எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 மே, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். துளசி கோபால் நடத்திய ஒரு கிவி இந்தியன் கல்யாணம் !

 துளசி கோபால் . கிட்டத்தட்ட 2009 இல் இருந்து என் தோழி. வேறென்ன புதுசா சொல்ல. :)

இவள் புதியவள், சூரியக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல் ஆகியவற்றில் எழுதிக்கிட்டு இருந்தோம். துளசிக்கும் கோபாலுக்கும் நடந்த சஷ்டியப்த பூர்த்திக்குத்தான் போக முடியலைன்னா அவங்க பொண்ணு கல்யாணத்துக்கும் போக முடில. ஏன்னா அது கிவில இல்ல நடந்துச்சு :)(துளசி பொண்ணு கல்யாணம்னா நம்ம பொண்ணு கல்யாணம் மாதிரிதானே. அதான் ஒரு நாள் பூரா கொண்டாடலாம்னு மிட்நைட்ல போஸ்ட் போட்டுருக்கேன். வாங்க அவங்க கூடவே போய் கொண்டாடுவோம். )


சரி அந்த சுவாரசியமான அனுபவங்களை நாம படிச்சாவது அனுபவிப்போம்னு எழுதித்தரச் சொன்னேன். உடனே அவங்க வாஷிங்க்டனில் திருமணம் மாதிரி எழுதி அனுப்பிட்டாங்க. அவ்ளோ பெரிசு மட்டுமில்ல . செம ஹியூமரும் கூட. நான் சிரிச்சு ரசிச்சத. நீங்களும் ரசிங்க :)/////அன்புள்ள தேனே,

நலமா?

இப்பதான் எழுத உக்கார்ந்தேன். துளசியின் வழக்கபடி மஹாபாரதமாப் போகுது.

இதுவரை எழுதியது இப்போ இங்கே அனுப்பறேன். பார்த்துட்டுச் சொல்லுங்க. ஓக்கேன்னா எழுதி முடிச்சுடறேன்!!!!!!!!
================================================

 கல்யாணம்...  ஹஹஹ  கல்யாணம்

மகளும் நண்பனும் கல்யாணம் கட்டிக்க முடிவு செஞ்சுட்டாங்க. என்ன மகளே.... உன் கல்யாண நிச்சயம் ஆனதைக் கொண்டாட வேணாமா? 

அதெல்லாம் எதுக்கு?  நாங்க கல்யாணத்துக்குப் பணம் சேர்க்கவேணாமா?

ஓஹ்.... அப்படியா?  எங்க இந்திய வழக்கப்படி கல்யாண நிச்சயதார்த்தமே ஒரு சின்னச் சடங்கா செய்றதுதான் வழக்கம்.  இங்கெதான் அப்படி ஒன்னுமில்லையே :-)  ஒன்னு வேணாச் செய்யலாம்.... உங்க கல்யாணம் கட்டிக்கப்போகும் முடிவை நம்ம நண்பர்களுக்கு அறிவிச்சு ஒரு சின்ன பார்ட்டி வச்சுக்கலாமா? 

மகளும் வரப்போற மாப்பிள்ளையுமாக் கொஞ்சம் யோசனையில் இருந்தாங்க. அப்பா அம்மா தரும்  பார்ட்டின்னு வச்சுக்குங்களேன்!  
சரின்னு முடிவாச்சு.  ஏற்பாடுகளையெல்லாம் மகளையே செய்யச் சொல்லியாச்சு. பொண்ணு வீட்டில் இருந்து அஞ்சு பேர், மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு பத்து பேர்,  பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்குமான  நண்பர்கள் கூட்டம் இப்படி விழா நடந்தது மே மாதம் 2016 ஆம் ஆண்டு. 

மகளும் வரப்போகும் மருமகனுமா கேக் வெட்டி ஒரு கொண்டாட்டம். என்ன கேக்காம்?  வெல்வெட் கேக்!  ஆஹா.... அப்டிப்போடு! 
அந்த சமயம் வெல்வெட் கேக் பற்றிய  சுவாரசியமான சமாச்சாரங்கள் வலை உலகில் நடந்துக்கிட்டு இருந்தது. இப்படித்தான் வலை உலகில் அப்பப்ப ஏதாவது  முளைச்சு , ஓங்குதாங்கா வளர்ந்து அப்புறம் பொசுக்குன்னு போயிரும். அதுக்குள்ளே வேற எதாவது புதுசா வந்துருக்கும். எல்லாம் சமூகப்பிரச்சனைகள்தான். போராளிகளா நாங்களும்  பொங்கிருவோம்.  உங்களுக்குச் சொல்லலை இல்லே.... நானும்  வலையில் எழுதும் பெரிய கூட்டத்தில் ஒரு அங்கம் என்பதை இங்கே சொல்லிக்கொண்டு.... க்க்கும்.....  யாருப்பா அங்கே? ஒரு ஜோடா ப்ளீஸ்:-)

எப்ப கல்யாணம் வச்சுக்கலாமுன்னு இருக்கீங்கன்னு நான் கேட்டதுக்கு  அக்டோபர் இல்லை நவம்பர்னு சொன்னதும் எனக்கு மனசுக்கு மகிழ்ச்சி. இப்ப நடப்பது மே மாதம். இன்னும் அஞ்சாறு மாசத்துலே   நம்ம வீட்டுக் கல்யாணம்!

என்ன?  அஞ்சாறு மாசமா? நாங்க சொல்ற அக்டோபர் நவம்பர் அடுத்த வருசம் 2017ன்னு  சின்னதா ஒரு குண்டு போட்டது மகள்! ஐயோ  இன்னும் ஒன்னரை வருசம் கழிச்சா?  ஊஹூம் ....   இது வேலைக்காகாது.  

எதுக்கு இவ்ளோ நாள் தள்ளிப்போடறீங்கன்னு கேட்டதுக்கு வந்த பதில் ரெண்டே வரிகளில். கல்யாணத்துக்குத் திட்டம் போடணும். அதுக்குண்டான பணம்  சேர்க்கணும். 

 பொதுவா இங்கெல்லாம் பொண்ணும் மாப்பிள்ளையுமா அவுங்க கல்யாணத்துக்குப் பணம் சேர்த்துக்குவாங்க. கொஞ்சம் இப்படி அப்படின்னு பத்தாக்குறைன்னா.... இருக்கவெ இருக்கு  பேங்க். கடன் வாங்குவதும் உண்டு.  அபூர்வமா சில கல்யாணங்களில்  அவுங்க தாய்தகப்பன் கொஞ்சம்  செலவு செய்வதும்  உண்டு.

நாமோ.... ரெண்டுங்கெட்டான். வசிப்பது  கடந்த முப்பது வருசங்களா நியூஸின்னாலும்... முழுக்க முழுக்க கிவிக்களா (நியூஸி மக்களுக்கு இதுதான் பெயர்!) ஆக முடியலையே. கண்ணாடிக்கு முன்னாலே நின்னு பார்த்தா இந்தியள்தானே தெரிகிறாள்? அதுவுமில்லாம.... பிள்ளைகளுக்குக் கல்யாணச்செலவு  அதிலும் முக்கியமாகப் பெண்பிள்ளைகளின் கல்யாணசெலவு, பெத்தவங்கள் செய்யறதுதானே வழக்கம்....

வெள்ளைக்கொடியை ஆட்டிக்கிட்டே சமாதானம் பேசறேன்.... அதுதான் பிரச்சனைன்னா.... கல்யாணச் செலவை நாங்க ஏத்துக்கிறோம்.  

'ஏன்?  எதுக்கு ?  தேவை இல்லை..'   பட்னு பதில் வருது.

கொஞ்சம் அம்மா  சொல்றதைக்  கேட்டுட்டு அப்புறம் பதில் சொல்லும்மா.....  அப்பாவின் கெஞ்சல் :-)

எந்த மாதிரி கல்யாணம் வேணும்?  எந்த சீஸனில் (காலநிலை) வேணும்?

சர்ச் வெட்டிங்ன்னா... வருசத்துலே ஆறுமாசம்தான்.  வசந்த காலம் பாதியில் தொடங்கி கோடை முடிஞ்சு இலையுதிர்காலம் பாதிவரை மட்டுமே. இங்கெல்லாம் கல்யாணம் சனிக்கிழமைகளில்தான் நடக்கும்.  ஆறுமாசத்துக்கு  இருபத்தியாறு சனிக்கிழமைதான் இல்லையோ..... அதுவும் எங்கூர் நிலநடுக்கத்தினால் ஏகப்பட்ட சர்ச்சுகள் இடிஞ்சு கிடப்பதால் ஞாயிறு சர்வீஸ் நடத்துவதெ கஷ்டமாப் போயிருக்கு... :-( 

கார்டன் வெட்டிங்.  ஸ்ப்ரிங்/சம்மர் ஓக்கே. சர்ச்சுலே நடக்கும் ஃபார்மல்  கல்யாணம் வேணாம். சிவில் வெட்டிங் வேணும்.

சரி.  குறைஞ்சபட்சம் எவ்ளோ மாசங்கள்  வேணும் உங்க  திட்டம் தீட்டிச் செயல்படுத்த? 

ஒரு வருசமாவது வேணும்.

ஒரு வருசம் ப்ளானிங் அதிகம். ஒரு ஏழெட்டு மாசம் போதாது?
ம்ம்ம்ம்.... பார்க்கிறேன்.

காலண்டரை எடுத்து (செல்ஃபோனில்தான்) வச்சுப் பார்த்து நாள் குறிச்சோம்.  ஃபிப்ரவரி  மாசம் 4 ஆம் தேதி. சனிக்கிழமை.  நியூஸிநாட்டில் அரசு விடுமுறை எப்பவும் ஃபிப்ரவரி 6 ஆம் தேதி.  அன்றுதான் இங்கத்து பூர்வகுடிகளுக்கும், மாட்சிமைதாங்கிய   பிரிட்டிஷ் அரசுக்கும் ஒப்பந்தம்   கையெழுத்து இட்ட நாள். அதனால்  சனி ஞாயிறு திங்கள் என்று மூன்றுநாள் லாங் வீக் எண்ட்.  நல்ல சமயம்.

அடுத்து சிவில் கல்யாணம் என்றால்  இதை நடத்தி வைக்க அரசு நியமித்துள்ள  மேரேஜ் ஸெலிபிரிட்டி என்பவர்களால்  நடத்தி வைக்கப்படும். என்னுடைய ஒரு தோழியே கூட இருக்காங்க. 
இதைச் சொன்னப்ப.... மகள் என் வயித்துலே பாலை ஊத்தினாள்.  மணமகனின் தந்தையும் கல்யாணம் நடத்தி வைக்க அனுமதிக்கப்பட்டவராம். அட! ஐயர் செலவு மிச்சம் :-)

மணமகளின் தந்தை தன் பெண் கல்யாணத்தை நடத்தி வைக்க முடியாது. அவர்தானே மணப்பெண்ணை கல்யாண மேடைக்குக் கூட்டி வரணும்! ஆனால் மணமகனின் தந்தை நடத்தி வைக்கலாமாம். 

அதுக்குப்பிறகு  என்ன உடை, எந்த  மண்டபம்  இப்படியெல்லாம் தினம் தினம் விவாதம்தான்.

இது  இண்டியன் & கிவி கல்யாணம் என்பதால் கொஞ்சம் இண்டியன் டச் வேணுமுன்னு முடிவு.  பெண்ணுக்கு உடை காக்ரா, அதுவும் அவளுக்குப் பிடிச்ச நீலக் கலர். 

மாப்பிள்ளை உடுப்புக்கு மெனெக்கெட வேணாம். வாடகைக்குக் கிடைக்கும். யாரும் சொந்தமா கோட் ஸூட் தைச்சுக்கறதில்லை !  ஹப்பா.... எவ்ளோ நிம்மதி  :-)

வேணாங்கற லிஸ்ட் ஒன்னு பார்க்கலாம் இப்ப.

சீர் செனத்தி, வரதக்ஷிணை,  முறை செய்யறது,  நலங்கு வைக்கிறது, சம்பந்தி உபச்சாரம்,  ஜானவாஸம், மேளதாளம், மறுவீடு போறது இப்படி எதுவும் இல்லை.

