எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 மே, 2017

தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி. சீதா தேனப்பன்.


தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி. சீதா தேனப்பன்


வெப்சைட் மூலமா வெற்றிகரமா மசாலா விற்க முடியுமா.? அதுவும் இங்க இல்ல ஐக்கிய பிரிட்டன் ராஜ்யத்தின் எரித் என்னும் இடத்திலிருந்து ..! வித்யாசமா வடிவமைச்சுக் கொடுத்தா, தரமா இருந்தா, தாராளமா விற்க முடியும் என்கிறார் திருமதி சீதா தேனப்பன். ! அறுபட்டைக் கண்ணாடிச் சாடிகளில் அணிவகுக்கும் மசாலாக்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பார்க்கும்போதே அவற்றின் மணமும் சுவையும் நாசியையும் சுவை மொட்டுக்களையும் ருசிகரமாகத் தாக்குகின்றன.


திருமதி சீதா தேனப்பனைப் பார்க்கும்போதே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். அவரது பேச்சின் எனர்ஜி லெவல் நம்மையும் தொற்றிக் கொள்ளும். ப்ரகாசமான புன்னகையும் மலர்ச்சியான முகமும் தீர்க்கமான பேச்சும் அவரது ஸ்பெஷாலிட்டி..

திருமணமாகி வெளிநாடு செல்லும் அநேகம் பேர் உத்யோகம் பார்க்கின்றார்கள். ஆனால் சீதா அவர்களோ இருபதாண்டுகாலம் கணினிப் பொருட்களுக்கான ஃபாக்டரியில் உத்யோகம் பார்த்தும் தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆவல் தீப்பொறி போலக் கனன்று கொண்டிருந்ததால் சொந்த பிஸினஸில் இறங்கிவிட்டார்.

கல்லலில் பிறந்த சீதா அவர்களுடன் உடன் பிறந்தவர் மூவர். சகோதரன் மூத்தவர், அடுத்து இரு சகோதரிகள். வீட்டில் கடைக்குட்டி சீதாதான். தந்தை மாணிக்கம் செட்டியாரவர்கள் மலேஷியாவில் இடம் வாங்கி விற்பது, வட்டித் தொழில் என ஈடுபட்டதால் நான்குவருடங்களுக்கு ஒருமுறைதான் இந்தியா வருவார்கள். தாயும் அவ்வப்போது சென்று வந்ததால் அக்காக்கள், அண்ணியின் பராமரிப்பில் சீதா வளர்ந்துள்ளார்கள். அதுவே அவர்களின் தன்னம்பிக்கையின் தூண்டுகோல் எனத் தோன்றுகிறது.

மதுரையின் செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், ஃபாத்திமா கல்லூரியிலும் பயின்றவர். லாயருக்குப் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் அந்த ஆசை ஏக்கமாகத் தேங்கிவிட்டது. எதையாவது செய்ய வேண்டும் என்ற துறுதுறுப்போடு இருக்கும் இவருக்கு பிஎஸ்ஸி இரண்டாம் வருடம் படிக்கும்போதே, பதினெட்டு வயதில் வீட்டில் திருமணம் முடித்துவிட்டார்கள். முதலில் சிறிது காலம் மும்பைவாசம்.

கணவருக்கு ஐக்கிய பிரிட்டன் ராஜ்ஜியத்தில் முன்பே வேலை கிடைத்துச் செல்ல, அதன்பின் சென்ற இவருக்கு ஹோம்சிக் வந்து ஊர் நினைவு வந்துவிட்டது. அந்த சமயத்தில் மனதை மாற்ற கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் ஃபேக்டரியில் வேலைக்குச் சேர்கிறார்.

அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததும் பேபி சிட்டரிடம் விட்டு விட்டுப் பணியைத் தொடர்ந்தார். ஆனால் மனதுள் ஒரு சலிப்பு. நம் உழைப்பு அனைத்தும் சாதாரண சம்பளத் தொகைக்காகச் செய்யும் வேலையில் வீணாகிறதே. இதே நம் சொந்தத் தொழிலாக இருந்தால் நம் உழைப்பின் பலன் அனைத்துமே நமக்கே கிட்டுமே என இவரது மனம் ’மாத்தி யோசி’க்கத் தொழில் தொடங்க எண்ணமிடுகிறார்.

