செவ்வாய், 25 ஜூலை, 2017

வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை.வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை.

ஐம்பெரும் காப்பியங்களுள் முழுமையாகக் கிட்டாதவை வளையாபதியும் குண்டலகேசியும். வளையாபதியில் மொத்தமே 72 பாடல்களும், குண்டலகேசியில் மொத்தமே 19 பாடல்களும் கிடைத்துள்ளன.

இவை இரண்டும் காணாமல் போன காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன. கிடைத்த பாடல்களிலும் வளையாபதி, குண்டலகேசிக்குச் சொல்லப்படும் கதையின் குறிப்பாக ஒரு பாடல் கூட இல்லை.

சமண மதத்தின் குறிப்புகள் வளையாபதியிலும் , பௌத்த மதத்தின் குறிப்புகள் குண்டலகேசியிலும் காணப்படுகின்றன. அறிவன் அடி - அருகக்கடவுள் அடி போற்றி என்ற இறைவணக்கப்பாடல் சமணத்தைக் குறிப்பதாகவும், இறைவன் அவன் தாள் சரண் நாங்களே - புத்தபகவான் திருவடி சரணம் என்பதாக வரும்பாடல் பௌத்தத்தைக் குறிப்பதாகவும் சுட்டுகிறார்கள். 

வளையாபதியின் கதை என்று எடுத்துக் கொண்டால் புகார் என்னும் நகரில் வாழ்ந்த நவகோடி நாராயணன் என்னும் வணிகனும் அவனது இருதார மண வாழ்க்கை, ஊர்க்கட்டுப்பாட்டுக்காக இரண்டாவது மனைவியை விலக்கி வைத்தல் அதன் பின்  இரண்டாம் தாரம், மகனுடன் அவர்கள் நிலைபெற்றதும் சேர்த்துக் கொள்வது போன்றவைதாம்.இவை இரண்டின் காலமும் ஏழாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள். காளியை வணங்குவதாகச் சொல்லும் இக்கதையில் காளி பற்றிய குறிப்பு எங்குமே இல்லை ! 

குண்டலகேசியின் கதையில் வணிகர்குலப் பெண்ணான குண்டலகேசியின் ( சுருண்ட கேசம் உடையவள்) கணவன் காளன். களவுத்தொழில் புரிபவன். மனைவியை அழித்து அவள் செல்வத்தை வஞ்சனையால் அவன் அபகரிக்க நினைக்க அவளோ அவன் திட்டத்தை செயல்படுத்தித் தான் தப்பிக்கிறாள். அதன்பின் தலைமுடி மழித்துக் காவியுடை அணிந்து உஞ்சை மாநகரிலிருந்த அருக்கச்சந்திரன் என்பவரிடம் ஞான உபதேசம் பெற்று பௌத்தத் துறவியாகிப் பலருடன் வாதம் புரிந்து வென்று பின் முக்தியடைந்தாளாம்.வளையாபதியில் அநேகப் பாடல்கள் அரசவாழ்வின் அநித்தியம், மானிடப் பிறப்பின் மகத்துவம், பெண்ணின் பெருமை, ஆடவர்க்கும் கற்பு நிலை, பிறன் மனை விரும்பாப் பேராண்மை, இல்லாதவரை எல்லாரும் இகழ்வார் மனைவி மக்களும் மதியார் எனப்பகன்றாலும் பல பாடல்கள் மனம் மாறும் பெண்கள் பற்றியும், கற்பில்லாப் பெண்கள் பற்றியும்  கணிகையர், அவர்தம் தாய் கூற்றாக ஆணை வஞ்சித்துப் பொருளைக் கைக்கொள்ள வழி கோலுதல், என்பனவும் பாடப்பட்டுள்ளன. மனை நலம் , மனைவி நலம், நன்மக்கட்பேறு, பசிப்பிணி போக்குதல், அருளே பொருள், எவ்வுயிர்க்கும் அன்பு செய்தல், தவத்தின் அடையாளம், பிறர்க்குதவி செய்தல், மூத்தோர் சொல் அமுதம், இல்லற வாழ்வே இனியது   ஆகிய பொதுமையான பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன. 

பொய், புறம் கூறாதிருத்தல், அல்லன செய்யாதிருத்தல், கொலை, களவு, காமம் கொள்ளாதிருத்தல், உயிர்க்கொலை தவிர்த்தல், செல்வத்தின் நிலையாமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. 

இதில் சிலம்பில் வரும் பாசாண்ட சாத்தன் பற்றியும் ஒரு பாடல் வருகிறத.

“பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான் “

தொண்ணூற்று ஆறு வகையான தருக்க நூல்களிலும் துறைபோகு வித்தகனாகிய பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் விண்வழியே செல்லும் இசை பொழிவதில் வல்லவர்களாகிய கந்தர்வர்களைக் கண்டு பெரிதாகச் சிரித்தான் என்று கூறப்பட்டுள்ளது. !