வேணுங்கற லிஸ்ட்:  

முதல்லே கல்யாணம் பண்ணிக்கப்போறதுக்கு நியூஸி அரசிடம்  லைசன்ஸ் வாங்கிக்கணும். பொண்ணு பையன்ரெண்டு பேருடைய ஜாதகத்தையும் கொடுக்கணும் :-)     அப்பா அம்மா பெயர் முதல் எல்லா விவரங்களும் கொடுக்கணும்.  ரெண்டு மூணு நாட்களில் அனுமதி வந்துரும். அந்தப் படிவத்தைப் பத்திரமா வச்சுருந்து  கல்யாணம் பண்ணி வைக்கப்போகும் ஸெலிப்ரிட்டியிடம் சேர்ப்பிக்க வேணும்.

கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்யணும். கல்யாணச்சாப்பாடு அவுங்கதான்  செஞ்சு பந்தி விளம்புவாங்க.  கல்யாணத்துக்கு முதல் நாள்  ஹால் நமக்குக்  கிடைக்கும்.  அங்கே  தங்கும் வசதி இருக்காது.  எத்தனை பேர், டேபிள் செட்டிங்ஸ், அலங்காரம் , உள்ளே வெளியே எல்லாம் பேசி முடிவு செய்யணும்.
நமக்கு கார்டன் வெட்டிங் வேணுமே.... அதுக்குத் தோதான மண்டபங்களைப் பார்த்தால் பக்கத்து ஊர்களில் ஒன்னு ரெண்டு கிடைச்சது.  திருப்பதியா என்ன? ஊர்விட்டு ஊர் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வர்றதுக்கு?

உள்ளுரில் கிடைக்குமான்னு தேடோ தேடோன்னு தேடுனதில் நம்ம வீட்டுக்குப் பக்கத்துலேயே  இதே பேட்டையில் ஒன்னு   கிடைச்சது.  நாம் சொன்ன தேதியில் மண்டபம் காலி தானாம்.  அவுங்களிடம் நேரம் ஒன்னு வாங்கி, சம்பந்திகளிடம் சொல்லி எல்லோருமாப் போய்ப் பார்த்தோம்.  அப்பதான் சம்பந்தியம்மா சொல்றாங்க அவுங்க பொண்ணுக்கு  சில வருசங்களுக்கு முன்னே அங்கெதான் கல்யாணம் நடந்ததாம். நல்லதாப் போச்சு.  கூடுதலா ஒன்னும் விசாரிக்க வேண்டாம் பாருங்க.

மண்டபத்தில் அதிகப்படியா 85 விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.  பொண்ணுக்கு 30, மாப்பிள்ளைக்கு  30, பொண்ணோட அப்பா அம்மாவுக்கு 25 என்ற கணக்கில் பாகம் பிரிச்சுக்கிட்டோம்:-)

ஒரு கல்யாணமுன்னா நகை வாங்க வேணாமா?  இங்கே அந்த   நகை  கல்யாண மோதிரம்தான்.  பிள்ளையும் பொண்ணுமாச் சேர்ந்து லார்ட் ஆஃப் த ரிங்ஸ் டிஸைனில் மோதிரம் பார்த்து வச்சுருந்தாங்க.  பதிநாலு கேரட். ஆனால் விலை நூறு கேரட்டுக்குள்ளது. மெள்ள  என் அஸ்திரத்தை எடுத்து விட்டேன்.  உங்க சேமிப்பு முழுசும் இந்த மோதிரத்துக்கே செலவானால்... மற்ற சமாச்சாரங்களுக்கு என்ன செய்யப் போறீங்க? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்    யோசனைதான்....

இருபத்தியிரண்டு  கேரட் சம்மதமானால், நான் ஊரில் இருந்து வாங்கி வந்து என் பரிசாகத் தருவேன். ஒர்க் அவுட் ஆச்சு:-)

கார்டன் கல்யாணம் என்பதால்  வெளியே தோட்டத்தில் மணவறை  செட் செஞ்சு இருக்கைகளும் போடவேணுமே....  இதுக்கான ஏற்பாடுகள்  மண்டபத்தில் இல்லை. வெளியே ஒரு பார்ட்டி ஹையர் என்னும் கடையில் நாற்காலிகள்,  அலங்கார வளைவு, செடிகள்,  ரெட் கார்பெட் வாடகைக்குப் பிடிச்சு அட்வான்ஸ் கொடுத்துட்டோம். 

கல்யாணமண்டபத்துக்காரங்க, பொண்ணும் மாப்பிள்ளையும் சாட்சிகளும்  ரெஜிஸ்டரில் கையெழுத்துப்போட  ஒரு மேஜையும் நாற்காலியும் தர்றாங்களாம். கூடவே ஒரு சிகப்புக் கம்பளமும்.  பார்ட்டி கடையில் ரெட் கார்பெட் வேணாமுன்னு சொல்லிட்டோம். அதுக்குண்டான காசை உடனே  கழிச்சுட்டுப் புது பில் கொடுத்தாங்க.

இன்னும் ஆறு மாசம் இருப்பதால்  டின்னருக்கு  என்ன மெனு என்பதை  அப்புறமாச் சொன்னாப் போதுமுன்னு சொன்னது ஆசுவாஸம்.  ரெண்டு வாரத்துக்கு முந்தி முடிவு செஞ்சுக்கலாமாம்.

நாங்க இங்கே முப்பது வருசமா இருக்கோம். நண்பர்கள் ஏராளம். நாமும் பல கல்யாணங்களுக்குப் போய் வந்துருக்கோமே!  நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு அவுங்களைக் கூப்பிடாமல் விடமுடியுமா?  கையில் வெறும் 25  ஸீட்.  கொஞ்சம் யோசனைக்குப்பின்,  கல்யாண தினத்துக்கு  ரொம்பவே நெருங்கிய நண்பர்களை அழைக்கலாம்.  மறுநாள்  ஒரு ரிஸப்ஷன் தனியாக வச்சு அதுக்கு  நமக்குத் தெரிஞ்சவங்களையெல்லாம் கூப்பிடலாமுன்னு முடிவு செஞ்சோம். 

இப்ப  மறுநாள் வரவேற்புக்காக இன்னொரு இடம் பார்க்கணும்.  எங்கூரில் நிலநடுக்கம் ஏற்பட்டு பாதிக்குமேல் நகரமே அழிஞ்சு போச்சுன்னு உங்களுக்குத் தெரியுமோ?  மீதி இருந்த கட்டடங்களில் சின்னதும் பெருசுமா பழுது ஏற்பட்டு அதைக் கடந்த அஞ்சாறு வருசங்களா பழுதுபார்த்துச் சரி ஆக்கிக்கிட்டுத்தான் இருக்கு அரசு. அதனால்  விழாக்கள் நடத்திக்க ஹால்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கு. 

ரொம்பவே முயற்சி செய்தபின்  நகரசபை நடத்தும் நூலகம் ஒன்றில்  இருக்கும் அறை ஒன்னு கிடைச்சது.  இங்கெல்லாம் நூலகத்தையொட்டியே பெரிய ஹால்களைக் கட்டி விட்டுருப்பாங்க. கம்யூனிட்டி ஹால்ஸ்.  வீட்டுக்குப் பக்கத்தில் இல்லாமல் கொஞ்சம் அதிக தூரத்தில் இன்னொரு பேட்டையில் புதுசாக் கட்டி இருக்கும் நூலகத்தில் இடம் கிடைச்சது. நூலகத்தில் வேலை செய்பவர்களிடம் கூட விசாரித்து இந்த இடங்களை  வாடகைக்கு எடுத்துக்கலாம். சமூகப்பயன்பாடு என்றால்  சின்னக் கட்டணம்தான். தனியார் விழா என்றால் கட்டணம்  அதிகம்.  

இடத்தைப்போய் பார்த்துட்டு அதுக்குண்டான பணத்தையும், எதாவது உடைச்சு கிடைச்சு வச்சால்  அதுக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும் என்பதால்  ஒரு தொகையை டெபாஸிட்டாகவும்   (ஒரு  கவரில் பணமாப் போட்டு, நம்ம பெயர் எழுதிக் கொடுக்கணும்!) கொடுத்துட்டு வந்தோம்.

  பெரிய  ஹாலும், பெரிய அடுக்களையுமா இருக்கு. அடுக்களையில் பெரிய ஃப்ரிட்ஜ், டிஷ்வாஷர், அடுப்புகள் இத்தியாதிகளுடன், நூறு  நபர்களுக்கு பரிமாறும் விதமா தட்டு, கப், பௌல் வகையறாக்கள் எல்லாமும் உண்டு.  பயன்படுத்திட்டு எல்லாத்தையும் திரும்பக் கழுவி சுத்தம் செஞ்சு, நம்மிடம் ஹால் எந்த நிலைமையில் கொடுத்தாங்களோ அதே போல்  படு சுத்தமாத் திருப்பித் தரணும். ஹாலில் ரெண்டு பெரிய சைஸ் டிவி ஸ்க்ரீன்.   மானீட்டர்கள்தான்.  நம்ம  படங்களைப் போட்டுக்கலாம். ம்யூஸிக் சிஸ்டம்வேற உண்டு. நாம் சிடி மட்டும்   கொண்டு போனால் போதும்.

மாப்பிள்ளையும் பொண்ணுமா தங்களுக்குள் பேசி கல்யாணத்துக்கான ஒரு தீம் வச்சுக்கிட்டு அதுக்கேத்தாப்போல   மற்ற ஏற்பாடுகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

இப்ப  வரவேற்புக்கான சாப்பாடு ஐட்டங்களை  வெளியில் இருந்து வாங்கிக்கணும். உள்ளுரில் இருக்கும் இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகளில்...  நல்லதா சிலதைத் தேர்ந்தெடுத்துட்டு, அதிலிருந்து  மூணு ஷார்ட் லிஸ்ட் ஆச்சு. தோழியின் வெள்ளிவிழாவுக்குப் போய் சாப்பிட்ட ருசி இன்னும் நாக்கின் ஓரத்துலே கொஞ்சூண்டு ஒட்டிக்கிட்டு இருந்ததால்  முதலில்  அங்கே போனோம்.  ராயல் தந்தூர்! 

ஓனரிடம் பேசி, நம்ம மெனு எல்லாம் சொல்லி அதுக்கான மற்ற விவரங்களை அனுப்பச் சொல்லிட்டு வந்தோம்.  இன்னும் ரெண்டு இடத்தில் கேட்டுட்டுச் சொல்லலாமான்னு  யோசிச்சதில்  தேவை இல்லை.... இங்கேயே சொல்லிடலாமுன்னு முடிவாச்சு.

கல்யாணங்களில் முக்கிய சடங்காப்போன  படம் எடுத்தலுக்கு மகளே,   படம் எடுக்கும்  ஒரு தம்பதியைப் பரிந்துரைத்து வீட்டுக்குக் கூட்டி வந்தாள்.  வீடியோ வேண்டாமுன்னு  முடிவு செஞ்சோம்.  மற்றபடி ரெண்டு நபர்களுமா  கல்யாணத்தன்று காலையில் இருந்து, கல்யாணம் முடிஞ்சவுடனே இருக்கும் ஃபோட்டோ ஷூட், அப்புறம் வெளியே  தோட்டங்களுக்குப்போய்  எடுத்துக்கொள்ளும் படங்கள், தவிர   இரவு நடக்கும் டின்னர் டான்ஸ் என்று  நாள் முழுக்க  படப்பிடிப்பு. கூடவே ஃபோட்டோ பூத் என்ற  ஒன்னும்.  அது இங்கே இப்பெல்லாம் ரொம்ப ஃபேஷனாகிக்கிட்டு வருது. இதுக்கெல்லாம் கொஞ்சம் பெரிய தொகை செலவாச்சு. 

இதுக்கிடையில் நாங்க (நானும் கோபாலும்) பக்தி உலாவுக்காக நேபாளும், இந்தியாவுமா போய் வரக் கிளம்பினோம்.   மகளின் கல்யாண உடுப்பு வாங்கிக்க நல்ல ச்சான்ஸ்.  வட இந்திய  யாத்திரையில்  இந்த காக்ரா வாங்கிக்கவே சண்டிகர் போனோம்.  அங்கே  கல்யாண உடுப்புகளுக்கான  விசேஷக் கடையில் போய் பார்த்துட்டு  ரெண்டு மூணு  வகைகளைத் தேர்வு செஞ்சு படங்களை மகளுக்கு அனுப்பிட்டுக் கடையிலேயே  கொஞ்சம் அங்கே இங்கேன்னு  பார்த்துக்கிட்டு இருந்தோம்.  காலம் கலி இல்லையோ? நாமாக எதையும் வாங்கிட முடியாது. மேலிடத்தின் அப்ரூவல் வேணும்.   

