எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 ஜூலை, 2022

பியான்வென்யூ - ப்ரெஞ்ச் அகாடமிக்கு வரவேற்கும் மாலதி சுப்பு

கோவையில் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார் திருமதி மாலதி சுப்ரமணியம். இவரது தந்தையார் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் திரு. வெ. லெ. இராமநாதன் செட்டியார், தாயார் திருமதி. லலிதா ராமநாதன் ஆச்சி. இவருடைய சகோதரி திருமதி சீதாலெக்ஷ்மி குழந்தைவேலன், சகோதரர் திரு ஆர் எம் வெங்கடேஷ். சகோதரர் அட்வகேட்டாக இருக்கிறார். இவரது மாமனார் பள்ளத்தூரைச் சேர்ந்த எமரால்டு திரு. லட்சுமணன் செட்டியார், மாமியார் திருமதி. விசாலாட்சி ஆச்சி.


இவரது கணவர் திரு லெ. சுப்ரமணியன் செட்டியார். இவரது மாமனார் கோயம்பத்தூர் கணபதியில் ஆரம்பித்து வைத்த இன்ஜினியரிங் கம்பெனியை இவரது கணவரும் அவருடைய தம்பி திரு லெ. இராமநாதனும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அதில் அவர்கள் screws மற்றும் ரிவெட்டுகளை தயாரித்து வருகிறார்கள்.

மாலதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பெரிய மகள் விசாலியை கானாடுகாத்தானைச் சேர்ந்த திரு.முத்தையா செட்டியார் இல்லத்தில் திரு. அழகு சிதம்பரம்  அவர்களுக்கு ஐந்து மாதங்கள் முன்பு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டாவது மகள் லலிதா ரத்னம் இவரது ஃப்ரெஞ்ச் வாரிசு. கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். மாலதியின் மகன் லெக்ஷ்மண் ஸ்ரீராம் ஆறாம் வகுப்புப் படித்து வருகிறார்.

இரண்டாவது மகள் லலிதாரத்னம்  பத்தாம் வகுப்பு படிக்கும் போது இவரிடம் பிரெஞ்ச் மொழியை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். DELF B1 என்று சொல்லக்கூடிய பிரெஞ்ச் ministry நடத்தும் பிரெஞ்ச் மொழிக்கான தேர்வில் தேர்ச்சிசி பெற்றுள்ளார். இவருடைய நிறுவனத்தில் இரண்டு வருடங்களாக ஆசிரியராக வகுப்புகளை நடத்தி வருகிறார். சிறப்பு என்னவென்றால் அவர் சிறு வயதாக இருந்தாலும் அவரைவிட வயதில் பெரியவர்களுக்குப் பக்குவமாக வகுப்பு எடுக்கிறார்!.

திருமதி மாலதிசுப்பு ப்ரெஞ்ச் கற்றுக் கொண்டது பற்றியும் இன்ஸ்டிடியூட் ஆரம்பித்தது பற்றியும் கேட்டபோது அது குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

”உண்மையை சொல்லப்போனால் பிரஞ்சு என்னோட இலக்கு இல்லை. எனக்கு 18 வயதில் திருமணம். கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் போதே திருமணம். மிகவும் விளையாட்டாக இருப்பேன். இல்லத்தரசியாகத்தான் இருக்க போகிறோம் என்று நினைத்துப் படிப்பை முடித்தேன். திருமணம் ஆன 6 மாதங்களில் எனக்குப் புலப்பட்ட விஷயம், வீட்டில் இருப்பதால் நாம் உலக நடப்பை தெரிந்து கொள்ள முடியாது மேலும் எனக்கென ஓர் அடையாளம் வேண்டுமென்பதையும் உணர்ந்தேன். 

எனது கணவர் தொழில் நிமித்தமாக பிஸியாக இருப்பார். ஆகையால் நாம் ஏதாவது பயனுள்ள செயலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது பெரிய மகள் பிறந்த நேரம் அது. எனக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதை உணர்ந்த நேரமது.

என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தோம், என் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். IBMஇல் விசாரித்த போது, ஓர் ஆண்டிற்கு 60,000 ரூபாய் கட்டணம் என்று சொன்னார்கள். எனக்கு எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், இரண்டு காரணங்களால் நான் IT துரையை தேர்வு செய்யவில்லை. கட்டணம்  உயர்வாக இருந்தது. தினமும் 8 மணி நேரம் அங்கு நேரில் சென்று படிக்க வேண்டும்.  குழந்தையுடன் இது சாத்தியப்படவில்லை. 

