எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 ஜூலை, 2017

சாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகில் ஆஸ்வின் ஸ்டான்லி


சாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகில் ஆஸ்வின் ஸ்டான்லி 

என் அன்பிற்கினிய செல்லக்கிளி ஆஸ்வின் ஸ்டான்லி ஒரு உற்சாகப் பந்து. இந்தரி சுந்தரி என்று எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். எப்போதும் ஆனந்தமாயிருப்பது எப்படின்னு இவங்ககிட்டத்தான் கத்துக்கணும். என்னுடைய சாதனை அரசிகளில் ஒருவர். குஜராத்துல இந்தப் புள்ளிமானோட வனத்துக்கே போய் இவங்கள சந்திச்சிருக்கேன். ( அமுல் சாக்லெட்டுகளால் மூழ்கடிச்சிட்டாங்க ) 

இவங்க இருக்கும் துறை சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டதுன்னாலும் அடிப்படையிலேயே இவங்க இயற்கை ஆர்வலர். இவங்களாலதான் நம் கடலோரங்கள் மண் அரிப்பிலேருந்து பாதுகாக்கப்படுது. அதுனால இவங்களுக்கு வாழ்த்து சொல்லிக்குவோம்

இவங்ககிட்ட சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது இத எழுதித் தந்தாங்க. இன்றைய அவசியத் தேவை இந்த விஷயம்
 
குஜராத் - ஜர்வானி நீர்வீழ்ச்சியில் ஒரு நாள் இயலுலகு தழுவல்
ஹு ரே ! ஹு ரே ! இட்ஸ் ஹாலி ஹாலிடே; வாட் வேர்ல்ட் ஆஃப்  பஃன் ஃபார் எவ்ரி ஒன் ஹாலி ஹாலிடே….!
எனக்கு மிகவும் பிடித்த இந்தபோனி எம் மின் பாடலை கேட்காதவர்கள் இருக்க வாய்ப்பு குறைவு தான். விடுமுறை தினங்கள் மிக இனிமையானவை. எனக்கு மழைக்காலம் என்றால் அது காடுகளில்  சுற்றி திரிந்து மகிழும் நேரமாகும். குஜராத்தில் மழை காலங்களில் பல மலை முகடுகளில் வழியே நீர் சுரந்து அருவியாய்  கொட்டி வழிந்தோடும். இவற்றில் பல இடங்கள்  சுற்றுலா குறித்த விபரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாத கன்னி இடங்கள் ஆகும். இத்தகைய இடங்களை தேடி சென்று மலைகளையும், குன்றுகளையும் ஏறி இறங்கி, உள்ளூர் காடு வழிகாட்டிகளுடன் களித்துக் கொண்டாடுவது என் மழைக்கால பொழுது போக்கு

ஜர்வானி நீர்வீழ்ச்சி, குஜராத்தில் உள்ள நர்மதா ஜில்லாவின், நந்தோட் தாலுக்காவில், திற்கடி கிராமத்தில் அமைந்துள்ளஷூல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. இந்த சரணாலயம் சுமார் 607 sq km நிலப்பரப்பில் அமைந்துள்ள அரை பசும் மரங்கள் கொண்ட இலையுதிர் வனமாகும். இங்கே கிட்டத்தட்ட 575 செடிகொடிகளும்,  வன விலங்குகளான  தேனுண்ணும் கரடிவகை-ஸ்லோத் கரடிகள், சிறுத்தைகள்,  கழுதை புலிகள், காட்டு நாய்கள், அழிவின் விளிம்பிலிருக்கும் குரைக்கும் மான் வகை மற்றும் ரீசஸ் குரங்குகள் பொதுவாக காணப்படுகிறது.