அனுப்பியதில் ஒன்னு சரி ஆச்சு.   அனிடா டோங்ரே என்ற பாலிவுட் டிஸைனர் தயாரிச்சது. துப்பட்டாவில்தான் கொஞ்சம்  மாற்றம் வேணுமாம்.  கடையில் நமக்கான தேவைகளைக் கவனிச்சுக்கிட்ட அனிதா (  இவுங்க பெயரும் இதுதான்!) ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லி, நாங்க கொண்டுபோயிருந்த மகளின் ச்சோளிக்கான அளவுகளை வாங்கிக்கிட்டாங்க. மறுநாள்  மாலை 6 மணிக்கு  முழு உடுப்பும் தைச்சு  ரெடியாகிருமாம். 
நாங்க இங்கே மூணுநாட்கள்தான் தங்கறோம். அதுக்குள்ளே சொன்னபடி ரெடியாகுமான்னு தெரியலை.  மறுநாள் ஒரு சந்தேகத்தோடு கடைக்குப் போனப்ப,  வாக்கு  மீறாம எல்லாம் ரெடி! ரொம்ப அழகா பேக் பண்ணிக் கொடுத்தாங்க.  ஆனால் பொதி பயங்கரக் கனம். அஞ்சு கிலோ! பத்திரமாக் கொண்டு போகணுமேன்னு இப்பப் புதுக் கவலை:-)

திரும்பி நியூஸிக்கு வரும் வழியில் சிங்கப்பூரில்  கல்யாண மோதிரங்களை வாங்கியாச்சு.  இங்கே அதில் சில வரிகளை (!) எழுதணுமாம்.  என்க்ரேவ் பண்ணும் நபரைத் தேடிப்பிடிச்சு அந்த வேலையும் ஆச்சு. இங்கத்து வழக்கமான ஒன்பது இல்லாம  இருபத்தியிரண்டு கேரட் என்பதுடன், மோதிரத்தின் உள்பக்கத்துலே எழுதணும் என்பதும் ஒரு சேலஞ்சா இருந்துச்சாம்!

நம்ம பக்கங்களில் தோழிப்பெண், மாப்பிள்ளைத் தோழன் என்று இருக்கறதைப்போல் இங்கத்துக் கல்யாணங்களிலும்  மாப்பிள்ளைத் தோழர்கள். மணப்பெண் தோழிகள்னு உண்டு.  குறைஞ்சபட்சமா மும்மூணு.  க்ரூம்ஸ் மென் மூவர். ப்ரைட்ஸ்மெய்ட் மூவர்.

இந்த மூணு பேரில்  மாப்பிள்ளைக்கு  ஒருவர் பெஸ்ட் மேன் ஆக இருப்பார். அதைப்போலவே தோழிப்பெண்கள் மூவரில் ஒருவர் மெய்ட் ஆஃப் ஆனர் ஆக இருப்பாங்க.  இப்படி கல்யாணத்தில் க்ரூம்ஸ்மென் ஆகவோ ப்ரைட்ஸ் மெய்டாகவோ இருக்கறவங்களுக்கு, இப்படி மணமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது  மிகப்பெரிய மரியாதை(யாம்) 

இந்த எட்டுப்பேர்கள் தவிர  வாராயோ தோழி வாராயோன்னு மலர் தூவ ஃப்ளவர் கேர்ள் , பேஜ் பாய்ன்னு  கல்யாண மோதிரங்களைக் கொண்டுப்போய்  சாஸ்திரிகளிடம் சேர்ப்பிக்கன்னு ரெண்டு பேர் வேணும்.  மணமகளின் தோழியின் குழந்தைகள் இருவரை இதுக்குன்னே நியமிச்சாச்சு :-)

ஏற்கெனவே சொன்னமாதிரி மாப்பிள்ளை அண்ட் கோவுக்கு உடை பிரச்சனையே இல்லை.  தோழிப்பெண்களுக்குத்தான்   மூணு பேருக்கும் ஒன்னு போல  உடையைத் தனியா தைக்கணும்.

அது என்ன நிறம்., என்ன டிஸைன் என்பதையெல்லாம்  மணப்பெண் முடிவு செஞ்சுக்கணும். ஆங்.....  சொல்ல மறந்துட்டேனே.... மணப்பெண்ணின் உடுப்பை மணமகன் கண்ணில் முன்னாலேயே  காட்டிடக்கூடாது.  மணவறையில் வச்சுத்தான் முதல்முதலா அந்த ட்ரெஸ்ஸைப் பார்க்கணும் என்பது ஐதீகம். இதுலே வெள்ளையர்  உலகக் கலாச்சாரத்தின் படி, சம்திங் ஓல்ட், சம்திங் ப்ளூ, சம்திங் பாரோடுன்னு சிலதையும் சேர்த்துக்கணும். 

Something old represents continuity; something new offers optimism for the future; something borrowed symbolizes borrowed happiness; something blue stands for love, and fidelity; and a sixpence in your shoe is a wish for good fortune and prosperity

மணப்பெண்ணின் உடைக்குத் தகுந்த மற்ற அலங்காரச் சமாச்சாரங்களை  நம் சிங்காரச் சென்னையில் இருந்து வாங்கியாந்தோம்.  ஃப்ளவர் கேர்ளுக்கு ஒரு பட்டுப் பாவாடை செட். இண்டியன் டச் !

கல்யாணப் பத்திரிகையை மணமக்களின் சார்பில் அழைப்பதை  அவுங்களே பார்த்துக்கிட்டாங்க. எதோ கேம் ஷோ போல  க்வெஸ்ட் டைப்.  நம்மப்பக்க மக்களுக்கு  நாங்களே ஒரு டிஸைனில் கல்யாணத்துக்கும், மறுநாள் நடக்க இருக்கும் வரவேற்புக்குமாக  இருவிதமாத் தயாரிச்சு  கணினி மூலமாகவே அனுப்பிட்டோம்.  கணினி பயன்படுத்தாத சிலருக்கு மட்டும்  ப்ரின்டவுட் எடுத்துக்கிட்டுப்போய் நேரில் அழைச்சோம்.  எல்லாமே கடைசி ரெண்டு மாசத்துக்கு முன்னேயே செய்ய வேண்டியது.

கல்யாணதினத்தில்  மணப்பெண் மண்டபத்துக்குப் போவதும் ஒரு ப்ரத்யேக  ஸ்டைலில் இருக்கணும் என்பதால்  வின்ட்டேஜ் காரில் அங்கே போய் இறங்குவதுன்னு  மகளின்  ஐடியா.  அவளுடைய நெருங்கிய தோழியின் பெற்றோர் வின்டேஜ் கார் சங்கத்தின் தலைவர்.  நமக்கும் அவர்கள் குடும்ப நண்பர்கள்தான். ஒருநாள் அவர்களைப் போய் சந்திச்சு விவரம் சொன்னோம்.  அவர்களின்  கார்கள் சினிமாப் புகழ் பெற்றதும் கூட!   சினிமாவில் நடிச்ச வண்டி! நம்ம பீட்டர் ஜாக்ஸன் (லார்ட் ஆஃப் த ரிங்ஸ் புகழ்!) படம். ஹெவன்லி க்ரீச்சர்ஸ். மகளுக்குக் கல்யாணப்பரிசா இருக்கட்டுமுன்னு  இதுக்கு சார்ஜ் ஒன்னும் வாங்கிக்கலை. 

இத்தனை ஏற்பாடும்  செஞ்சுக்கிட்டே இருந்தாலும்,  கல்யாண விருந்தில்  பாயஸமும்  லட்டும் இல்லாதது எனக்கொரு குறையாகவே தெரிஞ்சது.  பாயஸம் பரிமாறுவது கொஞ்சம் கஷ்டம். கீழே கார்பெட்டில் யாராவது குழந்தைகள்  கொட்டிட்டாங்கன்னா....  சுத்தப்படுத்தறது தொல்லையாகப் போகும். அதுக்கு பதிலா இன்னும் ரெண்டு இனிப்புகளை மெனுவில் சேர்த்துட்டோம். அப்படியும் லட்டு.... இல்லையே....  விருந்தினர் திரும்பிப்போகும்போது கொடுக்கும் தேங்காய் பழப்பைகளுக்குப் பதிலா... லட்டு போட்டுக் கொடுத்தால் என்ன?  இந்துக்களுக்கு மட்டும்  கூடவே ஒரு சாமிப் படம் ஃப்ரிட்ஜ் மேக்னெட்டா அந்தப் பையில் வைக்கலாம். இந்த எண்ணத்துடன்  சாமிப்படங்கள் உள்ளவைகளை நம் சென்னை கிரியில் இருந்து வாங்கி வந்துருந்தோம். எல்லாம் சரி... இப்ப லட்டு?

ஆக்லாந்து நகரில் இண்டியன் ஸ்வீட் கடைகள் இருக்கு. நம்ம ஊரில்  இதெல்லாம் இல்லை.  அதனால் அங்கிருந்து கல்யாணத்துக்கு வரப்போகும் நண்பரை வாங்கி வரச்சொல்லலாமான்னு  நினைச்சுக்கிட்டே  இங்கே உள்ளூரில் ஒரு தோழியிடம், யாராவது லட்டு செஞ்சு  கொடுக்கறவர்கள் இருக்காங்களான்னு கேட்டேன். அவுங்க நெருங்கிய உறவினர்  ஒருவர், வீட்டில் இனிப்பு தயாரிச்சு தருவதை ஒரு உபதொழிலாகவும், ஒரு சமூகத்துக்கான சேவையாகவும் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆனால் நம்ம வீட்டுக் கல்யாணசமயம் அவுங்க ஊரில் இல்லை.  

எதுக்கும் கேட்கலாமுன்னு கேட்டது நல்லதாப் போயிருச்சு.   ஆக்லாந்து நகரில் இப்படி  தயாரித்துத் தரும் இன்னொரு உறவினர், தற்செயலாக இங்கே நம்ம  ஊருக்குப் பக்கத்தில் இன்னொரு ஊருக்கு வந்துருக்காங்களாம்.  அவுங்க பெண்ணின் பிரஸவ சமயம் அப்போ. உதவிக்கு வந்துருக்காங்க. அங்கே வேணுமானால் கேட்டுப் பார்க்கலாமுன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்தில்  இந்திரா பென் நம்மை ஃபோனில் கூப்பிட்டு,  விவரம் எல்லாம் விசாரிச்சுக்கிட்டு  செஞ்சு தரேன்னு சொல்லிட்டாங்க.  கல்யாணத்துக்கு  ரெண்டுநாள் இருக்கும்போது  தயாரா செஞ்சு வைப்பாங்கன்னும், நாம் போய் எடுத்துக்கிட்டு வரணுமுன்னும் திட்டம்.  இப்படி  லட்டு ஆசை நிறைவேறுமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. எல்லாம் பெருமாள் அனுப்பிய உதவி!  

அதே நாளில்தான் ஊரில் இருந்து அண்ணனும் அண்ணியும் கல்யாணத்துக்குன்னு இங்கே வர்றாங்க.  பகல் ஒரு மணிக்கு லட்டு பிக்கப். மாலை  அஞ்சு மணிக்கு  ஏர்ப்போர்ட் பிக்கப்.