பிறகு ஒரு நாள் நான் படித்த அவினாசிலிங்கம் கல்லூரிக்குச் சென்றேன். அங்கு சில பேராசிரியர்களால் எனது தேடலைப் புரிந்துகொள்ள இயலவில்லை.  "உனக்குப் பிள்ளைகள் வந்தாச்சு இனி எதற்கு படிப்பு" என்றார்கள் ஜாலியாக. 

நான் ஃபுட் ஸைன்ஸ் & பயோகெமிஸ்ட்ரி இளங்கலை பட்டதாரி. எனது உறவினர்கள் அந்த துறையிலேயே மேற்படிப்பைத் தொடரச் சொன்னார்கள். அந்தத் துறையில் எனக்கு இலக்கை அடைவது கடினம் என்று தோன்றியது. ஏனெனில், இந்த மேற்படிப்பிற்குக் கல்லூரிக்கு நேரில் செல்ல வேண்டும். அப்போது அவினாசிலிங்கம் கல்லூரிப் பேராசிரியை திருமதி சுபாஷிணி எனக்கு நல்வழியைக் காட்டினார். பிரஞ்சுக்கு ஆசிரியர்கள் மிகக் குறைவாக இருப்பதால் அதற்கு வாய்ப்புகள் அதிகம், அதோடு நீ எதிர்ப்பார்ப்பது போல பகுதி நேர வேலை( part time) செய்யலாம் என்று கூறினார். இவ்வாறு தான் நான் பிரஞ்சு மொழியை  கற்கத் தேர்ந்தெடுத்தேன்.


அதன் பின் நான் ஃப்ரெஞ்ச் மொழியை Alliance Française    என்னும் ப்ரஞ்ச் எம்பஸி நடந்தும் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். ஆனால் அந்த இன்ஸ்டியூட் கோயம்புத்தூர்ல இல்லை. அப்ப  என்னுடைய பேராசிரியை திருமதி சுபாஷிணி என்பவர்கள் அந்த இன்ஸ்டியூட் சென்னையில் இருக்கிறது என்றும், கூர் தெ கொரஸ்பாண்டன்ஸ் ( cours de correspondance)என்ற தொலைதூர கல்வி மூலம் படி என்றும் சொன்னார்கள்.

எனக்கு அப்பொழுது ஃப்ரெஞ்ச் என்கிற மொழியைப் பற்றி எதுவுமே தெரியாது. நம்மால் படிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அதனால் நான் சென்னையில் உள்ள இன்ஸ்டிட்யூட்டைத் தொடர்புகொண்டு பேசி அப்ளிகேஷன் போட்டுப் பணம் கட்டிச்  சேர்ந்தேன். அவர்கள் ஃப்ரெஞ்ச் புத்தகமும் சீடி யும் அனுப்பிவைத்தார்கள். அந்த சீடியில் உள்ள பாடங்கள் பாடப் புத்தகத்தில் எங்கு உள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினமாக இருந்தது. 

ஆனால் மனதில் எப்படியும் படித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.என் அப்பாவும் அம்மாவும் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். அம்மாவின் யோசனைக்கிணங்க சேலத்தில் ஒரு தனியார் பள்ளியில் ப்ரெஞ்சு ஆசிரியரிடம் ஒரு வாரகாலம் பயின்றேன். அப்பொழுது எனக்கு என் பெரிய மகள் பிறந்து சிறிய மகளும் கருவிலேஇருந்த நேரம்.

அப்பொழுது எங்கள் அப்பத்தா கேட்ட கேள்வி என்னால் இன்றும் மறக்க முடியாது ”கையில் ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு வயிற்றில் ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு எப்படிடீ நீ படிப்பாய்” என்று கேட்டார்கள் . ”அட போங்க அப்பத்தா நான் படிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டேன். கண்டிப்பாகப் படித்து முடித்துவிடுவேன்” என்று கூறினேன்.

பிறகு நானும் என் கணவரும் கோவையில் ஒரு பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் வைத்திருந்தவரை அணுகினோம். அவர் சீடி வழியாக கற்பித்தார். சிடியில் ஒரு கோர்ஸுக்கு உண்டான பாடம் இருக்கும். அந்தக் காலத்தில் இன்டர்நெட் வசதி இல்லாததால் இவரிடம் சீடி மூலம் பிரெஞ்சு கேட்டுக் கற்றுக் கொண்டது எனக்குப் பெரும் உதவியாக இருந்தது .அப்படித்தான் என்னுடைய ஃப்ரெஞ்ச் கல்வியானது தொடர்ந்தது. பிறகு Alliance Française கோவையிலேயே வந்துவிட்டது. அங்கு DELF A1, A2, B1, B2 மற்றும் DALF C1 தேர்வுகளில் தேர்சி பெற்றேன்.

