புதன், 26 ஜூலை, 2017

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.


செல்வராஜ் ஜெகதீசனின் இக்கவிதைகள் ஒரு சின்ன உரையாடலையோ சம்பவத்தையோ நம்முன்னே மானசீகமாக நிகழ்த்திவிடும் திறமை வாய்ந்தவை. ஞாபகப் பூட்டினைத் திறந்து நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும் கவிதைச்சாவிகள் அவை.

யதார்த்தக் கவிதைகள் பல. குழந்தைகளின் மொழியும், அன்னையின் மொழியும் ஒரு நண்பனின் மொழியும் சரளமாகக் கவிதையாகின்றன. வீட்டினுள் அமர்ந்திருக்கும்போதும் ஒரு வான ஊர்தியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நம்மை அச்சத்தில் செலுத்துவதை ”விரும்பாதவை” என்றொரு கவிதையில் நான் உணர்ந்தேன். 


இதில் கல்யாண்ஜியின் முன்னுரையில் ///நாம் புழங்குகிற மொழியை அனுபவங்களின் தலைகீழ் விதையாக அவை ஊன்றுகின்றன. நாமறியாச் சொல்லின் இலைகளுடன் அவை முளைத்து, நாமறியாப் பொருளின் வாசனையுடன் அவை பூத்து, நாமறியா எழுத்தின் ருசியுடன் அவை கனிகின்றன // என்று படித்தவுடன் என் கரங்களே கனிகளால் நிரம்பியது போல் இருந்தது. 

சாதாரண விஷயங்களையும் விவேகமான வார்த்தைகள் கவிதைகளாக்கி விடுகின்றன. 52 கவிதைகளில் அனைத்துமே என்னைக் கவர்ந்தவை என்று கூறிவிடலாம். கவிதைத் தேனை மாந்துதல் என்பது எனக்குள்ளே இவரது கவிதைகளைப் படித்தபோது நிகழ்ந்தது எனக்கே ஆச்சர்யம். ஒவ்வொரு கவிதையும் ஒரு தேன் துளி.

’மீட்டாத வீணை’ என்ற முதல் கவிதையே அசத்தல் ரகம். வெகு நாள் கழித்துச் சந்திக்கும், இருவேறு இடங்களைப் பற்றிப் பேசும் நண்பர்கள் நடுவில்,

தன் பொருட்டும்
ஏகும் விரல்களுக்காக
மீட்டாத வீணையென
காத்திருக்கும்
மீளாத்துயரில் அந்த இடம்.

இன்னொரு கவிதை.

தளும்புவதில்லை
நீர் நிறைந்த குடங்களுடன்
நீரற்ற குடங்களும்//

இது என்னை வெகுவாக யோசிக்க வைத்தது. உண்மைதானே. நமது ஒப்பீடுகளும் கல்லடிகளும் எப்போதுமே கனிந்தவைகளுடன்தான். காய்க்காதவற்றுடன் அல்லவே.

அதேபோல் ’அடையாளங்களை அழித்தல்’ என்றொரு கவிதை. முற்றாக மாற்றுச் சிந்தனையில் செலுத்தியது. நாம் எதிர்பாராத பாடு பொருட்களையும் உயிர்ப்பிக்கக்கூடிய சக்தி இவரது கவிதைகளுக்கு இருக்கிறது. 

என்னை வெகுவாகக் கவர்ந்த கவிதைகள் ’மறுமுறை, சிறு கவிதைகள், ஞாபகங்கள் இல்லாது போகும் ஒரு நாளில், எப்போதும் நம் வசமே, முன் முடிவுகளற்று இருப்பது, மாற்று வழி, இயல்பாய் இருப்பது,ஆட்சேபணை, அனுகூலம், கவிதை பத்து, பார்வைகள்,’ ஆகியன.

’இன்றுவரை’ என்றொரு கவிதை நம் அனைவருக்குமானது

நிச்சயமாய்
தெரியுமென்றாலும்
நீண்டு
கொண்டுதான் இருக்கிறது
இன்று வரை.