ஏறக்குறைய எல்லா ஏற்பாடுகளும் நடந்துருச்சு.   மணநாளுக்கு  ரெண்டு நாள் இருக்கும்போது  மெஹந்தி போட்டாச்சு. தனி விழாவெல்லாம் கிடையாது.  அதுக்குண்டான இடத்தில் போய் போட்டுக்கிட்டு வந்ததுதான்.  ஃப்ளவர் கேர்ளுக்கு போடலை. குழந்தை  கையை அசைக்காம வச்சுக்கறது கஷ்டம் இல்லையோ?
கல்யாணத்துக்கு முந்தின நாள் ரிகர்ஸலுக்குப் போகணும். 
 தொடரும்...:-)


============================================
ஹைய்யோ.... போற போக்கைப் பார்த்தால் வாஷிங்டனில் கல்யாணத்தை  மிஞ்சிருவேனோ என்னமோ?   :-)
மறுநாள் காலையில்   ரிஸப்ஷன் நடக்கப்போகும்  ஹாலுக்குப்போய்  விவரங்கள்  முக்கியமா அங்கிருக்கும் வீடியோ ஆடியோ சாதனங்களை இயக்குவதற்கான முறைகளைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு,  ஹாலுக்கான சாவிகளை வாங்கி வந்தோம். எல்லாமே அல்ட்ரா மாடர்ன்  வகைகள்.   டச் ஸ்க்ரீன் ஸ்விட்ச்சுகள்.  உள்ளேயே ஒரு அறையில்  நூறு நாற்காலிகளும் மேசைகளுமா அடுக்கி வச்சுருக்காங்க.  நாமே எல்லாத்தையும் இழுத்துப் போட்டுப் பயன்படுத்தி முடிச்சதும் திரும்ப அடுக்கி வச்சுட்டு வரணும். இப்போ எங்களுக்குத் துணையா கூடவே  கல்யாண வேலைகளைக் கவனிக்க அண்ணனும் அண்ணியும் இருக்காங்க:-)    இன்று மாலை முதல் வீக் எண்ட் (வெள்ளி மாலை) ஆரம்பிக்குது  என்பதால்  இன்றைக்கே சாவியை வாங்கிக்கணும்

 பகல் ஒன்னரைக்குக் கிளம்பிக் கல்யாணம் நடக்கும்  ஹாலுக்குப் போறோம்.  எதுக்கு?  மண்டப அலங்காரம் நாம்தானே செய்யணும்? இந்தியாவா என்ன... எல்லாத்துக்கும் ஆள் அம்பு வச்சுக்க? 

டின்னருக்கான   வட்ட மேசைகளையும் இருக்கைகளையும் போட்டு வச்சுருந்தாங்க மண்டபத்துப் பணியாளர்கள். மேசை விரிப்பு போட்டு,  கட்லரி , நாப்கின்ஸ் எல்லாம் வச்சு ஓரளவு நல்லாவே இருந்துச்சு.  மணமக்களும் அவுங்களுடைய  ஆறு  தோழி தோழன்மாருக்குமா  நீள மேசை போட்டு  எட்டு நபர்கள் உக்கார ஏற்பாடு ஒரு பக்கம். அலங்காரம் நம்ம பொறுப்பு.  

இது சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு  கட்டடம்.   எங்க ஊர் ரேஸ்கோர்ஸுக்குள் இருக்கும்   த டீ ஹௌஸ் என்ற  நூறு வருசத்துக்கும்  மேற்பட்ட  பழமை வாய்ந்த இடம். சரியாச் சொன்னால் 1903 ஆம் ஆண்டு  கட்டியிருக்காங்க. அப்ப 114 வயசு !    இங்கேயே இன்னொரு பகுதியில்  புதுவித மாடர்ன் கட்டடங்கள்  கட்டிட்டாங்கன்னாலும், இந்த  டீ ஹௌஸ், ஒரு  விசேஷ மதிப்பு உள்ளது.  நூறு வருசத்துக்குமேலே வயசானதுன்னு  துப்பட்டாவைப் போட்டுத் தாண்டுனாக் கூட நம்ப முடியாது. எதோ நேத்துதான் கட்டி முடிச்சது போல  மின்னும்.  கூம்புக் கூரைகளோடு  பெவிலியன் ஸ்டைல்.

முழுக்க முழுக்க மரக் கட்டடம். அங்கே சுவரில் ஒரு ஆணி கூட அடிக்க யாருக்கும் அனுமதி இல்லை.  அதனால்  3எம் என்று கிடைக்கும்  ஹுக்  போட்டு அலங்கார விளக்குகளைத் தொங்க விடலாம். இந்த வகை ஹூக்குகள்  கழட்டி எடுக்கும்போது   போட்ட சுவடே இருக்காது.  சின்ன சீரியல் விளக்குகளையும் சென்னையில் இருந்தே வாங்கி வந்துருந்தோம்.  நாங்கள் போய்ச் சேரும்போது மணமக்களும் நண்பர்களுமா  டேபிள் செட்டிங் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஏற்கெனவே  விருந்தினர்கள் யார் யார் எங்கே எந்த மேசையில் என்றெல்லாம்  பார்த்து  லிஸ்ட் எல்லாம் பக்காவாப் போட்டாச்சு. 

கல்யாண விருந்துக்கான தீம்,  ஸ்டார்வார்ஸ்!   ஆரம்பமே சண்டைதானா?  ஒருவேளை மகள் இதுலே (மட்டும்)  அம்மா வழியைப் பின்பற்றப்போறாளோ?  ஒரு நாளைக்கு மூணு சண்டை போடலைன்னா எனக்கு நிம்மதியே இல்லாமப் போயிரும்:-)

ஒவ்வொரு மேசைக்கும் ஒவ்வொரு  கிரகங்கள்.   Tatooine, Corascant, Alderaan, Naboo,   இப்படி எல்லாம் வாயில் நுழையாத புதுசமாச்சாரம் எனக்கு. மணமக்கள் அமரும் மேசையில் டெத் ஸ்டார் !   போச்சுடா....  :-)
  ஒரிஜினல் ஸ்டார்வார்ஸ் படம் பார்க்கப்போய் .  பயணத்தில் ஊர் சுற்றிய களைப்பு  கண்ணை அழுத்த   ஆரம்பம் முதல் கடைசிவரை நல்ல தூக்கம் போட்டுருந்தேன்:-)

ஒவ்வொரு மேசைக்கும் நடுவில் சென்ட்டர்பீஸ் அலங்காரமா,  கண்ணாடி ஜாரில் நீலத்தண்ணீரில் மிதக்கும் சொக்கட்டான்கள். டைஸ்.  இதுகளை மிதக்க வைக்க  கடினநீர் வேணும் என்பதால் அதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தது.  அப்படி என்ன கடினநீர்?  ஐய்யா....  உப்புத்தண்ணிதான். பூரிதக் கரைசல்.  தண்ணீருக்குள்ளே ஒரு வெளிச்சம். குட்டியா  தண்ணிக்குள்ளேயும் எரியும் பல்பு. இந்த ஜார்களை  வைக்க ஒரு வட்டமான முகம்பார்க்கும் கண்ணாடி வேற! வலையில் பார்த்து மெயில் ஆர்டரில் வாங்கினாளாம். 
அண்ணனும் கோபாலுமா  விளக்குச் சரங்களைத் தொங்க விட்டு, பலூன் அலங்காரங்களுக்கு  உதவி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்க லேடீஸ் கடினநீரை தயாரிச்சுக்கிட்டு இருந்தோம்:-) 

மேசைகளுக்கு இந்தப் பக்கம்  பஃபே டின்னருக்கான அமைப்பு. ஒரு பக்கம் டிஜெவுக்கான இடம்.  இந்தாண்டை  பார். கொஞ்சம் தள்ளி ஃபோட்டோ  பூத். 

இதுக்கிடையில் ஆக்லாந்தில் இருந்து வரும் ப்ளைட் தரை தொட்டதும், 'வந்துட்டேன்'னு  நண்பர் சேதி அனுப்பினார்.  நம்மவர் போய் அவரைப் பிக் பண்ணிக்கொண்டு வந்தார். அப்படியே அண்ணனையும் அண்ணியையும் கொஞ்சநேரம் ஓய்வெடுக்கச் சொல்லி வீட்டில் கொண்டு விட்டுட்டு வந்தார்.  ரெண்டு நாளா சரியான தூக்கம் இல்லாம பயணம் பண்ணி வந்துருந்தாங்களே.... சென்னை, கோலாலம்பூர், ப்ரிஸ்பேன், ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச்சுன்னு  சுத்து வழி. 

மாலை அஞ்சரைக்கு கல்யாணத்துக்கு ரிஹர்ஸல் :-) சம்பந்திகள்  வந்தாங்க.
யார் எங்கே நிக்கணும்,  எப்படி நடந்து வரணும், சடங்குகள் என்னென்ன என்றெல்லாம் சொல்லி விளக்கி செஞ்சு பார்த்தாச்சு. இங்கெல்லாம்  பொண்ணு கல்யாணத்துலே  தகப்பனுக்குத்தான்  உரிமை. தாய்.... கூட்டத்தில் கோவிந்தாதான்.  விருந்தினர் உபசரிப்பு வேலைகள் எனக்கிருக்கே!  கன்னிகாதானம் செய்யறதைப்போல்  மண்டபத்துக்குப் பொண்ணை அழைச்சுக்கிட்டு வர்றது  தகப்பன்தான்.   கிவிங் அவே த டாட்டர்! 

ஃப்ளவர் கேர்ளும் பேஜ் பாயும் நடந்து வந்து காமிச்சாங்க. செல்லம்போல் அழகா இருந்துச்சு.

 ரொம்பக்களைப்பா இருந்தாலும் மனசுக்குள் மகிழ்ச்சியாத்தான் இருந்தது. பொழுது விடிஞ்சால் விசேஷம்.  

மறுநாள் காலையில் எழுந்து கடமைகளை முடிச்சு வீட்டுலே சாமி கும்பிட்டுத் தயாரானோம்.  மணமகளுக்கும் தோழியருக்கும்  முக அலங்காரம், தலை அலங்காரம் செய்ய ஆட்கள் வந்துட்டாங்க.  மகள் வீட்டில் அலங்காரம் நடக்குது.  

மணமகன் குழு தயாராகறதுக்காக, கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மோட்டலில் ரூம் போட்டுருந்தோம்.  அவுங்க அங்கே தயாராகிக்கிட்டு இருக்காங்க.   ஒரு ஃபோட்டாக்ராஃபர் அங்கேயும் இன்னொரு ஃபோட்டாக்ராஃபர் இங்கேயுமா  படம் எடுத்துக்கிட்டு இருக்காங்க. நாங்க  மகளிடம் இருந்து வரும் ஒவ்வொரு செய்திக்கும் ஏற்றபடி  நம்ம வீட்டுக்கும்  மகள் வீட்டுக்குமா போய் வந்துக்கிட்டு இருக்கோம். 

 உடுப்புகளைக் கொண்டு வாங்க. வந்தோம். நகைகளைக் கொண்டு வாங்க ... வந்தோம் இப்படி ஓடறோம். இதுக்கிடையில் நாங்களும்  உடுத்தித் தயாராகணும். ஆங்.... சொல்ல மறந்துட்டேனே.... முஹூர்த்தம் எப்பன்னா பகல் ரெண்டு மணிக்கு!

காலை பத்துமணிக்கு  நாம் வாடகைக்குச் சொல்லி இருந்த அலங்கார வளைவு,  நாற்காலிகள் இன்ன பிற ஐட்டங்கள் எல்லாம் வந்திறங்கியாச்சு மண்டபத்துப் புல் வெளியில். அண்ணனும் கோபாலும் நம்ம நண்பரும்  (நண்பர்னு இங்கே குறிப்பிடறேனே  அவர்  என் தம்பி (!!) மகன் தான்)  போய்  நாற்காலிகளை வரிசை வச்சுட்டு மற்ற அலங்காரங்களைச் சரிப்படுத்திட்டு, சிகப்புக் கம்பளத்தை விரிச்சு வச்சுட்டு வந்தாங்க.

இன்றைய கல்யாணப் ப்ரோக்ராம் என்னன்னா.....  1.50க்கு அழைக்கப்பட்ட  விருந்தினர்கள்   மண்டபத்தில் வந்து உக்கார்ந்துடணும்.  மாப்பிள்ளையும், தோழர்களும், கல்யாணத்தை நடத்தி வைக்கும் ஸெலிப்ரிட்டியும் (  நம்ம கேஸ்லே  இது  சம்பந்தி!) வந்து அவர்களுக்கான இடத்தில் நின்னுக்கிட்டு இருப்பாங்க.  

ரெண்டு மணிக்கு பெண் வந்து இறங்கும்.  முதலில்  ஃப்ளவர்கேர்ளும் பேஜ் பாயும்  வருவாங்க.  ப்ளவர் கேர்ள் கூடையில் இருக்கும்  ரோஜா இதழ்களைத் தூவிக்கிட்டே நடந்து வரணும்.  அதுக்குப்பின் ப்ரைடு மெய்ட்ஸில் மூணாவது  தோழி வரணும்.  கொஞ்சம் இடைவெளிவிட்டு ரெண்டாவது தோழி நடந்து வரணும். அப்புறம்   மெய்ட் ஆஃப் ஆனர் என்னும் முதல் தோழி வரணும்.  கொஞ்சம் இடைவெளியில் மணமகளின் தந்தையும் மணமகளும்  ஒன்னா நடந்து வருவாங்க.

