செவ்வாய், 25 ஜூலை, 2017

பாகவதக் கதைகள் – ஒரு பார்வைபாகவதக் கதைகள் – ஒரு பார்வை

பன்னிரெண்டு பாகவதக்கதைகள் அடங்கிய தொகுப்பு இது. என் வலைத்தள & முகநூல் முதுதோழி ருக்மணி அம்மா தொகுத்த கதைகள் இவை. ஒவ்வொன்றும் ஆன்மீகத்தின் அருமையை பகிர்கின்றன. மேலும் பாகவதக் கதையைக் கேட்பதாலும் படிப்பதாலும் பாபவிமோசனம் அடையலாம் என்பது நம்பிக்கை.


இளம் குழந்தைகளுக்குக் கட்டாயம் சொல்லப்படவேண்டிய நன்னெறி அடங்கிய கதைகள். பக்த மார்க்கண்டேயன், பக்த ப்ரஹ்லாதன், பக்த துருவன், பக்த சுதாமா, வாமன அவதாரம், அம்பரீஷன் வரலாறு, அஜாமிளன் கதை, ருக்மணி கல்யாணம், ஸ்யமந்தக மணி, பாகவதம் படிப்பதன் பலன், துந்துகாரியும் கோகர்ணனும், கஜேந்திரமோட்சம் எனப் பன்னிரெண்டு கதைகள் கூறப்பட்டுள்ளன.

க்ருதயுகத்தில் கடவுளை மிகவும் கஷ்டப்பட்டுத் தவம் செய்துதான் காணவேண்டும், திரேதாயுகத்தில் யாகம் யக்ஞம் செய்யவேண்டும் துவாபர யுகத்தில் இறைவன் சேவை, பூஜை, பிரதட்சிணம் செய்யவேண்டும். ஆனால் கலியுகத்தில் இறைவனின் நாமஸ்மரணை செய்தால் போதும் என்று அஜாமிளன் கதை கூறப்பட்டுள்ளது சிறப்பு.

”ஓம் நமோ பகவதே வாசுதேவாய “ என்று பக்த துருவனுக்கு நாரதர் மந்திரோபதேசம் கூறுகிறார். 

அதே போல் கஜேந்திர மோட்சத்தில் யானையாகிய இந்திரத்யும்னன் வருடக் கணக்கில் போராடி அதன் பின் தெய்வத்தின் பால் நம்பிக்கை வைத்து “ஆதிமூலமே..! ஆபத்பாந்தவா ! சரணம், சரணம் ! “ என்று அழைக்க இறைவன் சங்கு சக்கரதாரியாக வந்து உடனே காப்பாற்றுகிறார். எனவே இறைவனை ஒருமனத்தோடு தொழுதால், நம்பிக்கையோடு அழைத்தால் அவன் வந்து காப்பான் என்பது கண்கூடு. 

கடவுளே ஆனாலும் இன்னொருவர் பொருளின்மேல் ஆசை வைக்கக்கூடாது அதனால் துன்பமே நேரும் என்பதைச் சொல்லியது ஸ்யமந்தக மணி என்ற கதை. 

ஏகாதசி விரதத்தின் சிறப்பை அம்பரீஷன் கதை மூலமும் பாகவதக் கதைகளின் பிரவசனத்தைக் கேட்பதன் மூலம் மோட்சம் ஏகலாம் என்பதனை பரீட்சித்து, கோகர்ணன், துந்துகாரி கதை மூலமும் விவரித்திருக்கிறார். 

பக்த ப்ரஹ்லாதனின் கதை வெகு சிறப்பு. தந்தைப் பாசத்தில் ஹிரண்யகசிபுவும் தாய் கயாதுவும் வருதுவதையும் மனம் தொடும் விதம் எழுதி இருக்கிறார் ருக்கு அம்மா. தந்தை மடி மறுக்கப்பட்ட பக்த துருவன் வடக்கு வானில் நித்யமாக ஒளிர்வதும் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. 

குழந்தைகளுக்கு ஆன்மீகம் நன்னெறி நல்லொழுக்கம் ஆகியன புகட்டக்கூடிய இக்கதைகளைப் பள்ளியில் கதை நேரம் என்றொரு பிரியடை வாரம் ஒருதரமாவது வைத்துச் சொல்லிக்கொடுப்பது நலம்பயக்கும் என்பது எனது கருத்து. 

நூல் :- பாகவதக்கதைகள்.
ஆசிரியர் :- ருக்மணி சேஷசாயி
பதிப்பகம் :- சாரதாம்பாள்
விலை:- ரூ 42 /-

2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

நல்ல நெறிகளை எடுத்துச் சொல்ல கடவுள் கதைகள் உபயோகமாகிறது

Thenammai Lakshmanan சொன்னது…

aam Bala sir !

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...