சில வருடங்கள் ( கிட்டத்தட்ட 20 வருடங்கள் 1971 இல் இருந்து 1991 வரை ) கழித்து இவர் தனது கனவான சுயதொழில் தொடங்க எண்ணும்போது இவரது அத்தை ஒருவர் ஏற்கனவே செய்து வந்த மசாலாப் பொருள் வியாபாரத்தைச் செய்ய எண்ணி அவருடன் கூட்டு வைத்துக் கொண்டார். அவர் சாம்பார் பொடி, ரசப்பொடி போன்றவைகளை சிறிய அளவில் செய்து சப்ளை செய்து வர இவரோ தனது துணிச்சலான எண்ணப்படி இன்னும் பலவிதமான பொருட்கள், ஐரோப்பியர்கள் தங்கள் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தும் மசாலாப் பொடிகளைக் கொடுத்தால் என்ன என சிந்திக்கிறார். இதற்குத் தனிப்பட்ட முறையில் செயல் வடிவம் கொடுக்க தனது பிஸினஸ் பார்ட்னரை விட்டுப் பிரிந்து தனது கேரேஜிலேயே மசாலாப் பொடித் தொழிற்சாலையை ஆரம்பிக்கிறார்.

சகோதரரும் கணவரும் கொடுத்த சுமார் பத்து லட்சம் ரூபாயை மூலதனமாகப் போட்டு இதற்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார். தன்னுடைய கேரேஜிலேயே தேவையான மிஷின்களைக் கொண்டு சில ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தொழிலை ஆரம்பித்துவிட்டார்.

வெறும் சாம்பார் பொடி, ரசப்பொடி , மசாலாப் பொடியாக இல்லாமல் அவற்றைத் தரம் பிரித்து ரெட் ரேஞ்ச் , க்ரீன் ரேஞ்ச், ப்ளாக் ரேஞ்ச், ப்ளூ ரேஞ்ச் எனக் கொடுக்கிறார். அந்தக்கால கட்டத்தில் சாஷே போன்ற பாக்கெட்டுக்களிலேயே மசாலாப் பொடிகள் பாக் செய்யப்பட்டு விற்பனை ஆகிக் கொண்டிருக்க இவரோ இதை வித்யாசமாக அறுபட்டைக் கண்ணாடிச் சீசாக்களில் ஏன் கொடுக்கக் கூடாது என எண்ணமிட்டார். அதுவரை ஜாம், ஊறுகாய் போன்றவைதான் ஜாடிகளில் வழங்கப்பட்டு வந்தன.

அறுபட்டை ஜாடிகள் கையில் பிடிக்கவும் எடுக்கவும் எளிது. ஈரக்கையால் எடுத்தாலோ ஆர்த்தரிட்டீஸ் உள்ளவர்கள் பிடித்தாலோ வழுக்காது. வாசம் போகாது. மேலும் ஐரோப்பியர்கள் அவ்வப்போது சிறு சிறு அளவில், புத்தம் புது வாசனை உள்ள மசாலாப் பொருட்களை உபயோகிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுத்தார். இந்த ஐடியா செமையா க்ளிக் ஆகி மசாலாப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகத் துவங்கின.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களை நிறவாரியாகப் பிரித்து ரெட் ரேஞ்ச் வகையில் சிவப்பு மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, இஞ்சிப் பொடி, போன்ற மசாலாப் பொடிகளும், க்ரீன் ரேஞ்சில் ரோஸ் மேரி, தைம், லெமன் க்ராஸ், பேஸில், பட்டை இலைகளையும், ப்ளாக் ரேஞ்சில் மிளகு, பட்டை, கிராம்பு வகையறாக்களையும் , ப்ளூ ரேஞ்சில் ஐந்துவித மிளகுப் பொடி, சோம்பு, குங்குமப் பூ கொடுக்கிறார். கிட்டத்தட்ட எழுபது விதமான மசாலாக்கள் தயாரிக்கிறார்கள். இவரது வெப்சைட்டைப் பார்த்துத் தேவைக்கேற்றவாறு கொஞ்சமாகவோ அதிகமாகவோ ஆர்டர் செய்யலாம்.

