எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 அக்டோபர், 2019

மௌனத்தின் குரல் – ஒரு பார்வை

மௌனத்தின் குரல் – ஒரு பார்வை

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாகவோ சூழ்நிலை கருதியோ தன் வாழ்வியல் சூழலில் கடைப்பிடிக்கும் மௌனம் ஒரு கட்டத்தில் உரக்க ஒலித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையாகவே வெளிப்பட்டுள்ளது இந்நாவல்ஐந்து வருடங்களுக்கு முன்பு படித்தேன். இன்றும் ஒரு முறை. அந்த விறுவிறுப்பும் யதார்த்தவிஷயங்களும் குறையாமலே இருந்தது.

ஜெயா என்ற நாயகி மூலம் சொல்லப்படும் கதையில் கதையாசிரியரே ஜெயா என்ற பாத்திரத்தைக் கையாண்டு தன்போக்காக அவள் எண்ணச் சிதறல்களை விளக்கி இருக்கிறார். அந்தக் கதாபாத்திரமும் ஒரு எழுத்தாளராக வருகிறாள். அதுவும் அவள் மட்டுறுத்தப்பட்டு எழுதுவதும் எதையும் உடைத்து விரித்து எழுதாமல் இருப்பதற்கு நம் போன்ற பூர்ஷ்வா, மத்தியவர்க்க, மேல்ஜாதி பயம் என்று காமத்தால் சீண்டப்படுவதும் படிக்கப் படிக்க வியப்பு கூடிக்கொண்டேதான் போனது.

எல்லோருமே தான் என்று ஒரு மனவுலக பிம்பம் தன்னைப் பற்றியதான் ஒரு வெளியுல பிம்பம், இதுபோக அசல் பிம்பம் என்று ஒன்றைச் சுமந்துகொண்டிருக்கிறோம். ஆனால் வெளியார் கண்ணுக்கு நாம் எப்படிப் புலப்படுவோம் என்ற பிம்பம்தான் தொடர்ந்து வாழ்வியல் இம்சைகளை ஊக்குவித்து எல்லா நன்மைக்கும் எல்லா சிதைவுக்கும் காரணமாகிறது.

ஜெயாவும் மோகனும் மனமொத்த தம்பதிகள். அவர்களுக்கு இரு அடங்காப்பிடாரி குழந்தைகள். அம்மா, பாட்டிகள் ஆகியோரிடமும், தம்பி அண்ணனிடமுமே அவள் தன் சர்காஸ்டிக் தனத்தோடு நடந்துகொள்ள ஒரு கட்டத்தில் கணவன் மோகன் தன் உத்யோகத்தின் பொருட்டு ( சொல்லப்போனால் வாழ்வியல் தேவைகளின் பொருட்டு ) ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள அப்போது தாங்கள் இருக்கும் வீட்டை விட்டு தங்கள் பழைய வீட்டுக்குச் சிலகாலம் சென்று தங்குகிறார்கள்.

பிள்ளைகள் இருவரும் குடும்ப நண்பரோடு சுற்றுலா சென்றிருக்க இருவர் மட்டும் தங்கும் மற்றும் வேலை செய்பவர்கள் வந்து போகும் ஒரு இறுக்கமான வீட்டில் தங்களை சுய அலசல் செய்து கொள்கிறார்கள். ஃபியோதர், காப்கா கதைகள்போல் வெறுமையும் வெறியும் கோபமும் கொந்தளிப்பும் எல்லா உறவுகளிலும் ஏற்பட்டு சில சமயம் விரக்தியும் மனநோய்க் கூறும் ஏற்படுகிறது. குஸுமைப் போல் தன்னை எண்ணிக்கொள்வதும் அதில் ஒன்று. எல்லாருக்குமே மனநோய்க்கூறு சிறிதளவாவது இருக்கும் என்பது இயற்கை நியதி. பர்சண்டேஜ்தான் வேறு வேறு

மனிதர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட திருமணம் என்ற பந்தத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமே அனைவரையும் பிழை செய்யவிடாமல் தடுக்கிறது என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார் ஆசிரியை. வாஸந்தியின் மொழி பெயர்ப்பிலா அல்லது மூல நூலிலேவா எனத் தெரியவில்லை இது ஒரு பிராமணக் குடும்பத்தின் மொழியில் இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது.

மிகச் சரளமான தாக்குதலும் எதிர்த்தாக்குதலும் வாய் பேசாமலே உணர்வுகளையும் உடல்மொழியையும் வடித்தெடுப்பதும் இக்கதையின் அழகு. ஒரு கட்டத்தில் ஜெயாவைப்பார்த்துஉங்கம்மாவையே நீயும் உன் அண்ணன் தினகரும் கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இருப்பீங்க. உங்கிட்டயிருந்து நான் எப்படி அன்பை எதிர்பார்க்க முடியும்”. என மோகன் கேட்பது, அதேபோல் ஒவ்வொருவரும் சுயநலத்தோடுதான் செயல்படுகிறார்கள் என்ற முன்முடிவு, அனைவரையும் இகழ்தலும் அனைத்தையும் அலட்சியப்படுத்தலுமாகக் கதை செல்கிறது.