பிரெஞ்சு மொழி தனை நேரில் வந்து படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆன்லைனில் கனடா சிங்கப்பூர் கத்தார் அமெரிக்கா துபாய் போன்ற பலதரப்பட்ட நாடுகளிலிருந்து மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அவர்களது நேரத்தைப் பொறுத்து  அந்த நேரத்திற்குத் தகுந்தவாறு அவர்களை ஒரு குழுவாகப் பிரித்துக் கற்றுத் தருகிறோம். ஒருவருக்காக என்று  தனித்தனியே கற்றுத் தருவதில்லை அப்படியிருந்தால் அவர்களது பேசும் திறன் சிறப்பாக இருக்காது என்பது ஒரு காரணம். எனவே குழுவாய் இருந்தால் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் பிரெஞ்ச் மொழியில் பேச ஏதுவாக இருக்கும். குழுவாய் இருந்தால் படிக்கும் மாணவர்களுக்கு ஆர்வமும் அதிகமாக இருக்கும்.

இதைப் படிப்பதில் என்ன சிரமம் என்று கேட்டுள்ளீர்கள்.  ஃபிரெஞ்ச் ஒரு அயலக மொழியாக இருப்பதால் நமக்கு அம்மொழியைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடையாது .அதை அவர்கள் பேசும்போது நமக்கு சற்று பயமாக இருக்கும் எப்படிப் படிக்கப் போகிறோம் என்று.  ஆனால்  நாம் நினைப்பது போல் அது ஒன்றும் சிரமம் இல்லை. எதுவுமே படிக்கப் படிக்கப் பயிற்சியின் அடிப்படையில் மிகவும் சுலபமாக இருக்கும். மிகுந்த புரிதலுடனும் பல தரப்பட்ட விளையாட்டுகள் மூலமாகவும் எங்களது நிறுவனத்தில் மாணவர்களுக்குக் கற்றலில் இனிமையைப் புகுத்திப் பயம் இல்லாத சூழலில் மகிழ்வோடு கற்க நாங்கள் உதவுகிறோம்.

பிரெஞ்ச் மொழி தனை அனைவரும் கற்றுக் கொள்ளலாம் .அதற்கு வயது வரம்பு கிடையாது. ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் என்னிடம் படிக்கிறார்கள். அவர்களை professional French என்று சொல்லப்படும் A 1 குழுவிலேயே படிக்க வைக்கிறேன்.  அவர்கள் சுலபமாகப் படிக்கும் திறனைக் கையாளுகிறார்கள். DELF டெல்ஃப் எனப்படும் தேர்வை 18 வயதிற்கு மேல்தான் எழுத முடியும். அதற்கு முன்னர் ஜூனியர் டெல்ஃப் எனப்படும் தேர்வை எழுதலாம். அதில் வேறுபட்ட நிலை உள்ளது 50 வயது கடந்தவர்களும் என்னிடம் படிக்கிறார்கள். குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் எம்எஸ் படிக்கச் செல்பவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைக்கு பிரெஞ்சில் பேச வேண்டிய தேவை ஏற்படும்.

பலர் தற்சமயம் கனடாவிற்கு போவதால் அதிலும்  கெபேக் மாகாணத்திற்கு போவதாக இருந்தால் அங்கு ஃபிரெஞ்ச் தேவைப்படுகிறது.பி ஆர் அப்ளை செய்பவர்களுக்கு ஃப்ரெஞ்ச் தெரிந்து அந்ததேர்வை எழுதினால் அதிகப்படியான புள்ளிகள் பெற முடியும் மேலும் பிரெஞ்ச் ஆசிரியையாகவும் அமேசன் போன்ற நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க உபயோகமாக இருக்கிறது. கனடாவில் பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு ஃபிரெஞ்ச் இரண்டாவது மொழியாக இருப்பதால் நாங்கள் இங்கிருந்து கூகுள் மீட், ஸ்கைப் வழியாக வகுப்பும் எடுக்கிறோம் .

