அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞர் கண்ணதாசன் எழுதிய மனவாசம் வனவாசம் இன்னும் பல நூல்கள் படித்திருந்தாலும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற கட்டுரைகள் தொகுப்பு திரும்ப வாசிக்கத் தூண்டிய ஒன்று. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல இல்லாமல் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர் ஆத்மார்த்தமாக நிறைய விஷயங்களை உணர்ந்து அதை விவரித்திருப்பது சிறப்பு.
இந்தப் புத்தகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட 1973 இல் இருந்து 2009 வரை 80 எடிஷன்கள்வரை பதிப்பிக்கப்பட்டிருப்பது சிறப்பு. பாவம், புண்ணியம், விதி ,ஊழ்வினை, பூர்வஜென்மம், பிராப்தம் குறித்து அநேக கட்டுரைகள் அமைந்துள்ளன.
முதல் இரண்டு முன்று பாகங்கள் பொதுப்படை ஒழுக்க நெறி சிந்தனைகளாக இருந்தாலும் நான்காம் பாகத்திலிருந்து தனித்தனித்தலைப்புகளில் கட்டுரைகள் யாத்திருக்கிறார். நான்காம் பாகம் துன்பங்களில் இருந்து விடுதலை, ஐந்தாம் பாகம் ஞானம் பிறந்த கதை, ஆறாம் பாகம் நெஞ்சுக்கு நிம்மதி, ஏழாம் பாகம் சுகமான சிந்தனைகள், எட்டாம் பாகம் போகம் ரோகம் யோகம், ஒன்பதாம் பாகம் ஞானத்தைத் தேடி, பத்தாம் பாகம் உன்னையே நீ அறிவாய், பதினொன்றாம் பாகம் பகவத்கீதைக்கு விளக்க உரை.
ஓரிரு இடங்களில் இடசங்கமாகவும், இடக்கரடக்கல்லாகவும் உள்ள விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. காஞ்சி சந்திரசேகரர் பற்றி அனைத்தும் அருமை மற்றும் உண்மை ஆனால் ஜெயேந்திரர் பற்றி இவர் கொண்ட நம்பிக்கைகள் பின்னொரு காலத்தில் பொடிப்பொடியாய் போனது அவலம்.
நண்பர்கள், சுற்றத்தினரோடு மனைவியின் கடமைகள் மட்டுமே அநேக கட்டுரைகளில் சொல்லப்பட்டும், கணவனானவன் பற்றி வரும்போது சிறிது சலுகைகளும் காட்டப்படுகின்றன. வள்ளுவன் ஒரு இந்து என்ற கட்டுரை வித்யாசம்.
இந்து மதத்தின் சாரத்தைச் சொல்லிச் செல்லும் அதே கணம் பிற மதங்களில் இருக்கும்
நல்லனவற்றையும் கூறத் தவறவில்லை. அவர்கள் கூறியதைவிட இந்து மதத்தில் அதிகம்
கூறப்பட்டுள்ளது என்பதையே வாதமாகவும் முன்வைக்கிறார் கவிஞர்.
இதிகாசங்கள், சாதிகள், பிற மதங்கள், குட்டி தேவதைகள் , ஆவிகள், பாவிகள், கனவுகள், சகுனங்கள், மெய்யுணர்வு போன்ற கட்டுரைகள் சுவாரசியம். தமிழ் இலக்கியங்களின் சாறுகளை பக்குவமாய்ப் பிழிந்து பருகத்தரும் கட்டுரைகள் மிகுதி. இவரது மரபு மற்றும் சினிமா பாடல்கள் & புதுக்கவிதைகள் கொண்டு அறிவுரைகளையும் பொருத்தமான எதுகை மோனையுடன் கூறியிருக்கும் பாங்கு நனி சிறப்பு.
இன்றைய இளைஞர்களுக்குத் தன் அனுபவம் கொண்டு கூறப்படும் கருத்துகள் மிகச் சிறந்த அறிவுரைகள். அநேக இடங்களில் தன் அனுபவம் கொண்டு கடனில்லாப் பெருவாழ்வு பற்றிக் கூறியிருப்பதும் சிந்திக்கத்தக்கது. அதேபோல் காம உணரச்சி, கோபம் பாவம் சண்டாளம், கள்ளம் , கபடம், வஞ்சகம், ஏமாற்றிப் பிழைப்போர் முடிவில் அடையும் கடைகேடான நிலை, சுய தர்மம், சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் , விரதம், சுய கட்டுப்பாடு, இச்சா பத்தியம் , நாத்திக வாதம், தெய்வானுக்கிரஹம் பகுத்தறிவின் போலித்தனங்கள், பொய்யில்லா வாழ்க்கை, மனதுக்கும் உடம்புக்குமான கடிவாளம் அனைத்தையும் விரிவாக ஆய்ந்திருக்கிறார்.
மது மாது ஆகியவற்றிலும் போதைப்பொருட்களிலும் தன் வாழ்வு எப்படிச் சீரழிந்தது , அதிலிருந்து எப்படி மீண்டேன், ஆனால் அதற்குள் எப்படிக் காலம் கடந்துவிட்டது என்று கூறித் திருத்திக் கொள்ளச் சொல்லும் அதே சமயம் அதைச் சொல்லத் தான் தகுதி வாய்ந்தவன் என்றும் சொல்கிறார். கவிஞரே அனுபவமே சிறந்த ஆசான். ஒவ்வொருவரும் தாங்கள் அனுபவித்துத்தான் திருந்துகிறார்கள். அடுத்தவர் அனுபவங்களில் இருந்து ஒரு போதும் பாடம் கற்பதில்லை.
இவரது இந்நூல்களில் நான் விரும்பி வாசித்த பகுதி ஞானம் பிறந்த கதை என்று பட்டினத்தார் பற்றியும் பத்திரகிரியார் பற்றியும் எழுதி இருப்பது. அதேபோல் நெஞ்சுக்கு நிம்மதி என்ற தொகுப்பில் உள்ள இசை பற்றிய கட்டுரையும் பிடித்தது. விவேகானந்தர், காஞ்சிப் பெரியவர் ஆகியோரின் வாக்குகளை தகுந்த இடங்களில் எடுத்தாண்டிருக்கிறார். எல்லாவகையான நிம்மதி பற்றியும் கூறியிருப்பது சிறப்பு.
முடிவில் நல்லவன் வாழ்வான் என்றும் பதினோறாம் நூலில் கண்ணனும் அர்ஜுனனுக்குமான போர்க்கால உரையாடலான பகவத்கீதையின் பதவுரைகளும், பாடல்களும் வெகு சிறப்பான முத்தாய்ப்பு. அவ்வப்போது இந்நூல்களைப் படித்துத் தெளியலாம். திருமணம், விவாகரத்து, பெண்கள் மனைநிலை, பெண்களின் எண்ணப் போக்கு, சமூகத்தின் திடீர்மாற்றம் போன்ற சில விஷயங்கள் காலத்தின்பாற்பொருட்டு மாறுதல் அடைந்திருந்தாலும் இந்நூல்கள் என்றைக்கும் தேவையானவையே.
நூல் :- அர்த்தமுள்ள
இந்துமதம் – பாகங்கள் 11
ஆசிரியர் :- கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :- வானதி பதிப்பகம்
விலை :- எல்லாமே ரூபாய் 12 இல் இருந்து 15 க்குள் வரைதான்.

மனிதன் மாறிவிட்டான் மதத்திலேறி விட்டான்
பதிலளிநீக்குஆம் பாலா சார்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!