எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.

கூவமே சுத்தமாயிடுச்சு. ஆனா சென்னைதான் குப்பையாயிடுச்சு அந்த அளவு கூவமும் சென்னையும் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்து விட்டது. இந்தத் திங்களன்று பெய்த மழையில் சென்னை ஒரு திகிலூட்டும் வெனிஸ் நகரமாகிவிட்டது. கல் எது மண் எது ரோடு எது சாக்கடைக் குழி எது எனத் தெரியாமல் மாட்டி வேலைக்குச் சென்ற கணவனோ பிள்ளைகளோ வீடு மீள்வதற்குள் ஒவ்வொரு  மனைவிக்கும் தாய்க்கும் தகப்பனுக்கும் ஏற்பட்ட துயரம் சொல்லில் சொல்லி  மாளாது. அன்றிரவு சிலர் இரவு இரண்டு மணிக்குத்தான் வீடு போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.


பேருந்துகளிலும் மகிழுந்துகளிலும் மாட்டிக் கொண்டவர்கள் பாடு தனி என்றால் நடைபாதை குடியிருப்புவாசிகள் எங்கே ஜீவித்திருக்கக் கூடும். வெள்ள நிவாரணங்கள் கிடைக்கவில்லை என ஒரு பக்கம் கூக்குரல் இருக்க வெள்ளம் வந்த அன்று வீட்டை அடையமுடியாமல் பசியும் தாகமுமாய் இயற்கை உபாதைகளையும் பொறுத்துகொண்டு தவித்த நகரவாசிகளை என்ன சொல்வது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றா. வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று கொண்டுவரும் புயலும் மழையும் நகர்ப்புற வாசிகளுக்கு கூரையின் உச்சியில் வாழ்வு கொடுக்கும், கிராமங்களில் கூரையைப் பிய்த்துக் கொண்டும் வாழ்வு கெடுக்கும். 

வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீருடன் அகதிகளைப் போல மூட்டை முடிச்சுகளுடன் இந்தத் திங்கட் கிழமையும் வாழ நேர்ந்த கொடுமையை சென்னைவாசிகளே பெருமளவும் அறிவர். உள்ளே கழிவு நீரும் பூச்சிகளும் பூரான்களும் சாக்கடையும் மிதக்க இரவு முழுக்க மின்சாரமுமில்லாமல் தூக்கமாவது ஒண்ணாவது. வாழ்தல் கொடுமை என உணரவைத்த இரவு இந்த டிசம்பர் ஒன்றாகத்தான் இருக்கும். மழைக்கு யாகம் செய்தது போக மழை வேண்டாம் என்று அனைவரும் ப்ரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.அன்றன்றையப் பொழுதை அன்றன்றே கடக்காமல் மழை வருமுன்னே என்னென்ன முன்னேற்பாடுகள் செய்திருக்கலாம் எனப் பார்க்கலாம். வலசைப் பறவைகள் இதற்கான முன்னறிவிப்பை செய்வதாகக் கூறுகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூடுகட்டும் விதத்தைப் பார்த்தே மழையின் அளவைக் கண்டுபிடித்துவிடலாமாம். வேடந்தாங்கல் போன்ற இந்தியாவில் இருக்கும் பதிமூன்று பறவைச் சரணாலயங்களில் வலசைப் பறவைகள் இந்த ஆண்டு மரங்களின் உச்சியில் கூடுகட்டி இருக்கின்றன. மரங்களின் உச்சியில் கூடு கட்டினால் அதிக மழை பெய்யும் என்றும் மரங்களின் மத்தியப் பகுதியில் கூடுகட்டினால் குறைவாகப் பெய்யும் எனவும் பறவை ஆர்வலர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த வருடம் இயல்பை விட இருமடங்கு மழை அதிகம்தான். கரையோரப் பகுதி மக்களைப் போல, வட இந்திய நகரங்களைப் போல தமிழகத்தின் நகர்ப்புறவாசிகளுக்கும் வெள்ள அபாய அறிவிப்பு செய்யவேண்டிய கட்டத்தில் வாழ்கிறோம். இத்தனைக்கும் தென் தமிழ்நாட்டு நகரங்களான மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களில் அவ்வளவு மழை இல்லை.


கடற்கரையோர மாவட்டங்களில் வருடந்தோறும் மழை வந்து மக்கட்பலி கொள்வதும் இயற்கைச் சீற்றத்தில் பயிர்நிலங்கள் வெள்ளச்சகதியால் மாள்வதும் தொடர்கிறது. மாநகரங்களில் மழை நீர் சேகரிப்பு இல்லை. அதற்குப் பதிலாக மொட்டை மாடிகளிலிருந்து விழும் மழை நீர் சாக்கடைகளில் கலக்கிறது. உரியமுறைப்படி மழை நீர் சேகரிப்பு ஒவ்வொரு கட்டிடத்திலும் செய்யப்பட்டிருந்தாலே இம்மழைக்கு மழை நீரும் வடிந்திருக்கும் வெள்ள அபாயமும் இருந்திருக்காது. இதை மழை நீர் சேமிப்புத் திட்டத்தின் ஆலோசகர் சேகர் ராகவன் முன் மொழிந்து செயல்படுத்தி இருக்கிறார். இதைச் செயல்படுத்தாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி போர்போட்டு விடுகிறோம். இதனால் கடல் நீரும் நிலத்தில் ஊடுருவி உப்பு நீராக மாறும் அபாயத்திலும் இருக்கிறோம்.


