எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

அலைகளும் கடலும்..அலைகளும் கடலும்
=================================

தோட்டத்தைச் சீர்படுத்தித் தண்ணீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். அவள் கையில் புத்தகங்களை இறுக்கப்பிடித்து இடுப்பில் சாத்திக்கொண்டு நடந்து கொண்டு இருந்தாள்., மனதில் அவனைப் பற்றிய சிந்தனைகளுடன். 

அவன் யார்..? உங்களுக்குத் தெரிய வேண்டாம். ஏனெனில் அவளுக்கே தெரியாது. ஆனால் அவன் அவளுக்குப் பிடித்தமானவன்.

வித்யாசமாய் வலதுபக்கம் வகிடெடுத்துத் தலைவாரி பல்வரிசையை விளம்பரமாக்கிக் கொண்டிருப்பவன். புன்னகைத்தால் கண்ணும் கூடவே புன்னகைக்கும். வாய்விட்டுச் சிரித்தால் கண் சொருகிக் கொள்வது போல் மயங்கும். ஆர்வமுள்ளவன்.. துடிப்பானவன்.

“கடலின் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத் தாண்டுமோ வேறு தரையைத் தீண்டுமோ ..?” என்று கண்ணுள்ளும் மனசுள்ளும் காதுள்ளும் புதுந்து பாடிப் போனவன். பரவஸிக்க வைத்துக் கண்ணில் நீரைத் துளிர்க்க வைத்தவன்.

ஊஹூம் . இது எக்கனாமிக்ஸ் க்ளாஸ். மிஸ் ரோஸாலி கண் கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பாடத்தைக் கவனிக்க வேண்டும். “ பாடம் கவனித்தாள்.

அந்தத் தோட்டக்காரர் பாத்திகளைக் கொத்திவிட்டு, பார்டர் கட்டியிருந்த சவுக்கைச் செடிகளை அளவாய் வெட்ட ஆரம்பித்திருந்தார். கிராஃப் வெட்டிய பையனைப் போல அவை சிணுங்கிக் கொண்டு நிற்பது மாதிரித் தோன்றியது அவளுக்கு.

அந்த அவன் மெல்ல வந்து மனசுள் எட்டிப் பாத்து மெல்லப் புன்னகைத்தான். அவளும் பதிலுக்கு சின்னதாக முறுவலித்தாள்.

மிஸ் ரோஸாலி கண்ணுக்கெதிரே வந்து அவசர அவசரமாய் அபிநயம் பிடித்தாள். இவள் ஒன்றும் புரியாமல் எழுந்து நின்றாள். “ அரை மணி நேரமாக உன்னைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. ? நீ பாட்டுக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறாயே.. என்ன விஷயம். ? வீட்டில் வைத்து இரண்டு பட முடியாது என்று இங்கே தள்ளி விடுகிறார்கள். எங்கள் பாடு அவஸ்தை. “ மிஸ் எண்ணையில்லாமலே பொறிந்தார். இவள் மனசுள்ளும் வருத்தமாயிருந்தது மிஸ்ஸிடம் கெட்ட பெயர் வாங்கிவிட்டோமேயென்று.


பிரேயர் பெல் அடித்தது. எழுந்து பிரேயருக்காக மௌனமாய் நிற்கும்போது எல்லார் முன்னும் அவமானப்பட்டுவிட்ட நினைவு உறுத்தியது. விழிகளின் கடையோரங்களில் நீர்த்துளி லேசாய்க் கூடுகட்ட ஆரம்பித்தது. பிரேயர் டைம் முடிந்து மறுபெல் அடித்த போது பொட்டென்று நீர்த்துளிகள் மேஜைக்குப் பொட்டு வைத்தன. அவன் மெல்ல வந்து , சின்னச் சின்னக் காரணத்தால் கன்னம் அதில் நீர்த் துளிகள். என்னை மட்டும் புரிந்து கொண்டால அத்தனையும் தேன் துளிகள்..” என்று பாடினான்.

கோபமாக வந்தது அவன் மீது. எரிச்சலாய் கண்ணுள் படிந்த அவன் உருவத்தைக் கண்ணீருடன் தள்ளிவிட்டாள். “ ஹல்லோ கன்கிராஜுலேஷன்ஸ். கவிதைப் போட்டியில் முதற்பரிசு உங்களுக்குத்தானாமே.” அவன்.. அவன்.. அவளுடன்தான் பேசியிருக்கிறான். பஸ்ஸின் குலுங்கல்களில், சப்தங்களில் அவன்தான் கேட்டானா என்று சந்தேகமாயிருந்தது. அவள் முகம் சிவந்து சங்கோஜப்பட்டாள். எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை. இவள் தலையைக் குனிந்து கொண்டபோது மறுபடியும் கூறினான். ., “ கங்கிராஜுலேஷன்ஸ்.. “ என்று. இவள் , “ தாங்க்ஸ்” என்றாள். 

