*நகரத்தார் பெண் சாதனையாளர்கள்*
சமீபத்தில் வாசித்த *`இப்படியும் சாதிக்கலாம்: நகரத்தார் பெண் தொழிலதிபர்களின் பேட்டிகள்”* மூலம் நகரத்தார் சமூகப் பெண்களில் வெற்றிக் கொடி நாட்டிய 17 ஆச்சிமார்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இது போல இந்த சிறிய சமூகத்தைத் சேர்ந்த பல பேர் உலகெங்கும் வியாபித்து இருக்கலாம். அதையும் இந்நூலாசிரியர் தேனம்மை லெட்சுமணன் ஆவணப்படுத்த வேண்டும்.
`விடாமுயற்சியே வெற்றி தரும்’ எனச் சொல்லும் மணிமேகலை சரவணனிலிருந்து `பேருந்தில் சாதனை’ நிகழ்த்திய இராமகிரி சுப்பையா வரை 17 ஆச்சிமார்களின் வெற்றிக் கதை இந்நூலில் கட்டுரை வடிவில் இடம் பெற்றிருக்கிறது. நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஆச்சிகள் பல துறைகளிலும் – கார்பொரேட், மருத்துவம், மசாலா பொருள்கள் விற்பனை, கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பு, பொட்டீக், இசையுரை, நடனம், நகரத்தார்களின் பெயர் சொல்லும் பாரம்பரிய கட்டிடக்கலைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, கல்வி நிறுவனம் மேலாண்மை, ஆக்ஸிஜன் தொழிற்சாலை, பதிப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் என பல துறைகளிலும் கோலோட்சி வருவதைப் பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது.