எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 14 டிசம்பர், 2018

யக்ஞவல்கியரை ஞானத்தால் வென்ற கார்கி வாசக்னவி. தினமலர். சிறுவர்மலர் - 48.

யக்ஞவல்கியரை ஞானத்தால் வென்ற கார்கி வாசக்னவி. :-

ரு விஷயத்தைத் தெரியும் என்றால் தெளிவுற உரைக்க வேண்டும். தெரியாது என்றால் உண்மையை ஒப்புக்கொண்டு அதைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு முனிவர் தனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்போடு இருந்தார். அவரின் இறுமாப்பை ஒரு பெண் தகர்த்தாள். அந்தப் பெண் யார் அந்த முனிவர் யார் என்று பார்ப்போம் குழந்தைகளே.
வேதகாலத்திலேயே பெண்கள் கல்வி கற்றிருந்தார்கள். மைத்ரேயி, லோபமுத்ரா போல் கார்கி வாசக்னவி என்ற பெண் ரிஷியும் அவர்களில் முக்கியமானவர். இவர் சிறந்த பெண் துறவி. தத்துவ ஞானி, பிரம்மவதனி என்று அறியப்பட்டவர். ப்ரஹதாரண்ய உபநிஷத்தில் இவரது புகழ் பேசப்படுகிறது. 

இவர் கார்கி முனிவரின் மகள். அந்தக் காலத்திலேயே ஆண் குழந்தைகளைப் போல் ஏழு வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு குருகுலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் பயின்றவர். தத்துவங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் கரை தேர்ந்தவர். மிதிலாபுரி அரசர் ஜனகரின் சபையில் இருந்த ஒன்பது இரத்தினங்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.
க்ஞவல்கியரும் சாமான்யப்பட்டவரில்லை. இவரது பெற்றோர் பிரம்மரதன் , சுனந்தா என்போர். இவரது மாமா வேதங்களில் சிறந்த வைசம்பாயனர் என்பார். யக்ஞவல்கியர் சூரியனிடமிருந்து யஜுர்வேதத்தைக் கற்று அதை உலகுக்கு அளித்தவர். இவரும் ஜனகரின் அவையில் இடம்பெற்றிருந்தார்.

