வெள்ளி, 28 ஜூலை, 2017

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு பார்வை.இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு பார்வை. 


முதுகலை அரசியல் அறிவியலில் சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவக் கொள்கைகளைப் படித்ததுண்டு. அது எல்லாம் இப்ப ஞாபகம் இருக்கான்னு கேக்கக்கூடாது. ஏனெனில் அது தொலைதூரக் கல்வி இயக்ககம் தயாரித்த நோட்ஸின் அடிப்படையில் பரிட்சைக்காகப் படித்தது. 

வெஸ்டர்ன் பொலிட்டிக்கல் தாட்ஸ் என்னும் சப்ஜெக்டில் கார்ல் மார்க்ஸ் பற்றிப் படித்ததுண்டு. வரக்கபேதம் அற்ற சமுதாயம் அவரது கனவு. தாஸ் கேப்பிடல் என்னும் நூலைப் படைத்தவர். 

திரு நா வானமாமலை அவர்கள் 'இந்தியத் தத்துவச் சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையா, ஆத்திகர்களின் புரட்டு வாதம்,கடவுள் கருத்தின் துவக்கமும் நாத்திகத்தின் தோற்றமும், ஈஸ்வர வாதமும் இயற்கை வாதமும், நாத்திகம் பற்றி மார்க்ஸீயவாதிகளின் விமர்சனம்', ஆகிய தலைப்புகளில் நாத்திகமும் மார்க்ஸியமும் என்ன என்பதைப் பல்வேறு விளக்கங்களுடன் விவரித்துள்ளார்.

இந்திய தத்துவ சிந்தனை கடவுட் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் என எஸ் ராதாகிருஷ்ணன் 'தர்க்க முறைகளையும் அறிவியல் ஆராய்ச்சியையும் ஒதுக்கிவிட்டு நிலையான உண்மையான வாழ்க்கைக்குக் கடவுளை நம்பி அவராகவே ஆகும் முயற்சியில் ஈடுபடுமாறு இந்தியத் தத்துவங்கள் போதிக்கின்றன' கூறியதாகச் சொல்கிறார்.

கடவுள் & உள்ளுணர்வு என்பது பற்றி ஆதிசங்கரரின் குருவான  ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த குமரில்ல பட்டர் என்பவர் எள்ளியதாகக் கூறும் வானமாமலை அவர்கள் சிந்தனை உலகின் தர்க்கவாதத்தில் கடவுள் இன்மைக் கொள்கையைத்தான் பெரும்பாலான தத்துவங்கள் பேசுகின்றன , இதைத்தான் நாத்திகம் என்று கூறுகிறோம். இவ்வாறு பேசியவர்கள் சாருவாகர், லோகாயதர், பூதவாதிகள் என்று குறிப்பிடப்படுகின்றார்களாம். இவர்கள் ப்ரக்ருதியை நம்புவார்கள். அதைக் கடவுள்தான் அல்லது சக்திதான் படைத்தது என்பதை நம்பமாட்டார்கள்.  

பண்டைய மீமாம்சகர்கள் , பண்டைய நியாய வைசேஷிகர்கள் பற்றிய கூற்றும் சிந்தனைக்குரியது. பௌத்தம் கடவுளையும் ஆன்மாவையும் மறுக்கிறது. ஜைனம் அறிவையே ( அருகக் கடவுள் ) தெய்வமாகக் கருதுகிறது . கடவுளை மறுத்த இவர்கள் சொர்க்கம், நரகம், விதி ஆகியவற்றை மறுப்பதில்லை. 

கடவுளைத் தர்க்கரீதியாக எதிர்த்த நாத்திகர்கள் அக்கொள்கை சமூக ரீதியாக வேரோடி இருப்பதை ஆராயவில்லை. இதை மார்க்ஸ்தான் சமூகவாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது என்ற உண்மையை விளக்கினார். இயக்கவியல் பொருள் முதல் வாதம், வரலாற்றில் பொருள் முதல் வாதம் ஆகியன பற்றிய அறிவுதான் நாத்திகம் தன் இடத்தை அடைய ஏதுவானது. 

மொத்தத்தில் கடவுளை/கடவுள் என்னும் கொள்கையை ஏற்பவர் ஆத்திகர். அதை மறுப்பவர் நாத்திகர் என்றழைக்கப்படுகிறார்கள். ஆத்திகம் மறுக்கப்படும்போது நாத்திகத்தை முன்வைக்கும் கம்யூனிசமும் ஒரு புதிய மதமாக புரட்டுவாதிகளால் முன்வைக்கப்படுவதாக் குற்றம் சாட்டுகிறார் வானமாமலை.

