எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 மே, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். இராகவன் நைஜீரியாவின் முதல் வெளிநாட்டுப் பயணம்

 இன்னிக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு உங்களுக்கு எல்லாம் தெரியாது. அவ்ளோ சந்தோஷம். ஏன்னா எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய நண்பர்  திரு இராகவன் ( எல்லாருக்கும் இராகவன் அல்லது ராகவன் ஸ்ரீனிவாசா. எங்களுக்கு இன்றும் இராகவன் நைஜீரியாதான் ) அவர்கள் இந்த நூற்றியோராவது சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதி இருக்கிறார்.

வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் பூக்களுக்கான கவிதைகள் எழுதிய போது ( ஒரே நாளில் 3 போஸ்ட் ) போட்டாலும் எங்கிருந்தோ வந்து கலகலப்பான கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்திவிடுவார்.  அவர் கொடுத்த பேரூக்கம் காரணமாகவே 57 பூக்கள் கவிதைகளாக வெளிவந்து தொகுப்பாகவும் ஆகி உள்ளன. :) நன்றி ராகவன் சார்.


கல்லூரி முடிந்து பலவருடங்களுக்குப் பின் எழுத வந்த எனக்கும் ஊக்கமளிக்கும் பின்னூட்டங்கள் அளித்துக் கவிஞராக ஆக்கியதுக்கும் பெரும் நன்றி.

போஸ்ட் போடுவது போல பின்னூட்டம் போடுவதிலும் வெகு பாஸ்ட். அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். சில வருடங்களாக வலைத்தளத்தில் எழுதுவதில்லை.

/////நானும் ஒரு கார் வைச்சிருக்கேன்னு சொல்றதில்லையா . அதுபோல நானும் ஒரு ப்லாக் வைச்சிருக்கேன்னு சொல்றதுக்காக ஆரம்பிக்கப்பட்டது/////ன்னு எடுத்தவுடனே கலக்கலா கேப்ஷன் கொடுத்திருப்பார். :)

http://raghavannigeria.blogspot.in/ 

இந்த இடுகை கொஞ்சம் ஸ்பெஷல் :)

http://raghavannigeria.blogspot.in/2010/03/blog-post_29.html


(ராகவன் எடுத்த காரியத்தை நச்சுன்னு முடிச்சுட்டீங்க

ஆனா இப்படி எல்லோரும் கொஞ்சம் பழைய ஆளாவே இருக்காங்களே புதுசா யாரும் உங்க மனசைக் கவரலையா  .. hihi 


கிட்டத்தட்ட 100 பின்னூட்டங்கள். !!!!!!!!!! ) 

 இவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதச் சொல்லி வேண்டிக் கேட்டுப் பெற்ற இடுகை இது :)

மௌனத்துக்கும் தயக்கத்துக்கும்பின் பல வாரங்கள் கழித்து எழுத இசைந்தார். அப்பவே ரொம்ப சந்தோஷமாயிடுச்சு.

அதன் பின்னும் நூறாவது இடுகையில் போட முடியவில்லை. எனவே ஸ்பெஷலாக 101 ஆவதாக ஆரம்பித்து வைக்கிறார். அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் இராகவன் சார்.


படிப்பு  : பட்ட படிப்பு
பிடித்த விஷயங்கள்  :  புத்தகம் (2012 பின் அதுவும் மிகக் குறைவு), 
சுற்றுலா (காரில் செல்ல வேண்டும்),
சென்றுள்ள வெளிநாடுகள் : சைனா, சிங்கப்பூர், தாய்லாந்து, கத்தார், துபாய், நைஜீரியா

முதல் வெளிநாட்டு விமானப் பயணம்

இந்தியாவிற்குள் பலமுறை விமானத்தில் பயணம் செய்து இருந்தாலும், முதன் முதலாக இந்தியாவை விட்டு வெளி நாட்டுக்கு விமானத்தில் பயணம் செய்தது. அதுதான் முதல் முறை. நமக்குத்தான் அசட்டு தைரியம் ரொம்ப அதிகமாச்சுங்களா. என்ன ஆயிடப் போகுதுன்னு தைரியமா கிளம்பியாச்சு. எங்க கிளம்பியாச்சுத் தெரியுமா.  சைனாவுக்குத்தான்.

எனக்கு வேலை கிடைச்சது ஒரு ஜெர்மன் கம்பெனியில்... அங்க ஒரு நல்ல ஆத்மா எனக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் போட்டு அனுப்பிட்டாரு.... சென்னை -சிங்கப்பூர் - பாங்காக் - குன்மிங் - இதுதாங்க வழி. பாங்காக் வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டிக்கெட்டும் அதுக்கு அப்புறம் தாய் ஏர்லைன்ஸ் டிக்கெட்டும் கொடுத்து இருந்தாங்க.

