வெள்ளி, 28 ஜூலை, 2017

கொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வைகொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை


கவிப்பேரரசு ஆவதற்குமுன் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைத் தொகுப்பு. இதன் பல்வேறு கவிதைகள் என் கல்லூரிக் காலகட்டத்தில் எங்களால் எழுதப்பட்ட கவிதைகளை இனம் காட்டுகின்றன. எனினும் அவர் கவிப்பேரரசர் என்பதாகப் பல கவிதைகள் அடையாளம் காட்டுகின்றன என்பதையும் மறுக்க இயலாது.

விளக்குக்கு ஏன் வெளிச்சம் என்று கேட்கிறீர்களா. இந்த நூல் எனது திருமணப் பரிசாக அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் திருமணங்களில் புத்தகம் வழங்குவது அறிவுஜீவிகளுக்கான செயல். மெய்யாகவே படிப்பவர் அதிகம். 

ஒரு உண்மையைச் சொன்னால் திட்டக்கூடாது. இந்தத் திருமணப் பரிசு நூலை என் ட்ரங்குப் பெட்டியில் இருந்து இப்போதுதான் எடுத்தேன். இரு நாட்கள் முன்புதான் படித்தேன். இந்நூலைத் தபால் மூலம் எனக்கு அனுப்பியவர் அன்றைய பூபாளம் ஆசிரியர் , எனது நண்பர் பாமா மனோகரன் அவர்கள்.  

இன்றுவரை நேரில் பார்த்ததில்லை. இப்போதும் முகநூல் நண்பர்களாகி இருக்கிறோம். 
 
1984 இல் வெளிவந்த இந்நூலின் விலை ரூ 7.50/- மட்டுமே !. 

முன்னுரையாக இல்லாமல் சில கேள்விபதில்களாகவும் அதன் பின் கவிதைகளும் அணிவகுக்கின்றன. அநேகம் எளிய கவிதைகளே. நாங்களும் இப்பாணியையே பின்பற்றி இருக்கின்றோம். அன்றைய ட்ரெண்ட் போலிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பற்றிய ஓரிரு கவிதைகளும் உண்டு. ஓர் அரசன் யாசிக்கிறான் என்ற கவிதை வித்யாசம். 

முன்னாள் காதலியிடம் கேள்விகள், இந்நாள் காதலியிடம் யாசிப்பு, வேண்டுகோள்கள், அவளின் நிராகரிப்பால் எழும் கோபம், என்று சில காதலிக் கவிதைகளும் உண்டு.  

வாசிப்பனுபவம் அதிகமானபின் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட பழைய கவிதைகள், வெகு சாதாரணமானவையாக சுவாரசியமற்றவையாகவே காட்சி தருவது எனக்கு மட்டும்தானா.

ரசித்த ஓரிரு கவிதைகள். 

///பிடிக்க நினைத்ததென்னவோ
பிள்ளையார்தான்
அவசரத்தில்
தும்பிக்கை
வாலாகிவிட்டது
நம்பிக்கை
பாழாகிவிட்டது. //

அரசியல் அவசம்

/// யானைகள் தின்றபோது
சிதறிய கவளங்கள்
சிற்றெறும்புகளுக்கு //

நண்பர்களிடம் வினா

// உங்களில் சிலருக்கு
நரைத்துவிட்டதே
வீடு பழுதானதென்று
வெள்ளை அடிக்கிறதோ
முதுமை.?//

கல்லுடைக்கும் சிறுவர்களின் பொருட்டு இரங்கல்

///பிஞ்செல்லாம் காயாகிக்
கனியத்தான் காத்திருக்கு
பிஞ்சுகளே உங்களுக்குக்
கையல்லோ காய்த்திருக்கு///

பாரதி பற்றி

// அவன்
மேற்கோளுக்கா
எழுதினான்.
குறிக்கோளுக்கல்லவா
எழுதினான்.///

மழைத்துளியை வெவ்வேறு கவிதைகளில் திரவ நட்சத்திரங்கள் என்றும் திரவ வைரங்கள் என்றும் குறிப்பிடுவது அழகு.

ஒரு புல்லாங்குழலின் பூர்விகம் அற்புதமான கவிதை. 

///புல்லாங்குழலே
புலம்பாதே
உன் தேகம்
சுடப்பட்டபின்னும்
சுரங்கொடுக்கிறாய்
சுடலை மனிதன் சுரந்தருவானா
புல்லாங்குழல்
தன் கண்களால்
ஆனந்த ராகத்தை
அழுதது ! 

மொத்தத்தில் என்றோ கொண்டாடி இருக்க வேண்டிய கவிதைகளை இன்றாவது  எழுதிக் கொண்டாடி இருக்கிறேன். தாமதமானாலும் இவை விதைநெல் போன்று சேமிக்கப்படவேண்டியவைதான். 

அப்புறம் முக்கிய விஷயம் அந்த நூலில் ஒரு திருமண வாழ்த்து . மேதகு நண்பரிடமிருந்துதான். J நன்றி மனோ ! 


நூல் :- கொடிமரத்தின் வேர்கள்
ஆசிரியர் :- கவிஞர் வைரமுத்து
பதிப்பகம் :- பாரதி பதிப்பகம்
விலை :- ரூ 7.50/-

4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல நூலறிமுகம். நன்றி.

Anuradha Premkumar சொன்னது…

ஒவ்வொரு கவிதையும் அழகு...
படிக்க படிக்க ஆசை வருகிறது...


// அவன்
மேற்கோளுக்கா
எழுதினான்.
குறிக்கோளுக்கல்லவா
எழுதினான்.///


உங்க வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து ...எங்களையும் வாசிக்க தூண்டுவதற்கு...

நன்றி தேனக்கா....

G.M Balasubramaniam சொன்னது…

புகழ் பெற்றபின் எழுதுவதெல்லாமே புகழப்படலாம்தானே

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago

nandri Anu :) <3

unmaithan Bala sir

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...