எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 அக்டோபர், 2019

முடிவல்ல .. ஆரம்பம் – ஒரு பார்வை.


முடிவல்ல .. ஆரம்பம் – ஒரு பார்வை.



முடிவல்ல .. ஆரம்பம்

பறவைகள் வருடந்தோறும் வலசை செல்லலாம். அவற்றின் வரவுநோக்கி சொந்த தேசம் மிச்சமிருக்கிறது.  ஆனால் மனிதர்கள் வலுக்கட்டாயமாக வலசை செல்ல நேர்ந்தால் என்னாகும். தாய் தேசத்தின் ஞாபகத்திலேயே மனம் காய்ந்து சருகாகிவிடும். தாய்தேசம் இருக்கிறது ஆனால் திரும்பிச் செல்ல முடியுமா. மீள்குடிகள் புகுந்து வரலாறே புரண்டு கிடக்கும் சகதிக்காடு அகதிகளைத் தன்னோடு சேர்க்குமா.

புலம்பெயர்தல், வெளிநாட்டு வாழ்க்கை, தாய்தேசத்தில் தமிழீழம் மலரவேண்டியதன் அவசியம், போரினால் நேர்ந்த கொடுமைகள், புலம்பெயர் வாழ்வின் துயரங்கள், தாய்நாட்டின் நினைவுகள் என அல்லாடும் ஒவ்வொரு மனிதனின் வருத்தங்களையும் ஆவேசங்களையும் கொட்டிச் செல்கிறது கவிஞர் அம்பலவன் புவனேந்திரன் அவர்களது கவிதைகள்.

கவிஞர் இதற்கு முன்பே பல்வேறு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். மணிமேகலைப் பிரசுரத்தில் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. முடிவல்ல ஆரம்பம் என்ற கவிதைத் தொகுதி இவரது நான்காவது கவிதைத் தொகுதி. இவர் ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பில் சேவை செய்து வருகிறார். மேலும் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

2003 இல் வெளிவந்த நூலாகையால் அப்போதைய ஆட்சியாளரான சந்திரிகாவை நோக்கி வீசப்பட்ட கவிதைக் கணைகள் நிறைய. அதேபோல் தமிழகம் பார்த்தும் கேட்கப்பட்ட ஒரு கவிதை

தாயே தமிழகமே தலைகுனிந்து எம்முகம் பாராயோ – உன்
சேய்சிந்தும் கண்ணீரைச் சிறுவிரலால் துடைக்காயோ
சீதையால் எரிந்த ஈழம் சிங்களரால் எரிவதுவோ – தனிப்
பாதை திறந்துவிடு எம் பகைவர்கை ஒடித்துவிடு.

நாம் இதைப் படித்துத் தலை குனிவது தவிர வேறென்ன செய்ய முடியும். 

காதலும் தேசத்தின்பால் பாசமும் கவிஞரை ஆட்டுவிக்கிறது. அவரது கவிதைகள் அனைத்திலும் இது தெள்ளெனத் தெரிகிறது. காதல் கவிதைகளில் மிளிரும் அர்ப்பணிப்புப் போலவே தேசபக்தியிலும் தமிழீழம் பெறவேண்டும் என்ற நோக்கிலும் வீறுகொண்டு பாயும் வார்த்தைகளின் புலிப்பாய்ச்சல் நம்மை மிரளச் செய்கிறது. அது பொங்கலையும் புத்தாண்டையுமே தள்ளிப் போகச் சொல்கிறது. அல்லது நினைத்த விடுதலையை ஈட்டியபின் கொண்டாடிக் கொள்ளலாம் என்ற மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

மூண்டயுத்தத்தில் கொழுத்த முதலைகள் அழியவேண்டும்
முடிவான தீர்வொன்றால் முழுஈழம் மகிழவேண்டும்
தூண்டுதலாய் நோர்வே துயர்துடைக்கின்ற வேளையிலே
துள்ளி வந்த புத்தாண்டே தூய சமாதானத்தைத் தந்திட வா.

தாயுடனான உறவைப் பேசும் கவிதைகள் பல உண்டு. அவை அனைத்துமே எனக்குப் பிடித்தவை. தாயுடன் பிணங்கும் கவிதைகள் சில.

கெட்டதாய் என்று
உன் வாய்சொல்லிக்
கேட்டதாய் – புவியில்
நான் ஒருவள்தான்.