ஏதாவதொரு
கையசைப்போ
எதிர்கொண்டழைக்கும்
முகமொன்றுக்கோ
ஆன ஏக்கங்கள். 

அன்பான பொழுதுகளை மட்டுமின்றி வெறுத்தலில் நிகழும் பொழுதுகளையும் கவிதையாக்குதல் அசாத்யம். அதுவும் கைவரப் பெற்றிருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன். 

///அன்பின் நிமித்தமான
ஒரு பரிசளிப்பிற்குப் பின்
அடுத்தொரு சந்திப்பிலேயே
வெகு மூர்க்கமாய்
உன்னைத் தாக்க நேர்ந்த
இந்தப் பொழுதைப் போல். //

ரயிலின் காதலியான எனக்கு ரயில் கவிதைகள் ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தன. 

குடும்பத்தை ஏற்றிச் சென்றது ரயில்
கூட வருமிந்த
தனிமையை என்னசெய்ய ?

ஒரு ரயில் சிநேகிதத்தைப்
போலாவது இருந்திருக்கலாம்
நமதந்த இறுதிப் பிரிவு. 

இன்னமும் பிரிவதற்கு
ரயில்நிலையங்களே
ஏதுவாய்.. 

’பின் தொடரும் நிழல்’ படித்தால் நமது விலாவிலும் குறுவாள் பாயும், துண்டித்த தலை இருக்க தொலைபேசிக் கொண்டிருப்போம், வன்கொடுமை நம்மைப் பின் தொடரும் நிழலாய்த் தொடரும். இக்கவிதைக்காகவே இந்நூலைக் கட்டாயம் வாங்கி வாசியுங்கள். 

எனக்கும் பிபி ஸ்ரீனிவாசின் குரல்மேல் உன்மத்தம் உண்டு. அதைக்கூறும்  கவிதை அருமை. ’நண்பர்கள் வட்டம்’ எனக்கான எச்சரிக்கை மணியை அடித்தது. ஏனெனில் நானும் ஒரு சாட்டர்பாக்ஸ். உண்மையாகவே அது ஒரு ’நிராகரிப்பு’த்தானா என்ற கவிதையும், ’தொடர் விளையாட்டும்’ அற்புதம். 

படிப்பவருக்கும் எழுத்தாளருக்கும் மட்டுமேயான விஷயப் பரிமாற்றம் போல சில கவிதைகள் அட போட வைக்கின்றன. சில மெல்லிய துக்கத்தையும் சில புன்முறுவலையும் சில உள்மனத்தில் நம்மைப்பற்றிய நன்முக பிம்பங்களை மறு அலசல் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றன.


கவிதைத் தொகுதிகள் அருகிவரும் இந்நாளில் மிக அருமையான இந்நூலைப் பதிப்பித்த அகநாழிகை பொன் வாசுதேவனுக்கும் வாழ்த்துகள்.

கல்யாண்ஜி முன்னுரையில் சொன்னது போல வாசித்தல் என்றொரு முகாந்திரம் நம்மைப் பறத்தலுக்கு இட்டுச் செல்கிறது , வெவ்வேறு மனிதர்களின் கனவுகளுக்கும் கவிதைகளுக்குள்ளும் அவர்களின் மன உலகுக்குள்ளும் ப்ரவேசிக்கும் சுதந்திரம் தருகிறது. இதைத் தவிர வேறென்ன வேண்டும் வெண்ணிறப் பறவைகளுக்கு. 

நூல் :- ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
ஆசிரியர்:- செல்வராஜ் ஜெகதீசன்
பதிப்பகம்:- அகநாழிகை
விலை :- ரூ 50.

3 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

ரயில் கவிதை அருமை. முதல் கவிதை புரியவில்லை. ஆனால் தலைப்பு என்னை மூழ்கடித்துக்கொண்டே இருக்கிறது!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் அறிமுகம். நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

ahaa ! nandri Sriram !

nandri Venkat sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...