“கட்டுரைப் போட்டியிலும் இரண்டாவது நீங்கள்தானாமே.. ? ஒரு ஸ்வீட் கிடையாதா..?”

இவளுக்கு நிமிர்ந்து பார்க்கவே பயம். அவன் கூ ஆங்கிலக் கவிதைப் போட்டியில் முதலாக வந்திருக்கிறானாம். தன்னால் அவனைப் போல வாழ்த்துக் கூ , இனிப்புக் கேட்க முடியுமோ..? விமன்ஸ் ஹாஸ்டல் வந்துவிட்டது. அவளின் பதிலுக்காய் அவன் நிற்க , அவள் இறங்கினாள்.

இவள் நிறையத்தடவை கவிதை எழுதினாள். போட்டிகளில் கலந்துகொண்டாள். முதல் பரிசு வாங்கினாள். அவனும் சளைக்காமல் பாராட்டினான். மெல்ல மெல்ல நத்தை கூட்டில் நுழைத்துக் கொண்டிருந்த தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தது. அடிக்கடி லேசாய்ச் சுருங்கியும் கொண்டது.

ஒரு நாள் வாசினி அவனுடன் கலகலப்பாய்ப் பேசிக்கொண்டே போனாள். தனக்கு லேசாய் எரிச்சல் ஏற்பட்டதை அறிந்து  இவளுள் வியப்பேற்பட்டது. 

அன்றைக்கு இராத்திரி இவள் அவன் சந்தனக் கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு பார்க் போய் வந்தாள். அவனும் இவளும் மொட்டைமாடியில்  நிலாவேளையில் அமர்ந்து பேசினார்கள். பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள். அவன் அவள் கையால் பிசைந்து போட்டால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்க இவள் பிகுபண்ணிவிட்டு ஊட்டி விட்டாள். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு வேக வேகமாய் அவனுக்காய்க் காப்பி போட்டுக் கொண்டிருக்கையில் ஆர்த்ி எழுந்து “ என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்து உருட்டுறே.. டெஸ்டா… ? “ எனக் கேட்கும்போதுதான் தன் முட்டாள்த்தனம் அவள் மூளையில் உறைத்தது.

அன்று கடைசி எக்ஸாம். திருப்பியும் அவள் அந்த ஒட்டாத சித்தியிடமும் பிடிக்காத பங்களாவுக்கும் போகவேண்டும். பணக்காரக் குரோட்டன்ஸுகளுடந்தான் பேசிக் கொண்டிருக்கமுடியும். அவள் ஹாஸ்டலிலேயே இருந்துவிட்டால் கூட சந்தோஷப்படுவாள் சித்தி.

இன்று மத்தியானம் காண்டீன் அருகில் மகிழ மரத்திக்கு வரச் சொல்லியிருந்தான் அவன். ஆயிரத்தெட்டு ஆலோசனைகளின்பின் புறப்பட்டாள் அவள். காண்டீனைச் சுற்றி வளைவில் திரும்பியபோது வாசினி வெடித்துக் கொண்டிருந்தாள். “இத்தனை நாள் பழகிட்டு நம்முடைய நட்பு. அது, இதுன்னு போலிப் போர்வை போர்த்தறே.. இல்லே. ஃப்ரெண்ட்ஷிப்பாம் மண்ணாங்கட்டி.. இதுக்குக் கவிதை ஒரு கேடு.. “ அந்தத் தாள்களை ( அவன் கொடுத்தது ) கிழித்துப் போட்டாள் அவன்முன். ‘ டாக்குக் டாக் ‘ என்று குதிரை மாதிரி கண் மண் தெரியாமல் இவள் மேல் மோதிவிட்டு, உறுத்து விழித்துவிட்டுச் சென்றாள் வாசினி.

அவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. இவள் திரும்பி நடந்தாள், அவன் நல்ல மூடில் இல்லையென்று. அவன் திரும்ப இவளை அழைத்து, “ மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடியென்பது சரிதான். அவள் ஒரு பக்கம் சொல்லால் அடிச்சிட்டுப் போறாள். மறுபக்கம் நீ சொல்லாம அடிச்சிட்டுப் போறே.’” என்றான். இவளுக்குக் கஷ்டமாயிருந்தது. 