கணவனுக்காக அலங்கரித்துக் கொள்ளல், எந்நேரமும் வீட்டை சுத்தப்படுத்துதலும் அலங்கரித்தலும் என்ற செக்குமாட்டுச் சிந்தனைகளும் கணவன் வேலையில் பிரச்சனை என்றவுடன் விடைபெற்றது போல் தோன்றுகிறது. அவனும் தன் பிரச்சனையில் மனைவி கலந்துகொள்ளாமல் வீட்டில் வேலை செய்பவரோடும் மற்றையரோடும் பேசுவதிலும் காலங்கழிப்பதிலும் இன்புறுகிறாள் எனக் குற்றம் சாட்டுகிறான்.பாசம் , நேசம், காதல் என்றெல்லாம் நாம் பூசிக்கொள்ளும் அரிதாரம் வண்ணம் உரிந்து போவதை இயல்பாக்கிக் காட்டுகிறார் சசி

அண்ணன், தங்கை, அம்மா பெண், கணவன் அவனது அண்ணன் மகள் என உறவினர்கள் ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் பாசம் கூட இன்னொருவருக்கு எப்படி வெறுப்பை விளைவிக்கிறது. அது சொத்துப் பத்து என்று வந்தவுடன் எப்படி மாறுகிறது. பொதுவாகவே தன் நடத்தையால் இகழப்படும் ஒருவர் இறப்பிற்குப் பின் எப்படித் துதிபாடப்படுகிறார் என்ற மாயத்தைக் கூறுகிறாள் ஜெயா. மேலும் பணம் மற்றும் வசதிதான் எல்லாவற்றையும் நிர்வகிக்கும், ஆக்கும், அழிக்கும் கருவியாகிறது. அதேபோல் நான் என்னும் ஈகோவும்.

தேவைப்படும்போது வீடு, திருமணம் என்ற கூட்டுக்குள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளும் நாம் நம் முன்னேற்றத்துக்கு நாம்தான் தடை என்ற போதும் வேறொன்றைக் கைகாட்டுவதுடன் திருப்தி அடைந்து விடுகிறோம். தோல்வியை எதிர்கொள்ளப் பயம், மேலும் நம் எழுத்துக்கள் மேல் நாமாகச் சுமத்தும் அநியாயம் எல்லாம் இக்கதை வாசிப்பின் மூலம் என்னை மூழ்கடித்தது. சுய அலசல் செய்து கொள்ளத் தோன்றியது

யதார்த்தத்தையோ இன்னும் பல வாழ்வியல் விஷயங்களையோ எழுதவிடாமல் தடுப்பது யார் அல்லது எது. அது நாமாகவே இருக்க முடியும் என்பதை காமத்தின் சொல் கொண்டு புரிந்து கொள்ள வைத்தது.

திருமணம் தாண்டிய உறவுகள் என்ற அளவுக்குப் போகாமல் லேசான இடைமீறலையும் அதன்பின் ஏற்படும் விட்டேத்தித் தனத்தையும் சசி வரைமுகப்படுத்தி இருக்கிறார்

வாழ்க்கை என்பது வாழ்ந்து செல்லவே எந்த இடையூறிலும் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதை ஒரு மத்தியதரக் குடும்பத் தலைவியின் பல்வேறு அணுகுமுறைகள், பிரச்சனைகள் மூலம் தெளியவைத்தது இக்கதை.

மனைவி எழுதுவதைப் பெருமையாகக் கருதும் கணவனும் அவனின் ஏதோ ஒரு சொல் பாதிக்க அதைக் காரணமாகக் கொண்டே எழுதுவதை நிறுத்தும் மனைவியும்என்னால்தானா நிறுத்தினாய்என்று கணவன் அச்சமும் ஆத்திரமுமாகக் கேட்பதும் அதற்கு நாயகி தனக்கே எழுதமுடியாத விநோத அச்சம் தாக்கியிருப்பதைச் சொல்லாமல் மௌனிப்பதும் எல்லாமே நாம் அனுபவிப்பவைதான்.

எல்லாம் சுபமாய் முடிந்ததுஎன்ற ஒற்றைத் தந்தியில் முடிவுக்கு வருகிறது ஒரு பதினைந்து நாள் அஞ்ஞாதவாசம். அவர்கள் அவர்கள் வீட்டுக்குத் திரும்ப முடிவெடுக்கிறார்கள். இந்தப் பதினைந்து நாட்கள் கதை நாயகின் பிறந்த வீட்டுக்குச் சொந்தமான வீட்டில் தங்குவதால் அவளின் பால்ய நினைவுகளில் இருந்து இன்றைய நிகழ்வு வரை எங்கெங்கும் தாவித் தாவிப் பயணிக்கிறது கதை. யாரும் ஏதும் சொன்னால் ஏதும் நிகழ்ந்தால் உடனே கதாநாயகி நம்மைப் போல் முன் நிகழ்வுகளை வரிசைப்படுத்திவிடுவாள்J

 தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ தீர்மானம் செய்யமுடியா வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் கல்லூரிப் பெண்ணில் இருந்து இன்றைய குடும்பத்தலைவியின் அகச்சிக்கல் வரை இக்கதை எல்லாவற்றையும் விரிவாகக் கொட்டுகிறது. பூசி மெழுகியே வாழ்வதில் இருந்து ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதற்காவது ( தற்கொலை எண்ணங்கள் தீண்டாது ) தான் தன் மௌனத்தில் இருந்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறாள் ஜெயா

அல்லல்கள், ஆனந்தங்கள் , திருமணம், தொடரும் வாழ்வு என அனைத்தையும் தள்ளி நின்று ஜெயா பார்ப்பது போல் நமக்கும் எப்போதாவது நடந்த/நடக்கும் விசித்திரமே இந்தக் கதையின் வெற்றி.

 நூல் :- மௌனத்தின் குரல்
ஆசிரியர் :- ஆங்கிலத்தில் THAT LONG SILENCE – சசி தேஷ்பாண்டே. தமிழில் வாஸந்தி.
வெளியீடு :- சாகித்ய அகாதமி ( 1999 )
விலை :- ரூ . 85.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...