தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர்
அன்புள்ள மான்விழியே, இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால், நான் மலரோடு தனியாக, குயிலாக நானிருந்தென்ன, பார்வை ஒன்றே போதுமா, நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன ஆகியன அமைதியான காதலைச் சொல்லும் பாடல்கள் என்றால் பளிங்கினால் ஒரு மாளிகை எனக் குபீரெனப் பாயும் இசை வெள்ளமும் ஆங்கில நடிகைகள் போன்ற உடையலங்காரத்தில் சுழலும் விஜயலலிதாவின் நடனமும் இன்ப லாகிரியில் ஆழ்த்தும். மெர்மெய்ட் போன்று அவர் ஆடும் ஆட்டத்தில் தூண்டிலில் சிக்கிய மீனின் நிலைதான் ரசிகர்களின் நிலையும். ஜெய்சங்கரின் ஸ்மார்ட்டான ஸ்டைலும் கூட அசத்தல்தான்.
ஜூலை 12, 1938 இல் சுப்ரமணியன், யோகாம்பா இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் சங்கர். இவர் புதுக்கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்தவர். தந்தை வக்கீல். மகன்கள் இருவரையும் டாக்டர் ஆக்கியுள்ளார். ஆனால் இவர் தேர்ந்தெடுத்ததோ நடிப்புத்துறை. முதலில் சோவின் நாடகக்குழுவிலும் அதன்பின் கூத்தபிரானின் நாடகக் குழுவிலும் நடித்து வந்தார். ஜோஸப் தளியன் என்ற இயக்குநர் இரவும் பகலும் என்ற சினிமாவுக்காக இவர் பெயருடன் ஜெய் சேர்த்து ஜெய்சங்கர் என்று அறிமுகப்படுத்தினாராம்.