வியாழன், 11 மே, 2017

ஷார்ஜாவுக்கு ஒரு ஷார்ட் ட்ரிப். ( ஹாலிடே நியூஸ் இதழுக்காக )

ஷார்ஜா என்றதும் நமக்குக் கிரிக்கெட்டும் பதினைந்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கும்படி 1980 இல் கட்டப்பட்ட அதன் பிரபல ஸ்டேடியமும்தான் ஞாபகம் வரும். ஐக்கிய அரபு நாடுகளில் சாமான்யர்கள் வசிப்பதற்கு ஏற்ற எளிமையான நகரம் ஷார்ஜா. துபாயில் வேலை செய்பவர்கள் வீட்டுவாடகை இங்கே குறைவாக இருக்கும் என்பதால் இங்கே வீடு எடுத்துத் தங்கி துபாய்க்கு மெட்ரோவில் சென்று வருவார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குள்ளான துபாய் ஷார்ஜா அபுதாபி போன்ற அரபு நாடுகளின் வளர்ச்சி அபாரமானது.

அரபிகளுக்கு அடுத்தபடியாக மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர்கள், வடநாட்டவர், நைஜீரியர்கள், எகிப்தியர்கள், பிலிஃபைன்ஸ், லெபனீஸ் ஆகியோர் இங்கே வசிக்கிறார்கள். இங்கே விதம் விதமான கட்டிடங்களும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகளும்பிரசித்தம். பதினாறு லேன் உள்ள ஷேக் ஸாயத் ரோட் துபாய், அபுதாபி, ஷார்ஜாவை இணைக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் துபாயிலும், உயர்தர மரப்பொருட்கள் அபுதாபியிலும் பிரசித்தம். உயர்தர செண்ட், பாடி ஸ்ப்ரே தவிர தங்க நகைகள் இங்கே சிறப்பானவை.   

ஒவ்வொரு ரோட்டிலும் ஷாப்பிங் மால்களும் சேட்டன்களின் கடைகளும் இருப்பதால் தினசரி தேவைப்படும் பொருட்களை வாங்கலாம். கஸ்டர்ட், மில்க் ஷேக், சாக்லேட்ஸ், வேஃபர்ஸ், பிஸ்கட்ஸ், கூல்ட்ரிங்க்ஸ், ஐஸ்க்ரீம்ஸ், நான்வெஜ் ஐட்டம்ஸ், காய்கனிகள்,, ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், மருந்துகள் என என்ன வேண்டுமானாலும் லிஃப்டில் இறங்கி வாசல் படியிலோ பக்கத்துத் தெருவிலோ வாங்கலாம்.


மண்ணின் மைந்தர்களாம் அரபிகளுக்கு இங்கே சிட்டிசன்ஷிப் நம்பருடன் ஒரு கொடி கொடுத்திருக்கிறார்கள். அதைக் காண்பித்தால் கடைகளில் கன்சஷனில் அத்யாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது. கே எஃப் சி, மெக்டோனால்ட்ஸ், சப்வே போன்ற பிரபல ஃபாஸ்ட்புட் கடைகளும் ஸ்டார் பக்ஸ் போன்ற காஃபி ஷாப்புகளும் இருக்கின்றன. சிம்ரன் ஆப்பக்கடையும் இருக்கு !

ஃபைவ் திர்ஹாம் ஷாப் என்றும் லூலூ ஷாப் என்றும் அதிகமாக மலிவு விலைக் கடைகள் இருக்கின்றன. இந்த ஃபைவ் திர்ஹாம் ஷாப்பில்தான் வித்யாசமான ஊசி ( ஊசியின் பின்புறத்திலே அப்படியே நூலைக் கோர்க்கலாம் ) அட்டை ஒன்று வாங்கினேன். இன்னும் பொம்மைகள், தலையணை உறைகள், கால்மிதிகள் அலங்காரப் பொருட்கள் பரிசுப் பொருட்கள் போன்ற பல இருக்கின்றன. திருமணத்துக்கு உபயோகப்படுத்தும் கம்போசா தட்டுகள் எனப்படும் சீர் தட்டுகள் விதம் விதமான டிசைன்களில் கிடைக்கின்றன. தேநீர்க் குவளை, கப் & சாஸர் எல்லாம் ஓவியங்கள் வரையப்பட்டு வெள்ளி தங்க விளிம்புகளுடன் அற்புதமாக இருக்கின்றன. 

