எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.


ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.

ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை

காந்தி தேசம், சுமங்கலித்திட்டம், நீர் மேலாண்மை வாழ்வியல் விதைகள் ஆகிய காத்திரமான கட்டுரை நூல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல  பத்ரிக்கையாளர் திருமலை அவர்களும், குடிநீர்வாரியத்தில் தணிக்கை உதவியாளராகப் பணியாற்றியவரும் குடிநீரில் ஃப்ளூரைடு கலந்திருப்பதை எடுத்துக்காட்டி எச்சரிக்கைசெய்து நூலாக அளித்தவருமான கே கே என் ராஜன் அவர்களும் இணைந்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு இது. புதிய தரிசனம் வெளியீடு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஆர். நல்லக்கண்ணு காத்திரமான முன்னுரை அளித்துள்ளார்.

மணல் கொள்ளையினால் மரணத்தை நோக்கிச் செல்லும் ஆறுகள், தண்ணீரை சேமிப்பதில் மணலின் பங்கு, மணற் கொள்ளையில் ஆற்றோரங்களில் குடி இருப்பவர்களின் அறிந்தும் அறியாமலுமான பங்கு, மணலின் தேவைகள் குறித்துப் பேசுகின்றன கட்டுரைகள்.

சிங்கப்பூரின் மணல் தேவைக்காக இந்தோனேஷியாவிலிருந்து டன் கணக்கில் கடத்தப்படுவதும், கேரளாவின் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்படுவதுமான மணல் பற்றிய ஆதங்கம் சொல்லப்பட்டிருக்கிறது. 

மேலும் இந்நூலே மணல் கொள்ளையைத் தடுப்பதில் மாண்ட ஷியாம்தேவசகாயம், சதீஷ்குமார், விவசாயி ராஜேந்திரன், காவலர் கனகராஜ், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தசுடலை முத்து போன்ற எண்ணற்றோருக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நதிக்கரை நாகரீகங்களில் செழித்து வளர்ந்த நாம் மணலை அள்ளுவது குற்றமல்ல. ஆனால் தேவைக்கதிகமாகச் சுரண்டிக்கொழுப்பதுதான் குற்றம் என்பதை அறியவில்லை. எவ்வளவு அடி வரை மணலை எடுக்கலாம் என்ற அளவீடு உள்ளது . அதைப் பின்பற்றுவதில்லை. மேலும் நீரைத் தேக்கி வைப்பதில் மணல் வகிக்கும் பங்கை அறியவில்லை என்பதை அறைகின்றன கட்டுரைகள். 

மணல் அள்ளுவதால் வரண்டு சுரப்பு வற்றுவதோடு அதிகப்படியாய்ப் பெருகும் மழை & வெள்ள நீரையும் காட்டாறாய் கடலில் கொண்டு சேர்க்கிறது என்று அதிர்ச்சியூட்டுகிறது.  

தாமிரபரணி, வைகை ஆகியவற்றின் கிளைவாய்க்கால்கள்,கால்வாய்கள், குளங்கள், ஏரிகள், இன்னும் நீர் சேமிப்பு பற்றிய நாற்பது விதமான தடாகம், மடு , படு, வாய்த்தலை, கொள்ளிடம், பண்ணை, வாவி, வட்டம், கோட்டம், கேணி, இலஞ்சி, பங்கம், தடம், பொய்கை, அலந்தை, கிடங்கு, குட்டம், பல்வலம், தாங்கல், பயம், கயம் ஆகியன குறித்தும் கூறுகிறது.

அதிநவீன கனரக எந்திரங்களான பொக்லைன் & மோட்டார் வாகனங்கள் கொண்டு ஒப்பந்தமில்லாத இடங்களிலும் மணல் சுரண்டுதல், அரசு கையில் ஏன் மணல் குவாரி சென்றது., அரசு கட்டித்தரும் நிவாரண வீடுகளுக்காக எவ்வளவு டன் மணல் கையகப்படுத்தப்பட்டது தனிநபர் கையில் மேற்பார்வை இல்லாமல் தாரை வார்த்தது, மணலை அளவுக்கு மீறி அள்ளுவதன் மூலம் அதன் கரையோரத் தாவரங்களின் வளர்ச்சி அற்றுப் போவது, இதனால் வெள்ளப் போக்கின்போது அதிகப்படியான நீர் வீணாவது, தொழிற்சாலையின் நச்சுக் கழிவுகளை நதியில் விடுவதால் வரும் கேடுகள், மெல்ல மெல்லப் பாலையாவது குறித்த அவசம் எல்லாக் கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது.