வின்டேஜ் காரில் வந்திறங்கியதை நான் பார்க்க முடியலை. ஆனால் தம்பி மகன் வீடியோ எடுத்துருந்தார்.   நான்  இங்கே மேடைக்கருகில் இருந்து  வந்தவர்களை வரவேற்றும், க்ளிக்கிட்டும் இருந்தேன். என் கையில் கேமெரா இல்லைன்னா எனக்குக் கையே ஒடிஞ்சது போல இருக்கும்:-) 

மணப்பெண் குழு மேடைக்கு வந்து சேர்ந்ததும்,  தகப்பனிடம்,  கல்யாணத்தை நடத்தும் 'சாஸ்த்ரி' கேக்கறார்.... 

 'உம் பெண்ணை  கல்யாணம் கட்டித்தர சம்மதமா?'
  
"ஆமாம்."

 'நல்லது நீங்க போய் உக்காரலாம்.'  வந்து என் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். 

கல்யாணச்சடங்கு அரைமணி நேரம். மணமக்களை எதிரும் புதிருமா நிறுத்தி வச்சு கல்யாணச்சட்ட  திட்டங்களை வாசித்து, ரெண்டு பேருக்கும் சொன்னது புரிஞ்சதா?  இந்தப் பெண்ணை உன்  மனைவியாக ஏற்றுக்கொள்கிறீர்களா?  இந்த  ஆணை , உம் கணவனாக ஏற்றுக் கொள்வீர்களா ..... ஆமாம் ஆமாம்  சரி சரி எல்லாம் ஆனதும்  மோதிரம்  மாற்றுதல்.  நீங்கள் இருவரும் கணவன் மனைவி என்று இப்போது இந்த நொடி முதல் அறியப்படுவீர்கள்.   நௌ... யூ மே கிஸ் த ப்ரைட் ! இச் இச் ஆச்சு. 

தோழிப்பெண்கள் ஆங்கிலக் கவிதை வாசிச்சாங்க.   மகள் இங்கே ஒரு  இசைக்குழுவில் சேர்ந்து பல வருசங்களாப் பாடிக்கிட்டு இருக்காங்க.  இது  உலகப்பெண்கள் இசைக்குழு. கல்யாணத்துக்குக் கச்சேரி வேணுமா இல்லையா?  அந்தக் குழுவினர் வந்து நாலைஞ்சு பாடல்கள் பாடி நிகழ்ச்சி முடிஞ்சது. 

இப்போ  மணமக்களுடன்  ஃபோட்டோ ஷூட்.  உறவினர், பெற்றோர்,  உற்றோர் ,  விருந்தினர்களுடன் தனித்தனியாகவும் குழுக்களாகவும்  படங்கள் எடுத்து முடிஞ்சதும்,  மணமக்கள் குழு  அப்படியே கிளம்பி அவுட் டோர் ஷூட்டிங் போயிட்டாங்க. இப்ப மணி மூணு.

இங்கே  லைட் ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் வகைகள்  பரிமாறப்பட்டது. சூஷி விளம்பினாங்க. என்ன இப்படி வெஜிடேரியன் எதாவது  செய்யச் சொல்லி இருந்தேனேன்னு  கேட்டதுக்கு  இதுலேயெ வெஜிடேரியனும் இருக்கு.  இதைப் பாருங்க இதுலேயெல்லாம் மீன் இல்லை. இன்னொரு தட்டில் பொரிச்ச  சிக்கன் துண்டுகள்  !   போச்சுடா......

அதுக்குப்பிறகு  மாலை ஏழு மணிக்குதான் டின்னர்.  அதுவரை  வீட்டுக்குப்போயிட்டு,  டின்னருக்கு மாலையில் வரும் விருந்தினர் கிளம்பிப் போகலாம்.  இல்லை,  இங்கேயே மண்டபத்தில் தங்க விருப்பம் இருப்பவர்களுக்கு  சில விளையாட்டுகள் ஏற்பாடாகி இருந்துச்சு.  மகள் இவைகளை நடத்த சில நண்பர்களிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தாள்.  அவுங்களுக்கு மாலை நாலு முதல் பார் ஓப்பன். விளையாடி, குடிச்சு  மகிழ்ச்சியா இருக்கலாமாம்.

நிகழ்ச்சிநிரல் படி எல்லாம் பக்காவாக ஏற்பாடு செஞ்சுருந்தாங்க மணமக்கள்.

நம்ம இந்திய நண்பர்கள்  பலர் வீட்டுக்குப்போயிட்டு  சாயங்காலம் வருவாங்க.  ஆறரைக்கு  டின்னர் டேபிளுக்கு வந்து உக்கார்ந்துடணும்.   வீடு கொஞ்சம் தூரத்தில் இருக்கும் நண்பர்களை நம்ம வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப்போய் மாலையில் திரும்பக் கூட்டிவந்து இங்கே விடறதா நாங்க ஒரு ஏற்பாடு வச்சுருந்தோம். அதன்படி நாங்கள் சில நட்புகளுடன் வீட்டுக்கு வந்தோம். முதலில் இந்தப் பட்டுப்புடவையைக் கழட்டிப் போடணும். வீட்டு வந்ததும் உடுப்பு மாத்திக்கிட்டு நண்பர்களுடன் பேசிக்கிட்டு இருந்தப்ப, சம்பந்திகள் வந்தாங்க, அவுங்க பேரக்குழந்தைகளுடன். எல்லோருக்கும் இங்கே ஜூஸ், ஸ்நாக்ஸ்ன்னு  விளம்பிக்கிட்டு இருந்தேன்.  

மாலை ஆறுமணிக்குத் திரும்பவும் உடை மாத்தி ரெடி ஆகி மண்டபத்துக்குப் போனோம். வெட்டிங் கேக் வந்து இடம் பிடிச்சுருந்தது.  ரொம்பவே அழகான புதுமையான கேக். மூணு புத்தகங்கள். லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாரி பாட்டர், டஞ்சன்ஸ் அன்ட் ட்ராகன்ஸ்.  சொக்கட்டான்கள் பலவிதமா  அதன் பக்கங்களில்.  விளையாட்டே விளையாட்டு :-)

ஆறரைக்கு  அவரவர் இடத்தில் உக்கார்ந்தாச்சு.   கல்யாணத்தை நடத்திக்கிட்டு இருக்கும் நாங்க,  மணமகளின்  பெற்றோரா லட்சணமா விருந்தினர்களை வரவேற்று  முகத்தில்  மகிழ்ச்சியும் சிரிப்பும் அணிஞ்சு நின்னுக்கிட்டு இருந்தோம். ஏழு மணிக்கு  மணமக்கள் குழுவினர்  வீரநடைபோட்டு  ஹெட் டேபிளுக்கு  வந்து சேர்ந்தாங்க. 

DJ  இவர்களை வரவேற்கும் ம்யூஸிக் போட்டு விட்டதும்,  எல்லோருமா எழுந்து நின்னு கைதட்டி  வரவேற்றோம்.  மாஸ்டர் ஆஃப் த ஸெரிமனி, எல்லோரையும் வரவேற்று சின்னதா  ஹௌஸ் கீப்பிங் சமாச்சாரமெல்லாம் சொல்லி முடிச்சதும் மணமக்கள் கேக் வெட்டுனாங்க. 

 க்ளிக்ஸ் எல்லாம் முடிச்சதும், ஒவ்வொரு மேஜையிலும் வச்சுருந்த   ரெண்டு ஒயின் பாட்டில்கள் திறக்கப்பட்டு  மணமக்களின் மகிழ்ச்சிக்கான டோஸ்ட் ஆச்சு. குடிப்பவர்கள் குடிச்சாங்க.  பாரும் திறந்துதான் இருக்கு. அவரவருக்கு வேண்டியதை அங்கே போய் பார்டென்டரிடம் சொல்லி வாங்கிக்கலாம்.  தாகமா இருக்கேன்னு போய் ஆப்பிள் ஜூஸ் கேட்டால் இல்லையாம். ஆரஞ்சு இருக்குன்னார்.  எனக்கு ஆரஞ்சு ஆகாது.   வெறும் தண்ணீரை வாங்கிக்கிட்டேன்.  

விருந்தினர் சாப்பிடப் போகலாமே என்றார் எம்ஸி. பஃபே என்பதால்  எல்லோரும் அவுங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டாங்க.
நம்ம கல்யாணம் போல இல்லாம இங்கெல்லாம் அசைவ ஐட்டங்கள்தான் நிறைய.  அதனால் நமக்கும் நம்ம பக்கத்து அழைப்பில் வந்த விருந்தினருக்கும்  சைவ சாப்பாட்டுக்கு ஏற்கெனவே சொல்லி வச்சுருந்தோம். ரோஸ்டட் வெஜிடபிள்ஸ் வகைவகையா வச்சுருந்தாங்க. பாஸ்தா வகைகளும்  விதவிதமான ஸாலட்ஸூம்....   உண்மைக்குமே அருமையான சாப்பாடுதான். 
ஒரு வகையா  அனைவரும் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆச்சு. 

எட்டரைக்கு  ஸ்பீச்.  இதெல்லாம் இங்கே ஒரு சம்ப்ரதாயம்.. முதலில்  மணப்பெண்ணின் தந்தை பேசணும். 'எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தேன்.... இப்படி  வெள்ளைக் காரனைக் கட்டிக்கிட்டாளே'ன்னு  அழாம,  'கல்யாணம் என்றது நம்ம   கலாச்சாரத்தில் எவ்வளவு முக்கியமான கொண்டாட்டம், அதுக்குள்ள மரியாதை, கணவனும் மனைவியும் எப்படிக் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்தணும், இது  வெறும் ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும்  இணைப்பு இல்லை, ரெண்டு வேறுபட்ட குடும்பங்கள் இணைந்து ஒருவருக்கொருவர் சுக துக்கங்களில்  பங்குபெறும் சமாச்சாரம்'னெல்லாம்  அடிச்சு விட்டார்! 

அப்புறம்  மணமகனின் குடும்பத்தில்  இருந்து  தாத்தா (சம்பந்தியம்மாவின் அப்பா) பேசினார். அதுக்குப்பிறகு  மெய்ட் ஆஃப் ஆனர்,  மணமகனின் பெஸ்ட் மேன் , மணப்பெண், கட்டக் கடைசியா  மணமகன் இப்படி வரிசையில் ஸ்பீச் கொடுத்தாங்க.  மாப்பிள்ளையின்  சொல்தான் கடைசின்றது ஒரு ஃபார்மாலிட்டிதானே?  குடும்பங்களில் கவனிச்சுப் பாருங்க,  யாரோட சொல் கடைசின்னு :-)

  ஆனா மணமகனின் ஸ்பீச் அருமையா இருந்தது.  மனைவியின்  மாமாவும் மாமியும் ஆல் த வே ஃப்ரம் இண்டியாவில் இருந்து வந்ததுக்கு  பிரத்யேக நன்றி சொன்னார்.  நல்ல பையர்தான் :-)

இப்ப டிஸ்ஸர்ட் டைம்.   விதவிதமான இனிப்புகள். கேக், ஃப்ரூட்ஸ், ஐஸ்க்ரீம், பாவ்லோவான்னு வரிசை கட்டி நிக்குது. கூடவே கல்யாணக் கேக்கும்! 

இன்றைக்கு நடந்த கல்யாணத்திலும் அவுட் டோர் ஃபோட்டோ ஷூட்டிலும் எடுத்த படங்களில் ஒரு இருபத்தையஞ்சு தேர்ந்தெடுத்து, பெரிய ஸ்க்ரீனில்   நமக்குப் படங்காட்டுனாங்க நம்ம ஃபொட்டொக்ராஃபர்ஸ்.  உள்ளூர்  பொட்டானிக் கார்டனில் போய்  ஷூட் பண்ணி இருக்காங்க. வின்டேஜ் வண்டிகளில் கிளம்பிப்போய்  தோட்டத்தில் கெத்தா இறங்கியிருக்காங்க.  

