எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 டிசம்பர், 2018

சாக்குப் போக்குச் சொல்லாதீங்க.


சாக்குப் போக்குச் சொல்லாதீங்க. :-

சாக்குப் போக்குச் சொல்லாதீங்க

  ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்ய தாமதப்படுத்திக் காரணம் சொல்பவர்களைப் பார்த்துசாக்குப் போக்குச் சொல்லாதீங்கஎன்று கடிவது நடைமுறை. சுறுசுறுப்பில்லாமல்  வேலை செய்து கெடுப்பவர்களைப் பார்த்துநொண்டிக்குதிரைக்குச் சறுக்கினதே சாக்குஎன்று கிண்டலடிப்பதும் உண்டு. சாக்கு என்பது இங்கே தட்டிக் கழிப்பது என்ற பொருளில் வருகிறது.  ’பை’ என்ற ஓரெழுத்துச் சொல்லுக்குத் தமிழில் சாக்கு என்றொரு அர்த்தமும் உண்டு. !

  சணல் செடியின் தண்டுகளில் இருந்து இருந்து சணல் பிரித்தெடுக்கப்பட்டுச் சாக்கு தயாரிக்கப்படுகிறது. இது வங்காளத்தில் அதிகம் விளைவதால் வங்காளத்தின் தங்க இழை என்று அழைக்கப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டில் ஸ்காட்லாண்டின் டண்டி என்ற இடத்தில் உள்ள ஆலைகளில் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்துப் பயன்பாட்டுக்கு வந்தது. சணல் ஒரு பணப்பயிரும் கூட




இந்த சணல் பல நூற்றாண்டுகளா பயன்பாட்டில் இருக்கு. புராணகால மரவுரி போன்றவை தாவர இழையும் மர இழையும் கலந்த சணலில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். பதினைந்தாம் நூற்றாண்டில் அபுல் பசல் எழுதிய அயினி அக்பரி என்ற நூலில் இந்திய கிராம மக்கள் சணலில் செய்த ஆடை அணிஞ்சதா விவரங்கள் இருக்கு. சணலிலும் டோஸா சணல், வெள்ளைச்சணல் என்று பலவகைகள் இருக்கு..

  தானியக் கருவூலங்களும் சார் கருவூலங்களும் இன்னும் சாக்கு மூட்டைகளில்தான் விதை நெல், மற்ற தானியங்களைப் பாதுகாத்து சேமித்து வருகின்றன. முன்பு பொது விநியோகக்கடைகளில் சாக்குகளில்தான் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். நெகிழிப் பைகள் பயன்பாட்டினால் பொருட்களை ஈரம் படாமல் பாதுகாக்கமுடிகிறது என்று ஜவ்வரிசி, சீனி, ஸ்டார்ச் மாவு, தானியங்கள் போன்றவற்றை நெகிழிச் சாக்குகளில் தற்போது அடைக்கிறார்கள். காற்றுப் பட்டால் கட்டிதட்டிப் போகும் சிமிண்ட் போன்றவை எப்போதுமே நெகிழிச் சாக்கில்தான் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் சணல் சாக்குப்பை தயாரிக்கும் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது.

  முன்பு மளிகைக் கடைகளில் சாக்குகளில்தான் அரிசி, பருப்பு, பயறு, மிளகாய் போன்றவற்றைக் கொட்டி வைத்திருப்பார்கள். செய்தித் தாள்களைக் கூம்பு மாதிரி மடித்து பொருட்களை எடை போட்டுக் கொட்டிச் சணலால்தான் கட்டிக் கொடுப்பார்கள். பருத்தி, மக்காச்சோளம், நெல் போன்றவை இன்னும் சாக்குகளில்தான் அடைக்கப்படுகின்றன.

  இதேபோல் காற்றோட்டம் இல்லாவிட்டால் அழுகிவிடும் காய்கறிகளான வெங்காயம் , உருளைக்கிழங்கு. தேங்காய், பழம், பூக்கள் போன்றவை சணல் சாக்குகளில் கட்டப்பட்டே சந்தைகளுக்கு வருகின்றன.  உரங்கள், தீவனங்கள் போன்றவையும் சாக்குகளிலேயே அடைக்கப்படுகின்றன. கோணிப்பைகள் கிழிந்தால் மிகப்பெரும் கோணி ஊசி கொண்டு சாக்கைத் தைத்து ஓட்டையை மூடுவார்கள். ! குளிர்காலங்களிலும் மழைக்காலங்களிலும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் தரை ஈரம் சுரக்கும் . அப்போது தரையில் சாக்கை விரித்து அதன் மேல் பாய் விரித்துப் படுக்கும் பழக்கம் உண்டு. மழை நேரங்களில் இந்தச் சாக்கு ஒரு குடையின் பயன்பாடுகொண்டது. வயல்களில் விதை விதைக்கும்போது மழை பெய்தால் சாக்கின் ஒரு பக்கத்தை வெட்டித் தலையில் முக்கோண மறைப்பாகப் போட்டுக்கொண்டு வேலை செய்வார்கள்.

