எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 டிசம்பர், 2018

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள். தினமலர். சிறுவர்மலர் - 46.

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள்.


தேசம் தேசமாகச் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது ஒரு புரவி. அதை ஒருவரும் கட்டி வைக்க முயலவில்லை. ஆனால் இரட்டையராய்ப் பிறந்த சின்னஞ்சிறுவர்கள் அதைக் கட்டி வைத்துவிட்டார்கள். அயோத்தி மாநகரமே போருக்கு வந்தும் அதை மீட்க முடியவில்லை. கடைசியாக ராமன் வந்துதான் மீட்டார். அப்படிப்பட்ட வீரச் சிறுவர்கள் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வால்மீகி முனிவரின் ஆசிரமம். காலைச் சந்தி. அங்கே முனிவர்கள் தினசரி பூஜை புனஸ்காரங்கள் செய்து வேதபாராயணம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். வால்மீகி முனிவரின் அருகே இரட்டை நிலவு போல் காட்சி தரும் இரு சிறுவர்கள் அவருடைய பூஜைக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் லவன் மற்றும் குசன். சீதைக்கும் ராமருக்கும் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

இவர்கள் தாய் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தபின் இவர்களைப் பெற்றாள். அதனால் அவர்களுக்கு ராமர் தம் தந்தை என்பது தெரியாது.
”சாமி ..ஒரு குதிரை சர்வ அலங்காரத்தோட நம்ம ஆசிரமம் பக்கமா வருது. அது யாரோடதுன்னு தெரியல “ என்று சொன்னார் ஒருவர்.
“அலங்காரத்தோட வருதுன்னா அது அஸ்வமேத யாகக் குதிரையா இருக்கலாம் “ என்று சொன்னார் வால்மீகி முனிவர்.
“அது ஏன் இங்கே வருது. அதப் போய் நாங்க பிடிச்சுக் கட்டி வைக்கிறோம். அனுமதி கொடுங்க” என்று கேட்டார்கள் சிறுவர்களான லவனும் குசனும்.

”அது யாரும் அரசருடைய குதிரையா இருக்கலாம். நம்ம ஆசிரமத்துக்கு இடையூறு இல்லாம கட்டி வைங்க. ஆனா அந்த அரசன் வந்தா அவருடைய புரவியைப் பிடிச்சு வைச்சதுக்காக நம்மோடு போருக்கு வருவாங்களே ” என்று சொன்னார் வால்மீகி முனிவர்.
”அது யாரா இருந்தாலும் சரி நாங்க உங்கள் மேல் துரும்பு கூட படாமல் காப்பாத்துவோம் மகரிஷியே. அனுமதி கொடுங்க “ என்று துடித்துக் கொண்டிருந்தார்கள் இள வீரர்கள்.
அவருடைய அனுமதி கிட்டியதும் தாய் சீதாதேவியின் பாதத்தில் வில் அம்புகளை வைத்து வணங்கிப் புறப்பட்டார்கள். தாய்க்கும் கவலைதான் என்றபோதும் இளவயது மகன்களின் வீரத்தை எண்ணிப் பூரித்து குழந்தைகளுக்கு வெற்றி கிட்டவும் ஆசி வழங்கினாள்.

ந்தக் கானகம் முழுவதும் லவனும் குசனும் அம்பறாத்துணி நிறைய பாணங்களோடு கையில் பிடித்த வில்லும் அம்புமாய் புரவியைத் தேடித் திரிந்தார்கள். நண்பகல் வேளையில் மினு மினுவென்ற அங்கி அலங்காரத்தோடு ஒரு புரவியின் முதுகில் ஒரு கொடி ஒன்றும் பறந்து கொண்டிருந்தது. அக்குதிரைக்கு சேணமும் கடிவாளமும் இடப்படவில்லை. இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

இரு சிறார்களும் இருபுறமும் வியூகம் அமைத்து அதைப் பிடித்தனர். ஹூங்காரம் செய்து திமிறிக் கனைத்தது குதிரை. அசராமல் அதன் கழுத்தைப் வளைத்துப் பிடித்து மரம் ஒன்றில் கட்டிப் போட்டார்கள்.