இதுக்கிடையில் ஃபோட்டோபூத்   வேற நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்கு ஒதுக்கின பகுதியில் போய் நின்னா அது படம் எடுத்துக்கும். இந்தக் கல்யாணகலாட்டாவில் நான் மறந்தே போயிட்டேன். அந்தப் பக்கம் தலை காட்டவே இல்லை ... 

டிஸ்ஸர்ட் ஆனதும் டான்ஸ் ஆரம்பிச்சது.   டான்ஸ் ஃப்ளோர்னு  ஒரு இடத்தைக் காமிச்சுக்  கலர் லைட்டுகள் சுழல ஆடினாங்க. நம்மாட்கள் எல்லாம் இந்த சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க. அவுங்களுக்கு நன்றி சொல்லி  வழி அனுப்பினோம்.  மறுநாள் மாலை நடக்கப்போகும் இன்டியன் ஸ்டைல் விருந்துக்கு இவுங்க எல்லோருமே  வர்றாங்க.
கிட்டத்தட்ட பதினொரு மணி ஆகும்போது, மண்டபத்துப் பணியாளர்கள்  மேசை மேலுள்ள சாமான்களை எடுக்க ஆரம்பிச்சாங்க. நாம் அலங்காரத்துக்கு வச்சுருந்த சென்ட்டர் பீஸ்களையெல்லாம்  எடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணிக்கொடுத்தோம்.  பரபரன்னு  வேலைகள் நடக்குது. 

டிஜெ அவுங்க ம்யூஸிக் செட், ஸ்பீக்கர்ஸ், ஸிடி வகையறாக்களையெல்லாம்  எடுத்து மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்பினாங்க.

சரியாப் பனிரெண்டு மணிக்கு மண்டபம் காலி.  பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மட்டுமே இப்போ எஞ்சி இருக்கோம். 

இன்னொரு விஷயம் என்னன்னா....  நாம் வாடகைக்கு எடுத்த  நாற்காலி, அலங்கார வளைவு பூச்செடிகள்  இவற்றையெல்லாம் மறுநாள்  பொதுவாக அவுங்களே வந்து கொண்டு போவதுதான் வழக்கம். இந்த வாரம் லாங் வீக்கெண்ட் என்றபடியால்   பார்ட்டி ஹையர் ஆட்கள் செவ்வாய்க்கிழமைதான்  வேலைக்கு வருவாங்க. அதனால் செவ்வாய்க்கிழமை  வந்து எடுத்துக்கிட்டுப் போறதாச் சொல்லி இருந்தாங்க. அப்ப இன்னும் மூணுநாட்கள் இதையெல்லாம் காபந்து பண்ணிக்கணுமே....  

 இந்த அலங்கார வளைவு சமாச்சாரங்கள் எல்லாம்  எதாவது பழுதாகி உடைஞ்சு போச்சுன்னால்  ஏகப்பட்ட செலவாகிரும் நமக்கு.  இன்னும் ரெண்டு கல்யாணம் நடத்திக்கலாம்,  நாளையும் திங்கக்கிழமையுமுன்னு என் புத்தி போச்சு :-)

மண்டபத்துப் பொறுப்பாளரிடம் கேட்டப்ப,  இனி அடுத்த வாரம்தான் புக்கிங்  இருக்கு என்பதால் இங்கே மண்டபத்திலேயே வச்சுட்டுப் போங்க. செவ்வாய்க்கிழமை  அந்த  ஆட்கள் வந்ததும் இங்கிருக்கும் ஆஃபீஸில் சொன்னால்  அவுங்க வந்து திறந்து விடுவாங்கன்னார். புண்ணியவான் நல்லா இருக்கணும்!

 நாங்கெல்லாம் கிளம்பி வீடு வந்து சேர்ந்து படுக்கையில் விழும்போது மணி ராத்ரி ஒன்னரை.

கல்யாணம் நல்லபடி நடந்த நிம்மதி மனசில் இருந்தாலும்...  மறுநாளைக்கான   வரவேற்பு ஏற்பாடுகளை நினைச்சப்பத் தூக்கமே வரலை :-)


நம்ம  வீட்டுக் கல்யாண கலாட்டாவெல்லாம்  ஆரம்பிக்கறதுக்கு  சுமார் ஒரு வாரம் இருக்கும்போது, 'கல்யாண வரவேற்புக்கு என்ன நிகழ்ச்சி நிரல்?'  நம்மவர் கேட்டதும்.... ஙேன்னு முழிச்சேன்.   என்ன நிகழ்ச்சி ? காவோ பீவோ மஜா கரோதான்.  எல்லோருக்கும்  அட்டகாசமான விருந்து. வேறென்ன?  பொண்ணு மாப்பிள்ளையும் சும்மா வந்து உக்கார்ந்துருப்பாங்களா?  வேறென்ன செய்வாங்க? அவுங்களும்  சாப்பிடத்தானே போறாங்க.... 

எனக்கொரு ஆசை என்னன்னா...  மணமக்களை மாலை மாத்திக்கச் சொல்லி  அழகா உக்காரவைக்கலாம்னு. ஆனா.... நிச்சயதார்த்தக் கொண்டாட்டத்துலேயே     மாலை மாத்திக்கச் சொன்னதும், மாப்பிள்ளைப் பையர் பயந்துட்டார், எங்கே மதம் மாத்திருவாங்களோன்னு... :-) இது  மதம் சம்பந்தப் பட்டதில்லை. கலாச்சாரம் சமாச்சாரமுன்னு சொல்லி சம்மதிக்க வைக்கவேண்டியதாப் போச்சு.  அந்த மாலைகள் வேற இருக்குதான் இப்பவும்.....   (எப்படி? வாடிப்போலையா? ஊஹூம்.... இது வாடாத மாலை :-)  சிங்கப்பூரில் இருந்து வாங்கியாந்தது.  நெசப்பூ மாலைக்கு நான் எங்கெ போவேன் நியூஸிலாந்தில்? )

பேசாம ஒரு கேக் வெட்டிக் கொண்டாடலாமுன்னு முடிவு செஞ்சோம். நம்மூர் ஹரேக்ருஷ்ணா இயக்கத்து பக்தை ஒருவர், முட்டை இல்லாத கேக் தயாரிக்கிறார்னு அவுங்ககிட்டே ஒரு கேக்  செய்யச் சொன்னோம்.  நூறு விருந்தினரை எதிர்பார்க்கிறோம் என்பதால்  கொஞ்சம் பெரிய பிரமாண்டமான மூணடுக்கு  செய்யவான்னு கேட்டாங்க. தேவைப்படாது. ஏற்கெனவே விருந்தில்  ரெண்டு வகை இனிப்புக்குச் சொல்லி இருக்கு. இது சும்மா ஒரு  கேக் வெட்டணும் என்ற சம்ப்ரதாயத்துக்கு வேண்டித்தான். அதனால் பெருசா ஒரே கேக் போதுமுன்னு சொல்லி, அதுலே அலங்காரத்துக்கு  ரோஜாப்பூக்கள் வச்சால் போதும். ஆனால் நீலநிற ரோஜாக்கள்னு சொன்னேன்.  மகள்  நீலப்ரேமியாச்சே!  க்ருஷ்ணனின் நிறம் :-)

ரிஸப்ஷன் தினத்தன்று காலையில் வந்து பிக்கப் செஞ்சுக்கறோமுன்னு  சொல்லியாச்சு. காலையில் சீக்கிரமாவே எழுந்து  கடமைகளை முடிச்சு, தினசரிப் பூஜைகளை முடிச்சுட்டு, தாம்பூலப்பை தயார் செஞ்சோம்.  கண்ணாடித்தாள் பையில் ரெவ்வெண்டு லட்டுகள் போட்டு அடுக்கியாச்சு.  ஹிந்துக்கள் பை தங்கத்திலும், மற்றவர்களுக்கான பை  பர்ப்பிள்/ப்ளூ நிறத்திலுமா  வகை பிரிச்சும் வச்சாச்சு. 

பத்துமணிக்குக் கிளம்பிப்போய்  கேக் கொண்டு வந்தாங்க. ஜோடிப்புறாக்கள் கொஞ்சல் அழகு :-) பகல் சாப்பாட்டை சிம்பிளா முடிச்சுக்கிட்டோம்.  வேலை நிறைய இருக்கே. அதனால் விஸ்தார சமையல் கிடையாது. (இல்லேன்னா மட்டும்..........  !)

   ஆண்கள்  நாலுமணிக்குப்போய் ஹாலை அலங்காரம் செஞ்சுட்டு வர்றதாவும், பெண்கள், சம்பந்தியம்மாவுக்கும் , அவுங்களோட புது மருமகளுக்கும் அலங்காரம் செஞ்சு விடறதாவும் ஒரு ப்ளான். 

வரப்போகும் மாமியாருக்கு,  கல்யாணத்துக்கு ஒரு உடை வாங்கித் தரலாமுன்னு  வரப்போகும் மருமகளுக்கு ஒரு ஐடியா. சரி, நாமும்தான் சம்பந்தி சீர் ஒன்னும் செய்யலையே...  இந்தியாவில் இருந்து வாங்கியாறவான்னு கேட்டுக்கிட்டேன், மகளிடம்.  துணி மட்டும் வாங்கி வந்தால் போதும். அவுங்களே ட்ரெஸ் தைச்சுக்குவாங்க என்றதால்  பயணத்தில் போன இடங்களில் எல்லாம்  ப்யூர் ஸில்க் ப்ரின்ட்டட் துணி தேடுனதில் ஒன்னும் சரிப்படலை. 

பேசாம காஞ்சிபுரம் புடவை ஒன்னு வாங்கி வரேன். அதையே வெட்டி அவுங்க தைச்சுக்கட்டுமுன்னு  ஒரு புடவை  வாங்கி  வந்தேன்.  உடைக்கான துணியை வெட்டி எடுத்தபின், முந்தானை டிஸைனை  சுவர் அலங்காரமாகக்கூட வச்சுக்கலாம். 

இங்கே வந்தபிறகு, புடவையை சம்பந்தியம்மா வீட்டுக்கு அனுப்பியாச்சு. அவுங்களும் அவுங்க சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் காமிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க.  கடைசியில் இவ்ளோ அழகான புடவையை வெட்டித் தைக்க மனசு வரலை.  விழாவுக்குப் புடவையாகவே கட்டிக்கட்டுமான்னு  என்னிடம் கேட்டாங்க.  

இதைவிட மகிழ்ச்சி வேற இருக்கா எனக்கு?  இப்பப் பிரச்சனை என்னன்னா....   ட்ரெஸ் தைச்சுக்கப்போறாங்களேன்னு  புடவைகூடவே வரும் ப்ளவுஸ் துணியை எடுத்து  தைச்சுக்கிட்டு வரலை. அப்புறம் அதுக்கான  உள்பாவாடையும் வாங்கிவரலை.  எல்லாத்துக்கும் மேலே  ப்ளவுஸ் வெட்டி எடுக்காததால் முந்தானைக் குஞ்சலமும் முடிச்சுப் போட்டு வாங்கி வரலை.

அவுங்க வீட்டுப் பண்டிகைக்குப் போயிட்டு வந்தப்ப, புடவையை எடுத்துக்கிட்டு அவுங்க  உடம்பையும் கொஞ்சம் அளந்துக்கிட்டு வந்தேன் :-) ஏறக்கொறைய நம்ம சைஸ்தான். அதுவும் நான் டயட்டுலே போறதுக்கு முந்தி இருந்த உடம்புன்னு வச்சுக்கணும்:-)

முன்பொருக்கில்   நெருங்கிய தோழி 'வச்சுக் கொடுத்த ' நல்லதொரு ப்ளவுஸ் பீஸை, வழக்கத்துக்கு மாறாத் தைச்சுக் கொண்டு வந்தது நினைவுக்கு வர, அதையெடுத்துப் பார்த்தால்....   அங்கவஸ்த்ரத்தில் ஜரிகை மாதிரி துளியூண்டு  இந்தக் கலர், அந்தப் புடவையில் இருக்கு. இது போதாதா என்ன?  யதேஷ்டம்!

வாழ்க்கையில் முதல்முறையா முந்தானை முடிச்சுப் போட்டேன்:-) 

புடவையையும் இந்த ப்ளௌஸையும் ஒருநாள் சம்பந்தியம்மா வந்து வாங்கிப்போனாங்க.  ப்ளௌஸ் பெருசா இருந்தால் உள்ளே கொஞ்சம் பிடிச்சுக்குங்கோ. பத்தலைனா  தைச்சதை பிரிச்சு விடுங்கோ!