  வயல்களில் இருந்து வீடுகளுக்குத் தானியம் கட்டிக் கொண்டுவரப் பயன்படும் இவை பழசானதும் வாசல் கால்மிதியாக, கழிவறை மறைப்பாக, வாசல் மறைப்புத் திரையாக, வேலிப்படுதாவாக எல்லாம் பயன்பாட்டிலிருந்துள்ளன. போன நூற்றாண்டின் பள்ளிகளில் குழந்தைகள் இதில் அமர்ந்து கல்வி பயின்றுள்ளனர். சிறு குழந்தைகளின் தொட்டில்களுக்குக் கீழே மூத்திரம் இஞ்சும் சாக்காகவும் பயன்படுத்தி உள்ளார்கள்.

  ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு மாற்றலாகிச் செல்லும்போது  பொருட்களைச் சாக்குப் பையிலும் பெட்டிகளிலும் மூட்டையாகக் கட்டி அனுப்பி வந்தார்கள். ஆனால் அவை இப்போது சோஃபா, அலமாரி, கண்ணாடிப் பொருட்கள், வண்டிகள், சைக்கிள்கள், பைக்குகள் ஆகிவற்றைச் சுற்றிக் கட்டி அனுப்ப மட்டும் பயன்படுகின்றன. மற்றவற்றை அட்டைப் பெட்டிகளில் அல்லது ட்ரம்களில் போட்டு செல்லோடேப்பால் ஒட்டி விடுகிறார்கள். ரயில் நிலைய பார்சல்கள், பாக்கேஜுகள் சாக்குகளில் கட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.  

  எதிரி தேசத்தின் எல்லையில் போர் மூளும் போது மணல் சாக்கு மூட்டைகளின் பின்னிருந்துகொண்டும் வீரர்கள் போரிடுவதுண்டு. இன்றைக்கும் பள்ளிகளில் சாக்கு ஓட்டம் என்றொரு விளையாட்டு உண்டு. சாக்குக்குள் கால்களை விட்டுக் குதித்துக் குதித்து ஓடுவதுதான் அது.

  சணல் பொம்மை, சாப்பாட்டு மேசை  விரிப்புகள், சடராஞ்சி பாய்கள் எனப்படும் வால் ஹாங்கர்கள், வண்ணங்கள் தீட்டப்பட்ட கடிதப் பைகள், நூல் மற்றும் உல்லனால் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்ட கைப்பைகள், வீட்டு உபயோகப் பைகள், பாய்கள், கால்மிதிகள், செருப்புகள், ஷூக்கள், காய்கறி பழத்தட்டுகள், கூடைகள், மோடாக்கள்  செய்யப் பயன்படுகின்றன. சணலில் இருந்து தயாரிக்கப்படும் துணிகள் பர்லாப் என்றும் ஹெஸ்ஸியன் துணிகள் என்றும் அழைக்கப்படுகின்ற.

  சணலால் செய்யப்பட்ட பாய்களை வெள்ள அரிப்பைத் தடுக்கப் பயன்படுத்துறாங்க. மேலும் பாலங்கள் போன்றவை அமைக்கப்படும்போது மணல் சாக்கு மூட்டைகள் நதிநீரை எதிர்த்து அடக்க அடுக்கப்படுகின்றன. குளிரான பிரதேசங்களில் சணல் விரிப்புகள் கதகதப்பைக் கொடுக்கின்றன.படுதா, சாக்கு, கித்தான். கோணி, ரக்குகள் என்றழைக்கப்படும் இதன் சேவைகள் இயற்கை சார்ந்தது. காடழிப்பைத் தடுக்குது. மறு சுழற்சியும் செய்யலாம். சீக்கிரம் மக்கக் கூடியவை. இவை அழுகினால் பூமியைக் குளிர்வித்து அதிகமாக வளப்படுத்துது. இவ்வாறு சுற்றுச்சூழல் நட்பைப் பேணும் சாக்கை உபயோகிக்க இனிமேலும் சாக்குப் போக்குச் சொல்லாதீங்க.

6 கருத்துகள்:

  1. நாம் தொலைத்து வரும் நல்லவனவற்றில் ஒன்றைப் பற்றிய அருமையான பதிவு. பனிக்காலத்தில் எங்கள் ஆத்தா சாக்கில்தான் படுக்கக்கூறுவார்கள். படுக்கும்போது குத்தும் என்பதற்கான அதன்மீது பாய் போட்டுப் படுப்போம். நெருக்கமான சணலைக் கொண்ட (பொதுவாக ஜீனி மூட்டை சாக்கு என்பார்கள்) நான்கினை தைத்து பெரிய விரிப்பாக கூடத்தில் விரித்திருப்பார்கள். அவ்வாறே பெரிய அளவில் சாக்கில் திரைச்சீலை போல தைத்துவைத்திருப்பார்கள். குளிர் காலத்தில் அதனை இறக்கிவிட்டுப் படுப்போம்.

    பதிலளிநீக்கு
  2. சாக்கு போக்கு சொல்லாமல் உடனே சொல்லிவிட்டேன். இது ஒரு நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. சணலில் பெருமை அருமை உணர்த்தும் பதிவு

    பதிலளிநீக்கு
  4. அஹா சாக்குப் படுதா குளிர் தாங்கும் அருமையா சொன்னீங்க ஜம்பு சார்

    நன்றிப்பா பானு

    ஆம் ஸ்ரீராம்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...