எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

தீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை


தீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை

தீர்வைத் தேடும் பார்வை

சமுக அக்கறையோடு பல்வேறு கட்டுரை நூல்கள் படைத்துள்ள பிரபல பத்ரிக்கையாளர் திருமலை அவர்களின் 23 காத்திரமான கட்டுரைகள் தாங்கிய நூல் இது. பாவைமதி பதிப்பகத்தின் வெளியீடு.

சமூகம், பெண்கள், குழந்தைகள், நீர், பொருளாதாரம், தமிழன், சுற்றுச்சூழல் ஆகிய கருப்பொருட்களைக் கொண்டு கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை பாவையர் மலரில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தில்தான் அனைத்து மக்களுக்கும் சமூகநீதியிலான அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்ற அரிய தகவலோடும் பெரியாரின் சிந்தனைகளோடும் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை. கிட்டத்தட்ட 1208 தலித் சாதிகளும், 577 பழங்குடிகளும் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளும் உள்ள நம்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அதிகாரங்கள், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றில் சமநீதி கிடைத்திருக்கிறதா எனக் கேள்விகேட்கின்றது முதல் கட்டுரை.

கல்வி நிலையங்களில் சாதிய ஒடுக்குமுறை காரணமாக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை பற்றியும், சிறைச்சாலையில் நிகழும் மரணங்களும் ( ராம்குமார் )  மரண தண்டனைதான் என்றும், தூக்குத்தண்டனை கெடுபிடிகள் பற்றியும், பாதாளசாக்கடை சுத்தம் செய்ததால் உயிரிழந்தவர்கள் பற்றியும், விவசாயிகள் இறப்பு பற்றியும், மீனவர்கள் உரிமை பற்றியும் கந்துவட்டிக் கொடுமை பற்றியும், பயமுறுத்தும் பட்டாசு ஆலைகள் பற்றியும் உரத்த கருத்துக்களையும் மனிதநேயத் தீர்வையும் ஆசிரியர் முன்வைக்கிறார்.

பெண் குழந்தைகள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம் பற்றியும், சின்னச் சின்னப் பிணக்குகளுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவ மாணாக்கியர் பற்றியும், தெருவோரம் குப்பை பொறுக்கும் சிறுவர்களின் வாழ்வாதாரம் பற்றிய கவலையும் , அவர்கள் கடத்தப்படுவது குறித்தான அதிர்ச்சித் தகவல்களையும் பகிர்கின்றன.

பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் மகளிர்க்கான சம உரிமைகள், அவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தையும் அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு வழங்கி இருக்கும் இடத்தையும் தெளிவுபடுத்துகின்றன இன்னும் சில.

இயற்கைப் பேரிடர்கள் ஏன் நிகழ்கின்றன, மழை நீர் சேகரிப்பின் அவசியம், வெள்ள சேதத்துக்குக்கான காரணம், அரசர்கள் காலத்தில் மக்களும் மன்னனும் நீர்நிலைப் பராமரிப்பில் கொடுத்த முக்கியத்துவம், நீர் உரிமை, நிலத்தடி நீர், கடலையும் ப்ளாஸ்டிக், ஆயுதம், எண்ணெய்க் கழிவுகளால் குப்பைத் தொட்டியாக்குதல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீர் வழங்கும் உரிமையைத் தாரை வார்க்கமலிருத்தல் பற்றி அறிவுறுத்துகின்றன நீர்ப்போர் பற்றிய கட்டுரைகள்.

விவசாயக் கடன், கல்விக்கடன்களில் இறுக்கம் காட்டும் வங்கிகள் மிகப்பெரும் பணக்காரத் தொழிலதிபர்கள் வாங்கிவிட்டு டேக்கா கொடுக்கும் வாராக்கடனை வசூலிப்பது பற்றிக் கவலைப்படாமல் அரசால் தள்ளுபடி செய்யப்படும் அவலம் மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் பற்றி நச்சென அறிவிக்கிறது பொருளாதாரக் கட்டுரை ஒன்று. சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறது இன்னொருகட்டுரை.

அகழ்வாராய்ச்சியின் மூலம் பண்டையத் தமிழனின் தொன்ம வாழ்வியல், மொழி,, நாகரீகம் பற்றியும், கண்ணகி கோவில் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது பற்றிய கல்வெட்டின் வரலாற்று ஆதாரங்கள் கொடுத்து விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.   

சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக புவி வெப்பமாதல், சுனாமி ஏன் ஏற்படுகிறது, தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. கடலில் எரிமலை போன்றவற்றின் மூலம் கண்டத்திட்டுகள் அசைவதால் ஏற்படும் கடல்கோள் எனப்படும் சுனாமியும் , அந்த சுனாமியும் கரையோரங்களில் மாங்க்ரோவ் காடுகள் இருந்தால் கட்டுப்படுத்தப்படுவது பற்றியும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளது அருமை.

பாவையர் மலரில் இவ்விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிட்டு அரசியல் பொருளாதாரம், இயற்கை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதுகாப்பற்ற கீழ்நிலைப் பணி செய்வோர் மீதும், சாதீய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டோர் மீதும் , மரணதண்டைக் கைதிகள் ஆகியோர் மீது கொள்ள வேண்டிய மனித நேய நடவடிக்கைகள், பெண்கள் குழந்தைகளின் உரிமைகள், நீர் மேலாண்மை, புவி வெப்பமாதல், சுனாமி பற்றியும், தமிழனின் தொன்மை, கண்ணகியின் மகத்துவம் பற்றியும், வெகுஜனத்துக்கும் அரியதகவல்கள் கொண்ட இக்கட்டுரைகளை பாவையர் மலரில் வெளியிட்டும் அழகான முன்னுரையோடு இந்நூலில் அறியத்தந்திருக்கும் பாவையர் மலர் ஆசிரியை வான்மதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். 

அருமையான கட்டுரைகள் படைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் பத்ரிக்கையாளர் திருமலை அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மொத்தத்தில் அருமையான தீர்வைத் தேடும் பார்வை கொண்ட நூல் இது. 

நூல் :- தீர்வைத் தேடும் பார்வை
ஆசிரியர் :- ப. திருமலை
பதிப்பகம் :- பாவைமதி வெளியீடு
விலை :- ரூ 150/-

2 கருத்துகள்:

  1. நூலை வாங்கிப்படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது உங்களின் இப்பதிவு. வாங்கி, வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...