மாணவர்கள், இந்த துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அயலகம் செல்ல இந்த மூன்று காரணத்திற்காகவும் ஃபிரெஞ்ச் மொழியைப் படிக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் படிக்கிறார்கள். இப்ப கரண்ட் பேட்சில் கூட சிங்கப்பூர்,கத்தார், துபாய், Bruxelles ( Belgium), Canada போன்ற நாடுகளில் இருப்பவர்கள் நிறைய பேர் என்னிடம் படிக்கிறார்கள்”.


கொரோனா பீரியட் ல என்ன சூழ்நிலை என்று கேட்டபோது ”அப்படியே மாறிவிட்டது.எப்படின்னா,கொரோனாவுக்கு முன்பு   பேட்ச்சா ஸ்டூடண்ட்ஸ் வருவாங்க.ஒரு பேட்ச்சுக்கு 15 பேர் வீதம் எங்க இன்ஸ்டிடியூட் க்கு வந்து படிப்பாங்க,நான் கொரோனாவுக்கு முன்பே ஆன்லைன் ல சொல்லித்தருவதை ஆரம்பித்துவிட்டேன்.ஊட்டியிலிருந்து ஒரு ஸ்டூடண்ட் ஆன்லைன்ல படிச்சுட்டு இருந்தாங்க, நேரில் படிக்கும் ஸ்டூடண்ட்ஸ் கூட ப்ரோஜக்டர்ல கனெக்ட் பண்ணி ஆன்லைன்  வரவங்கள சேர்த்து அவங்களும் படிக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிவிடுவேன். அந்த சமயம் நேர்ல வரவங்க நிறையவும் ,ஆன்லைனில்  1,2 பேர் தான் படிச்சிட்டு இருந்தாங்க. இந்த கொரோனா பீரியட் ல முழுவதும் 100% ஆன்லைன் ஆகிவிட்டது.

ஆனால் கொரோனாவுக்கு பிறகு நேரில் வருகின்றவர்கள் எண்ணிக்கை ரொம்பவே கம்மி ஆகிவிட்டது. இப்ப வரவங்களும் ,டிராவல் செய்து வருவதற்கு யோசித்து கோயம்பத்தூரில் இருக்கவங்க கூட ஆன்லைன்ல படிக்கிறார்கள். ஒரு பேட்ச்சுக்கு 15 பேர்னா, 13பேர் ஆன்லைனில் தான் படிக்கிறார்கள். காலங்கள்,தேவைகள்,மாறமாற நாமளும் மாறிக் கொள்ள வேண்டியது தான்.

*பாதகங்களை, சாதகங்களாக மாற்றிக்கிறது நல்லது* என்று,எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாங்க.அது மாதிரி இப்ப நிறைய மாணவர்கள் வெளிநாடுகளிலிருந்தும் படிக்கிறாங்க. அதுல ஒரு பெரிய ஆன்லைன் பூம் கிடைத்தது .என் இன்ஸ்டிடியூட்டுக்கு என் கணவர் நல்லா உதவி செய்தார்கள்.கீழே வீடு மேல மாடில மிக அழகான  ஆர்க்கிடெக்ட் லேலைப்பாடு கொண்டு கட்டினார்கள், எங்க இன்ஸ்டிடியூட் படிப்பதற்கு ஏதுவாக  நல்ல அமைதியான இடமாக இருக்கும்.நுழைவாயிலில் ஒரு சரஸ்வதி சிலை வைத்திருக்கிறோம். 

எங்களது அகாடமியின் பெயர் *Bienvenue - The French Academy,* *கோவை* , கணபதியில் உள்ளது. எங்கள் இல்லம் தரைத்தளத்திலும், அகாடமி முதல் தளத்திலும் உள்ளது. என் கணவர் சிறந்த கலைநயத்துடன் கட்டிடக்கலை வல்லுனர்களைக் கொண்டு சிறப்பாக *உமையாள் ஆர்கிட்* மற்றும் *Bienvenueவை* அமைத்துள்ளார்கள்.

பொதுவாக ஒரு அயலக மொழியைக் கற்பது கடினம். ஆனால் எங்கள் அகெடமியில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல விதமான விளையாட்டுகள் வாயிலாக இந்தக் கற்கும் பயணத்தை எளிதாகவும் மகிழ்ச்சியுடனும் கடக்க ஏதுவாக இருக்கிறோம். எங்கள் Academy யின் Speciality « சிந்திக்க வைப்பதே!” Spoon feeding செய்வதில்லை. மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அவர்களுடைய துறையில் மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவது நிச்சயம்.