ஒருநாள் ஃபோன் செஞ்சு  தையல்களைப் பிரிச்சு விட்டபின் சரியா இருக்குன்னு  சொன்னாங்க! ஆனால் புடவை கட்டிக்க நான் உதவி செய்யணுமாம். புடவையை இன்டியன் ரிஸப்ஷனுக்குக் கட்டிக்கப் போறாங்களாம்.  நோ ஒர்ரீஸ்.  

அந்த நாள் இன்றைக்குத்தானே? நாலு மணிக்கு வரச்சொல்லி இருந்தேன். இங்கெதான் நான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்:-(

மாமியாருக்கும் மருமகளுக்கும் புடவைகள் கட்டி விட ஆளுக்கொரு அரைமணி. நாங்க (நானும் அண்ணியும்) தயாராக  ஒரு அரை மணி.  அப்படி இப்படின்னு  ஹாலுக்கு  ஒரு  அஞ்சே முக்காலுக்குக்  கிளம்பினா  ஆறே காலுக்குப் போயிருவோம்.  முக்கால்மணி நேரம் அங்கே ஒழுங்கு படுத்த. ஆறேமுக்காலுக்கு இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் சாப்பாடு வந்துரும்.  கூட இருந்து கவனிச்சுக்க ஒரு ரெஸ்ட்டாரண்ட் ஆளும் சேர்த்தி. ஏழு மணிக்கு விருந்தினர் வருகைக்கு நாம் ரெடி!  எப்படி?  டைம் மேனேஜ்மென்ட் திட்டம் அருமையா இல்லே?

முதல் கட்டத் தடங்கல்.....  வேணாம்... கல்யாண கலாட்டான்னு வச்சுக்கலாம். முதல் கலாட்டா... நாலே காலுக்கு  ஆரம்பம். ஆண்கள் அலங்காரச் சாமான்கள், இன்னபிற சாதனங்களை எடுத்துக்கிட்டு ஹாலை அலங்கரிக்கப் போனவங்க.... அங்கே ஹாலை எதோ ஒரு சர்ச் பார்ட்டிக்கு  வாடகைக்கு விட்டுருக்காங்கன்னும், ஆறுமணிக்கு டான் னு நம்மிடம் ஒப்படைப்பாங்கன்னும்  சேதி சொன்னாங்க .  கார் நிறையக் கொண்டுபோன  சாமான்களுடன், தம்பி பையரை அங்கே தேவுடு காக்கச் சொல்லிட்டு நம்மவரும் அண்ணனும் திரும்பி வந்துட்டாங்க. எப்படியும் அலங்காரம் முடிச்ச பிறகு தம்பி பையர்  அங்கேயே இருந்து  ஆடியோ வீடியோ எல்லாம் செட் பண்ணறதா  சொன்னதால், விழாவுக்கான மாத்து உடையைக் கையோடு கொண்டு போயிட்டார். நல்லதாப் போச்சு! 

இங்கே நாலு மணிக்கு வரவேண்டிய சம்பந்தியம்மா, ரன்னிங் லேட்டுன்னு  தகவல் அனுப்பிட்டு நாலரைக்கு வந்து சேர்ந்தாங்க. ப்ளவுஸில் ஸ்லீவையும் ஒரேதாப் பிரிச்சு வச்சுட்டாங்க. இப்பப் போட்டுப் பார்த்தா லூஸு. கை மட்டும்தான். சினிமா ஷூட்டிங்லே தையக்காரர்கள் தயாரா இருப்பாங்களாம், சட்னு எதாவது ரிப்பேர் பண்ணனுமுன்னா...  இங்கே அந்தத் தையற்காரி நானானேன். ஓடு, ஓடி வா.... வந்தேன்....

அடுத்த  கலாட்டா என்னன்னா...... புடவைக்கான உள்பாவாடை!  நம்ம ஸ்டாக்லே இருந்து ஒன்னு  உருவினேன். இதுக்குத்தான் சென்னைப் பயணங்களில் அப்பப்ப நாலைஞ்சு வாங்கி வந்து போட்டு வைக்கிறது. இப்போ மகளுக்கு  மட்டும்  சப்ளையர் இல்லையே! 

அண்ணி, புடவை கட்டிவிட்டு அலங்கரிப்பதில்  கில்லாடி! அவுங்க உதவியால்  சம்பந்தி ரெடி ஆகிட்டாங்க. அடடா.... என் கண்ணே பட்டுரும்போல ! 
அடுத்து மகளை ரெடி செஞ்சுட்டு, நாங்க  எங்களை அவசர அடியா ஒரு மாதிரி  அலங்கரிச்சுக்கிட்டோம்.  மணி இப்பவே ஆறு! 

கொண்டு போக வேண்டிய கேக் இப்போ என் மடியில் . கட்லரி, லட்டூஸ் எல்லாம் டிக்கியில். வீட்டுக் கதவைச் சாத்திட்டு  அப்படியே போக முடியாது. வீட்டுப் பாதுகாப்புக்கான அலார்ம் எண்களை அமுக்கிட்டு,  கதவைப்பூட்டி,  கராஜ் ஆட்டோ டோர், கேட் எல்லாத்துக்கும் பட்டன் அமுக்கின்னு....  ஆறேகாலுக்கு அடிச்சுப்பிடிச்சு.....கிளம்பறோம்.  ட்ரைவர் ஸீட்டுலே வந்து உக்கார்ந்தவர் மூக்கைப் பிடிச்சுக்கிட்டு இருக்கார்.  என்ன ஆச்சுன்னு பார்த்தால்      டிக்கி கதவைச் சாத்தும்போது நம்மவருக்கு மூக்குலே அடி பட்டு ரத்தம் வருது. ஐயோ....    பொண்ணு கல்யாணத்துக்கு ரத்தம் சிந்தப்  பாடுபடறாரே....  மூடுன  சமாச்சாரத்தையெல்லாம்  ரிவர்ஸ் பண்ணி வீட்டுக்குள் போய் முகத்தைக் கழுவி, மூக்குலே ப்ளாஸ்த்ரி போட்டுன்னு அமர்க்களம்.  நான் மடியில் வச்ச கேக்கை நகர்த்த முடியாமல் பார்வையாளரா இருக்கேன்.

திரும்ப எல்லா ஏற்பாடோடு வீட்டைப்பூட்டி கிளம்பியாச்சு.  ஏற்கெனவே லேட்ன்னு  தவிப்போட இருக்கும்போது, வரலையா இன்னும் வரலையா, ஏற்கெனவே விருந்தினர் வரத்தொடங்கியாச்சு,  சாப்பாடு வந்து இறங்கியாச்சுன்னு  செல் மேலே செல்.   செல் பேசிக்கிட்டே வண்டி ஓட்டக்கூடாது என்பதால் கார்ப்பரேஷன் குப்பை வண்டி மாதிரி அங்கங்கே ஓரங்கட்டிக்கிட்டு இருந்தால் எப்படித்தான் வண்டி ஓட்டிக்கிட்டுப் போக? 

வேலைக்காகாதுன்னு ஃபோனை அண்ணனிடம் கொடுத்துட்டோம்.  யார் எது கேட்டாலும்  'இதோ வந்துக்கிட்டே இருக்கோம். இன்னும் அஞ்சாறு நிமிட்டுலே வந்துருவோம்' னு பதில்  சொல்லச் சொல்லியாச்.  செல்ஃபோன் வந்த பிறகு நிறைய பொய்  பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னு  புலம்பும் நானும் அதே பொய் ஜோதியில் கலந்தேன் :-)

ஏழு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  பாதி விருந்தினர்கள் வந்துட்டாங்க. எல்லோருமாச் சேர்ந்து  ஹாலில் மேசை நாற்காலிகளை இழுத்துப் போட்டுக்கிட்டும்,  சாப்பாட்டு ஐட்டத்துக்கான இடத்தை சரி பண்ணிக்கிட்டும் இருக்காங்க.  அலங்காரத்துக்குக் கொண்டுபோன சாமான்களில் ஒரு பாக்ஸைத் திறக்க நேரம் இல்லை.  சீரியல் லைட்டுகளை மட்டும் அங்கங்கே தொங்க விட்டோம். 

இந்த விழாவுக்காக நாங்க தனியா  இன்னொரு ஃபொட்டாக்ராஃபரை ஏற்பாடு செஞ்சுருந்தோம்.  அவரும் வந்து  உதவி செஞ்சுக்கிட்டு இருக்கார். ஒரே கலாட்டாக் கல்யாணமா ஆகிப்போச்சு.

அப்புறம் பரபரன்னு  வேலைகளை ஆரம்பிச்சு,  விருந்தினர்களை உக்கார வைக்கும் அதே சமயம்  இன்னொரு பக்கம் நண்பர்கள் பலரும் சேர்ந்து விருந்து ஐட்டங்களை வரிசைப்படுத்தி,  அவரவர் தாமே ஒரு பொறுப்பை ஏத்துக்கிட்டு  விளம்பத் தயாரானாங்க.

நாங்களும்  கேக்கைக் கொண்டுபோய் மணமக்களுக்குப் போட்டுருந்த மேஜையில் வச்சோம்.  விருந்தினர்களை வரவேற்று நம்மவர் ஒருசின்ன ஸ்பீச் கொடுத்தார். கேக் கட் பண்ணியதும், கை தட்டலோடு முடிச்சுக்கிட்டோம். ஒரு பக்கம் மணமக்களுடன் ஒரு படம் எடுத்துக்க விருந்தினரை  அனுப்புவதும், இன்னொரு பக்கம் விருந்துணவை  ருசிக்க  விருந்தினரை அனுப்புவதுமா நாங்க பயங்கர பிஸி.  இதுலே மணமக்களுடன் சேர்ந்து நின்னு ஒரு படம் எடுத்துக்கக்கூடத் தோணலை  பாருங்க. 

மணமகன் பக்க விருந்தினர்கள் நிறையப்பேர் வந்துருந்தாங்க.  நேத்து கல்யாண விருந்துபோல் இங்கே எண்ணிக்கைக் கட்டுப்பாடெல்லாம் இல்லை. இந்திய ஸ்டைல் பாருங்க :-) 

நேத்து  கல்யாணத்துலே நான் எடுத்த படங்களையும், தம்பி மகர் எடுத்த  சின்னச்சின்ன வீடியோ க்ளிப்புகளையும் ஒரு பென்ட்ரைவில் போட்டு எடுத்துக்கிட்டுப் போயிருந்தோம்.  அதை அங்கே இருந்த பெரிய டிவியில் போட்டு விட்டதும்  இன்றைய விருந்தினர்களுக்கு  கல்யாணம் பார்த்த நிறைவும் கிடைச்சுருச்சு.

விருந்து முடிஞ்சு போனவங்களுக்கு  தாம்பூலப்பையும் நன்றியுமா சேர்த்தே கொடுத்தனுப்பினோம்.  நாம் அழைச்ச அத்தனை பேரும் வந்துருந்து வாழ்த்தியது  மனநிறைவைக்  கொடுத்தது  உண்மை! 

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே... நம்ம வீட்டுக் கல்யாணத்தில் தயவு செய்து  அன்பளிப்புகள்  வேண்டாம் என்று  அழைப்பிதழில்  போட்டு இருந்தோம். அப்படியும் சிலர் பூங்கொத்து  கொண்டு வந்துருந்தாங்க. அது பரவாயில்லை. மேஜை அலங்காரத்துக்கு ஆச்சு :-)

இன்னொரு விஷயம் ஒன்னு இங்கே குறிப்பிடணும், அன்றைக்கு எனக்குப் பொறந்தநாள் வேற!  இந்த கல்யாண கலாட்டாவில் இதை மறந்தே போயிருந்தேன்.  நெருங்கிய நண்பர், இதை மகளிடம் போய் குறிப்பிட்டுச் சொல்லி  விருந்தினருக்கு அறிவிக்கும்படி சொல்லி இருக்காங்க போல.... திடீரென ...மகள் எழுந்து வந்து , இன்றைக்கு அம்மாவுக்கு ஹேப்பி பர்த்டேன்னு சொல்லி , எல்லோருமாச் சேர்ந்து  ஹேப்பி பர்த்டே பாடியது  எதிர்பாராத  இன்பம்.  ஒரே கல்லில் ரெண்டு மாம்பழம்!!!!   (எனக்குக் காய் பிடிக்காது!)