ஏர்போர்ட்டுக்கு, ஏதோ செவ்வாய் கிரகத்து போவது மாதிரி, தங்கமணி, அரவிந்த், அண்ணன், அண்ணி, அக்கா, அக்கா பெண், தங்கமணி அப்பா, தங்கமணி தங்கை, இப்படி ஒரு 10 பேர் கூட வந்தாங்க.

ஏர்போர்ட்டுக்கு வந்தா அங்க எக்கசக்க கூட்டம். மலேஷியா ஏர்லைன்ஸ்,
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் என்று எக்கசக்க கூட்டம். நமக்கு ரயில்ல போற ஞாபகத்தில், லக்கேஜ வச்சுட்டு வந்துடறேன் அப்படின்னு சொல்வது மாதிரி, முதல்ல போர்டிங் பாஸ் வாங்கிட்டு வந்துடறேன் இங்கேயே இருங்கன்னு சொல்லிட்டு, உள்ளாற போர்டிங் பாஸ் வாங்கப் போனேன்.

போர்டிங்க் பாஸ் வாங்கிட்டு திரும்பலாம் அப்படின்னு நினைச்ச போது அங்க
ஒரு செக்யூரிட்டி நின்னுக்கிட்டு, இந்தியில் எதோ சொன்னாரு. நானும் விடாம
அங்க என் தங்கமணி நிக்காறாக, பையன் நிக்கறாக மற்றும் சொந்த காரக
எல்லாம் நிக்ககறான்னு சொல்லிப் பார்த்தேன். நான் பேசறது அவருக்குப்
புரியலை. அவர் பேசறது எனக்குப் புரியலை. ஒன்னும் மட்டும் புரிஞ்சுடுச்சு...
முதலை வாயில போன சாப்பாடு மாதிரி, உள்ள போனா திரும்பி
வரமுடியாதுன்னு.

அன்னிக்கு என்ன பிரச்சினைன்னு தெரியலை வழியனுப்ப வந்தவர்கள்
யாரையும் உள்ளே விடவேயில்லை. சரி அம்புடுதேன் அப்படின்னு
நினைச்சுகிட்டு வேற வழியில்லாம உள்ளாற போயிட்டேன். பிசினஸ் கிளாஸ்
என்பதால் லவுன்ஞ் பாஸ் எல்லாம் போட்டுக் கொடுத்தாங்க. நமக்குத்தான் அப்ப அந்த விஷயம் எல்லாம் தெரியாதா, நேரா எல்லாம் செக்கிங்கும் முடிஞ்சுட்டு உள்ளாற போய் சமத்தா உட்கார்ந்தாச்சு.

10.30 ப்ளைட். நம்ம நல்ல நேரம் பாருங்க அன்னிக்குன்னு பார்த்து 3 மணி நேரம்
லேட். சிங்கப்பூரில் நம்ம அடுத்த வண்டி 7 மணிக்கு. இவங்க அப்படி இப்படின்னு கிளம்பி சிங்கப்பூர் போய் சேரும் போது கார்த்தால 8 மணி.

அந்த ப்ளைட் நமக்காக வெயிட் பண்ணுமா அது போயிடுச்சு. அங்க கவுண்டரில் போய்க் கேட்டா, அடுத்த ப்ளைட் 3 மணிக்கு இருக்கு அதுல போங்க அப்படின்னு சொல்றாங்க. எனக்கோ பாங்காக்கில் இருந்து அடுத்த ப்ளைட் 2 மணிக்கு.

எங்கயிருந்து அப்படி ஒரு தைரியம் வந்ததுன்னு தெரியலை, பிடிச்சு இங்கிலீசுல (ஆமாங்க இங்கிலீஷிலதாங்க.. நிஜமாங்க.. நம்புங்க) கச்சா முச்சான்னு கத்த ஆரம்பிச்ச உடனே, சரி சரி கவலைப் படாதீங்க, இங்கேயிருந்து நேரடியா குன்மிங்கிற்கு சில்க் ஏர்வேஸ் (நம்புங்க பேர் அதுதான்..) மதியம் 2 மணிக்கு இருக்கு அதுல அனுப்பறோம் அதுவரைக்கும் லவுன்ஞ்சில் உட்காருங்க அப்படின்னு அனுப்பிட்டாங்க.