இந்த வகையில் பல மாணவர்களைச் சிந்திக்க வைப்பதால் பல முறை ஆண்டவனின் அனுக்கிரகத்தை உணர்ந்துள்ளேன்.

என்னிடம் நிறைய மாணவிகள் A1, A2 மற்றும் B1 என்ற மூன்று level களையும் படித்து பிரெஞ்சு ஆசிரியைகளாகப் பணியாற்றுகிறார்கள். என்னிடம் படித்த மாணவர்களின் reference மூலமாகவே எனக்கு புதிய மாணவர்களின் அறிமுகம் கிடைக்கிறது. Word of mouth என்று சொல்லக்கூடிய மாணவர்களின் கருத்தே பல சிகரங்களை எட்டச்செய்யும். நான்கு வருடங்களாக வெற்றி நடை போடுகிறது Bienvenue!  நானும் என் மகளும் மட்டுமே இங்கு ஆசிரியைகள். 

முதலில் என்னுடைய மாணவர்கள் நான்கு பேருக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.  ஆனால் அதில் சில சிரமங்கள் இருக்கவே இப்போது  நானும்  எனது மகளும் மட்டுமே கற்பிக்கிறோம். இம்மொழி பயில்வதால் France, Canada, Belgium, Africa மற்றும் Luxembourg போன்ற நாடுகளில் பணி புரியவோ அல்லது சுற்றுலாவின் போது  பிறருடன் பேசவோ மிகவும் உதவியாக இருக்கும்.

ஃப்ரெஞ்ச் பயின்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் அதிகம்.  இம் மொழியைக் கற்கும் போது international exposure கிடைக்கும். தன்னம்பிக்கை வளரும்.  60 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களை ஒரு செயலில் ஈடுபடுத்திக்கொள்ள ஏதுவாக உள்ளது. ஆர்வமொன்றே பிரதானம். படிக்க ஆரம்பித்த பின் விடுப்பு எடுக்காமல் வகுப்புக்கு வர வேண்டும். எதையும் அகலமாக உழாமல் ஆழமாக உழவேண்டும் என்று எங்கள் அப்பா சொல்வார்கள். B1 என்று சொல்லக்கூடிய மூன்றாவது லெவல் வரையுமாவது படிக்க வேண்டும்.

நஷ்டங்கள் என்று எதுவும் இல்லை. சில சமயங்களிள், Government policies மாறும் போது மாணவர்களின் registration குறையும். சில ஆண்டுகளுக்கு முன் UK வில் அயலக மாணவர்கள் சென்று படிக்க ஏதுவாக இல்லை, அந்த சமயத்தில் பிரான்ஸ் சென்ற மாணவர்கள் ஏராளம். தற்சமயம் Canada செல்பவர்கள் அதிகம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு ஆசிரியர்களுக்கான போட்டியில் நான் இந்திய அளவில் முதல் பரிசைப் பெற்றேன்.  எனது மாணவர்களின் இன்முகமே எனக்கு விலை மதிப்பற்ற விருது. என்னை ஈன்றெடுத்து  தன்னம்பிக்கை கொண்ட தைரியமான பெண்ணாக வளர்த்த என் தாய் தந்தைக்கும்  எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என் கணவருக்கும்  பொறுப்பான எங்கள் குழந்தைகளுக்கும் இந்த தருணத்தில்  எனது கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 

ஆமாம் பியான்வென்யூ ( Bienvenue ) என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ? “வரவேற்பு”  என்பதுதான். பல மாணவர்கள் இவரிடம் ஃப்ரெஞ்ச் கற்று வாழ்வில் உயர்நிலையை எய்தி உள்ளார்கள். புதிதான ஒரு மொழியைத் தன் திருமணத்துக்குப் பின்னும் பெரு முயற்சியோடு கற்று அதைப் பலருக்கும் கற்பித்துச் சிறந்த தன்னம்பிக்கையாளர்களை உருவாக்கி உள்ளார் மாலதி சுப்ரமண்யம்.  இன்னும் பலரை வரவேற்கவும் வ்ழிகாட்டவும் காத்திருக்கிறது இவரது பியான்வென்யூ - ஃப்ரெஞ்ச் அகாடமி.  இவரது சேவை சிறக்க நமது செட்டிநாடு இதழ் சார்பாக வாழ்த்தி வந்தோம்.  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...