குவாலிட்டி கண்ட்ரோல் அதிகமுள்ள வெளிநாட்டில் எப்படி இப்படிக் கொடுக்க முடிகிறது என்று கேட்டேன். அதற்கு அவர் அங்கேயே ஒரு ஹோல்சேல் கம்பெனியில் மொத்தமாக மூலப்பொருட்களை வாங்கி அதன் பின் தரம் வகை பிரித்து சுத்தம் செய்து வைப்பதால் தரம் பற்றிய பிரச்சனை எழவில்லை என்றார். அதே சமயம் தான் தரத்தில் காம்ப்ரமைஸும் செய்து கொள்ள மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகக் கூறினார். அதே போல் இவர்களிடமிருந்து இவற்றை மூன்று ஆங்கிலேயக் கம்பெனிகள் வாங்கி சிறு வியாபாரிகளின் தேவைக்கேற்ப சப்ளை செய்வதால் சரளமான விற்பனை இருக்கிறது என்கிறார். ஒரு டஜன் பாலட்டில் சப்ளை செய்யப்படுகின்றன. கெண்ட் என்னும் பாக்டரியில் இருந்து முழு ஐக்கிய பிரிட்டன் ராஜ்ஜியத்தும் சப்ளை செய்யப்படுகிறது.

முதலில் பெரிய ஜாரில் கொடுத்து வந்திருக்கிறார்கள். அங்கே வேலை பார்த்துவந்த இளைஞன் ஒருவன் சின்ன ஜாராக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று கூற உடனே சின்ன ஜார்கள் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்து அதில் நிரப்பி சப்ளை செய்திருக்கிறார்கள். பிசினஸ் சக்கைப் போடு போட ஆரம்பித்து விட்டது.

ஆமாம், எல்லாமே இனிக்கும் வெற்றிதானா? பிரச்சனைகளே இல்லையா. ? ஆம் இருந்தது. மசாலாப் பொருட்களோடு அந்த நாட்டு மக்கள் அதிகம் உபயோகிக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸையும் பேக் செய்து விற்றாலென்ன ? இந்த முறையில் மூன்று மாதங்கள் பெரிய பெரிய மெஷின்களை எல்லாம் வாங்கிப் போட்டு பிஸினஸை விரிவு படுத்தியாயிற்று. ஆனால் இதற்குப் போட்டியாளர்கள் அதிகம் என்பதால் இந்தத் தொழிலில் நீடித்து நிற்க இயலவில்லை. மேலும் மசாலாப் பொருட்கள் பிரிட்டனின் க்ளைமேட்டுக்குக் கெட்டுப் போகாது. ஆனால் உலர் பழங்கள் , கொட்டைகள் சில கெட வாய்ப்பு இருந்தது. அது போக இவர்களை விடக் குறைந்த விலையில் சப்ளை செய்ய ஏகப்பட்ட கம்பெனிகள் போட்டி போட்டன. அது வெறும் பேக்கிங் என்பதால் கேரி பேகில் போட்டு எளிதாகச் செய்து கொடுக்க அதிகமான எண்ணிக்கை அளவில் போட்டியில் இருந்தன.

கொஞ்சம் நஷ்டம் வந்து கையக் கடிக்க ஆரம்பிக்க இவர் எடுத்த அதிரடி முடிவுதான் ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் வியாபாரத்தை நிறுத்தியது. மசாலாப் பொருட்கள் விற்னையிலேயே முழு கவனத்தையும் செலுத்தலாம்., அதற்குப் போட்டியாளர்களே இல்லை என தனது பழைய வியாபாரத்துக்குத் திரும்பி அதை விரிவு படுத்துகிறார்.