 இந்த நீர்வீழ்ச்சி குஜராத்தில் உள்ள அருவிகளில் மிக அழகானவைகளில் ஒன்றாகும். வடோதரா நகரத்தில் இருந்து சுமார் 100 கிமீ தூரத்தில், தபோய் - திலக்வாட் - குருதேஸ்வர் - ராஜ்பிப்லா வழி கேவிடியா கிராமம் செல்லும் சாலையின் இரு வழிப்பாதை ஒன்றில் அமைந்துள்ளது. ஒரு பாதையில் ஜர்வானி அருவியிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் வனச்சரக கூடாரமிடும் இடம் உள்ளது. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இரண்டு அறைகளும், பத்துபேர் கொள்ளளவு கொண்ட இரு தூங்கும் அறைகளும், கூடாரங்களும் வனச்சரக கட்டு பாட்டுக்குள் இயங்கி வருகிறது. சூரிய ஒளியின் மூலம் இயக்கபடும் மின்சார விளக்குகள் மட்டுமே உண்டு. நல்ல குஜராத்தி உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. வாகன அளவைகளின் படி சரணாலயத்தின் வாசலில் நுழைவு கட்டணம் செலுத்த பட வேண்டும். காடுகளை சுற்றி திரியவும், சுற்றுலாக்களுக்கும் வன இலாகாவை அணுக வேண்டும்.  

என்னுடன் என் தோழமைக் குடும்பங்களும்  இணைந்து ஜர்வானி நீர்வீழ்ச்சிக்கு இயலுலகு தழுவல் செய்ய புறப்பட்டோம். எங்கள் பொழுது காலை 7 மணியளவில் வடோதராவில் இருந்து தொடங்கி இருபுறமும் பசுமரங்கவிழ் சாலைகளை கடந்து, குளுமையாக இருந்தது. தபோய் எனுமிடத்தில் காலை உணவருந்த கார்களை ஒரு அழகிய கிராம உணவகமுன் நிறுத்தினோம். அன்று தஸரா விசேஷ சிற்றுண்டியாக கடலை மாவில் செய்த காட்டியாவை எண்ணையில் பொரித்த பச்சை மிளகாய்களுடனும், மொறு மொறுவென இனிப்பான ஜிலேபியும், கிராமத்து புகை வாசம் கொண்ட மசாலா தேயிலையும் சுவை கூட்டியது. நாங்கள் எடுத்து சென்ற ரொட்டி சாந்துவிட்ச்ஸ் மற்றும் பழங்களையும் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.  

சரணாலயத்தை அடைந்தவுடன் அகண்ட நீரோடைகள் அருவி இருக்கும் திசையை கஷ்டமின்றி அறிவித்தன. அருவிகரை நோக்கி சென்ற கரடு முரடான சரல் கற்கள் நிறை பாதையில் நடந்து சென்றோம். நீரோடைகளின் நீரை கடக்கும் போது பாதங்களுக்கு அடியில் நிறைந்திருந்த சிறு பெரும் பாறைகள், உருண்ட மற்றும் கூர்கொண்ட பாறாங்கற்கள், காய்ந்த மற்றும் அடர்ந்த பசும்பாசி படர்ந்த பாறாங்கற்கள் புது இன்பமளித்தது. சில பல இடங்களில் "மிக கவனமாக-கவனக்குறைவான பாசிபடர் பாறைகளின் வழுக்கல்கள்" எதிர்பாராத இன்ப வலிகள்

ஜர்வானியின் அகண்ட பால்வண்ண நீர்வீழ்ச்சி மிக ஆழமாக வீழ்வதால், அருகில் செல்வதை தடுக்க ஒரு தடுப்பு சங்கிலி கட்டப்பட்டு இருந்து இருக்கிறது, தற்பொழுது அது பழுதடைந்து அறுந்து விட்டு இருந்தது, எனினும் கிராம புற வழிகாட்டி அந்த  துருவகுறியின் மேல் பாறைகளின் மீது அமர்ந்து கொண்டு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கின்றனர். நீர்வீழ்ச்சி மிக அடர்த்தியான வனத்தில், மலை முகடுகளில் உள்ளே அமைந்திருப்பதால், தொலைபேசி கருவிகளின் இயக்கங்கள் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இது நம்மை இயற்கையுடன் ஒன்றி அதன் அழகை ரசிக்கவும், இயற்கை என்னும் இளைய கன்னியின் இசையான வீழும் நீரொலியையும், பனிபடர்ந்த தூறல் காற்றின் ஒலியையும், பட படிக்கும் தட்டானின் சிறகொலியையும், சிறகடிக்கும் பறவைகளின் சிறகொலியையும், பாடலையும், குறிப்பாக நமது காலடிக்கும் நீர் சிதறும் ஒலிகளையும் கேட்டு அனுபவிக்க வழி வகுக்கிறது