ருநாள் ஜனகர் அவையில் ஒரு அறிவிப்புச் செய்தார். பிரம்மஞானத்தில் சிறந்த ஒருவருக்கு ஆயிரம் பசுக்களும் அதைப் பராமரிக்கப் பொற்காசுகளும் பணியாளர்களும் அளிக்கப்படும் என்ற அறிவுப்புதான் அது. அதைக் கேட்டதும் சபை முழுவதும் இருந்த வேதவிற்பன்னர்கள் அடக்கத்துடன் அமைதி காத்தார்கள்.
ஆனால் இந்த யாக்ஞவல்கியர் எழுந்து “ நானே பிரம்மம் பற்றிய ஞானம் மிக்கவன். இத்தனையும் எனக்கே சொந்தம்” .என்று சொல்லிவிட்டுத் தன் சீடர்களை அழைத்து அனைத்துப் பசுக்களையும் தனது ஆசிரமத்துக்கு ஓட்டிச் செல்லும்படிக் கூறினார்.
இதைக்கேட்டு அனைத்து ரிஷிகளுக்கும் கோபம் மேலிட்டது. யாக்ஞவல்கியர் பிரம்மஞானி என்று ஒப்புக்கொள்ள ஒருவரும் தயாராயில்லை. எனவே விவாத மேடை அமைத்து யாக்ஞவல்கியர் ஒரு பக்கமும் மற்ற ரிஷிகள் ஒருபுறமும் அமர்ந்தார்கள்.
ஒவ்வொருவரும் கேட்டகேள்விக்கும் யாக்ஞவல்கியர் டாண் டாண் என்று பதில் அளித்தார். இதனால் அவர்கள் பின்வாங்கினர். அப்போது ஸகல்யர் என்ற முனிவர் முன்வந்து ஆயிரம் கேள்விகள் கேட்டார். இதை எல்லாம் கார்கியும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த ஆயிரம் கேள்விக்கும் யாக்ஞவல்கியர் பதிலளித்து தனது அறிவுத் திறமையை நிரூபித்தார். சபை மௌனம் காத்தது. இப்போது யாக்ஞவல்கியரின் முறை . ”அது சரி ஸகல்யரே நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லி உங்கள் அறிவுத்திறமையை நிரூபியுங்கள்” என்றார். ஆனால் யாக்ஞவல்கியரின் ஒரு கேள்விக்குக் கூட ஸகல்யரால் பதில் அளிக்க முடியவில்லை. மொத்த சபையும் தலை குனிந்தது.
யாக்ஞவல்கியர் புறப்படத் தயாரானார். அப்போது கார்கி எழுந்து நின்று ”நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு அவற்றைத் தாங்கள் தாராளமாக ஓட்டிச் செல்லலாம் “ என்றாள்.
என்னது போயும் போயும் ஒரு பெண்ணா தன்னைத் தடுக்கிறாள் என்ற அலட்சியத்தோடு ”கேள் கார்கி” என்றார் யாக்ஞவல்கியர்.
சூரியன், சந்திரன், பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றி கார்கி அடுத்தடுத்துக் கேள்விக்கணை தொடுத்துக் கொண்டே இருந்தாள்.
“நீர் எதனால் நிரம்பி உள்ளது ? “
“காற்றால் “
“காற்று எதனால் நிரம்பி உள்ளது ?”.
”ஆகாயத்தால்.”
“ஆகாயம் எதால் நிறைந்திருக்கிறது ?”
“சூரியனால் “
”சூரியன் எதால் நிரம்பி இருக்கிறது ? “
“ நட்சத்திரங்களால் “
”நட்சத்திரங்கள் எதால் நிரம்பி இருக்கிறது. ?”
இதைக் கேட்ட யாக்ஞவல்கியர் பொறுமை இழந்து கோபமாக இரைந்தார். “ ”கார்கி எல்லாப் பொருளும் பிரம்மத்திலிருந்து வந்தவையே. எனவே எல்லாமே பிரம்மத்தால் நிறைந்திருக்கின்றன.”
“பிரம்மம் எதால் நிறைந்திருக்கிறது ? “ என்று கார்கி கேட்டதும் வாயடைத்துப் போன யாக்ஞவல்கியர் ”இனி ஒரு கேள்வி கேட்டாலும் உன் தலை சுக்கு நூறாகப் போகும்” என்று சபித்துவிட்டு சபையை விட்டு வெளியேறினார்.  
மன்னரும் மற்றவரும் பார்த்திருக்க அவரது சீடர்கள் பசுக்களை ஓட்டிக்கொண்டு போனார்கள்.
மாலை வேளையில் உலாவச் சென்ற கார்கி தனது தோழியும் யாக்ஞவல்கியரின் மனைவியுமான மைத்ரேயியைச் சந்தித்தாள். அவளிடம் நடந்ததைக் கூறினாள். அப்போது மைத்ரேயி கேட்டாள், ”பிரம்மம் எதால் நிறைந்திருக்கிறது என்று நீயே சொல்லேன் கார்கி”. உடனே கார்கி சொன்னாள் ”எனக்கும் தெரியாது. ஆனால் தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்பவன்தான் பிரம்மஞானி. ஒரு ரிஷிக்கு ஏன் இவ்வளவு பசுக்கள்?”
மறுநாள் யாக்ஞவல்கியரின் ஆசிரமம் காலியாகக் கிடந்தது. அங்கே இருந்த பசுக்களை சீடர்கள் ஓட்டிச் சென்றார்கள். மைத்ரேயி தன் கணவர் யாக்ஞவல்கியரிடம் தன் தோழி கார்கி கேட்ட கேள்விகளைச் சொன்னதும் அவர் பிரம்ம ஞானம் தேடி மலையில் தியானம் செய்யக் கிளம்பிவிட்டார். அவருடன் மைத்ரேயியும் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொண்ட கார்கி மட்டுமல்ல தனது தோல்வியை தைரியமாக ஒப்புக்கொண்டு உண்மையைக் கண்டடையச் சென்ற யாக்ஞவல்கியரும் நாம் பின்பற்றத் தகுந்தவர்தானே குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 14 . 12. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.


டிஸ்கி :- அரும்புகள் கடிதத்தில் இதிகாச புராணக் கதைகள் படிப்பதற்கு சுவையாகத் தித்திக்கிறது என்று பாராட்டிய நல்லாலம் வாசகர் ஆர். பிரகாசம் அவர்களுக்கு நன்றிகள். 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...