நம்ம நேரம் அதோட முடிஞ்சுதா... அங்க போனா பெரிய லவுன்ஞ். அதுல வேலை செய்றவங்க 5 பேர். ஆனால் இருப்பதோ நான் மட்டும்தான். ஆஹா மாட்டிடாண்டா ஒருத்தன் அப்படின்ற மாதிரி, 5 பேரும் சேர்ந்து வாங்க வாங்கன்னு ஒரே வரவேற்பு வேற. மனசுல கொஞ்சம் பயமா இருந்தாலும், மூஞ்சியை தைரியமா வச்சுகிட்டு அங்க சாப்பிட என்ன வச்சு இருக்காங்க அப்படின்னு பார்த்தேன். இட்லி, வடை, தோசை, தயிர் சாதம் எல்லாம் இருக்கான்னு பார்த்தா... ம்

ஒன்னுமேயில்லை. ப்ரட், சீஸ், பர்கர், ஹாட் டாக், கோழி, மாடு இது மாதிரி
நிறைய வச்சு இருக்காங்க... சரி வேற என்ன வச்சு இருக்காங்கன்னு பார்த்தா... பேர் கூட கேள்விபடாத விஸ்கி, ப்ராண்டி, ஜின் அப்படின்னு அயிட்டங்களா அடுக்கி வச்சு இருக்காங்க... இதை கொடுப்பதற்கு இரண்டு பேர் வேறு...

வேறு வழியில்லாம இரண்டு ப்ரட் ஸ்லைஸ் எடுத்துகிட்டு, கொஞ்சம்
வெண்ணை, ஜாம் எல்லாம் எடுத்துகிட்டு சாப்பிட்டு முடிச்சு, காப்பி குடிக்கலாம் அப்படின்னு பார்த்தா... வெறும் டிக்காஷன் வச்சு இருக்காங்க. அங்க ஒரு அம்மணி நின்னுகிட்டு என்ன வேணும் அப்படின்னு கேட்டுச்சு. நானும் பால் வேணும்னு சொல்ல, அவங்க சின்னதா ஒரு பாக்கெட் கொடுத்தாங்க. அதுல க்ரீம் மில்க்ன்னு எழுதியிருந்துச்சு. சரின்னு டிக்காஷினில் அதை ஊத்தினா, அது நல்லா சூடா இருந்த காப்பிய ஜில்லுன்னு ஆக்கிடுச்சு. கொடுமையடா சாமின்னு, காப்பில சக்கரை போட மறந்து போய் அப்படியே குடிக்கப் போய், பாகற்காய் கூட அவ்வளவு கசக்காது, இது அப்படி கசப்பு. அடடா, அப்படின்னு சொல்லிகிட்டு, திரும்பவும் சக்கரையை காப்பியில் போட்டு, அத குடிச்சுட்டு, ஏர் போர்ட்ட ஒரு ரவுண்டு விட்டு வரலாம் அப்படின்னு ஒரு சுத்து சுத்தி வந்தேன்.

அப்புறம் 2 மணிக்கு சில்க் ஏர்வேஸ் கிளம்பிச்சா… அங்க பார்த்தா பிசினஸ்
கிளாசில் இரண்டே இரண்டு பேர்தான் உட்கார்ந்து இருக்கோம். அங்கேயும்
எங்களுக்கு சாப்பாடு கொடுக்க 4 பேரும். நல்ல பசி… சாப்பாடு எப்படா
கொடுப்பாங்கன்னு பார்த்தா… ஷாம்பெயின் வேணுமா, ஒயின் வேணுமா,
விஸ்கி வேணுமான்னு கேட்டுகிட்டே இருக்காங்க.. அப்படி இப்படின்னு ஒரு
30 நிமிஷம் கழிச்சு சாப்பாடு கொண்டு வந்தா… வாழ்க்கையே வெறுத்துட்டேன்.

கொஞ்சம் இலை தழையை எல்லாம் போட்டு, ஒரு மூலையில் கொஞ்சூண்டு
சோறு… ஆண்டவரேன்னு வெறுத்து போய், திரும்பவும் அடிய பிடிடா
பாரதபட்டான்னு, ப்ரட், வெண்ணை, ஜாம் அப்படின்னு கேட்டு வாங்கி
பொழுது போச்சு.