சுமார் 11.30 மணியளவில் மிக இனிமையான ஒலியொன்று செவிப்பறைகளை மசாலா சாய், மசாலா சாய் எனத் துளைத்தது. கிராமப்புற பழங்குடி இன   வழிகாட்டி ஒருவர் தேயிலை பானம் விற்பனை செய்கிறார். அவர் கைகளில் இருந்த சூடான கெண்டியில் வாசனை நிறைந்த மசாலா தேநீர்  பார்த்ததும் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுற்றோம். அவர் நீருக்குள் இறங்கி சிறிய பிளாஸ்டிக் கப்களில் தேநீர் வார்த்து கொடுத்தார். மிகவும் என்னை கவர்ந்த செயல் என்னவென்றால், அவர் பொறுமையாக நின்றிருந்து அனைத்து பிளாஸ்டிக் கப்களையும் சேகரித்து சென்றதும், தண்ணீரில் பிளாஸ்டிக் போடக்கூடாது என்று உரைத்ததையும் தான். காட்டு நீருக்குள் தேநீர் பரிமாற்றம் எனக்கு மிகுந்த ஆடம்பர இன்பமாகப்பட்டது.
   
நாங்கள் நீர் வீழ்ச்சியை மிக விடியலில் வந்து அடைந்து விட்டதால் எந்த சுற்றுலா பயணிகளின் குறுக்கீடுகளும் இல்லாமல் நாங்கள் மட்டுமே ஒன்றரை மணியளவாக தனிமையில் மகிழ்ந்தோம், படம் பிடித்தோம், விளையாடினோம். பதினொறு மணியளவில் கூட்டம் அலை மோதியது, அதுவும் சத்தங்கள் நிறைந்த புதுவித இனிமையாக இருந்தது. சுமார் இரண்டரை மணியளவு நீச்சல் மற்றும் நீருறலின் பிறகு மிகுந்த பசி எடுக்க நாங்கள் நீரை விட்டு விலக மனமின்றி விலகினோம்.

வன சரக கூடாரமிடும் இடத்திற்கு சென்று, மேலிருந்து நீரோடைகளையும், மலை முகடுகளுடன் பள்ளத்தாக்குகளையும் படம் பிடித்தோம். அது ஒரு படம்போல் அழகிய கண் கவர் காட்சியாகும். பின்பு சர்தார் சரோவர் அணைக்கட்டுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள மிக வடிவான கார் பார்கிங், அங்கே சில சிறு கடைகளும், பணம் செலுத்தி உபயோகப்படுத்தும் கழிப்பறைகள், மற்றும் பல நிழல் தரும் மரங்களும் உண்டு; அந்த நிழல்களில்  எங்கள் விரிப்புகளை விரித்து அமர்ந்து உணவு பதார்த்தங்களை பரப்பினோம். 