இவர் தான் ஆரம்பித்த புது வியாபாரத்துக்காகச் செய்த முதலீடு மற்றும் மெஷின்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது என்று மெஷின்களை குறைவான விலைக்குக் கேட்டாலும் விற்று விட்டார். அதற்காக வாங்கிய இடத்தையும் விற்றுவிட்டார். நம்மூரில் ’தன்னக்கட்டிக் கொள்தல்’ என்பார்கள் அதைப் போல தொடர்ந்து செய்து நஷ்டமாக்காமல் தன் கைக்குள் நஷ்டம் இருக்கும்போதே விழித்துச் செயலாற்றி நஷ்டத்தை மட்டுப்படுத்தியதோடு அல்லாமல் தனக்கு மிகவும் கைவரப் பெற்ற மசாலாத் தொழிலில் ஆழ்ந்த கவனம் செலுத்தி அதை விரிவு படுத்தினார்.

அதை இன்னும் விரிவாக்கம் செய்ய விளம்பர ஏஜென்ஸி மூலம் வெப்சைட் தொடங்கி பிரபலப்படுத்தினார். தனது தொடர்ந்த கவனிப்பு மற்றும் கண்காணிப்பு மூலம் தொடர்ந்து தொழில் செய்து இன்று உலகம் மெச்சும் தொழிலதிபராகி இருக்கிறார். கடின உழைப்பாலும் புதுமைச் சிந்தனைகளாலும் கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்திருக்கும் வியாபாரம் இவர்களது சொந்தக் கட்டிடத்தில் HACCP SYSTEM - த்துடன், முழு இடர்பாடு ஆய்வுகள் மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் புள்ளிகளோடு செயல்படுகிறது.

தொழிலில் திருப்பம் என்று கூற வேண்டுமானால் இந்த வெப்சைட்டைப் பார்த்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு இருந்து ஒரு ஃப்ரெஞ்ச் கம்பெனி பல்க்காக ஆர்டர் கொடுத்து எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் வியாபாரம் அதிகரித்துவிட்டது.

வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் இளையவர்களுக்கு இவர் கூறும் அறிவுரைகள், முதலில் அந்தத் தொழிலில் ஆர்வம் இருக்க வேண்டும். அதனுடைய மார்க்கெட் ஷேர் என்ன என்று பார்க்கணும். யார் வேலைக்கு வரவில்லை என்றாலும், தான் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை என்றாலும், குறித்த பொருள், குறித்த நேரத்துக்குள், கரெக்டாக சப்ளை ஆகும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் படி ஆட்களைத் தயார் செய்ய வேண்டும். வியாபரம் தடையறாமல் நடைபெற வேண்டும்.

சோர்வில்லாமல் உழைக்கும் மனப்பான்மை, பல்க்காக ப்ராஃபிட்டை எதிர்பார்க்காமல் ஓரிரு வருடங்களுக்குப் பொறுமையாக இருப்பது மட்டுமல்ல, நஷ்டத்தைத் தவிர்ப்பதும் வேண்டும். ப்ராஃபிட் இல்லாவிட்டால் பின்வாங்குதல் தப்பு இல்லை. அதை நிறுத்தித் தனக்குப் பழக்கமான தொழிலைச் செய்யத் தொடங்க வேண்டும். அதிரடியாக வளர்ந்து காணாமல் போகாமல் மெதுவான சீரான வளர்ச்சியே முக்கியம். அதுவே வெற்றியின் தாரக மந்திரம் என்கிறார்.