அநேகமா எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் நேரம் நாங்க   சாப்பிடப்போனோம்.  ஏகப்பட்ட  வகைகள் இருந்தும் கூட பசியே இல்லை. கொஞ்சம் கொறிச்சதுதான்.  மனம் நிறைஞ்சால் வயிறு நிறைஞ்சதுபோல்தானே உணர்வோம், இல்லையா?

கடைசியில்  எல்லா இடத்தையும் சுத்தப் படுத்தி, ஹாலை சரிப்படுத்தி அனுப்ப  நண்பர்களே பெரும் உதவியா இருந்தாங்க.  இந்த உதவியை மட்டும் வாழ்நாளில் எப்பவும் மறக்கக்கூடாது!  

கடைசியில் ஒரு க்ரூப் ஃபோட்டோ.  இதைக்கூட யார் சொன்னாங்கன்னு தெரியலை.... 

அதுக்குள்ளே கேமெராவை மூட்டை கட்டிப் பையில் போட்டுட்ட ஃபொட்டாக்ராஃபர் அவசர அவசரமா  கெமெராவை வெளியே  எடுத்தார்.  முதலிலேயெ எடுத்திருந்தால் எல்லோரும் இருந்துருப்பாங்க அதுலே...   கலாட்டா கல்யாணமாப் போனதுலே கடைசியில் கிடைச்சவங்க இவ்ளோபேர்தான். நல்லவேளை அதுவாவது  எடுத்துக்க முடிஞ்சதேன்னு மகிழ்ச்சிதான்.  

இரவு பதினொரு மணி அளவில்  மகிழ்ச்சியும் களைப்புமா  வீடு வந்து சேர்ந்தோம்.

இங்கே நியூஸியில் ஒரு வீட்டையும் கட்டிப் பார்த்து   ஆதி முதல் அந்தம் வரை (47 பதிவுகள் )  எழுதியாச்சு. இப்போ கல்யாணத்தையும் பண்ணிப்பார் என்ற வகையில் ஒரு கல்யாணத்தையும் செஞ்சு வச்சுப் பார்த்தாச்சு.

இதுவரை பொறுமையோடு அனைத்தையும் வாசித்த நண்பர்களுக்கு  மனம் நிறைந்த நன்றிகள்.

மணமக்களுக்கு நம்  அனைவர் சார்பிலும் இனிய வாழ்த்து(க்)கள்! நல்லா இருக்கட்டும்! 

டிஸ்கி:- என்ன தனியா படிச்சிட்டே சிரிச்சிட்டு இருக்கீங்கன்னு யாரும் உங்களைக் கேக்கலைதானே. எனக்கு துளசியோட எல்லா எழுத்தும் பிடிக்கும். அது ப்ளவுஸ் பத்தியானாலும் சரி, பயணம் பத்தியானாலும் சரி. சாப்பாடு, கோயில், செல்லப் பிராணி  எதாகட்டும் அவங்க தன்னோட நகைச்சுவையால எல்லாத்தையும் மெருகேத்திடுவாங்க. தாங்க்ஸ்டா துளசி. எனக்காக உங்க மக திருமணம் பத்தி எழுதிக் கொடுத்தமைக்கு. நாங்களும் அட்சதை தூவி வாழ்த்துறோம். நல்லா இருங்க. நல்லா இருப்பாங்க. வாழ்க வளமுடன், நலமுடன் , பல்லாண்டு.

18 கருத்துகள்:

 1. நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடந்திருக்கிறது. இன்னும் நல்லது தொடர்ந்து நடக்கட்டும்!!

  பதிலளிநீக்கு
 2. ஹைய்யோ!!!! இப்படியா நடந்துச்சு! நானா எழுதிக்கொடுத்தேன்.......... !!!!

  ராமாயணம், பாரதம் வாசிச்சதுக்கும் உங்க பக்கத்தில் வெளியிடதுக்கும் நன்றீஸ்ப்பா.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா வாவ் !! அட்டகாசம்க்கா என்ன சொல்ல அத்தனை அழகும் மகிழ்வும் ... உங்க அன்பும் சந்தோஷமும் இந்த இடத்தியும் படிப்போர் மனதிலும் சந்தோஷத்தை தூவிவிட்டது .
  முதலில் துளசி அக்காவுக்கு ஒரு big hug :)

  ஒவ்வோர் விஷயத்தையும் பார்த்து பார்த்து ரசித்து செஞ்சிருக்கீங்கக்கா .மதுவும் கணவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் .bless them ..வாஷிங்டனில் திருமணம் மாதிரி நியூசிலாந்தில் திருமணம்னு நிச்சயமா சொல்லலாம் ..

  பதிலளிநீக்கு
 4. .வெளிநாட்டில் பிறந்த வளர்ந்த நம்பிள்ளைங்க கிட்ட எப்பவுமே வெள்ளை கொடி பிடிச்சிட்டேதான் பேசணும் :)
  அவங்க ரூமுக்குள்ள போறதுக்கே பெர்மிஷன் கேக்கணுமே :) ரசித்தேன் நீங்க கொடி பிடிச்ச தருணத்தை பதிவில்
  இந்த நாட்டில் பெண்ணும் மாப்பிள்ளையும் தான் எல்லா செலவுகளையும் ஏற்பாங்க .அவங்களே சம்பாதிச்சு சேர்த்து முதலில் வீடு வாங்கி பொருள் வாங்கி பிறகே திருமணம் ..எவ்ளோ கொடுத்துவச்சவங்க இவங்க பேரன்ட்ஸ் :)

  பதிலளிநீக்கு
 5. கல்யாண நாள் வரை படிச்சிருக்கேன்
  நம்ம ஊர் கல்யாண வேலைகளுக்கு
  எந்த விதத்திலும் குறைவானதில்லை
  என்பது படிக்கப் படிக்கத்தான் தெரிகிறது
  நேரில் பார்ப்பது போல,நிகழ்வில் உடன் இருப்பது போல்
  பதிவு செய்து போகும் விதம் அருமை
  தொடர்கிறேன்
  மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. I love Tulsi Akka's writing. Wanted to know how the wedding took place. Thanks Thenammai for posting.

  It also gave me a chance to visit Thenammai's blog after a long time. :-) Will be back once I fix my Tamil typing tool.

  பதிலளிநீக்கு
 7. வாழ்க வளமுடன் நலமுடன் ! வாழ்க பல்லாண்டு ! பகிர்வு மிக அருமை.

  பதிலளிநீக்கு
 8. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என்னும் பாட்டு நினைவுக்கு வருகிறது எழுத்தில் இத்தனை துள்ளல் இருந்தாலும் நம்மூர் முறைப்படி திருமணம் நடக்க வில்லையே என்ற ஏக்கம் இல்லை என்றே நம்புகிறேன் மாலை மாற்றுவது மதம் மாற்றுவது என்றா கல்யாணப்பிள்ளை நினைத்தார் . ரசித்துப் படித்தேன்

  பதிலளிநீக்கு
 9. உங்க வாசகர் வட்டத்தை அப்படிச் சும்மா விட்டுரும் எண்ணமே இல்லையாக்கும். இந்தாங்க போனஸ் :-)

  http://thulasidhalam.blogspot.co.nz/2017/02/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 10. அருமையான கல்யாணம். துளசி சொல்லிபோனவிதம் மிக மிக அருமை.
  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
  பெண்ணின் மாமியார் புடவையில் அழகு.

  பதிலளிநீக்கு
 11. தேனம்மைக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.
  கல்யாணத்தை நேரில் பார்த்த உணர்வை வாங்க்கி தந்தற்கு.

  பதிலளிநீக்கு
 12. @ Thulasi akkaa :) துளசி கோபால் சொன்னது…
  //ஹைய்யோ!!!! இப்படியா நடந்துச்சு! நானா எழுதிக்கொடுத்தேன்.......... !!!!
  //
  ஹாஹா :) எல்லாத்தையும் எழுதி எங்க கல்யாணத்து முன்ஜென்ம நினைவெல்லாம் கிளறிவிட்டுட்டு :) டவுட்டை பாருங்களேன் :)
  naughty துளஸிக்கா :))

  பதிலளிநீக்கு
 13. துள்சி..படிக்க படிக்க மூச்சு வாங்குச்சு..கண்ணைக் கட்டுச்சு. இடையில் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துட்டு திரும்ப வந்தேன். ஆனாலும் மகள் கல்யாணத்தில் பட்ட சுவையான, சுகமான பாடுகள் அத்தனையும் எங்களுக்கு கல்யாண விருந்துதான்.மகளும் மருமகரும்
  சீரும் சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. துளசி டீச்சர் அவங்க தளத்துல எழுதினதைவிட டீடெயிலா எழுதிக்கொடுத்திருக்காங்க. அவங்க வீட்டைக் கட்ட எவ்வளவு சிரம்ப்பட்டாங்க, எத்தனை எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கவேண்டிவந்தது, ஒரு சீனர்தான் மற்ற எல்லாரையும்விட பெர்ஃபெக்டா அவருக்கு அளித்த வேலையைச் சரியாகச் செய்தார் என்றெல்லாம் எழுதியது ஞாபகம் வந்தது. அதிலயும் ஜோஷ்னு ஒருத்தர் வருவார்.

  பொண் கல்யாணத்துக்கு அத்தனை சிரம்ப்படாவிட்டாலும் நிறைய பார்த்துப் பார்த்து செய்திருக்காங்க.

  தான் மனதளவுல இன்னும் முழுமையான கிவி ஆகலைங்கறதையும் ரசித்துப்படித்தேன்.

  அவர் தளத்துல ரொம்ப விவரமா எழுதலை. சரியா யோசிச்சு வாங்கிப் போட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  மணமக்கள் வாழ்க்கை நிறைவாகவும் சந்தோஷமாகவும் பெற்றோர் துளசி கோபால் ஆகியோருக்கு மிகவும் திருப்தியாக இருக்குமாறு அமையட்டும். என்றைக்காவது பதிவர்களைச் சந்திக்கும்போது விட்டுப்போய்விட்ட விருந்தைக் கொடுக்காமலா போய்விடுவார்?

  பதிலளிநீக்கு
 15. thanka Malaji :)<3

  aama Tulsi :) <3

  super and thanks da Angel :)<3

  thanks Ramani sir

  thanks da Ima Chris :) <3

  thanks DD sago :)

  thanks Asiya Omar :) <3

  thanks Bala sir

  again thanks Tulsi. seekiram itha book aa podungka. pustakala :)<3

  thanks Gomathi mam :) <3

  thanks Nanani mam :) <3

  virivana comments kku thanks Nellai thamizhan :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
  பதிலளிநீக்கு
 16. அட! உங்க தளத்திலயும் வந்ததா ஸ்ரீராம் சொன்னார். நாங்கள் தவற விட்டுட்டோம்...ஆனா இங்க சூப்பர்!! என்ன உழைப்பு! உங்கள் அனைவரது உழைப்பையும் தான் ...மணமக்கள் மிகவும் மகிழ்ச்ச்யாக வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  கீதா: யம்மாடியோவ்....மூச்சு வாங்கிருச்சு..அக்கா உங்கள் பதிவை சொல்லலை....இவ்வளவு அரேஞ்ச்மென்ட்...கல்யாணத்துக்கு ரிகர்சல் இங்க உக்கரணும் அங்க உக்காரணும் ற கலாச்சாரம்...எல்லாம் யம்மாடியோவ் என்று இருந்தது.

  நம்மூர நினைச்சுப் பார்த்திருப்பீங்களே!!ஹஹ்ஹஹ்ஹ் இதைப் பார்க்கும் போது நம்மூரு ரொம்ப எளிதோ??!!!ஆனாலும் வாசிங்க்டனில் திருமணத்தில் அப்பளம் ஃப்ளையின் சாசர் போல பறக்குமே..அப்படி அப்பளம் இல்லையோ டின்னர்ல? இண்டியன் டின்னர்ல?!!! ஹஹ்ஹ்ஹஹ்

  ரசித்து வாசித்தோம்...அப்படியே கண் முன் விரிந்து கல்யாணத்தை நேரில் பார்த்தது போல....மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இனிதான இல்லறம் அமைய...!!

  தேனம்மை சகோ/ தோழிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. இங்கு வாசிக்க முடிந்தமைக்கு...

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...