எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 அக்டோபர், 2019

துரோணர் சந்தித்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 37.

துரோணர் சந்தித்த சோதனைகள்.
”வில்லுக்கொரு விஜயன்” என்று நாம் அர்ஜுனன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறோம். இயற்கையாகவே பாண்டவரிலும் கௌரவரிலும் அவன் திறமையானவனாக இருந்தாலும் அவனை இன்னும் ஜொலிக்கச் செய்ய துரோணர் சில சோதனைகளைச் சந்திக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல. அவர் வாழ்வே சோதனை மயம்தான் அது என்ன என்று பார்போம் குழந்தைகளே.
பரத்துவாஜ முனிவரின் புதல்வர் துரோணர். அவரின் தாய் பெயர் கிருதசி. துரோணருக்கும் கிருபாசாரியாரின் தங்கை கிருபிக்கும் திருமணம் முடிந்து அஸ்வத்தாமன் என்ற அழகான குழந்தை பிறந்தது. அவன் சிரஞ்சீவியாக இருப்பான் என்று ஈசனிடம் வரம் பெற்றுப் பிறந்தவன். துரோணர் பரசுராமரிடம் வில் வித்தை பயின்றவர். என்ன இருந்து என்ன துரோணரை வறுமை வாட்டியது.
சிறு குழந்தையான அஸ்வத்தாமன் பாலுக்கு அழும்போதெல்லாம் சாதக்கஞ்சியைப் பால் என்று புகட்டும் துயரத்துக்கு ஆளானாள் கிருபி. அப்போதுதான் துரோணருக்குத் தன் குருகுல நண்பரான துருபதன் என்ற பாஞ்சால தேச அரசன் தான் பட்டத்துக்கு வந்ததும் தன் நாட்டில் பாதியைத் தருவதாக நட்புமுறையில் சொன்ன வாக்கு நினைவு வந்தது.

