எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 மே, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் . - கோமதி ஜெயத்தின் தோழிகளுடன் ஒரு கேரள சுற்றுலா.

 திருமதி கோமதி ஜெயம், காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர் தன் வகுப்பு மாணவர்கள் சிறப்பாகப் பயின்றமைக்காக ஒவ்வொருவருக்கும் நன்னெறிக் கதைகள் உள்ள புத்தகங்கள் பரிசளித்தார். முழுப்பரிட்சை விடுமுறைநாளில் அவற்றைப் படிக்கக் கொடுத்தது வெகு பொருத்தம். இந்நூல்களை வழங்க அவர் என்னை அழைத்திருந்தார். அன்றில் இருந்து எனது நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டார்.

அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன். கோடைக்காலத்துக்கு ஏற்றாற்போல ஒரு சுற்றுலாவைப் பகிர்ந்துள்ளார். வாசித்துப் பாருங்கள்.

/////தோழிகளுடன் சுற்றுலா

பள்ளிப் பருவத்தில் பள்ளிச் சுற்றுலாவிற்கு என் பெற்றோர் அனுமதிக்கமாட்டார்கள்.

பெண் பிள்ளை, பாதுகாப்பில்லை என சொல்லி அவர்களுடன் மட்டுமே அழைத்துச் செல்வார்கள். என தந்தை ஒய்வு பெற்ற அரசு போக்குவரத்து அலுவலர். அவர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் பஸ் பாஸ் மூலம் தஞ்சாவூர் பெரிய கோவில், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். அனால் எனக்கோ, என் தோழிகளுடன் செல்லவில்லையே என்ற ஏக்கம் என்னைச் சுற்றி வலம் வருவதால், அம்மா, அப்பா, தம்பி, தங்கை,தாத்தா, பாட்டி ஆகியோருடன் செல்லும்போது என் மனது சந்தோஷமடையாது.

அதற்காக உறவில் ஆனந்தமில்லை என்று அர்த்தமில்லை. தோழிகளுடன் சுற்றுலா செல்ல இயலவில்லை என்ற ஏக்கம் என்னை சூழ்ந்து கொள்ளும். பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முடித்து, பி.எட். படிப்பில் சேர்ந்தேன். அப்படிப்பின்போதே எனது திருமணமும் முடிந்தது. கல்லூரி நிர்வாகம் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தது. அதுவும் டெல்லி. கேட்கவா வேணும்.......... என் மனது துள்ளிக் குதித்தது. என் கணவரிடம் அனுமதி கேட்டேன். அவரோ ஏதேதோ காரணம் சொல்லி வேண்டாம் என்று சொல்லி விட்டார்.பள்ளி பருவத்திலே நிறைவேறாத என் ஆசை, கல்லூரி பருவத்திலேயும் நிறைவேறவில்லை.

ஆனால், இப்போது என் வயது 37. எனக்கு என்று சில நண்பர்களை சம்பாதித்துள்ளேன். என் மீது அக்கறையும், அன்பும் உள்ளவர்கள். திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு நட்பு கைசேராது என்று சொல்வார்கள். நான் என் தோழிகளின் கணவர்களை என் கணவருடன் சகஜமாக பழகும் சுழலை ஏற்படுத்தியுள்ளேன். எங்கள் நட்பும் தொடர்ந்து வருகிறது. கடந்த வருடம் கோடைவிடுமுறையில் என் தோழிகள் 5 பேர் குடும்பத்துடன் கேரளா செல்ல திட்டமிட்டோம். இரவு பத்து மணிக்கு புறப்பட திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் ஏற்பாடு செய்த வேன் வரவில்லை. வேன் டிரைவரிடம் தொடர்பு கொண்டால், வந்து கொண்டிருக்கிறோம். என்ற பதில் மட்டுமே வருகிறது. ஆனால் வரவில்லை. பின்னர் டிரைவரையும் மொபைலில் தொடர்பு கொள்ளவில்லை.சுற்றுலா போச்சான்னு..... நினைத்துக் கொண்டிருக்கும்போது, வேன் வந்தது. தாமதமாக புறப்பட்டதால் கேரளா படகு வீட்டிற்கு காலை 10.00 மணிக்கு செல்ல வேண்டியது, மதியம் 2.00 மணிக்கு சென்றோம். ஆனால் நாங்கள் தங்கிய நேரம் குறைவு என்றாலும், படகு வீட்டில் ஒரு நாள் தங்கிய அனுபவம், நினைத்தாலே ஆனந்தம். என் குழந்தைகளும், என் தோழிகளின் குழந்தைகளும் விளையாடினார்கள்.

ஒரு தோழி அவள் கணவருடன் டைட்டானிக் போஸ் கொடுத்தாள். படகு ஒரு இடத்தில் நின்றவுடன், கரையோரம் உள்ள மாமரங்களில் மாம்பழங்களை பறித்து சாப்பிட்டோம். மாலையில் குழந்தைகள் எல்லோரும் பாட்டு பாடி நடனம் ஆடினர். ஏன்.....ஒரு தோழியின் கணவரும் ஆடினார். எல்லோரும் ஒன்றாக உணவு உண்டது. எல்லாமே இனிய அனுபவம். அது மட்டுமா அலப்பி கடற்கரையில் கடலில் துள்ளிக் குதித்து விளையாடினோம். அந்த இனிய நினைவுகளை மறக்க இயலாது.

இந்த கோடை விடுமுறையும் என் தோழிகளுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளேன்.

டிஸ்கி::- அட அருமை அருமை படகு வீட்டுக்குப் போக மிகவும்தான் தாமதமாகிவிட்டது. எனினும் பொறுமையைக் கடைபிடித்து இருந்திருக்கீங்க. அரை நாள் போனதே என நினைக்காமல் அரை நாளாவது கிடைத்ததே என்ற உங்கள் பாசிட்டிவ் மனநிலையை ரசித்தேன்.

இந்த வருடமும் சூப்பர் சுற்றுலா போய்விட்டு வந்து பகிருங்க. அப்புறம் ஒரு விஷயம் நீங்க தோழியாகக் கிடைக்க உங்க தோழிகளும்தான் கொடுத்து வைச்சிருக்காங்க., என்னையும் சேர்த்து. நன்றியும் அன்பும் வாழ்த்துக்களும்டா. வாழ்க வளமுடன்  :)



4 கருத்துகள்:

  1. இந்த ஏக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கும்.
    கழனிவாசல் அருகே உள்ள பள்ளியா?

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் கோமதி ஜெயம். ஆசிரியர் பணி அருமையான பணி.
    சுற்றுலாவைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமே.

    தேன் உங்களுக்கு ஒரு சிறப்பு வாழ்த்து. SATURDAY JOLLY CORNER என்று ஒரு இழையை ஏற்படுத்தியதற்கு.

    பதிலளிநீக்கு
  3. illa Palani Chamy sir. ithu church kitta irukku. Arya Bhavan kku parallel road.

    Thanks da Jaya :) <3

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...