மதம் அல்லது ஆத்திகம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளக் கைக்கொள்ளும் அனைத்தையும் ( பிரச்சாரம், உயிர்ப்பலி, ) கம்யூனிசம் கைக்கொள்வதால் அதுவும் ஒரு மதம்தான் என்பதை நிரூபிக்க  ஆன்மீகவாதிகள் முயல இதை அறிவியல் அயோக்கியத்தனம் என்கிறார் வானமாமலை. ! இதற்கு நடுக்காலத் தத்துவவாதியான உதயணர் என்பவரின் “நியாய குஸுமாஞ்சலி “ என்ற நூலில் வரும் வரிகளைச் சாடுகிறார். 

மீமாம்சம், சாங்கியம், வேதாந்தம், பௌத்தம், ஜைனம், சாருவாஹம், ஆகிய இந்திய தத்துவங்கள் ஆகியவற்றில் இரண்டு மட்டுமே ஆத்திகப் போக்குடையவை. இவற்றைக் கொண்டு இந்திய தத்துவங்கள் அனைத்துமே ஆத்திக நம்பிக்கைகள் உடையவை என்று வாதிப்பது 'சாமான்ய சாலம்' என்கிறார். 

இந்திய ஆய்வாளர் கார்பே என்பவர் ரிக்வேதச் செய்யுள் ஒன்றை இந்திய நாத்திகத்துக்குச் சான்றாகக் காட்டுகிறார். மிக முக்கியமான விஷயமொன்றை வானமாமலை கோடிட்டுக் காட்டுகிறார். இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு அரசுகள் தோன்றியபோது ஒரு வர்க்கத்துக்கு மக்களை வன்முறையால் பணியவைக்கவே “ஒரு கடவுள் கொள்கை “ தோன்றியது என்று கூறுவது சிந்தனைக்குரியது.

விண்டர் நிட்ஸ் என்பார் மக்களுக்குப் பல தெய்வ நம்பிக்கை அழிந்தபோது யாகம் யஞ்சம் ஆகியவை குறைந்து சர்வ வல்லமை படைத்த பிரஜாபதி என்ற கருத்தில் நம்பிக்கை உருவானது என்கிறார். கருட்மாத் என்றும் , பிரம்மம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது நிர்குணப் பிரம்மம் என்று கூறப்பட்டது. இதனின்று தோன்றிய மாயையில்தன் பிரபஞ்சம் தோற்றம் கொள்கிறது என்பது கடவுள் கொள்கையில் அடுத்தகட்ட வளர்ச்சி நிலை.
ஆனால் நிர்குணப் பிரம்மத்தை சகுணப் பிரம்மமாக ராமானுஜர் மாற்றினார். மதங்களின் நம்பிக்கை இப்பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள இயற்கைக்கு அதீதமான சக்தி ஒன்றுதான் இவ்வுலகைப் படைத்தது. அச்சக்தியே கடவுள் என்பதுதான். அவர் தகுந்த காலத்தில் வெளிப்பட்டு நீதியை நிலைநிறுத்துவார் என்பது நம்பிக்கை. 

இதே போல் கிராமங்களில் திருவிழாக்களில் சாமியாடிகளும் கோமரம் என்பார்களும் சாமி வந்து அருள் சொல்வதுண்டு, கேரளாவில் இவர்களுக்கு வெளிச்சப்பாடு என்று பெயராம். இவர்களை பிரேசர் என்னும் பண்பாட்டு அறிஞர் தற்காலிக கடவுள் என்று குறிப்பிடுகிறார். 

விஞ்ஞான விதிகள் , இராசயன விஞ்ஞானம் ஆகியவற்றோடு உபநிஷதங்களின் சுபாவ வாதத்தைப் பொருத்துகிறார் வானமாமலை. சாந்தராக்‌ஷிதர் என்ற பௌத்தரும் குணரத்னா என்ற ஜைனரும் சுபாவவாதமும் விபத்துவாதமும் பொய் எனக் கூறினார்கள்.  பொருள் முதல் வாதிகள் சுபாவவாதத்தைத் தங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். அது நாத்திக வாதம் ஆயிற்று. 

பண்டைய இந்திய நாத்திகம், கிரேக்க நாத்திகம், ஐரோப்பிய நாத்திகம் ஆகியவற்றின் தத்துவக்குறைபாடுகளை மார்க்சீயம்தான் போக்கியது என்கிறார் வானமாமலை. 


கடவுள் ஒரு மாயை, மனவிகாரம், என்கும் இந்திய நாத்திகவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னும் கடவுட் கொள்கை தப்பிப் பிழைத்துத்தான் இருக்கிறது.  
 