மணல் கொள்ளையால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை, மரணங்கள், கொலைகள், குவாரியில் 600 ரூபாய்க்கு விற்கப்படும் மணல் வெளிச்சந்தையில் பத்தாயிரமும் கேரளாவில் 30,000 வரையிலும் விற்கப்படுவதால் இதில் மணல் மாஃபியக்களின் பங்கு, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு, மணல் கொள்ளையை எதிர்த்த மக்களை காவல்துறை நடத்தியவிதம், மணல் பயங்கரவாதம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள், மூடப்பட்ட குவாரிகள், மீறப்படும் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைப் புள்ளி விவரங்களோடு புட்டு வைக்கிறது நூல்.

பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டங்கள், அரசின் ஆணைகள், ஏலம் எடுப்பதன் விதிமுறைகள், தடை செய்யப்பட்ட பகுதிகள், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுதல், ஆய்வுக்குழு அறிக்கைகள், மணல் என்பது தேசிய கனிம வளம் என்பது பற்றிய விழிப்புணர்வு, மணற் கொள்ளைக்கு எதிரான சட்ட திட்டங்கள் , நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு அமுல்படுத்துதல், கேரளா,ஆந்திராவில் கொண்டு வரப்பட்ட மாற்றம் ஆகியவற்றை முன்மொழிகிறது.  

தமிழ்நாடு போன்றே கர்நாடகாவிலும் ஆறுகள் மறைமுகக் கொள்ளைக்கு ஆளாவதைக் குறிக்கின்றன கட்டுரைகள். ஆற்று மணலுக்கு மாற்றாக கட்டுமானப் பணிக்கு கடல் மற்றும் பாறைப்பகுதி மணலைப் பயன்படுத்தலாம் என்பது ஆராய்ச்சி அளவில் உள்ளது. ஆற்று மணலோடு செம்மண்ணும் கலந்து அஸ்திவாரம் அமைத்தல் ஆகியனவும் கிரானைட்டிலிருந்து தயாரிக்கப்படும் ( மேனுஃபாக்ஸர்ட் சாண்ட் ) எம் சாண்ட், மலைமாவு ( quary dust stone, crusher dust ) , கட்டிட உறுதியை அதிகப்படுத்த கான்க்ரீட் கலவையோடு கண்ணாடித் தகடுகளின் பவுடரைக் கலப்பதும் மேலும் ஹாலோ ப்ரிக்ஸின் உபயோகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணற்கொள்ளையைத் தவிர்க்கும் தீர்வுகள், அறிவியல் வல்லுநர்கள், நிலவியல் வல்லுநர்கள், இயற்கை & சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரின் அதிரடிக் கருத்துக்களுடன் வெளியாகி உள்ளது இந்நூல். அதிர்ச்சி அளித்தாலும் தகுந்த சமயத்தில் மக்களுக்கும் அரசுக்கும் தகவல்களும் தீர்வும் அளித்து எச்சரித்திருக்கும் இந்நூலைக் கொடுத்த திரு. ராஜன், திரு. திருமலை, திரு. ஜெபகுமார் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

நூல் :- ஓலமிடும் ஆற்று மணல்
ஆசிரியர் :- ப. திருமலை & கே. கே. என். ராஜன்
பதிப்பகம் :- புதிய தரிசனம்
விலை :- ரூ 160/-

3 கருத்துகள்:

  1. நல்ல அறிமுகம். தமிழகத்தில் தொடரும் அவலம் இது..

    பதிலளிநீக்கு
  2. பாலாறு வற்றியதன் காரணமே இந்த மணல் கொள்ளைதானே...

    //நதிக்கரை நாகரீகங்களில் செழித்து வளர்ந்த நாம் மணலை அள்ளுவது குற்றமல்ல. ஆனால் தேவைக்கதிகமாகச் சுரண்டிக்கொழுப்பதுதான் குற்றம் என்பதை அறியவில்லை. எவ்வளவு அடி வரை மணலை எடுக்கலாம் என்ற அளவீடு உள்ளது . அதைப் பின்பற்றுவதில்லை. மேலும் நீரைத் தேக்கி வைப்பதில் மணல் வகிக்கும் பங்கை அறியவில்லை என்பதை அறைகின்றன கட்டுரைகள். //

    அருமை...தமிழகத்தில்தான் இந்த மணற்கொள்ளை அதிகம் என்று தோன்றுகிறது...நல்ல அறிமுகம்

    --இருவரின் கருத்தும்

    பதிலளிநீக்கு
  3. ஆம் பாஸ்கர் சகோ

    ஆம் துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...