எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

வையாசி 19 – ஒரு பார்வை.


வையாசி 19 – ஒரு பார்வை.

வையாசி 19

கரிசல் மண்ணின் கதைகளைப் போல வண்டல் மண்ணின் கதைகளைப்போல சரளையும் கரளையும் நிரம்பிய செம்மண் பூமியான செட்டிநாட்டுப் பகுதியின் கதை இது. ஒரு நூற்றாண்டுக்கான செட்டிநாட்டு வாழ்வியல் ஆவணம் என்றும் சொல்லலாம். கே செட்டியார் பயணக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள். அரு ராமனாதன் வீரபாண்டியன் மனைவி என்ற சரித்திரப் புதினம் எழுதி இருக்கிறார்கள். தமிழண்ணல் போன்றோர் சில கதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் இப்பகுதி பற்றிய முழுமையான வாழ்வியல் நாவல் ஒன்றை இன்பாவைத் தவிர யாரும் எழுதி இருக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை. இருந்தால் குறிப்பிடுங்கள்

ஆதியில் நாகநாட்டில் இருந்து வந்து காஞ்சிபுரம் பூம்புகார் சிதம்பரம் சோழநாடு பாண்டிநாடு என்று வலசை வந்தவர்களின் வாழ்வியல் அம்சங்கள் நிரம்பிய கதை. மேலும் பர்மா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு கொண்டுவிக்கச் சென்றவர்களின், புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை மாற்றங்களையும் ஏற்றங்களையும் சுட்டுகிறது.

மீனா என்ற பெண்ணைக் கதை நாயகியாகக் கொண்டு சென்ற நூற்றாண்டில் பெண்களின் திருமணம், ( வையாசி 19 இல் பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. நாலாந்தாரம், ஐந்தாம்தாரமாகக் கூடக் கொடுத்தல் ), சமைந்த சடங்குகள் , ஐந்து நாள் திருமண நடைமுறைகள், அடுத்தடுத்துப் பிள்ளைப் பேறுகள், ஐந்தாறு பிள்ளைகளுடன் மூத்தாளின் பிள்ளைகளையும் வளர்த்துத் திருமணம் செய்துகொடுத்தல், வயது வருவதற்கு முன் திருமணம் செய்வித்தல், கைம்மைநிலை அடைந்ததும் அவர்களுக்கான இடம், அதையும் கடந்து வெளிநாட்டில் இருக்கும் குடும்பச் சொத்துக்களைப் பாதுகாக்க கப்பலில் கடல் கடந்து சென்று போராடுதல் என விரிகிறது கதை. சுதந்திரத்துக்கு முன்னான காலகட்டத்தில் நடக்கும் கதை மேலும் இரண்டாம் சுதந்திரப் போரில் எல்லா நாடுகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட அவதியையும் விளக்குகிறது

ஊடே தெய்வ நம்பிக்கைகள், வெளிநாடுகளிலும் இங்கும் பணப் பரிவர்த்தனைக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை (எழுத்தாளரின் ஐயா ) ஆரம்பித்தல், உறவு முறைகளில் உள்ள இணக்கம் பிணக்கம், கொண்டுவிக்கச் செல்லும் ஆண்களின் மனநிலை, அவர்கள் குடும்பத்தினரின் பிரிவாற்றாமை இவை போக திருமணமான மற்ற பெண்கள் மூவரின் நிலையையும் கூட - கணவன் கொள்ளும் உறவில் பயந்து முனி அடித்தது போல் நடந்து கொள்ளும் பெண்  , கணவனை இழந்து குடும்ப வேலைகளில் ஈடுபடுத்தி வாழும் பால்ய விதவை, வெள்ளைச் சீலை கட்டி வெளிநாடு சென்று ஐவிட்னஸ் சொல்லிச் சொத்தைக் காப்பாற்றும் பெண் ( ஆனாலும் இவரும் தன் உடல் மனக் கட்டுக்காக தீட்டை நிறுத்த நாட்டு மருந்து சாப்பிட்டு அவதியுறுவது ) என பெண்களின் நிலையைப் பக்காவாக விவரித்துச் செல்கிறார் இன்பா.

