மனைவி கிடைத்தாள்
1980 களிலேயே ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை, மனித மன விகாரங்களை, கீழ்த்தரங்களை , தந்திரங்களை மிகத் தெளிவாகக் கூறிய கதைகள் இவை. இக்கதைகளைப் படிக்கும்போது அன்றைக்கு நேர்ந்த இப்படியும் கூட மனிதர்கள் உண்டா என்ற விவரிக்க இயலா பிரமிப்பும் சரளமான வாசிப்பும் இன்றைக்கும் நிகழ்வது அதிசயம்.
மொத்தமே மூன்று கதைகள்தான். முதல் இரண்டு கதைகளும் குறுநாவல் வகை. கேரக்டரும் முதல் கதையில் மூன்றுதான். நான்காவதாக ஆசிரியர் முடிவில் பேசுகிறார். சுபம் என்று போட இதென்ன சினிமாவா இல்லை ஃபேரிடேல்ஸா. ஆனால் வாழ்வின் உச்சபட்ச அபத்தமாக இருக்கிறது நண்பனின் மனைவியைக் கொலை செய்வது.
ஆளவந்தான் படத்தில் தம்பி மனைவியைக் கொலை செய்ய வலுவான காரணமில்லாமல் மனநோய் பீடித்தது மட்டுமே காரணமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் வில்லன் கமலை வெறுக்கவே செய்துவிடுவோம். ( படமே அதனால்தான் ஃப்ளாப் ) அதுபோல்தான் இருக்கிறது இங்கே மூர்த்தியின் செயலும்.
பத்ரிக்கைச் செய்தியின் அடிப்படையில் எழுந்த கதையாக இருக்கலாம். பெண்மோகம் இந்தளவு செல்லுமா என்பது எனக்குள் எழுந்த வினா. 85 களில் இந்தக் கதையின் முடிவைப் படித்ததும் ஒரு நிமிடம் சுஜாதாவைத் திட்டினேன் என்றால் மிகையில்லை. நட்புடா நண்பேண்டா என்பதெல்லாம் கூட மாயைதானோ..
இரண்டாவது மிக முக்கியமான கதை. சுஜாதாவின் கதைகளிலேயே என்னை மிகவும் அசைத்த கதை. ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி, தற்கொலைத் தூண்டல்கள், மனோவியாதி, டிப்ரஷன், என்று அதிரவைத்த கதை முடிவும் அப்படித்தான்.
விஜயன், சாரதி என்று இரண்டு கேரக்டர் கொண்டு கதையைக் கொண்டு சென்றிருந்தாலும் முடிவு வரை அதைப் பொத்தி வைத்து குபீரென ஹீரோவோடு வாசிப்பவரையும் நந்திஹில்ஸிலிருந்து உருட்டிவிட்டு திகிலடிக்க வைப்பது சுஜாதா பாணி. மிரட்டல். சான்ஸே இல்லை. இன்றைக்கும் இப்படி விவரமாக ( கதைகளில் ) மிரட்டியவர் யாருமே இல்லை.
மூன்றாவது நிஜத்தைத் தேடி என்ற கதை. நிஜத்தைத் தேடிச்செல்லும் கணவன் அதன் உண்மையை ஒத்துக்கொள்ளமுடியாமல் தன் மனைவியிடம் பொய்யுரைக்கும் கதை. உண்மையின் அபத்தத்தைத் தாங்கமுடியாமல் முன்பதிவுகளால் அதை ஒதுக்கி அனைவருமே ஏமாற்றக் கூடியவர்கள்தான் என நம்புவது, அடுத்தவரையும் நம்ப வைக்கப் பிரயத்தனப்படுவது. ஆனாலும் மனிதர்கள் ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி கதைபோல் தான் சொல்வதை நிரூபிக்கவும், நிலைநாட்டவும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் செல்வார்கள் என்பதை உணர்த்திய கதை. குரங்குப்பிடி சிந்தனை உள்ளவனின் அப்பாவி மனைவியர் பாடுதான் படுபாவம்.
உண்மை என்பது எளிதானதுதான். அதை மறைக்க முடியாது. ஆனால் அதைப் பொய்யாக்கத் திரை போட வேண்டி இருக்கிறது. மனைவியின் கண்ணைக் கட்ட வேண்டி இருக்கிறது. தான் சொன்னதுதான் சரி. தான் மட்டுமே நாயகன், நல்லவன் , உண்மையானவன் என்று கடைந்தெடுத்த அயோக்கியனும் நடிப்பதுதான் யதார்த்தம். திருதராஷ்டிரனின் காந்தாரிகள் போல மனைவிகளும் கண்ணைக் கட்டிக்கொள்வதுதான் வாழ்வின் தடுக்க முடியாத அபத்தம்.
மூன்றுமே அற்புதமான கதைகள். சொல்லப்பட்ட காலமும் சொல்லப்பட்ட விதமும் புதிது. எல்லாக் கதைகளிலும் முடிவு என்பது எதிர்பாராதவிதமாய் அதே சமயம் பொட்டிலடித்தாற்போல் நச் சென்று இருப்பதே சுஜாதாவின் ஸ்பெஷல். வாத்யார் வாத்யார்தான். எத்தனை பேர் எத்தனை விமர்சனம் வைத்தாலும் அன்றைய மனநிலை போலவே இன்றைக்கும் சுஜாதாவை வாசக மனப்பான்மையோடு நாம் அணுக முடிவதே அவர் ஒரு பேரெழுத்தாளர் என்பதற்குச் சான்று.
நூல் :- மனைவி
கிடைத்தாள்
ஆசிரியர் :- சுஜாதா
பதிப்பகம் :- பாரதி பதிப்பகம்
விலை :- ரூ 6. 50 (1.11.1981
ஆம் ஆண்டு வெளியீடு )

புத்தகம் படிக்க நேரம் (+ வாய்ப்பு) இல்லாவிட்டாலும் விமரிசனத்தை மட்டும் படித்துவிடுவது என் வழக்கம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி கௌதமன் சார்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!