ஒரு வழியா 6 மணிக்கு குன்மிங்கில் கொண்டு விட்டா, நான் போக
வேண்டிய ட்ரையின் மிஸ் ஆயிடுச்சு.. திரும்பவும் அங்க ஒரு ஹோட்டலில்
தங்கி, ப்ரெட் சாப்பிட்டு அலுத்து போனதால், இரண்டு ஆப்பிளும், ஒரு
வாழைப்பழமும் சாப்பிட்டு மறு நாள் மதியம் ட்ரையின் பிடிச்சு நான் போக
வேண்டிய இடத்து போனேன். அங்கு போன உடனே, அங்கிருந்த இந்திய
நண்பர்கள் கொடுத்த சோறும், கடலைக் கறியும் சாப்பிட்டபின் போன உயிர்
வந்துச்சு.

முதல் பிரயாணம் இவ்வளவு கஷ்டமாக இருந்த்தாலும், அதற்கு அடுத்து வந்த 5 வருடங்களில் செய்த 6 பிரயாணங்களும் இனிப்பானவையாகவே இருந்தது.


டிஸ்கி:- ஹாஹா அருமையான பயணம். தொடரட்டும் இதுபோல் இனிமையான பயணங்கள்.

ரொம்ப நாளைக்குப் பிறகு உங்க எழுத்தை முதன் முதலில் படித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் ராகவன் சார் ! என் வலைத்தளத்துக்காகத் திரும்ப எழுத ஆரம்பிச்சது குறித்து மகிழ்ச்சி.

 அப்புறம் கொஞ்சம் கலாய்க்கப் போறேன். நானும் என் பங்குக்கு :) .. அதென்னது சில்க் ஏர்வேஸ் .. :) அப்புறம் பேரே கேள்விப்படாத விஸ்கி, பிராண்டி, ஜின்னா.. ஹாஹா நம்பிட்டோம். . அப்ப என் ப்லாகில் சரக்கொன்றைப்பூ பின்னூட்டத்தில் போட்ட ஜானி வாக்கரையாவது தெரியுமா. ஹாஹா.

இந்தக் காப்பிக் கொடுமையை நானும் அனுபவிச்சிருக்கேன். பாகற்காய் கசப்புத்தான். கூடவே ஏகப்பட்ட நுரை வேற. அத எல்லாம் ஊதினா காஃபியே இருக்காது :)

ஒரு வழியா சோறு கிடைச்சதே. கடலக்கறி கிடைச்சத பார்த்தா அவங்க கேரளா நண்பர்கள்னு தோணுது.

ஓகே ரைட்டு. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா படிச்சேன் எல்லாத்தையும். உங்களை மீட்டெடுத்த எழுத்துக்கு நன்றி !

எழுத்து ஒரு அருமையான வடிகால், இதையே தொடர வேண்டுகிறேன். இது என் வேண்டுகோளும் கூட. 12 கருத்துகள்:

 1. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html நண்பர் அறிமுகமும் பயண அறிமுகமும் ரசிக்கும்படி இருந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நல்ல அனுபவம் தான் - அதுவும் முதல் வெளிநாட்டுப் பயணத்தில்!

  பதிலளிநீக்கு
 3. தனது முதல் விமானப் பயணத்தை அழகாகவும் மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளார்கள்.

  இதேபோன்ற என்னுடைய முதல் விமானப் பயணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து எனக்குள் சிரித்து மகிழ்ந்துகொண்டேன்.

  அவருக்கும் தங்களுக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. Mikka nandri Jambu sir. Wishing you a happy retired life. ini full time bloggerthan. innum niraiya eluthalam padikalam :)

  Thanks Venkat sago

  Thanks VGK sir :)

  Thanks Nagendra Bharathi sago

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. இன்று தான் ராகவன் அவர்களைப் பற்றி முதன் முதலாக தெரிந்து கொண்டேன். சும்மா தேமேன்னு இருக்காம ‘சும்மா’ வலைத்தளத்திற்கு வருகை தந்தால் நிறைய மனிதர்கள், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.

  தேன் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவது போல் இந்தத்
  தேனின் வலைத்தளம் வாசகர்களுக்கு, வலைப்பதிவர்களுக்கு ஒரு அழகான மலர்.

  வாழ்க வளமுடன்

  மிக்க நன்றி தேன்

  பதிலளிநீக்கு
 6. படித்தேன் பிடித்திருக்கு ராகவனின் பயண கட்டுரை அருமை
  தொடரட்டும அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  பதிலளிநீக்கு
 7. படித்தேன் பிடித்திருக்கு ராகவனின் பயண கட்டுரை அருமை
  தொடரட்டும அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  பதிலளிநீக்கு
 8. Thanks Elamurugan

  Ahaa arumaida Jaya.Thanks pa :)

  Thanks Unknown

  Thanks Sanu

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...