எங்கள் உணவில் பிரதானம் என்னவென்றால் எலுமிச்சை மற்றும் தயிர் சாதங்கள், கோழி மற்றும் உருளைக்கிழங்கு வறுவல், முட்டை மசால், மாங்காய்  மற்றும் இஞ்சி ஊறுகாய்கள், குலாப் ஜாமுன் மற்றும் சில பழ வகைகள். அந்த முழு நாளும் மிக உற்சாகமான நாளாக அமைந்தது. மாலை நாலரை மணியளவில் துவங்கி ஆறரை மணியளவில் வதோதரா வந்தடைந்தோம். அந்த நாளை இன்பமாக்கித் தந்து தனது படைப்புகளை அனுபவிக்க இறைவன் கொடுத்த ஆசிக்கு நன்றி கூறுகிறேன்

உங்கள் உடல் மன ஆரோக்கியம் வளம்பெற அடிக்கடி இயற்கையின் மடியின் தவழ்வது இன்றியமையாதது. இயலுலகு தரும் நேர்மறை ஆற்றல் நமக்கு மிகவும் அவசியமானது. நேர்மறை ஆற்றல் அளிக்கும் எதிர்மறை அயனிகள் இந்த வித இயற்கை அழகு அள்ளும் இடங்களாகிய கடல், மலை, காடு, நீர்வீழ்ச்சி, அறுகளில் மட்டுமே அதிகம் உருவாகிறது

ஹாய்..!  இன்னும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்

பேக் அப்..!  கெட், செட், கோ ..! ஹு ரே ...!!

முனைவர். தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி
ஒருங்கிணைந்த கடற்சார்வள மேம்பாட்டு ஆர்வலர் 
எக்கோ பாலன்ஸ் கன்சல்டன்சி, வதோதரா
குஜராத், இந்தியா

நான் இந்திய தரச்சபையின் (Quality Council of India - NABET) ஒப்புதல் பெற்ற சூழலியல் மற்றும் பல்லுயிர் நிபுணர். தற்பொழுது கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா கடலோரங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் அரசின் கடலோர பாதுகாப்பு திட்டதில் ‘கடலோர மண்மேடுகள் மேலாண்மை நிபுணராக பணிபுரிகிறேன்.
மேலும், 1991 இருந்து சதுப்பளக் காடுகளின் பாதுகாப்பு, மீளுருவாகக்கம் மற்றும் கடலோர மேம்பாட்டு செயல்பாடுகளில், அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், உணவு மற்றும் விவசாய நிறுவனம் - ஐக்கிய நாடுகள் (FAO-UN), ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) யின் நிதியின் மூலம் செயற்படுத்த்ப்படும் திட்டங்களில் தற்கால குறுகிய கால சதுப்பள மற்றும் கடலோர மேம்பாட்டு திட்டங்களில் வளரும் ஆசிய நாடுகளான இலங்கை, தாய்லாந்து, மலேசியா, பங்களாதேஷ், வியட்நாம், மியான்மர், இந்தியா போன்ற நாடுகளில் இணைந்து பணி புரிந்திருக்கிறேன்.
ஓணான் குளியல் 