இவ்வாறு முறைப்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையினால் அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டாம். அதிகப்படி என அணையைத் திறந்துவிடவும் வேண்டாம். முன்பு மழை பெய்தால் அது குளம் ஏரி வாய்க்கால் போன்றவற்றிக்கு மாற்றிப் பாய்வது போல போக்குவரத்துக் கால்வாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் வழியும் நீர் குளத்திலும் ஏரிகளில் பெருகும் நீரும் கண்மாயிலும் கலப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். நீர் செல்லும் பாதைகளை மறித்தும் மறைத்தும் கட்டிடங்கள் கட்டியதனாலும் நீர் போகும், மீளும் வழியற்று விழுந்த இடத்திலேயே தேங்கி விடுகிறது.


பெருகிவரும் பெருநகரத்தின் தேவை பொருட்டு மந்தைவெளி போன்ற மேய்ச்சல் நிலங்களும் நீர்ப்பிடிப்புத் தளங்களும் கட்டிடக்காடுகளாகி விட்டன. நீராதாரங்களைச் சீர்குலைத்ததே இம்மாதிரி சீர்கேட்டுக்குக் காரணம். ஏரிகள் குளங்கள் சதுப்பு நிலங்கள் இருந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்து ரியல் எஸ்டேட்காரர்கள் துண்டாடி ப்ளாட்டுகள் போட்டதன் விளைவை இன்று பெருநகரவாசிகள் அறுவடை செய்கிறார்கள் எனச் சொல்லலாம். நீர்ப் பிடிப்புத் தளங்கள், தாழ்வான இடங்களில் அமைக்கப்பட்ட கட்டிடங்களை ஒன்றும் செய்ய இயலாவிட்டாலும்  இனி மிச்சமிருக்கும் ஏரிகளையும் குளங்களையும், கண்மாய்களையும் வாய்க்கால்களையும் மிச்சமுள்ள நீர்ப் பிடிப்புத் தளங்களையும் கோவில்களில் இருக்கும் புஷ்கரணிகளையும் தூர்வாரிச் சீராக்கினால் மழை நீரால் சிக்கல் எழாது.


முறைப்படுத்தப்படாத மழை மேலாண்மையினால் பரவிக் கிடக்கும் ப்ளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் மழைநீர் உய்ய கொசுக்கள் உற்பத்தி, பன்றிகளின் அலைச்சல், தொற்றுநோய்கள் தொற்றும் அபாயம். அதனால் குடிநீரில் கான்சரும் தலைச்சுற்றலும் வரும் அளவு க்ளோரினின் அதிகரிப்பு , பள்ளிகளும் நீரால் சூழப்பட்டிருப்பதால் விடுமுறையின் பொருட்டு குழந்தைகளின் கல்வி பாதிப்பு, அலுவல் நிமித்தம் செல்வோருக்கும் இடையூறுகள், அதிகப்படியான நீரை வெளியேற்ற அணைத்திறப்பு, தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு ஆபத்து, விருட்சங்களின் வீழ்ச்சி, வாரக்கணக்கில் மின்சாரம் இல்லாமலிருத்தல், மனித வளம் இழப்பு, மனிதர்கள் இழப்பு, இயற்கைக் கருவூலங்கள் பயிர்கள் இழப்பு, வெள்ளச் சேதம் ஆகியன தொடர்கதையாகின்றன.

மழை பற்றிய முன்னறிவிப்பும் முன்னேற்பாடும், கட்டிடங்களில் முறைப்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பும், நீராதாரங்களின் பராமரிப்பும், நீர்ப் போக்குவரத்துக் கால்வாய்களைச் செப்பனிடுவதாலும் விசுவரூபமெடுத்திருக்கும் மழையை அகத்தியர் கமண்டலம் போல அடக்கலாம். நாம் சிறுவர்களாக இருந்தபோது ரசிப்பதற்கு உரியதாக இருந்த மழை, சின்னஞ்சிறு குடைக்குள் அடங்கிய மழை மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று ஆனந்திக்கக் கூடியதாகத்தான் இருந்திருக்கின்றது என்பதை நினைவில் கொள்வோம்.


டிஸ்கி:- சென்ற மாதம் ஒரு பத்ரிக்கைகாக எழுதியது. தொடர்மழையும் வெள்ளமும்  இதை ப்ரிண்டில் வரவிடாமல் செய்துவிட்டது.


7 கருத்துகள்:

 1. சரியாய்ச் சொன்னீர்கள். கைவிளக்கின் தேவை தெரிவது இருட்டில் தொலைந்த பின் தானே.

  பதிலளிநீக்கு
 2. பத்திரிக்கையில் வந்திருந்தால் நான் படித்திருக்க இயலாது. என்ன .... எல்லாம் விளங்கியது போல் இருந்தாலும் நம் மக்கள் திருந்துவார்களா என்பது சந்தேகமே. ஏரிப்படுகைகளில் கட்டப்படும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளை மக்கள் தேர்ந்தெடுக்காமல் இருக்க மாட்டார்கள் அடுத்த மழையில் மேலே ஏறி தாக்குப் பிடிக்கலாமே

  பதிலளிநீக்கு
 3. ’மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்ற தலைப்பினில் மிக அருமையான, விழிப்புணர்வு ஊட்டிடும் கருத்துக்களை, மழையெனப் பொழிந்துதான் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கட்டுரை சகோ. ஆனால் நம் மக்கள் திருந்தப்போவதில்லை...அரசும் திருந்தப் போவதில்லை அதுதான் தமிழகத்தின் தலைவிதி. மற்ற மாநிலங்கள் எல்லாம் விழிப்புணர்வில் தங்கள் ஏரிகளையும், குளங்களையும் காக்கத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன...தமிழகம்???!!

  பதிலளிநீக்கு
 5. ஆம் சகி கருத்துக்கு நன்றி

  ஆம் பாலா சார் உண்மைதான்.

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி கோபால் சார்

  நன்றி துளசி சகோ :) அதுதான் தெரியல.. ஹ்ம்ம் தமிழகம்..

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...