என் தங்கமகனே !
கூடாத கூட்டத்தோடு
கூடிவிட்டாய் என்பதுதான்
இப்போதைக்கு என் கவலை
நீ நல்லவன்
என்ற நம்பிக்கை
என்றைக்கும் சாகாதடா.

முதல் கவிதை முருகனின் துதியோடு ஆரம்பித்து இருப்பதும் வித்யாசம். அன்பு, கல்வி, தாய்மொழி, தைமகள் என்று பல்வேறு பாடுபொருட்களில் கவிதை இயற்றி இருக்கிறார்.

காதலியைப் பிரியும்போதும் இவர் கேட்பது மனதைத் தொடுகிறது.

சத்தியம் செய்வாயா
கண்ணீருக்கு அணைபோடு
கன்னியாக வாழ்வதென்ற
எண்ணத்தை எகிறிவிட்டு
ஏற்ற துணையைத் தேடி
வாழ்வேனென்று சத்தியம் செய்வாயா

அதேபோல் இவரது கவிதைகளில் உயிர்த்துவாழும் பெண்மனமும் அவளுக்கான ஆணின் காதல் மனமும் வெகு அழகு.

இயற்கையைப் பற்றிச் சில கவிதைகளும் யுத்த முழக்கம் போல் மனம் அதிர வைத்தன.

மேகமே
வானத்து விரைவுசாலைகளில்
வாகனங்களாய் நீ மோதுவதால்
உண்டாகும் முழக்கமெல்லாம்
எந்தேசயுத்தம்போல் – பீதியால்
நான் மிகவும் பயப்படுகிறேன்.

மண், குறுமண்வெளி, பூவரசு ஆகிய சஞ்சிகைகளுக்காகவும் இவர் கவிதைகள் யாத்திருக்கிறார். பெண்ணின் ப்ரேமையில் சுழலும் அதே கணம் தாய்நாடு வீழ்ந்துபட்ட இருண்மையையும் புடம்போட்டுக் காட்டத் தவறவில்லை இவரது கவிதைகள்.

ஒரு சில கவிதைகள் போகிற போக்கில் எழுதி இருப்பது போல் தோன்றினாலும் அநேக கவிதைகள் அர்த்தம் பொதிந்தவை. ஆளும் அரசை எச்சரிப்பவை. எல்லா வடுக்களும் போராட்டத்தின் எச்சங்கள். அவை பார்ப்போருக்கும் படிப்போருக்கும் விழிப்புணர்வும் கொதிப்புணர்வும் ஊட்டுபவை. அவற்றைச் சரியாகவே செய்திருக்கின்றன இவரது கவிதைகள்.

உழுதுவைத்த நிலத்திலினிலே உழுதவரைப் புதைப்பதுவோ
ஊர்மக்களே கூடிநின்றதனை வேடிக்கை பார்ப்பதுவோ
பொழுதுகளையே வீணாக்கி புத்தரின் புதல்வர் பின்னும்
போலியான வலைகளில் தமிழர் பொத்தென வீழ்வதுவோ.

பொழுதெல்லாம் அழுந்தியதால் புலம்பெயர்ந்து போவதுவோ
புவியெங்கிலும் குடியேறிப் புலத்தினையே மறப்பதுவோ
பளுதனைச் சுமக்கும் பொறுப்பு பாதையிலே நமக்குண்டு – நாம்
பகலவனுக்குமுன் உரிமைக்காய் பாரில் எழுகின்ற நேரமிது.

எதுகை மோனைகளிலும் சந்த நயங்களிலுமே இவை வீரத்தைப் புகட்டுகின்றன. எதிர்பாராமல் வீழ்ந்து விரியும் கவிவரிகளைப் படிக்கப் படிக்கப் புதுரத்தம் பாய்ந்து நாம் புத்துயிராவது உண்மை. 

சத்துருக் கொண்டானிலும் செம்மணியிலும் புதையுண்ட தமிழ் உடன் பிறப்புக்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது பொருத்தமே.

மொத்தத்தில் இது முடிவல்ல ஆரம்பமேதான். ஏனெனில் கவிஞரின் வாக்குப்படி இனிக்கும் தன்னாட்சி ஈழத்தில் இனியாவது மலர வேண்டும்

நூல் :- முடிவல்ல ஆரம்பம்
ஆசிரியர் :- அம்பலவன் புவனேந்திரன்
பதிப்பகம் :- எவகிறீன் அச்சகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...