தோட்டம் என கூறவியலா முப்பத்திரண்டுக்கு
இரண்டு அடி சிறு இடத்தில் ரோஜா, கனகு,
மல்லிகை, துளசி, கற்பூரவல்லி, எலுமிச்சை,
கறிவேப்பிலை, கோவை, கொய்யா, பசலையுண்டு
என் சிறு பசுமை பத்தையை தாய் வீடாய் கருதும்
பல்லுயிர் இங்குண்டு; வித வித வீட்டு மர பல்லிகள்
இரண்டு முண்டக்கண்ணி ஓணான்கள்
துளசி விதை மேயும் அணிற்பிள்ளைகள்
பெருந்தொண்டை கார பூணியல் குருவிகள்
கருப்பு வெள்ளை மாக் பை ராபின்கள்
விரலளவு வண்ணமிகுத் தேன் சிட்டுக்கள்
கோணையாய் முறைக்கும் உம்முணாமூஞ்சி வல்லூறு
செந்நிற அடிப்பக்கம் கொண்ட புல்புல்கள்
பேக்காய் முழிக்கும் மாடப்புறாக்கள்
விருந்துக்கு வரும் சாதுவான செம்புவன்
அரிதாக வரும் சிறுவகை அண்டங்காக்கை 
எந்நேரமும் பாடும் கருப்பு முத்துக் குயில்கள்
எப்போதாவது கோவைப்பழங் கொய்யும் கிளிகள்
தேனடை வளர்க்கும் சுறுசுறுப்பு தேனீக்கள்
கடித்து மிரட்டும் கடுத்துவாக்கள்
கிட்டே வா பிய்த்து விடுவேன் எனும் குளவிகள்
தடை புறக்கணித்து சாறையாய் எறும்புகள்
ஈயைக் கொல்லும் சிறிய எட்டுக்கால் ஈப்பிலி
ஒட்டடை பின்னும் கணுக்கால் சிலந்திப் பூச்சி
இரவில் கூட்டம் கூட்டமாய் கூத்தடிக்கும்
பழந்தின்னி மற்றும் நரிச்சி வௌவ்வால்கள்
மழை காலங்களில் எங்கும் ஊர்ந்து திரியும்
மழ மழவென ஆயிரம் கால் அட்டை புழுக்கள்
கண்ட இடமெல்லாம் துள்ளி அலைந்து
அசந்தால் வீடு புகுந்து கொள்ளும் தவளைகள்
மற்றும் நச்செலிகளும் சுண்டெலிகளும்
என்னோடு உறவாடும் என்னுறவினர்கள்
பெரிய மிதப்பில் நேரம் ஒதுக்கி செடிகளுக்கு
நீர் வார்க்கும் நொடியனைத்தும் மிக சந்தோஷம்
நீர் சொரிந்து தூசு ஒழிக்கும் நிமிடங்களில்
குடு குடுவென ஓடும் பல்லியையும் ஓணானையும்
துரத்தி துரத்திக் குழாய் வெள்ளம் பீச்சியடித்து
குளிப்பிப்பது குரூரமான இன்பமா ? ஹா ஹா ஹா


டிஸ்கி :- ஆனாலும் இப்பிடி தூயதமிழ்ல நீ அசத்துவேன்னு நான் நெனைக்கவே இல்ல புள்ள. கலக்கிட்டே போ. ஐ மீன் நீர்வீழ்ச்சியை இல்ல. எங்க மனங்களைத்தான். அன்பும் நன்றியும் அணைப்பும் புள்ள.


அதென்ன் ஓணானை ஓட ஓட விரட்டுற சின்னப்புள்ள வயசிலேருந்து நீ இன்னும் வளரலையா. கிகிகி. பாவம் புள்ள விட்றுரு அதுவும் எங்களமாரி உன் அன்புல மாட்டிட்டு முழிக்குது. 


அருமையான தகவல்களையும் ஆலோசனையும் சொன்னதுக்கு தாங்க்ஸ் கண்ணு. அப்புறம் ஒரு விஷயம் ஃபோட்டோக்கள் எல்லாம் அழகு புள்ள. அதிலும் முதல் போட்டோ நீர்விவசாயி மாரி இருக்கு J
  
ஒண்ணுக்கு ரெண்டா போஸ்ட் கொடுத்த அன்புச்செல்வி ஆஸ்வின் வாழ்க வாழ்கவே J
 

7 கருத்துகள்:

  1. அருமை. நீர்வீழ்ச்சியும் குளியல் படமும் அழகு.

    //எனக்கு மழைக்காலம் என்றால் அது காடுகளில் சுற்றி திரிந்து மகிழும் நேரமாகும். //கேட்கவே மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பகிர்வு.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. செம....அழகு....எல்லாம்..அப்படியே. ஆழ்ந்து மூழ்கிட்டேன்....எனக்கும் இயற்கையில் நனைவது சுற்றுவது ரொம்ப பிடிக்கும்..ரசித்தோம்.அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அழகான கட்டுரை தேனம்மை குஜராத்தின் காடுகள் நீர்வழிகள் என மகிழ
    அருமையான வழிகாட்ழிடல்ய தோழியருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. thanks da Os dear :) <3

    thanks DD sago

    thanks Gomathi mam

    thanks Venkat sago

    thanks Geetha

    thanks Bala :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...