விடுதலைப் போரில் நம் தேசமும் அயல் தேசங்களும் பட்ட பாட்டையும் விவரிக்கிறது கதை. சிங்காரத்தின் கதைகளில் மலேயா மக்களின் மீதான அவரின் பரிவு வெளிப்படும். இதில் சீன மக்களும் மலேயா மக்களும் செட்டிநாட்டு மக்களும் கொண்டிருந்த உறவின் பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. பாசத்தோடு ஒருவருக்கொருவர் மனிதாபிமான அடிப்படையில் யுத்த சமயத்திலும் பிற சமயங்களிலும் உதவிக் கொள்ளுதலும் விவரிக்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவி அன்யோன்யம் மட்டுமல்ல உறவு கொள்ளுவதில் ஏற்படும் புற அகச்சிக்கல் காரணமாக சமூகத்துக்காகக் கணவன் மனைவியாகவும் பிரிந்தும் வாழும் தம்பதிகளின் ( ராமையா  - வள்ளி ) பிரச்சனைகளையும் தைரியமாகச் சொல்கிறார் ஆசிரியர். நாயகன் அண்ணாமலையின் இறப்பின் போது ஆங்கில அரசாங்கம் ஏற்படுத்தும் வரிச்சிக்கல், சட்டச் சிக்கல் நடவடிக்கைகளையும் வெளிநாட்டு வாழ்வில் கொண்டு விற்பதன் சிக்கல்களையும், பணம் அனுப்புவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், கப்பல் பயணச் சிக்கல்கள், அங்கே சொத்துவாங்குதல் விற்றல் ஆகியவற்றில் ஏற்படும் இடர்ப்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இத்துடன் இக்கதையின் நாயகி உறவுகளின் நம்பிக்கைத் துரோகம், புறம் பேசுதல், ஏமாற்றுதல் என தனக்கு ஏற்படும் அனைத்தையும் அன்பினையும் நம்பிக்கையையும் கைக்கொண்டு வெல்கிறார். உதவி புரியும் மனித நேயர்களும் நிரம்பியது இக்கதை.

குடும்பம் என்னும் அமைப்பின் வலிமை, இன்றைய செட்டிநாட்டு வீடுகள் எப்படிக் கட்டப்பட்டன, அவை அங்கே வாழ்ந்த பெண்களின் பிரிவாற்றாமைக் கண்ணீரால் எப்படிக் கட்டமைக்கப்பட்டன என்பதையும் வலி எழச் சொல்கிறது கதை. முழுக்க முழுக்க செட்டிநாட்டுச் சொல்வழக்குகளே இடம் பெற்றுள்ளன அத்தோடு செட்டிநாட்டுப் பாணியிலேயே கதையும் சொல்லப்பட்டுள்ளது வித்யாசம். செவ்வாய்ச்சாமி கும்பிடுதல் பற்றி விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. இறை வழிபாடுகள், கணவனோடான இல்லற வாழ்க்கை, அவ்வீட்டிலேயே வாழாமல் இருக்கும் பெண்களின் நிலை, சமைந்தது, பிள்ளைப்பேறு, கேதம், கைம்மை நிலையின் கொடுமை ஆகியன பற்றியும் அவற்றின் அவசத்தோடு சொல்லப்பட்டுள்ளது

வட்டிச் சிட்டை போடுதல், கொண்டு விக்கச் சென்ற இடத்தில் எடுபிடிப் பையன்கள், பெட்டியடிப் பையன்கள், மேலாள், அடுத்தாள், சமையலாள், பொட்டியடி, அம்மன் சங்கை, ஐந்தொகை, பேரேடு, பொட்டகம், கைப்பெட்டி, கூட்டுப் புள்ளி, லெவிதம், வாகன வசதிகள், மின்சார & ஆகாயவிமானப் பயணத்தின் ஆரம்பக் காலங்கள், பின்னக் குறியீடுகள், தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்கள், பஞ்சாங்கம் நாள் கிழமை பார்த்தல், சமயச் சடங்குகள், அனுவல்கள், கடிதாசிகள், தஸ்தாவேஜுகள், தந்திகள், ஃபோன் பேசுவதில் உள்ள சிக்கல்கள், உண்டியல் கொடுத்தனுப்பவதுசெட்டிநாட்டாரின் உறவுமுறைப் பெயர்கள், பிரம்மாண்ட வீடுகள், திருமணச் சீர்கள், வராகன், வராகனெடை, வெள்ளிச்சாமான்கள், தங்க வைர நகைகள், பாரம்பரிய உணவுகள், அவர்கள் பயன்படுத்திய கார்கள் ஆகியவற்றை ஆய்வுநோக்கில் ஆய்ந்து எழுதி உள்ளார்

சீனர், மலேசியர், தமிழருக்கிடையிலான உறவுகள், வெளிநாட்டில் வாழும் ஆண்கள் அங்கேயே இன்னொரு குடும்பம் அமைத்தல் அல்லது மலேய சீனக் குழந்தைகளைத் தத்தெடுக்காமலே தன்னுடன் வளர்த்தல், ராமையாவுடன் அப்படி வளர்ந்த சூபியின் பாசம்,  பக்தி நெறி, கோவில்கள், கிட்டங்கியில் ஆண்களின் வாழ்வு, நாயகன் அண்ணாமலையின் வாசிப்பனுபவம் ஆகியனவும் சொல்லப்படுகின்றன.

பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடிய அசலாம்பிகை அம்மையாரின் வாழ்வு, தாயை இழந்த நாயகியின் மேல் அப்பா, ஐயா, சித்தப்பா, அப்பத்தா, சின்னத்தா ஆகியோரின் பரிவு, இயற்கைமீதான நாயகியின் நேசம், உலகப் போரின்போது மலேயாவில் ஏற்பட்ட சிதைவுகள், இயற்கைச் சீரழிவுகள், அதை மக்களோடு மக்களாக அனைவரும் எதிர்கொண்டவிதம், வட்டிக் குடும்பத்தில் பிறந்த நாயகி தமிழகத்தில் தோட்டம் தோப்பு துரவு என தன் வாழ்வாதாரத்தை விரித்துச் செல்லுதல், எளிய மக்களுடனான நட்புறவு, வளர்ப்புப் பிராணிகள் மேலான ஐம்பு, குடும்பத்தை எப்படியும் கட்டி நிமிர்த்திவிடவேண்டும் என்ற உத்வேகம் என நிறைய விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது கதை.

மீனா என்ற கதைநாயகியின் மூலம் சென்ற நூற்றாண்டுக்கான செட்டிநாட்டுப் பெண்களின் வாழ்வியல் நடைமுறைகள், எதிர்பாரா சிக்கல்கள், அதை அவர்கள் எதிர்கொண்டு வாழ்வை நடத்திச் சென்றவிதம் என முழுமையான ஒரு சித்திரத்தைப் படைத்துள்ளார் இன்பா. தைரியமும் நேர்மையும் துணிச்சலும் ஒருங்கே பெற்றவளாக, தெளிந்த சிந்தையுள்ளவளாக, தீர்க்கதரிசியாக இக்கதை நாயகியை இன்பா படைத்துள்ளார். மீனா என்ற பேரைக் கேட்கும்போது எனக்கு இன்பாவின் இக்கதை நாயகியே இப்போதெல்லாம் தோற்றமளிக்கிறாள் என்றால் மிகையில்லை.

நூல் :- வையாசி 19
ஆசிரியர் :- இன்பா சுப்ரமணியன்
பதிப்பகம் :- யாவரும்
விலை :- ரூ 540/-

பக்கம்:-632. 

4 கருத்துகள்:

  1. நல்ல அறிமுகம். நீங்களும் இதுபோன்றதோரு சிறந்த நாவலை எழத
    வாழ்த்துகள் சகோ !

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம்...உங்கள் ஊர்ப்பகுதி இல்லையா!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி கண்மணி.. செட்டிநாடு மொழி...
    அது அன்றைய ராமநாதபுரம் மொழி வழக்கு. மலேசியாவில் அந்த ஊர் வழக்கு. செட்டிநாட்டில் வசிக்கும் அய்யர் கூட " நல்லா இருக்கீகளா?" என்பார். "நன்னா இருக்கேளா எனச் செல்வதில்லை.
    செட்டியார், பிராமணர், இஸ்லாமியர், வல்லம்பர், தோட்டி, வண்ணான், சாமியாடி, மலேசியர், சீனர், ஆங்கிலேயர், சப்பானியர் என எல்லோரும் வாழும் இக்கதை, மருத்துவம், விவசாயம் போன்ற அத்யாவசியமான, நாம் மறந்தவற்றைச் சொல்ல எத்தனித்து புத்தகம் என்னைப்போல் பெரிதாகிப் போன போதும் அதனை வாசித்து, அதற்கு ஒரு நேர்த்தியான விமர்சனமும் எழுதியமைக்கு என் அன்பும் முத்தமும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி பாஸ்கர் சகோ.

    நன்றி துளசி சகோ , கீதா, ஆமாம்பா.

    நன்றியும் அன்பும் இன்பா மேம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...