குண்டலகேசியிலும் மெய்த்தவம், நல்லன எல்லாம் தரும், வாழ்வின் சிறப்பு, நடப்பது நடந்தே தீரும் .வாழ்க்கை விதி வழியே, செய்த வினை வழியே என்று பாடுபொருள் இருந்தாலும் காமம் தவிர்ப்பது பற்றியும் இறப்புப் பற்றியும் பாடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பருவமும் முடியும்போது ( குழந்தை, காளை, பேரிளம் பருவம் ) அதன் இறப்பு ஏற்படுகிறது. அதற்கு வருந்தாத மானிடர் முடிவில் முதுமை நோய் பிணியால் ஏற்படும் இறப்பிற்காக வருதுவது பேதமை என்று கூறியது யோசிக்க வைத்தது. 

மேலும் ஒன்பது வாயில் ஊத்தைச் சடலம் இது, நாய் கழுகுக்கு இறையாகும் நாற்ற உடம்பு, புன்புலால் யாக்கை, மனித உடம்பும் மண்ணுக்குத்தான் சொந்தம் என யாக்கையின் நிலையாமையைப் போதித்தது. 

அரசனைப் போற்றும் ஓரிரு பாடல்களும் உண்டு. புத்த தேவனைப் போன்ற புகழோன் என்றும் கற்றவர் போற்றும் காவலன் என்றும் புகழ்கின்றன பாடல்கள். 

பிற்சேர்க்கையாகச் சில பதிப்புகளில் காணப்படும் குண்டலகேசி கூற்றாகக் காணப்படும் பாடலில் அவள் புத்தமதத்தைத் தழுவியதும் ( பத்தா ) அதற்கு உதவும் ( சீவரம் கொடுக்கும் ) மாந்தர் நீடு வாழ்ந்து முக்தியை அடைய அவள் வழங்கும் ஆசியும் பாட்டாகி உள்ளன. 

எல்லாப் பாடல்களையும்  ஞா. மாணிக்கவாசகன் சிறப்பாகவே அருஞ்சொற்பொருள் பதம் பிரித்து விளக்கியுள்ளார். அளவில் சிறிய நூல்கள் என்றாலும் கருத்துப் பேழையாகக் கவிதைப் பெட்டகமாக இவை திகழ்கின்றன என்று இதன் பதிப்பாளர் உமாபதிப்பக இராமலெட்சுமணன் பாராட்டி உள்ளார். 

குடத்தேனில் படித்தேனாகப் படித்தேனில் சில துளித்தேனாகப் படிப்பவர் நினைவில், உணர்வில், உயிரில், தித்திப்புச் சுவையூட்ட வல்லன என்பது நிராகரிக்கமுடியாத உண்மை என்று ஆசிரியர் கூறுகிறார். !

வித்யாசமாக இருந்தாலும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 

உயிர்க்கொலையும் உணர்வுக்கொலையும் தவிர்ப்பீர்கள், மேலும் என்பு தோல் போர்த்த இவ்வுடல் மீதும் பற்றற்றுப்போம். இது உண்மை. சத்தியம்.நூல் :- வளையாபதி குண்டலகேசி மூலமும் – உரையும்.
ஆசிரியர் :- ஞா. மாணிக்கவாசகன்
பதிப்பகம்:- உமா பதிப்பகம்.
விலை :- ரூ 30/-

4 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

ஐம்பெருங்காப்பியங்கள் சமண மதச் சாயலில் இருப்பது எனக்கு எப்போதுமே வியப்பைக் கொடுத்திருக்கிறது. மதம் எதுவானால் என்ன மொழி முக்கியம் - அந்த விதத்தில் ஐந்தும் ஐங்கனி. எனினும் அரைகுறை காப்பியங்களுக்கு மாற்றாக வேறிரண்டு காப்பியங்களை சேர்த்தால் என்ன? முழமையின்மை காரணமகாக இவை இரண்டையும் அகற்றி வேறு இரண்டு காப்பியங்கள் சேர்ப்பதானால் எந்தெந்த காப்பியங்கள் தேர்வுக்கு வரும்?

ஞாமா அவர்களின் புத்தகத்தைப் படிக்கப் போகிறேன். அறிமுகத்துக்கு நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

முழுமையாகக் கிடைக்காததால் கற்பனை கை கொடுத்திருக்குமோ

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சோழ நாட்டில் பௌத்தம் என்ற என் ஆய்விற்காகப் படித்தது. தற்போது மறுபடியும் படிக்கும் வாய்ப்பு உங்களின் பதிவு மூலமாக. நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

athupatri sariyana anumanam enakku illa Appadurai sir. neengka sonnapadi veru iru kapiyangkala inaikalam. sirukapiyangkaLil irunthu thervu seithu.

irukalam Bala sir

mikka nandri Jambu sir.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...