நினைத்ததை எல்லாம் சொல்லிவிட முடியுமா.. முடிந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே..? ஹூம்.. வேண்டாம். வேண்டாம்.. அப்புறம் இவன் ‘ நம் புனிதமான நட்பு ‘ என்று ஏதாவது பேத்த ஆரம்பித்துப் ’பிரியாவிடை’ கூறினானானால் அப்போது வாசினியை விடத் தன் நிலை மோசமாயிருக்கும் என்று பயப்பட்டாள்.

இவளுக்குப் பொறாமையாய் வந்தது. வாசினியுடன் இவ்வளவு தூரம் பழகிவிட்டு அவளை உதறித் தள்ளிவிட்ட இவன் தன்னை என்ன சொல்லப் போகிறான்.? தன்னுள்ளத்தைத் தெரிந்து கொண்டால் என்ன நினைப்பானோ..?

“உயர்ந்த ஃப்ரெண்ட்ஷிப்பெல்லாம் காதலாவே இருக்கணும்னு அர்த்தமில்லையே.. எண்ணங்களைப்  பகிர்ந்துக்குறதுக்கு, சிந்தனைகளை விரிவாக்கிக்கிறதுக்கு எவ்வளவு உயர்ந்த வழி ஃப்ரெண்ட்ஷிப். இவ்வளவு நாள் திருப்தியையும் சந்தோஷத்தையும் என்ன ஒரு உன்னதமான நட்புன்னு நான் பெருமைப்பட்டதையும் ஒரு நொடியிலே குரூரமாய் என் நெஞ்சிலேருந்து பிச்செறிஞ்சுட்டுப் போறா பாரு. விகல்பமே இல்லாமல் இருந்தவ விரசமாய்ச் சொல்லிட்டுப் போறா..” என்றவன்  கூறக் கூற இவளுக்குக் கூட எரிச்சல் ஏற்பட்டது.

தன் மௌனத்தை உடைத்து அவள், “என்னிடமும் ஃப்ரெண்ட்ஷிப்தானே..? “ என்று தயக்கமாய், அதற்கு எதிர்மறையாய் பதில் வர வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கேட்டாள். அவன் சொன்னான், “ஆமாம் “ என்று. 

அவனே எதிர்பாராத அளவில் அவள் பொடிப்பொடியாக உதிர்ந்து அழுதாள். அவள் மனசுள் இருந்த கற்பனைகள், கனவுகள் தங்கள் இறக்கைகளை முறித்துக் கொண்டன.

அவன் மறுபடியும் அவள் கையைப் பிடித்துச் சொன்னான். “ ஆமாம் என்று யார் சொன்னது..?” என்று அந்த “ யார் சொன்னது” க்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னான். அவள் கனவில் விழித்தவள் போல் திகைத்தாள்.

அவன் அவள் கூந்தலை அளைந்து கொண்டே “ சின்னச் சின்னக் காரணத்தால் கன்னம் அதில் நீர்த்துளிகள். என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன் துளிகள். கடலின் அலைகள் பொங்கும்.. ஆனால் கரையைத் தாண்டுமோ.. வேறு தரையைத் தீண்டுமோ..? “ என்று நிஜமாக அவளுக்காக மட்டும் பாடிக் கொண்டிருந்தான். மகிழம்பூக்கள் வேகக்காற்றில் அவர்கள் மீது சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டேயிருந்தன.

கடைசியாக மூன்றே மூன்று வார்த்தைகளை அவளின் காது மடல்களுக்குள் பொரித்தான். “ ஐ லவ் யூ ..”

டிஸ்கி :- 1984 டைரியிலிருந்து.

4 கருத்துகள்:

 1. சுவையான காதல் கதையில் இனிமையான பாடல் ஒன்று!

  பதிலளிநீக்கு
 2. மிகவும் சுவையோ சுவையானதோர் காதல் கதை. ரஸிக்கும் படியான பாடல் வரிகள். சின்னச்சின்ன சிங்கார சம்பவங்களுடன், கதையை நகர்த்தியவிதமும் அழகோ அழகு.

  // தன்னால் அவனைப் போல வாழ்த்துக் கூற, இனிப்புக் கேட்க முடியுமோ..? //

  மிகவும் யதார்த்தமான நியாயமான வரிகள்.

  //அவள் பொடிப்பொடியாக உதிர்ந்து அழுதாள். அவள் மனசுள் இருந்த கற்பனைகள், கனவுகள் தங்கள் இறக்கைகளை முறித்துக் கொண்டன.//

  பெண்களுக்கே உரித்தான மென்மையான உணர்வுகள். :)

  கதை முடிவு ஸ்வீட்டோ ஸ்வீட். மனம் நிறைந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஸ்ரீராம்

  மிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி கோபால் சார்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...