மார்க்ஸ் ஃபயர்பாக்ஸ் என்னும் அறிஞரின் கருத்தை இப்படி விமர்சிக்கிறார். , மதத்தினால் அந்நியமாகி இவ்வுலகு இரண்டாக – பொய்யான மத உலகாகவும், உண்மையான புற உலகாகவும் பிரிகிறது. உண்மையான உலகின் முரண்பாடுகள் தீர்வு பெறாதபோது விண்ணில் அவை பொய்யுலகத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன . சமூகத்தின் பொருள் உற்பத்தி எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்கிறதோ அந்த அளவில் இருந்துதான் இச்சிந்தனைகள்  தோன்றுகின்றன என்கிறார். 

பல்வேறு விஷயங்களில் இயலாமையை உணரும்போது அது தன்னைவிட அதிக சக்தி படைத்ததாக ஒரு உருவத்தைத் தெய்வமாகத் தன் கற்பனையில் படைத்து அதனிடம்தன் வேண்டுகோளைப் பூர்த்தி செய்யக் கோரிக்கை வைக்கிறது என்கிறார்.  

பொருள்களின் யந்திரீக, ரசாயன, பௌதீக இயல்புகளை அறிந்து அவற்றைக் கட்டுப்படுத்தும்போது அவனது நம்பிக்கைகள் நாத்தீகமாக மாற்றமடைகின்றன. 

வர்க்க பேதத்தினைக் காப்பாற்றி மக்களை அடிமையாக வைக்கத் தோன்றிய அரசு  வன்முறையை மட்டுமல்ல. மதம் என்னும் அபினியையும் கொடுத்தது என்கிறார் மார்க்ஸ். ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது என்கிறார். மதம் என்பது சிறுபான்மைப் பிரிவினர் பெரும்பான்மைப் பிரிவினரைச் சுரண்டவே உருவாக்கப்பட்டது என்றும் மாயையான மதத்தை ஒழிப்பது நிஜ உலகின் நிம்மதிக்கு அவசியம் என்றும் கூறுகிறார்.  

இந்த வர்க்க பேதத்தினைக் கடந்து பொருள் உற்பத்தி அதிகரிக்கும்போது கடவுட் கொள்கை மாறுபாடு அடைய வாய்ப்புள்ளது. 

மார்க்சீயக் கல்வி பற்றி லெனின் விமர்சித்து மதப் பிரச்சனை பற்றி ஒரு அறிவுக்கூர்மையான போக்கை உண்டாக்கவும் மதம் பற்றி அறிவுக்கூர்மையாக விமர்சனம் செய்ய மக்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை என்கிறார். 

கடவுளை சமூகமும் அரசும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் படைத்தது என்ற மார்க்ஸீய சிந்தனையை அறியாமல் பெரியாரின் நாத்திக வாதம் சமூக வரலாறு அறியாததாக இருந்தது என்கிறார் வானமாமலை. அறிவியல் உண்மைகள், அறிவியல் கொள்கைகள், இவற்றைக் கிரஹித்துக் கொண்டு மார்க்ஸியம் வளர்ச்சி பெற்று வருவதாகக் குறிப்பிடுகிறார். 

“உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது “ என்பது மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகம்.  


இந்நூலைப் படித்து முடித்தபின் எதையோ பற்ற விழையும் எதனாலோ உய்ய விழையும் மனம்தான் இறையைக் கற்பிக்கிறது அதற்கு அரசும் சமூகமும் துணைபோயிருக்கலாம் , தனக்குச் சாதகமாக அதைத் திசைதிருப்பி உபயோகித்துக் கொண்டிருக்கலாம் என்பது என் முடிபு.!

நூல்:- இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
ஆசிரியர் :- நா. வானமாமலை
பதிப்பகம் :- என் சி பி ஹெச்
விலை :- ரூ. 2/-

4 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

பழைய புத்தகமோ? விலையப் பாருங்க!

இது போன்ற புத்தகங்க்கள் மின் வடிவில் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

rajasundararajan சொன்னது…

நல்ல கட்டுரை அம்மா. NCBH-இல் புத்தகம் கிடைக்கிறதா பார்க்கிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

சில கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ள விழையும்போது நமக்கு ஏற்கனவே போதிப்பிக்கப்பட்ட indoctrinated எண்ணங்களிலிருந்து வெளி வர வேண்டும் இல்லையென்றால் என்னதான்படித்தாலும் பலன் தெரியப் போவதில்லை

Thenammai Lakshmanan சொன்னது…

aam Appadurai sir

nandri Rajasundararajan sir !

unmaithan Bala sir . enna seivathu. hmm

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...