இவரது கணவர் சாஃப்ட்வேர் என்ஜினியர். அவரும் தற்போது இவரது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார். மகள்கள் இருவர். மூத்தவர் ஜெயந்தி லண்டனில் டயட்டீஷியனாகப் பணி செய்கிறார். அவரது கணவர் ஷேர் பிசினஸ் செய்கிறார். அவருக்கு இரு குழந்தைகள் ஒரு பையன் ஒரு பெண். சின்ன மகள் அனிதா சிங்கப்பூரில் கணவருடன் வசித்து வருகிறார். அவர் சனிக்கிழமைகளில் ஆங்கில ட்யூஷன்கள் எடுக்கிறார். அவரது கணவர் ஐடியில் பணிபுரிகிறார். இவருக்கும் இரு பிள்ளைகள், பையன் ஒன்று பெண் ஒன்று.

இவரது தமக்கையின் மருமகள்தான் இவரோடு சேர்ந்து அதிகம் இந்தத் தொழிலை நடத்துவதில் விருப்பம் காட்டி வருகிறார். இவரது அக்காவின்
  மருமகளே பின்னாளில் தனது பொறுப்பாக எடுத்து நடத்தவும் கூடும்.

கம்பெனி தொடங்கியதில் இருந்து இவர்கள் அதிகம் வெளியூருக்கு மூன்று வாரங்களுக்கு மேல் செல்வதில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் இருந்து பார்த்துக் கொள்வார்கள். இப்போது மூன்று வருடங்களாக ஓரளவு பழகிய ஊழியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஐந்து வாரங்கள் வரை பயணத்திட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள்.

இரு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த ஐபிசின் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். தொழிலிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியதால் விருது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிறார். லாபகரமான தொழில் என்றால் விருப்பத்துடன் ஈடுபட்டுச் செய்யும் தொழில்கள் எல்லாமே லாபம் கொடுக்கும் என்கிறார். தனது தந்தையைத் தனது வியாபார முன்னோடியாகக் கொண்டு ஊக்கமுடன் செயல்பட்டதாக நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

கிட்டத்தட்ட 1991 இல் இருந்து தற்போது வரைக்கும் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்ட நெடிய பிஸினஸ் யாத்திரையை இவர் மேற்கொண்டிருக்கிறார். அந்நிய நாட்டில், ஆங்கிலேயர் நாட்டில் இத்தொழிலை வெற்றிகரமாக நடத்திக் கோலோச்சிக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன் அவர்களுக்கு நகரத்தார் வர்த்தக சபையின் சார்பில் வாழ்த்துகள்.

 

7 கருத்துகள்:

 1. வியாபாரம் மற்றும் சுயதொழில் நகரத்தார் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. எனக்குபல நண்பர்களைத் தெரியும் திருமதி சீதா தேனப்பனுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அழகான அறிமுகம். திரைகடலோடியும் செல்வம் தேடியவர்கள் நகரத்தார். அந்த இரத்தம் சும்மா இருக்குமா? இவரது உழைப்பு நம்மவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கட்டும். நமது இந்திய சமையல் பொருட்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. அதை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டால், ஆரம்ப இன்னல்களுக்குப் பிறகு, நிச்சயம் வெற்றிப்பாதை கண்ணில் தெரியாமல் போகாது. (புஸ்தகாவில் 'பெண்மொழி' படித்தேன். சுருக்கமாக ரிவ்யூ செய்துள்ளேன். பார்த்தீர்களா?)

  -இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)

  பதிலளிநீக்கு
 3. கிட்டத்தட்ட 1991 இல் இருந்து தற்போது வரைக்கும் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்ட நெடிய பிஸினஸ் யாத்திரையை மேற்கொண்டிருக்கும் அதுவும் அந்நிய நாட்டில், ஆங்கிலேயர் நாட்டில் இத்தொழிலை வெற்றிகரமாக நடத்திக் கோலோச்சிக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும் உரித்தாகுக.

  பதிலளிநீக்கு
 4. திருமதி சீதா தேனப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 5. ஹப்பா என்ன தன்னம்பிக்கை!!! திருமதி சீதா தேனப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. Thanks Bala sir

  Ahaa nandri Chellappa sir. thanks ! Review kku manamarntha nandrigal !

  Thanks VGK sir

  Thanks Jayakumar sago

  Thanks DD sago

  Thanks Tulsi sago

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...