அங்கே சென்று நட்பை ஞாபகப் படுத்திகிறார். பாஞ்சாலனிடம் சரிபாதி நாடு கூடக் கேட்கவில்லை அவர் பிள்ளை அஸ்வத்தாமன் பாலருந்த ஒரு பால்மாடு மட்டும் தந்துதவுமாறு கேட்டார். “ நீயோ சடாமுனி. நானோ சர்வ அதிகாரமும் பொருந்திய அரசன். நீ எனக்கு நண்பனா. இந்தக் கட்டுக்கதையை நான் நம்பத்தயாராயில்லை “ என்று பொய் சொல்லி அவன் அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான்.
அந்த நேரத்தில் அஸ்தினாபுரத்தில் கிருபாசாரியாரோடு இன்னோரு ஆசிரியரும் பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் வித்தை கற்பிக்கத் தேவைப்படவே கிருபரின் துணையோடு துரோணர் அவர்களுக்கு ஆசிரியராகிறார். அரசிளங்குமரர்களுக்குக் கற்பிக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் கிருபாசாரியார், துரோணாசாரியார் என அழைக்கப்பட்டனர்.
அப்போது பீஷ்ம பிதாமகர் துரோணரிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைக்கிறார்,  “ விஜயனை வில் வித்தையில் சிறப்பானவனாகக் கொண்டுவரவேண்டும் என்பதே அது “. அதற்கு ஒப்புக்கொள்கிறார் துரோணர்.
கிணற்றில் விழுந்த துரோணரது மோதிரத்தைத் தனது அம்பாலேயே விஜயன் எடுத்துக் கொடுத்ததும், ஒரு அரசமரத்தின் எல்லா இலைகளையும் தன் ஒரே அம்பால் வீழ்த்தியதைப் பார்த்தும், விஜயனின் தகுதியை உணர்கிறார்.  விஜயனின் திறமையை இன்னும் கூர்தீட்டுகிறார். தனக்குத் தெரிந்த எல்லாப் பயிற்சிகளையும் கொடுக்கிறார்.
தன் மகனுக்குக் கற்றுக் கொடுக்காத பல வித்தைகளையும் விஜயனுக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அதைத் தன் மகனுக்கும் கற்றுக் கொடுத்திருந்தால் அவன் கடைசியில் அஸ்திரங்களை எய்யும்போது அவற்றைத் திருப்பி வாங்கக் கற்றுத் தப்பித்திருப்பான்.
ஏகலைவன் என்பவன் தன்னையே மானசீக குருவாக வரித்து வில்வித்தையில் சிறந்திருக்கிறான் என்று கேள்விப்படுகிறார் துரோணர்.  ”விஜயன் மட்டுமே வில்லாளியாகப் புகழ்பெறுவான் என பீஷ்மருக்குக் கொடுத்த வாக்கைக் காக்க ஏகலைவனின் கட்டைவிரலைக் குருதட்சணியாகக் கேட்கிறார். அவனும் வெட்டித் தந்துவிடுகிறான். என்ன ஒரு தர்மசங்கடம்.
அடுத்து கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் கற்ற கலைகளை அரங்கேற்றம் செய்யும் நேரம் அங்கே குறுக்கிட்டுத் தன் வீரத்தைக் காண்பிக்க விரும்புகிறான் கர்ணன். “நீ அரசனா. உன் தந்தை பெயர் என்ன, உன் குலம் என்ன “ என்று கேட்டு இழிவு படுத்தி அவன் விஜயனை வெல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார். இங்கும் அவர் கர்ணனிடம் இவ்வாறு நடக்கவேண்டி இருந்ததை எண்ணி வருத்தமுற்றார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் வில்வித்தையில் கரைகண்டபின் தன்னுடைய குருதட்சணையாக “ என்னை இகழ்ந்து அனுப்பிய துருபதனை வென்று அவனைக் கைது செய்து வாருங்கள் “ எனக் கேட்க அவர்களும் துருபதனைப் பிடித்து வந்தார்கள். அவன் நாட்டை அவனுக்கே பிச்சையாகத் திருப்பித் தந்தார். இதனால் துருபதன் மகன் திருஷ்டத்யும்னனின் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்துக் குருக்ஷேத்திரப் போரும் மூண்டது.
கடைசியில் குருக்ஷேத்திரப் போரில் துரோணர் அந்தப் பஞ்சபாண்டவர்களை எதிர்த்தே அதிலும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க துரியோதனுக்காகக் கௌரவர் பக்கம் நின்று போரிட நேரிட்டது.
போர்க்களத்தில் பெருங்காளையைப் போல் எதிரே நிற்கிறான் அவர் திறமையைக் கொட்டி வளர்த்த விஜயன். அவரின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவன். அவன் வில்லுக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறார் துரோணர். துரோணரில் வில்லில் இருந்தும் ஊழித்தீ போல அம்புகள் புறப்பட்டாலும் அது விஜயனைக் கண்ட மாத்திரத்தில் திகைத்து நின்றுவிடுகிறது.
அவரால் தான் போற்றி வளர்த்த பாண்டவர்களைத் தாக்க முடியவில்லை. இருந்தும் நாராயண அஸ்த்திரத்தால் தன்னைச் சுற்றிக் கவசம் அமைத்தபடி கௌரவர்க்காகப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவெல்லாம் செய்ததும் தன் மகன் அஸ்வத்தாமனைக் காக்கத்தான் ஆனால் அவன் சிரஞ்சீவி என்பதை உணராமல் பொய்யான தகவலைக் கேட்டுப் பலியாகிறார். தர்மன் உண்மையே சொல்வான் என அவனிடம் துரோணர் கேட்க அவன் ”அஸ்வத்தாமா இறந்துவிட்டது” என்று யானை குறித்துக் கூற அந்நேரம் கிருஷ்ணர் சங்கொலி எழுப்ப அஸ்வத்தாமா இறந்து என்றுமட்டும் கேட்ட துரோணர் செயலற்று நிற்க அந்நேரம் தன் பழியைத் தீர்க்கத் திருஷ்டத்யும்னன் அவரை வெட்டி வீழ்த்துகிறான்.  
குருவாய் இருப்பதிலும் எவ்வளவு வேதனைகள். இத்தனை சோதனைகளைச் சந்தித்து நம் இரக்கத்துக்கும் உருக்கத்துக்கும் உரியவர் துரோணர். வாழ்வில் சோதனைகள் வரலாம். ஆனால் வாழ்வே சோதனையானது துரோணருக்கு மட்டும்தான்.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 4 .10. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.


டிஸ்கி :- 2. வாசகர் கடிதத்தில் எறிபத்தரின் கதையைப் பாராட்டிய வாசகர் ஸ்ரீரங்கம் திரு. ப. சரவணன் அவர்களுக்கு நன்றிகள். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...