எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூலை, 2017

மஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்களும்.மஹாபலிபுரம் ஒரு பார்வை என்ற பாலகணேஷ் சகோவின் ( தங்கத்தாமரை பதிப்பகம் ) நூலில் படித்தபின் தோன்றியது, மலைகளும் கூட ஒருநாள் கரையக்கூடும் என. மலையே கரையும்போது மனுஷன் எல்லாம் மண்ணுடா எனவும் தோன்றியது. 
 
அலை அடித்து அலை அடித்து அந்த ஐந்துரதக் கோயில்களும் உள்ளே இன்னொரு கோயிலில் அனந்தசயனப் பெருமாள் தோற்றத்தில் ஒரு சிலையும் சிதையுண்டு கிடக்கிறது.

மகேந்திர பல்லவரும் , மாமல்லர் நரசிம்மரும், பார்த்துப் பார்த்து உருவாக்கிய சிற்பங்களில் சிலவற்றையே ரசிக்க முடிகிறது. அவற்றைக் காணும்தோறும் நமக்கு ஆயனச் சிற்பியும் சிவகாமியம்மையும் மனக்கண்முன் தோன்றுவது தவிர்க்க இயலாதது. 

இரண்டு முறை மல்லைக்குச் சென்றிருந்தாலும் முதல் முறை எடுத்த புகைப்படங்களை இப்போது பகிர்ந்துள்ளேன்.
மாபெரும் வணிகத்தலமாக விளங்கிய மல்லை கடல் கொண்டபின் இன்று புராதனச் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், கடற்கரைக் கோயில்கள், பஞ்சபாண்டவர் இரதங்கள் , குகைச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியன இங்கே சிறப்பு.


பகீரதன் தவம் , யானைகள், படைவீரர்கள், மன்னர்கள், ( பின்னமான சிரசுடன் சில சிலைகள் ) முனிவர்கள், நாகங்கள், சிம்மங்கள், மான்கள், குரங்குகள், நந்திகள், மாடும் கன்றும்  எனப் பாறையின் அமைப்பிற்கேற்ப செதுக்கி இருக்கிறார்கள்.இதில் ஒரு விசேஷம் இதில் இருப்பவர்கள் எல்லாம் காது வளர்த்த , காதணி அணிந்த மனிதர்களாகவே இருக்கிறார்கள்.கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பாறை. ( ஆப்டிகல் இல்யூஷன் ) இது தனிப்பாறை இல்லை.உலகளந்த பெருமாள்.ஏழாம் நூற்றாண்டின் வராஹர் சிற்பம் முன்பு ரங்க்ஸ்.ஐந்து இரதங்கள்.

இயற்கையான பாறையைச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர்போலக் காட்சி அளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி 630 – 668 ) அரிய படைப்பான பஞ்ச பாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.


இந்த ஐந்து இரதங்களும் பஞ்ச பாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தையுடைய தர்மராஜ இரதம், சாலை சிகரத்தையுடைய பீம இரதம், சதுரமான சிகரத்தையுடைய திரௌபதி இரதம், மற்றும் கெஜபிரஷ்டம் சிகரத்தையுடைய நகுல சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதில் இருந்து அறியலாம். தர்மராஜ இரதத்தில் காணப்படும் அழகுவாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீசுவரச் சிற்பம் பல்லவர் சிற்பக் கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும். மேலும் பல்லவ கிரந்த எழுத்துக்கள் பொறிப்புடைய முதலாம் நரசிம்மவர்மனின் விருது பெயர்களும் அந்த இரதத்தில் காணப்படுகின்றன.
-இந்தியத் தொல்லியல் துறை.

கடற்கரைக் கோயில்

கடலோரத்தில் எழில் ஓவியமாக எழுப்பப்பட்டுள்ள இரண்டு சிவன் கோயில்களை உள்ளடக்கிய கடற்கரைக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மன் ( கி. பி. 700 – 728 ) காலத்தியவை.
நந்திகளும்
சிம்மமும்
கிழக்கு நோக்கிய சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர க்ருஹம் என்னும் கோயில் நான்கு அடுக்குகளுடன் கூடிய உயரமான விமானம் மற்றும் நுழைவு வாயிலில் சிறிய கோபுரத்துடன் விளங்குகிறது. இக்கோயிலின் கருவறையில் எட்டு பட்டைகளைக் கொண்ட தாராலிங்கமும், சோமாஸ்கந்தர் சிற்பமும் உள்ளன. மேற்கு நோக்கிய இராஜசிம்ம பல்லவேஸ்வர கிருஹம் என்னும் கோயில் இரண்டு அடுக்குகளை உடைய விமானத்துடன் காணப்படுகிறது. இதன் முன்னர் கட்டப்பட்டிருந்த மண்டபங்களின் அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளன.
இவ்விரண்டு கோயில்களுக்கு இடையே காணப்படும் நரபதிசிம்ம பல்லவ விஷ்ணு கிருஹம் என்னும் கிடந்த கோலத்தில் உள்ள காலத்தால் முந்திய திருமால் சிற்பம் இயற்கையான பாறையினின்று செதுக்கப்பட்டதாகும். 

இக்கோயில் கருங்கற்களான அரண் போன்ற சுவர், காகிதக் கூழ் கொண்டு உப்பு சத்தை நீக்குதல், மற்றும் சவுக்குமரம் வளர்த்தல் போன்ற இந்தியத் தொல்பொருள் துறையினரின் அரும்பணிகளால் கடல் அலைகள் மற்றும் உப்புசத்துடன் கூடிய கடற்காற்று போன்றவற்றினால் சிதைவுறுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
-இந்தியத் தொல்லியல் துறை.

எல்லாம் சரிதான் நடந்து நடந்து பாத்ரூம் போகலாம்னு வந்தா பூட்டுப் போட்டு பூட்டிருக்காங்களே. ( இந்த முறை சென்ற போது திறந்திருந்தாங்க அப்பாடா ! )மனுஷன் நிலைன்னு நினைச்சு ஆட்டம் போட்டுட்டு இருக்கமே. இங்கே எதுவுமே நிலையில்லைன்னு புரியவைச்ச இடம் இந்த கடற்கரைக்கோயில்கள்தான்.3 கருத்துகள்:

 1. மாமல்ல புரத்துக்கு மூன்று நான்கு முறை மகன் அழைத்துச் சென்றிருக்கிறான் ஒவ்வொரு முறையும் காலில் கஞ்சி கொட்டியதுபோல் அவசர அவசரமாக வந்து விடுவோம் ஆற அமர ஒரு முறைப் போய் வர வேண்டும்

  பதிலளிநீக்கு
 2. NICHAYAM POI VAANGKA BALA SIR.


  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 3. மாமல்லபுரத்துக்குச் சென்றிருக்கிறோம் சகோ..படங்கள் எல்லாம் மிக அழகு!

  கீதா: நான் பல முறை சென்றிருக்கிறேன்.சென்னையில் இருப்பதால். படங்கள் செம. நானும் எடுத்திருக்கிறேன். ஆனால் தேட வேண்டும்!!ஹிஹிஹி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...