புதன், 24 மே, 2017

ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது ஜி எம் பி சார் எழுதியதுதானா என்று ஐயப்பாடு தோன்றவே இதை முதலில் படித்தேன். மிக அருமையான கட்டுக்கோப்பான நாவல். ஆனால் பாபுவின் முடிவை மாற்றி இருக்கலாம் என்று தோன்றியதை மறுக்க முடியாது.

இருபது அத்யாயங்களில் பழமைவாதத்துடன் போராடும் நிறைய தர்க்கரீதியான உரையாடல்கள் அதிகம் இடம் பெற்றிருந்தது என்பதே இது ஜி எம் பி சாரின் எழுத்து என்பதற்குச் சான்று. 


நிறையப் பிள்ளை குட்டிகள் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் ரங்கசாமியின் முதல் மனைவி இறந்துவிட இரண்டாம்தாரமாக கல்யாணி அம்மாவைத் திருமணம் செய்துகொள்கிறார். மூத்த தாரத்தின் இரு புதல்வர்களான பாபு, கண்ணன், அவன் விரும்பும் சியாமளா, கல்யாணியின் மகன்கள் ராஜு, விசு, சந்துரு, ரவி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது இந்நாவல். 

ரங்கசாமியின் மறைவுக்குப் பின் சேர்ந்து வாழ விரும்பும்  கண்ணனும் அவன் மனைவி மாலதியும் கூட நல்லவர்கள்தான். வறுமை அனைவரையும் ஒன்று சேர்க்கிறது . ஆனால் வரட்டுத்தனம் அதை சின்னாபின்னமாக்குகிறது. கமலமும் அவள் கணவன் போன்ற சுயநலமிகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். 

ஆராய்ந்து செயல் புரியும் பாபு தன் தம்பிகளை வழிநடத்துவதும் மாற்றாந்தாய் என்ற மனப்பான்மை இல்லாமல் கல்யாணி அம்மாவைத் தாயாக எண்ணி மதிப்பதும் அழகு என்றாலும் இவ்வளவு பாஸிட்டிவ் எண்ணங்கள் உள்ளவன் சியாமளாவுடன் தன் திருமணம் மற்றும் பின்னாளிலான மணவாழ்க்கை மற்றும் தன் வாழ்க்கை பற்றி நம்பிக்கையற்றிருப்பது விநோதம்தான். 

தமிழ் மன்றம் மக்கள் மன்றமாக உருவெடுத்ததும் அதனால் பலர் பயனடையப் போவதும் பொதுநல மனம் கொண்ட பாபு அதற்காகப் பாடுபடுவதும் சியாமளாவிடம் அந்தப் பொறுப்புகளை ஒப்படைப்பதும் சிறப்பு. 

ஆலை அதிபர் சுப்ரமணியம், நண்பன் கான் நல்ல பாத்திரப் படைப்புகள். பாபு, சியாமளா என்றவுடன் எனக்கு தி ஜானகிராமனின் மோகமுள் கதாபாத்திரப் பெயர்கள் ஞாபகம் வந்தன. ஆனால் அக்கதையின் பாத்திரப் படைப்புக்கும் இக்கதையின் பாத்திரப் படைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் வரும் பாபு தீர்க்கதரிசி போன்றவன். சியாமளா பொதுநலத்தொண்டில் ஆர்வமுள்ள ஒரு ஆசிரியை.  

இவள் அல்லவோ பெண் என்ற மணியனின் ஒரு கதையிலும் கூட கதாநாயகியின் பெயர் சியாமளா. சியாமளா அல்லது சியாமளம் என்றால் எனக்கு சியாள வண்ணன் கண்ணன் நினைவுக்கு வருவார். அவரது மேனி நிறம் நினைவுக்கு வரும்.  சொல்லப் போனால் மாநிறமான ஒரு பெண்ணின் தோற்றம் மனதடியில் படிந்து போயிருக்கிறது இப்பெயரின் பின்னால். 

மிக அருமையான இக்கதையை புஸ்தகா வெளியிட்டிருக்கிறது. சியாமளாவின் நினைவில் மட்டும் பாபு வாழுப்போவதாலோ என்னவோ “நினைவில் நீ “ என ஆசிரியர் பெயர் சூட்டி இருக்கிறார் போலும். சரளமான வாசிப்பனுபவத்துக்கும், லா ச ராமாமிர்தம் போன்ற ஒரு தனித்துவமான மொழி நடைக்கும் இந்நூல் படிக்கப்பட வேண்டிய ஒன்று. 

மின் நூல் :- நினைவில் நீ

வகை :- நாவல் 

பக்கங்கள் – 162.

ஆசிரியர் :- ஜி எம் பாலசுப்ரமணியன்.

வெளியீடு :- புஸ்தகா.

விலை :- ரூ 88/ $ 2.99.

இந்நூலை இங்கே வாங்கலாம்.

 
 

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல விமர்சனம்...

ஐயாவுக்கு வாழ்த்துகள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வித்தியாசமான எழுத்துக்குச் சொந்தக்காரரான ஐயாவின் நூலைப் பற்றிய அறிமுகம் அருமை. நூலின் தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் நினைத்ததையே நானும் நினைத்தேன். விமர்சனத்தைப் படித்ததும் அது புரிந்தது. நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்களின் விமர்சனம் கச்சிதம். பாராட்டுகள்.

G.M Balasubramaniam சொன்னது…

மிக்க நன்றி தேனம்மை மேம் என்நூலுக்கு நீங்கள் உங்கள் மனதுக்குப் பட்டதை விமரிசனமாக எழுதி இருக்கிறீர்கள் அதற்குப் போய் நான் என்ன கருத்து சொல்ல முடியும் பாபுவின் மரணம் குறித்து நான் என் வலைப்பூவில் என் எண்ணங்களை தனி பதிவாக எழுதி இருந்தேன் ஒரு வித்தியாசமான பாத்திரத்துக்கு ஒரு வித்தியாசமான முடிவு. சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது முடிவாக லாசரா உடனான ஒப்பீடு லசரா அப்ஸ்ட்ராக்டாக எழுதுபவர் என்பது என் எண்ணம் என் எழுத்துகள் சொல்ல வருவதை குறி தவறாமல் சொல்லு ம் என்று நினைக்கிறேன் மீண்டும் நன்றியுடன்

Thenammai Lakshmanan சொன்னது…

THanks DD sago

THanks Jambu sir

Thanks VGK sir

Thanks Bala sir.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...