ஞாயித்துக்கு அப்பத்தா” எனச் சொன்னாள் நாகு. அக்கா சாப்பிட்டுவிட்டு அடுக்கச் சென்று விட்டது. இரண்டாங்கட்டில் அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்துவிட்டு நாகுவும் வளவுக்குப் போனாள். ஏறக்குறைய அத்தனை சாமான்களையும் அக்கா ஏற்றி அடைந்து முடித்துவிட்டது.

சாமான் போடும் வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு மேவீட்டுக்குப் போனாள் நாகு. “என்னக்கா அம்புட்டும் முடிஞ்சிருச்சா. பூட்டிறலாமா” என்று அவள் கேட்கவும், “ இராத்தா இந்தப் பேர் சொல்லாததை எல்லாம் மெத்தை தலைகாணிக்குள்ள போடச் சொல்லி ஆத்தா குடுத்துவிட்டுச்சு. அதை எல்லாம் சொருகிட்டு வரேன்” என்று சொல்லி அக்கா சொருகிக் கொண்டிருந்தது.

ஏதோ நினைத்தவள் பித்தளை சொப்புச் சாமான்கள் வைத்திருந்த தராசைப் பார்த்தாள். குடம், வாளி, டிபன் கேரியர், கரண்டி, சருவம் எல்லாம் மினியேச்சர் மாதிரி இருந்தது. பய வைத்திருந்த அம்பு.. அது எங்கே. அதைத் தேடினாள் காணவில்லை. இங்கேதானே இருக்கணும். அவதானே கொண்டு வந்து வைத்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். மழைக்காக இருண்டு கொண்டு வந்ததால் சரியான வெளிச்சம் இல்லை. லைட்டைப் போட்டுப் பார்த்தாள். காணோமே. எந்தச் சாமானுக்குள்ளேயாவது போயிருக்குமோ. எல்லாத்தையும் தனித்தனியாக் கட்டி வைச்சாச்சே.

”ஆத்தா பாத்துக்க பாத்துக்கன்னு சொல்லி அனுப்பிச்சாகளே. அக்கா எடுத்திருக்குமா. அதை எடுத்து என்ன செய்யப் போகுது. இடுப்புல சொருகி வைச்சிருக்கும்னாகளே. சொருகி வைச்சிருக்கோ” சந்தேகம் முளைவிட்டது நாகுவின் மனதில்.

“என்னாத்தா தேடுறே.”

“ஒண்ணுமில்லக்கா. இந்த அம்பு இருந்துச்சுல்ல. வெங்கலச் சாமான்களோட. தம்பிப் பயகூட எடுத்து வெளையாடுனானே. அதக் காண்கல. ”

“எல்லாத்தையும் அடுக்கிட்டமேத்தா. ஏதோ சாமானுக்குள்ளதான் இருக்கும். இந்த எடத்தைவிட்டு அது எங்கயும் போகாதுத்தா. நாம ரெண்டுபேர்தானே அடுக்கினோம்.”

மேவீட்டு நடையிலும் படியிலும் காயவைத்த கீழ் வாசலிலும் வந்து தேடினார்கள். எங்குமே இல்லை. நாகுவின் பார்வையில் சந்தேகத்தைப் பார்த்ததோ என்னவோ அக்கா நடுவாசலில்  இருந்து ஏறி நடைக்கு வந்து நிலை வாசல் முன்நின்று முந்தியை நன்கு விரித்து உதறியது. திரும்பவும் பத்தாததுபோல் தட்டுச் சுற்றாகக் கட்டியிருக்கும் தன் புடவையை லேசாகக் கொசுவம் நீக்கி உதறித் திரும்பவும் தட்டுச் சுற்றாக உதறிக் கட்டிக் கொண்டது. மறக்காமல் முந்தானையை நன்கு விசிறி உதறி இடுப்பில் செருகிக் கொண்டது.

அக்கா இப்படிச் செய்ததும் நாகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. பாட்டியாயா கொடுத்த பலகாரத்தையும் காப்பியையும் எப்படிச் சாப்பிட்டோமெனத் தெரியாமல் அக்காவுடன் அடுத்து ஒரு வார்த்தையும் பேசாமல் ஊருக்கு வந்து சேர்ந்தாள் நாகு. உண்ணாமலையிடம் பெறகு காசு வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டு அக்கா போய்விட்டது. அதன்பின் நாகு தன் மகனுடன் ஃப்ளைட் ஏறிவிட்டாள்.

து நடந்து பத்து வருஷமிருக்கும். வெளிநாட்டிலிருந்து சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் வேலை இழந்து தாய்நாடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் நாகுவின் குடும்பமும் ஒன்று. பாட்டையா பாட்டியாயா போய்ச் சேர்ந்து ஐந்து வருஷமிருக்கும். வீடு இறங்கிப்போய் விட்டது. முகப்பு இடிந்து விட்டதாம்.