வீடுகள் எல்லாம் அநேகமாக ஃப்ளாட்டுகள்தான். பல மாடிக் கட்டிடங்கள். ஒவ்வொரு மாடிக்கும் லிஃப்ட் இருந்தாலும் படிகளும் உண்டு. அதே போல் குப்பை போட தனி அறையே உண்டு. அதை மேலே இருந்து ஒரு கதவைத் திறந்து தூக்கிப் போட கீழே இருக்கும் குப்பை ரூமில் சேகரமாகும். அதே போல் அனைத்துமே செண்ட்ரலைஸ்ட் ஏசி சிஸ்டம்.  கார்களும் ஏசி. அங்கே அடிக்கும் வெய்யிலில் சிறிது நேரம் வெளியில் நின்றாலே கருவாடாகி விடுவோம்.

கார்கள் அதிகம் என்பதால் நிறுத்துவதற்கு இடம் தேடியும் அலுத்து விடுவோம். வைக்கவும் எடுக்கவும் ஒவ்வொரு முறையும் டக் அப் வார்தான். காரை பார்க் செய்யும்போது பல மாதங்களுக்கு செல்லுபடியாகும்படிப் பணம் கட்டி வாங்கிய அனுமதி அட்டையைக் காரின் முன் பக்கக் கண்ணாடி வழியாகத் தெரிவது போல வைத்து விட வேண்டும். போலீஸ்காரர் செக் செய்யும்போது இல்லாவிட்டால் நாம் ஃபைன் கட்ட வேண்டி வரும்.

ஷார்ஜாவுக்கு நாங்கள் சென்றது ஒரு அக்டோபர் மாதம். அதிக வெய்யில் இல்லாத பருவத்திலும் வெய்யில் அடித்தது. பாலை வனமல்லவா. ஏர்ப்போர்ட்டில் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாடியபடி மகிழ்ந்து கொண்டிருந்தது சிறார் கூட்டம்.

பேரீச்சம்பழத்தில் தயாரிக்கப்படும் அரபிக் காஃபி ரொம்ப பிரசித்தம். ஷவர்மா, குப்பூஸ், ஃபலாஃபல், அர்பி டிக்கி, ஆலிவ் ஊறுகாய்,  கறுப்பு பேரீச்சை, ஃப்ரெஷாக மரத்தில் பறிக்கப்படும் பேரீச்சை, முந்திரி பாதாம் பதித்த பேரீச்சை, பேரீச்சை ஜாம் ஸ்டஃப் செய்த மினி பன் ஆகியன இங்கு ஸ்பெஷல்.

சாண்ட் சஃபாரி, ஆஃப்ரா எனப்படும் படகுச் சவாரி, புஹைரா மற்றும் அல்மஜாஸில் கார்னிஜ் எனப்படும் கடல் முகத்துவாரத்தை ஒட்டிய வாக்கிங் பாதை, ஆகியன சிறப்பு. சினிமா தியேட்டர், ( இபுன் படாடா மால் – இங்கே கண்ணாடிக் குடுவைக்குள் மணல் ஓவியம் ப்ரசித்தம். , துபாய் மால், புர்ஜ் அல் அராப் மால் ) ஷாப்பிங் மால்கள், சிட்டி செண்டர், அட்லாண்டிஸ், பாம் ஜுமைரா, கௌதம் சிட்டி, உலகத்திலேயே உயர்மான 160 தளங்கள் கொண்ட புர்ஜ் கலீஃபா டவர், அங்கே மியூசிக் ஃபவுண்டன் ( இசை நீரூற்று ) , வாட்டர் தீம் பார்க்குகள், கிங் ஃபைஸல் மசூதி ஆகியன உள்ளன.

