யுவைடிஸ்
அடுப்படிப் பத்தியில் ஐயாவுக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டிருந்தாள் ஒமையா. அப்பத்தா இல்லாததால் ஐயா வீட்டில் தங்குவதில்லை. கிணற்றடிக் காளியம்மன் கோவில் பக்கம் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள் ஐயா. அங்கே நண்பர்களோடு அவ்வப்போது சீட்டுக் கச்சேரியும், அரட்டைகளும், தினசரிகள் பார்த்து அரசியல் அலசல்களும் நடக்கும். எப்போதும் எல்லாரும் சீட்டு விளையாடும் இடம் என்பதால் அதற்கு சங்கம் என்று பெயரிட்டு இருந்தார்கள் ஐயாவின் நண்பர்கள்.
கீழ்வாசலில் நின்று கண்ணைச் சுருக்கியபடி ”சீக்கிரம் கொடாத்தா “ என்று பரபரத்து கொண்டிருந்தார் சோமண்ணன்.
வெற்றிலை பொகையிலை போட்டுச் சிவந்திருந்த வாய்க்கு ஈடாக ராத் தூக்கமில்லாமல் செக்கச் செவேலனக் கிடந்தன சோமண்ணனின் கண்கள்.
எப்போது பார்த்தாலும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். மாநிறம்தான் என்றாலும் சூரியனை உலவ விட்டதுபோல் இரண்டு கண்ணும் ஜொலிக்கும். எல்லாருக்கும் வாய் சிரிக்கும் என்றால் சோமண்ணனுக்குக் கண்ணுதான் முதலில் சிரிக்கும். ஐயாவுக்கு அமையும் ஆட்களும் ஐயாவைப் போலவே.
ஐயாவின் கண்கள் போல சாந்தமானவை அண்ணனின் கண்களும். ஒற்றை நாடி சரீரம். லேசாய் வழுக்கை விழுந்த தலை. ஒரு ப்ளெயின் சட்டை, கட்டம்போட்ட லுங்கி இதுதான் அவர் அணிவது.