பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. நன்றி ஜெர்மானிய தமிழ்ச்சங்கம், பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம், கந்தையா முருகதாசன் சார், சுப்ரமணியம் பாக்கியநாதன் சார், விமலசேகரன் சபேசன் சார் .
சூலம்.
சூலம்.
குலதெய்வம் கோயிலில் புரவி எடுப்பில் செல்லும் குதிரைகளைப்
பார்த்தபடி நின்றிருந்த மேகலா அதிர்ந்த கைபேசியை எடுத்துப் பேசி அதிர்ச்சியானாள். அவளது
அப்பா மாரியப்பன் யாரும் இல்லாத வீட்டில் முதல் நாள் இரவு இறந்த செய்தியை, இறந்த விதத்தை
அதிர்ச்சியோடு பகிர்ந்திருந்தாள் அவளது அத்தை மோகனா.
பக்கத்தில் நின்றிருந்த தனது அம்மா தேவியைப் பதட்டத்தோடு
பார்த்த மேகலா , ”அம்மா ஒரே கூட்டமா இருக்கு. சீக்கிரம் போகலாம் வா, போகலாம் ” என்றாள்.
”இருடி சாமி உள்ளே போன பின்னாடி அருச்சனை பண்ணிட்டுப் போகலாம் “ என்றாள்.
”இல்லம்மா பின்னாடி கூட்டம் சாஸ்தியாயிடும் இன்னொருநாள் வரலாம்.
வா” என்றாள். “அடி இவளே. வெளக்கு வைக்கும்போது உருண்டிருச்சு , அதுனால தீவம் பார்த்துட்டுத்தான்
போகணும் “ என அம்மா பிடிவாதம் பிடிக்க, ”இல்லம்மா அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாம்
அதான் அத்த போன் பண்ணிச்சு , உடனே போவோம்மா என அவளைக் கிளப்புவதிலேயே குறியாயிருந்தாள்
மேகலா. ஐஸ் வண்டிகளும், மாங்காய் பத்தைகளும் எலந்தை வடைகளும் மணம் கிளப்பிக் கொண்டிருக்க
பலூனைப் பிடித்தபடி குழந்தைகளும் முறைப்பெண்களைச் சுற்றியபடி இளவட்டங்களுமாக கலகலப்பாக
இருந்தது முத்துப்பிடாரி அம்மன் கோயில் புரவி எடுப்பு. சாமியாட்டத்தோடு கொடிகளும் குடைகளும்
சூழ ஆரம்பித்திருந்தது திருவிழா.