கார்னிஜில் படக்குப்போட்டி, ஒட்டகச் சவாரி, ஹென்னா, அரபிய உணவுத் திருவிழா, டேட் ஃபெஸ்டிவல் எனப்படும் பேரீச்சை விழா ( மே – ஆகஸ்ட் மாதம் வரை ) ஆகியன பிரபலம்.

இந்துக் கோயில் இருக்கும் பர் துபாய், க்ரீக் பார்க், ப்ளூ சோக் எனப்படும் நகைக்கடைகள், ஷார்ஜா செண்ட்ரல் மார்க்கெட், மீன் மார்க்கெட், ஷார்ஜா இஸ்லாமிக் சிவிலைசேஷன் ம்யூசியம், ஷார்ஜா கேலிகிராஃபி மியூசியம், ஷார்ஜா ஆர்ட் மியூசியம், ஷார்ஜா ஆர்க்கியாலஜிகல் மியூசியம், அல் மஹாதா மியூசியம், ஷார்ஜா நேஷனல் பார்க், ஷார்ஜா மான்யுமெண்ட், ஷார்ஜா டெஸர்ட் பார்க், டால்ஃபின் ஷோ ஆகியன கண்டு களிக்கக்கூடிய இடங்கள். தற்போது தரையிலும் தண்ணீரிலும் செல்லும் வொண்டர் பஸ், ஃப்ளவர் கார்டன் ஆகியன புது கேளிக்கை விஷயங்கள். அவற்றிலும் சென்று களித்தோம்.

க்ரீக் பார்க்கில் கேபிள் காரில் ரோடைக் கடந்ததும் பக்கவாட்டில் ஒரு பக்கத்தில் கடல் நீர் நிறைந்த இடத்தையும் இன்னொரு புறம் பார்க்கையும் சூரிய அஸ்தமன சமயத்தில் உயரத்தில் பார்த்தது அசந்தோம். எண்ட்ரன்ஸ் டிக்கெட் ஒரு ஆளுக்கு ஐந்து திர்ஹாம். ஆனால் அங்கே வெய்யில் அதிகம் என்பதால் பார்க்கில் மரபெஞ்சுகள் போடப்பட்டு உட்காரவோ தொடவோ இயலாமல் கொதித்துக் கிடந்தன. குழந்தைகள் ஏறி விளையாட ராட்சச ஜெயண்ட் வீல் உண்டு.

வறட்சியான பாலையிலும் எப்படித்தான் ரோடு முழுவதும் செடிகள் நட்டுப் பராமரிக்கின்றார்களோ தெரியவில்லை. அதேபோலத்தான் பார்க் முழுவதும் பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து இருந்தது. ஈச்ச மரங்களுக்குக்குறைவே இல்லை. வேறு பலவகை மரங்களும் இருக்கின்றன. இதற்குத் தண்ணீர் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.

இங்கே உள்ள ஷாப்பிங் மால் & பார்க்குகளுக்கு வேறு வேறு பாதைகள் இருக்கின்றன. ஒரு பாதையில் போய் மறுபாதையில் வந்தால் குழம்பி விடுவோம். எனவே ஒரு மேப் வைத்துக் கொள்வது நல்லது. இந்த பார்க்குகளிலும் கார்னிஜிலும் வாக்கிங் செல்ல மக்கள் வருகிறார்கள். குழந்தைகள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.

கார்னிஜை அடைய ரோடைக் கடக்க வேண்டும் என்றால் நாம் கடக்கும்போது தூரத்தே வரும் கார்கள் அப்படியே நின்று விட்டு நாம் கடந்ததும் ரோடைக் கடக்கின்றன. இதை நான் இங்கேதான் பார்த்தேன். அதுவும் 20 கிமீக்கு அதிக ஸ்பீடில் இந்த கார்னிஜ் ரோட்டில் கார்கள் பயணிப்பதில்லை. ரோட் ரூல்ஸ் கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் இரவில் ரோடு முழுமையாக ஒரு ரோலர் போன்ற வண்டியின் மூலம் மொத்தமாக சுத்தம் செய்யப்படுவதால் தூசு தும்பு எதுவுமே இல்லை..

