புதன், 26 ஜூலை, 2017

என் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.

என் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.

கவிமதியின் கவிதைகள் எளிமையாய் இருப்பதுபோல் தோன்றினாலும் கேள்விக்கணைகள் தாங்கிய ஆயுதம் போன்றவை. அவற்றிடமிருந்து தப்பவே முடியாது.

பொதுவுடைமைவாதிகள் கூறும் அனைத்தையும் அநாயாசமாகக் கவிதைகளில் கூறிச் செல்வார். விளிம்புநிலை மக்களின் மனதில் ஊடாடும் கேள்விகள்தான் அனைத்துக் கவிதைகளுமே.
அரசு, சமூகம், அனைத்தின் முன்னும் அவர் வைக்கும் கேள்விகள் அர்த்தம் வாய்ந்தவை.

பற்றி எரியும் பிரச்சனைகள் பற்றி எனக்கென்ன கவலை என்று எல்லோரும் அலங்காரக் கவிதைகள் பாடிக்கொண்டிருக்கும்போது இதுதான் எதேச்சதிகார சமூகத்தினால் ஏற்படும் பிரச்சனை என்று முகத்தில் அறைபவை இவரின் கவிதைகள்.  

இக்கவிதைகளைப் படிக்கும் யாரும் தன்னலப் போக்குக் கொண்ட அந்தச் சமூகத்தின் ஒரு அங்கமாக தம்மைத்தாமே இகழ்ந்து கொள்ள நேரும் உண்மைகளைக் கொண்டிருக்கின்றன இவை. 

என்
தெருவழியே
போறவரே..
எப்போதேனும்
கொடுத்ததுண்டா
எங்களுக்கு
ஒரு விதை ?
இல்லையெனில்
ஏன்
நிர்ணயித்தீர்கள்
விலையை மட்டும். ?

பசுமைப் புரட்சி என்று நாசமானது போதாமல் உரங்கள், மரபணுமாற்றப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் என்று இன்று நமது வயக்காடுகள் செத்துக் கொண்டிருக்கின்றன. விதைகளையும் அவற்றுடன் உரங்கள், பூச்சிக் கொல்லிகளையும் வெளிநாட்டுக் கம்பெனிகள் விற்க சம்மதம் கொடுக்கும் அரசு எந்திரத்தின் ஊழல் பக்கங்களை இவை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.  

கவிதையின் அலகுகளுக்குள் இக்கவிதைகள் நின்றதை விட உணர்வுகளின் அலகுகளால் நாற்றம் பீடித்துக் கிடக்கும் ஒரு சமூகத்தின் குடலினை வீச்சத்தோடு எடுத்துக் கிடத்துபவை. 

என்
தெருவழியே
போறவரே..
எப்போதேனும்
கேட்டதுண்டா
எங்கள் வயிற்றின்
வறட்சி பற்றி ?
இல்லையெனில்
ஏன்
கொண்டுவருகிறீர்கள்
இறந்தபின்
நிவாரண நிதிகளை. 

இனப்பாகுபாடு, சாதிப்பாகுபாடு, வர்க்கபேதம் ஆகியவற்றைச் சாட்டை கொண்டு விளாசுகின்றன. மதங்கள் கொண்டு மதம் பீடித்துக் கிடக்கும் மனிதன் முன் இவர் வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.

என்னை மிகவும் அசைத்த கவிதை இது. 

என்
தெருவழியே
போறவரே..
எப்போதேனும்
தடுத்ததுண்டா
நீங்கள்
உயிருடன் போவதை
நாங்கள் ?
இல்லையெனில்
ஏன் தடுத்தீர்கள்
நாங்கள்
பிணமாகப்
போவதைக் கூட ?

இன்னும் மனதில் கேள்விகளுடன் வலம்வரும் கவிதைகள் இரண்டு உண்டு

என்
தெருவழியே
போறவரே..
எப்போதேனும்
தூண்டியதுண்டா
சாதனைக்கு
எங்களை?
இல்லையெனில்
ஏன் தூண்டுகிறீர்கள்
எங்களுக்குள்
சாதிக் கலவரங்களை ?

மிகவும் யோசிக்கவும் வருந்தவும் வைத்த இன்னொரு கவிதை

என்
தெருவழியே
போறவரே..
எப்போதேனும்
எண்ணியதுண்டா
எங்களை
போர்க்கருவிகள்
வழங்குமுன்
இல்லையெனில்
ஏன் திறந்தீர்கள்
அகதி முகாம்களை.

புதுவை இளவேனிலின் ஓவியங்கள் கவிதை வரிகளுக்கு வீரியம் கொடுக்க அண்ணல் அம்பேத்கார், பெரியார் ஆகியோரின் கருத்துகள் முன்மொழியப்பட்டிருக்கும் இக்கவிதைத் தொகுதி நிலவுடமையிலிருந்து பொதுவுடமைக்கு மாறிய மக்களின் மனமாற்றத்தின் எழுச்சியை வெளிப்படுத்தும் முக்கியமான ஒரு காலகட்டத்தின் ஆவணமாகும். கட்டாயம் வாங்கி வாசியுங்கள். 

நூல் :- என் தெருவழியே போறவரே
ஆசிரியர் :- கவிமதி
வெளியீடு :- தமிழ் அலை
விலை :- ரூ 50/-

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...