நாகு வீடு வேறு வெளி நாட்டில் இருக்கிறோமென திருச்சியிலும் பெங்களூரிலும் வீடு வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார்கள். கொரோனா லாக்டவுன் காலத்தில் அனைத்து வீடுகளும் காலியாகிக் கிடந்தன. அவற்றுக்கு வாங்கின வட்டி வேறு மாதாமாதம் பூதாகாரமாய் வளர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. இனி வாடைக்குப் போவது சிரமம் என பெங்களூரு வீட்டை வித்துக் கடனை அடைத்தார்கள். திருச்சி வீட்டின் மேல் கொஞ்சம் கடன் இருந்தது.

எத்தை தின்னால் பித்தம் தெளியும். எதைக் கொடுத்துக் கடனை அடைக்கலாம் என்ற நிலை. எல்லாருக்கும் பண நெருக்கடி. நாகுவின் பெற்றோர் போட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கெல்லாம் வட்டி இறங்கிப் போயிருந்தது. 

“ஆத்தா ஒனக்கு வெள்ளமாய்ச் சாமான் வைச்சேன். பாட்டியாயாவிட்டு, ஆயாவிட்டு, எம்புட்டுன்னு அவ்வளவு சாமான். நீ அதுல வேண்டாததைக் கொடுத்துட்டுப் பணத்தைக் கட்டு. இன்னிய லெவலுக்கு அதெல்லாம் வேண்டாம்.ஒனக்கும் ஒரு பயதானே. அவனுக்கு என்னத்துக்குச் சாமான். பொம்பளப்புள்ளை இருந்தாலும் வைக்க ஒதவும். இப்ப ஒனக்கு ஒதவுது “என்றாள் உண்ணாமலை மகளிடம்.

மகனுடன் மாமியார் வீட்டுக்குச் சென்றாள் நாகு. வீட்டின் மேங்கோப்பு, அடுப்படி முன்பக்கம், ஓடுகளின் மேல் என எல்லா இடத்திலும் ஆலும் அரசும் வேம்பும் முளைத்திருந்ததன. சாமான் போட்ட வீட்டிலும் கரையான். முகப்பு ஒருபக்கம் விழுந்திருந்தது. முகப்பில் வெளிகேட் இருப்பதால் வெளியாள் யாரும் நுழைய முடியாது என்றாலும் வீடு இத்துப் போய் இருந்தது.

லாரியில் பித்தளைச் சாமான்கள் ஏறிக் கொண்டிருந்தன. வெண்கலமாய் இருந்தவை கரித்துப் போய் இருந்தன. மெத்தை, தலையணை எல்லாமும் இறங்கின. சொப்புச் சாமான்களையும் பொடிச்சாமான்களில் வேணுங்கிறதையும் எடுத்துக் கொண்டு மிச்சத்தை மொத்தமாய் விலை பேசி விட்டாள் நாகு. வீட்டுக் கடனை அடைக்கப் போதுமான தொகைதான் அது.

லாரியில் பொருளை ஏற்றிக் கொண்டிருந்த ஆள்  “என்னாச்சி இது. தெனாலி வேல் மாதிரி இருக்கு ” என்று சிரித்தபடி அம்பைக் கொண்டு வந்து கையில் கொடுத்தான். வியர்த்துப்போய் வந்தது நாகுவுக்கு.

ஆத்தாடி இதென்ன காணாமல் போன அம்பு. எங்கிருந்தோ அவளை நோக்கிப் பாய்கிறது. வெகுவாகச் சுடுகிறதே கையில். இதென்ன தன் வினையா . ”எங்கப்பா இருந்துச்சு.” “ இந்தத் தலைகாணி ஒறையோட ஒட்டிக்கிட்டு இருந்துச்சு ஆச்சி” என்று மயில் பின்னிய தலையணை உறையைக் காண்பித்தான் அவன்.

சாமான் அடுக்கிய அன்று பயல் கையில் வேலைப் பிடித்தபடி மயில் உறை போட்ட அந்தத் தலகாணியில் உறங்கியது ஞாபகம் வந்தது நாகுவுக்கு. ஆத்தாத்தோய். மன்னிச்சிரு பாண்டியக்கா.. மனசுள் கதறத் தொடங்கினாள் நாகு. நடுவீட்டு வாசலில் நிலை வாசலுக்கு எதிரில் தட்டுச் சுற்றாகக் கட்டியிருக்கும் புடவையைப் பிரித்து முந்தியை விரித்து விரித்து உதறியபடி நின்றது பாண்டியக்காவின் பிம்பம்.

 டிஸ்கி:-  இந்தச் சிறுகதை விகடன். காமில் வெளியானது. 

https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-5

நன்றி விகடன். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...