இங்கே பஸ் ஸ்டாப்புகள் அரைக்கோள வடிவில் கண்ணாடியால் அமைக்கப்பட்டவை. குளிரூட்டப்பட்டவை. பஸ்ஸில் ஊர் விட்டு பக்கத்து ஊர் செல்ல டிக்கெட் 30 திர்ஹாம் வரலாம். காரில் பயணம் செய்தால் சரியாகப் பார்த்து ஒவ்வொரு ஃப்ளை ஓவரையும் கடக்க வேண்டும். நடுவில் டனல் எனப்படும் கேனால்களும் ( சுரங்கப்பாதை ) வரும். தவற விட்டால் அடுத்த நாட்டுக்கே அவை கொண்டு போய்விடும். எனவே ஃப்ளைஓவரைக் கடக்கும்போது எச்சரிக்கையாகக் கவனிக்க வேண்டும்.

டால்ஃபின் ஷோ மிகுந்த சுவாரசியமானது. அதே போல் ஆப்ரா எனப்படும் படகுச்சவாரி செய்து பர்துபாயில் இருக்கும் இந்துக்கோயிலுக்குச் செல்வதும். ஷார்ஜா நேஷனல் பார்க்கில் காலித் லாகூன் என்னுமிடத்தில் மினியேச்சர் ஷார்ஜா செய்து வைக்கப்பட்டிருக்கு. இஸ்லாமிய சிவிலைசேஷன் மியூசியம் இஸ்லாமியர்கள் மட்டுமே உபயோகப்படுத்த இயலும். காலிகிராஃபி ம்யூசியத்துக்கு குடும்பமாகச் சென்றால் எண்ட்ரன்ஸ் தொகை பத்து திர்ஹாம்தான்.

முழுமையாகக் குளிரூட்டப்பட்ட பல ஏக்கர் பரப்பு உள்ள ஷார்ஜா டெஸர்ட் பார்க்கில் லில்லி, ப்ளூ க்ரீன் அல்கே, ராப்லேக்ஸியா, சாக்லெட் காஸ்மாஸ் போன்ற விதம் விதமான பாலைப்பூக்கள் மலர்ந்து காட்சியளிக்கின்றன. அரபியன் கோப்ரா, மணல்மீன் ஆகியவற்றின் ஃபாசில் இருக்கிறது. முக்கியமாய் பிரம்மாண்டமான டைனோஸரின் எலும்புக்கூடும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அஷ் ஷாரிக்வா என்னுமிடத்தில் இறங்கி ஏறும் வெகு நீளமான ரோட்டில் சென்று ஷார்ஜாவின் ஹிஸ்டாரிக் மான்யுமெண்டை தரிசித்தோம். ஷார்ஜா அரப் கல்சுரல் கேப்பிடல் மான்யுமெண்ட் என்ற இந்த அடையாளச் சின்னம் வெகு உயரமாக உள்ள ஸ்தூபிக் கட்டிடமாக இருக்கிறது. 1998 இல் இது அமைக்கப்பட்டுள்ளது. நாற்புறமும் படிகள் உண்டு. இருபுறம் ரோட்டுப்பாதை இருக்கு. பாலைவனத்துல தன்னந்தனியா இது கம்பீரமா நிக்குது.