அஸ்வமேத யாகக் குதிரை என்பதால்  அதன் பின்னேயே அக்குதிரையை அனுப்பிய அரசனின் வீரர்கள் வருவார்கள். யார் அதைப் பிடித்தாலும் சண்டையிட்டு மீட்பார்கள். இரு சின்னஞ் சிறுவர்களிடமிருந்து யாகக் குதிரையை மீட்க வேண்டி லவனோடும் குசனோடும் சண்டையிட்டார்கள்.
நண்பகல் வெய்யிலில் மின்னும் விற்கள் லவன் குசனின் அம்புகளில் இருந்து பாய்ந்து வீரர்களை மயக்கமடையச் செய்தன. இதைப் பார்த்த அனுமன் கோபமாகக் கதையைத் தூக்கிக் கொண்டு தாக்க வந்தார். அவரையும் லவனின் விட்ட அம்பு மயக்கமுறச் செய்தது.

”இப்புரவி எங்களுக்கே சொந்தம். இதைப் பிடிக்க யார் வந்தாலும் தரமாட்டோம் “ வெற்றி முழக்கமிட்டார்கள் இரட்டையர்கள்.  அஹா இதென்ன கருமேகம் போல சூழ்ந்து வரும் படையுடன் லெக்ஷ்மணன் வருகிறாரே.

அசந்தார்களா சிறுவர்கள். இல்லையே. அடுத்து அடுத்து அவர்களின் அம்பறாத்துணியில் இருந்து பாணங்களை பறந்தன. யானை படை சேனை பட்டாளம் அனைத்தும் மயங்கிச் சரிந்தது. லெக்ஷ்மணனும் கூடத்தான்.

விபரம் கேள்விப்பட்டு இராமரே அந்த அஸ்வமேத யாகக் குதிரையை மீட்க வந்தார். இரட்டை சூரியன்கள் போல ஜொலிக்கும் பேரழகோடு இரு சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்களா அஸ்வமேத யாகப் புரவியைக் கட்டி வைத்தவர்கள் ?. தன் சேனையையும் வீழ்த்தியவர்கள் ? நம்பமுடியாமல் பார்க்கிறார் இராமர்.

அந்தக் குழந்தைகளுக்கும் அவரைப் பார்த்ததும் பாசம் தோன்றினாலும் குதிரையைக் கொடுக்கத் தயாராக இல்லை. தேஜஸோடு நிற்கும் இரு சிறுவர்களின் கைகளிலும் வில்லும் அம்பும் முளைக்கின்றன. அதே சமயம் ” ஆஹா குழந்தைகளே. நிறுத்துங்கள். வில்லையும் அம்பையும் கீழே போடுங்கள். இவர் உங்கள் தந்தை “ என்ற சீதையின் குரல் ஒலிக்கிறது.

“என்னது தங்கள் தந்தை இவர்தானா. அயோத்தியின் அரசர் இராமரா.. “ விழி விரித்துப் பார்த்த இரட்டையர் இருவரும். அவர் பாதம் பணிகின்றார்கள்..
தங்களை மன்னிக்கும்படி வேண்டி தாங்கள் பிடித்த அஸ்வமேத யாகக் குதிரையை அவரிடம் கொடுக்கிறார்கள். லவனும் குசனும் தன்னுடைய பிள்ளைகள் என்று அறிந்த இராமர் மகிழ்கிறார். அவர்களை அணைத்துக் கொள்கிறார்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 30 . 11. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார். 

2 கருத்துகள்:

  1. நல்ல கதை.

    சிற்வர் மலரில் உங்கள் படைப்பு - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...