இந்தியர்கள் அதிகம் இருப்பதால் இந்துப் பண்டிகைகள் அமைதியான முறையில் அனுசரிக்கப்படுகின்றன. மேலும் ஹியூமர் க்ளப், நகரத்தார் சங்கம், மலையாளீஸ் அசோஷியேஷன் , அமீரக வலைப்பதிவர்கள், என பல்வேறுபட்ட மக்கள் குழுவாக ஒருங்கிணைந்து விடுமுறை தினங்களையும் விசேஷ தினங்களையும் கொண்டாடி மகிழ்கிறார்கள். வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் . எனவே அன்று எல்லா இடங்களிலும் கூட்டமாக இருக்கும். உணவுகளும் விதம் விதமாகக் கிடைக்கும். வாய்ப்புக் கிடைத்தால் ஒரு வாரம் ஷார்ட் ட்ரிப் சென்று ஷார்ஜாவின் அற்புதங்களைக் கண்டு களித்துவிட்டு வாருங்கள். 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.  


19.ஷார்ஜாவின் கார்னிஷ் – ஒரு இளமாலை நடைப்பயிற்சி 


7 கருத்துகள் :

Chellappa Yagyaswamy சொன்னது…

உங்களுக்கென்னமா, உலகம் சுற்றும் வாலிபி! ஷார்ஜா பற்றிய அழகான கட்டுரை. அரபுநாடுகளில் பெரும்பாலும் அமெரிக்கக் கட்டிட முறைகளும், பாதுகாப்பு அம்சங்களும், குப்பை அகற்றும் வழிமுறைகளும்தான் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையோ அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

நெல்லைத் தமிழன் சொன்னது…

"பல மாதங்களுக்கு செல்லுபடியாகும்படிப் பணம் கட்டி வாங்கிய அனுமதி அட்டையைக்" - இது ஒரு ஆப்ஷன்'தான். எங்க பார்க் பண்ணினாலும் உடனுக்குடன் மொபைல் மூலமாகவே 1 மணிக்கு 2 திர்ஹாம் என்று பார்க்கிங் கட்டணம் கட்டிவிடலாம். இல்லைனா சில இடங்களில் பணம் போட்டு (பார்க்கிங் மெஷினில்) ரெசிப்டை காரின் முன் பக்கத்தில் வைத்துவிடலாம். இதனை செக் செய்ய எல்லா இடத்திலும் அனேகமா எப்போதும் ஆட்கள் இருக்கும். அவங்க, அவங்ககிட்ட இருக்கிற மெஷின் மூலமாகவே, உடனடியா 'ஃபைன்'ஐ சிஸ்டத்தில் அப்டேட் பண்ணிருவாங்க. எப்போ வேணுமானாலும் கார் உரிமையாளர் செக் பண்ணிக்கொள்ளலாம்.

பேரீச்சம்பழத்தில் தயாரிக்கப்படும் அரபிக் காஃபி ரொம்ப பிரசித்தம் - இப்படி ஒன்று நான் கேள்விப்பட்டதே இல்லை. அரபிக் காஃபி உண்டு. பேரீச்சை உண்டு. இரண்டும் சேராது. அரபிக் காஃபி என்பது 'கட்டன் சாயா' மாதிரி பால் விடாத காஃபி. ஆனால் அதில் ஏலம் போன்ற மணப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

"அடுத்த நாட்டுக்கே அவை கொண்டு போய்விடும்" - 'நாடு' என்ற பதம் சரியில்லை. அமீரகம் என்பது சரி. நம் மாகாணங்கள் போல்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கட்டுரை. புத்தகத்திலேயே படித்து ரசித்தேன்.

G.M Balasubramaniam சொன்னது…

ஷார்ஜா துபாய் நக பத்திரிகைக்களில் குற்ற வாளிகளின் பெயரைச்சொல்லாமல் இனிசியலில்தான் குறிப்பிடுவதைக் கண்டிருக்கிறேன் 2008 ல் துபாய் சென்றிருந்தேன் மெட்ரோ ரயில் அப்போது வந்திருக்கவில்லை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான கட்டுரை...ஷார்ஜாவை உங்கள் மூலம் சுற்றி விட்டோம்...

Thenammai Lakshmanan சொன்னது…

Ahaa thanks Chellappa sir :) ! welcome home :)

Thanks VGK sir

Thanks for correcting the infos Nellai Tamilan :)

Thanks Venkat sago :)

new info for me Bala sir. thanks

thanks Thulasi sago :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...